1 கொரிந்தியர் 1:9-16

1 கொரிந்தியர் 1:9-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர், சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? என் நாமத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங்கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங்கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.

1 கொரிந்தியர் 1:9-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தமது மகனும், நமது கர்த்தருமாகிய இயேசுகிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு, உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர். பிரியமானவர்களே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் ஒருவரோடொருவர் ஒத்துப்போகிறவர்களாய் இருந்தால், உங்கள் மத்தியில் பிரிவினைகள் இருக்காது. அத்துடன் நீங்களும், உங்கள் மனதிலும் சிந்தனையிலும் முழுமையாக ஒருமைப்பட்டும் இருப்பீர்கள். பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள். உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான்; இன்னும் ஒருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். இவற்றையே இங்கு நான் குறிப்பிடுகிறேன். கிறிஸ்து பிளவுப்பட்டுள்ளாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா திருமுழுக்கைப் பெற்றீர்கள்? கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் யாருக்காகிலும் நான் திருமுழுக்கு கொடுக்கவில்லையே. அதற்காக நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஆகவே, என் பெயரால் திருமுழுக்கு பெற்றதாக உங்களில் ஒருவனாகிலும் சொல்லமுடியாது. ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் திருமுழுக்கு கொடுத்தேன். அதற்கு மேலாக, வேறுயாருக்கும் நான் திருமுழுக்கு கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை.

1 கொரிந்தியர் 1:9-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாக இருக்கிற இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். சகோதரர்களே, நீங்களெல்லோரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகள் இல்லாமல் ஒரே மனதும் ஒரே யோசனையும் உள்ளவர்களாகச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். ஏனென்றால், என் சகோதரர்களே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் குடும்பத்தாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? என் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டேன் என்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, நான் கிறிஸ்புவிற்கும் காயுவிற்கும்தவிர, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை; இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஸ்தேவானுடைய குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் வேறு யாருக்காவது நான் ஞானஸ்நானம் கொடுத்தேனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது.

1 கொரிந்தியர் 1:9-16 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவன் நம்பிக்கைக்குரியவர். தேவனாகிய ஒருவரே உங்களைத் தம் குமாரானாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும்படியாக அழைத்தார். சகோதர சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரினால் உங்களை ஒன்று வேண்டுகிறேன். நீங்கள் ஒருவரோடு ஒருவர் கருத்தொற்றுமையுடன் வாழ வேண்டுகிறேன். அப்போது உங்களுக்குள் பிரிவினைகள் ஏற்படாது. ஒரே விதமான சிந்தனையும், ஒரே நோக்கமும் கொண்டு முழுக்க இணைந்தவர்களாய் நீங்கள் வாழ வேண்டுமென வேண்டுகிறேன். எனது சகோதர சகோதரிகளே! குலோவேயாளின் குடும்பத்தினர் சிலர் உங்களைப்பற்றி என்னிடம் கூறினர். உங்களுக்கிடையில் வாக்குவாதங்கள் இருக்கின்றன என நான் கேள்விப்பட்டேன். நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது! சிலுவையில் பவுல் உங்களுக்காக மரித்தானா? இல்லை. பவுலின் பெயரால் நீங்கள் ஞானஸ்நானம் அடைந்தவர்களா? இல்லை. கிறிஸ்பு மற்றும் காயு தவிர வேறு எவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை என்பதில் தேவனுக்கு நன்றியுடைவனாயிருக்கிறேன். எனது பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள் என எவரும் இப்போது கூற முடியாது என்பதால் நான் தேவனுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். ஸ்தேவான் குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஆனால் வேறெவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை.