1 கொரிந்தியர் 10:1-23

1 கொரிந்தியர் 10:1-23 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து விளையாட எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம். மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா? இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.

1 கொரிந்தியர் 10:1-23 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பிரியமானவர்களே, நமது முற்பிதாக்கள் அனைவரையும் இறைவன் வனாந்திரத்தில் தம் மேகத்தின்கீழ் வழிநடத்தினார். அவர்கள் அனைவருமே செங்கடலைக் கடந்து சென்றார்கள். இந்த உண்மையை நீங்கள் அறியாதிருப்பதை நான் விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் மேகத்திலும், கடலிலும், மோசேக்குள் திருமுழுக்குப் பெற்றார்கள். அவர்கள் அனைவரும் இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே உணவைச் சாப்பிட்டார்கள். இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரே பானத்தைக் குடித்தார்கள்; அவர்களுடன்கூடச் சென்ற அந்த ஆவிக்குரிய கற்பாறை கொடுத்த தண்ணீரைக் குடித்தார்கள். அந்தக் கற்பாறை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், இறைவன் அவர்களில் அதிகமானவர்கள்மேல் பிரியமாயிருக்கவில்லை; இதனால், அவர்களுடைய உடல்கள் வனாந்திரத்தில் சிதறடிக்கப்பட்டன. அவர்கள் தீமையான காரியங்களின்மேல் தங்கள் இருதயங்களில் நாட்டம் கொண்டதுபோல நாமும் இராதபடி, இவை நமக்கு ஒரு எச்சரிக்கையின் எடுத்துக்காட்டாய் இருக்கிறது. அவர்களில் சிலர் விக்கிரக வழிபாட்டுக்காரர்களாக இருந்ததுபோல, நீங்களும் இருக்கவேண்டாம்; “மக்கள் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் உட்கார்ந்தார்கள். பின்பு களியாட்டங்களில் நாட்டங்கொண்டு எழுந்திருந்தார்கள்” என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் செய்ததைப்போல, நீங்களும் முறைகேடான பாலுறவில் ஈடுபடக்கூடாது. இதனால் அவர்களில் இருபத்து மூவாயிரம்பேர் ஒரே நாளில் செத்தார்களே. அவர்களில் சிலர் செய்ததுபோல நாம் கிறிஸ்துவைச் சோதிக்கக்கூடாது. இதனால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்களே. அவர்களில் சிலர் செய்ததைப்போல நாம் முறுமுறுக்கக் கூடாது. இதனால் அவர்கள் அழிக்கும் தூதனால் கொல்லப்பட்டார்களே. மற்றவர்களுக்கு இக்காரியங்கள் எல்லாம் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்கும்படியே இஸ்ரயேலருக்கு இவை நேரிட்டன. மக்கள் அவற்றை கடைசிக் காலங்கள் நிறைவேறும் நாட்களில் வாழும் நமக்கு எச்சரிப்புண்டாகும்படி, எழுதி வைத்திருக்கின்றனர். ஆதலால் நீங்கள் உறுதியாய் நிற்கிறதாக எண்ணுவீர்களாயின், நீங்கள் விழுந்துவிடாதபடி கவனமாயிருங்கள். உங்களுக்கு நேரிட்ட சோதனைகள் பொதுவாக மனிதனுக்கு நேரிடுகிறவைகளே. இறைவன் உங்களுக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்; ஆகவே உங்களால் தாங்கமுடியாத அளவுக்கு நீங்கள் சோதனைக்குள்ளாக அவர் இடங்கொடுக்கமாட்டார். ஆயினும் நீங்கள் சோதனைக்குட்படும்போது, நீங்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு வழியையும் அவர் ஏற்படுத்தித் தருவார். அதனால், உங்களுக்கு அதைத் தாங்கிக்கொள்ளக் கூடியதாயிருக்கும். ஆகையால் என் அன்பான நண்பர்களே, விக்கிரக வழிபாட்டை விட்டு விலகி ஓடுங்கள். நான் அறிவாற்றலுள்ள மக்களுடனே பேசுகிறேன்; நான் சொல்வதை நீங்களே நிதானித்துப் பாருங்கள். நாம் ஆசீர்வாதத்தின் பாத்திரத்திற்கு நன்றி செலுத்துகின்றபோது, கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்கிறோம் அல்லவா? அப்பத்தைப் பிட்கும்போது, கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்கிறோம் அல்லவா? ஏனெனில், ஒரே அப்பம் இருப்பதனால், நாம் பலராய் இருந்தாலும், ஒரு உடலாகிறோம். நாமெல்லோரும், ஒரே அப்பத்தில் பங்குகொள்கிறோமே. இஸ்ரயேல் மக்களைக் கவனித்துப் பாருங்கள்: பலியாகச் செலுத்தப்பட்டதைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தின் பணியில் பங்குகொள்கிறார்கள் அல்லவா? அப்படியானால், விக்கிரகத்துக்குச் செலுத்தப்பட்ட பலியை ஒரு பொருட்டாகவோ, அல்லது விக்கிரகத்தையே ஒரு பொருட்டாகவோ நான் கருதுகிறேனா? இல்லையே, அஞ்ஞானிகளின் பலிகள் இறைவனுக்கல்ல, பிசாசுகளுக்கே பலியிடப்படுகின்றன. அதனால், நீங்கள் பிசாசுகளுடன் பங்காளிகளாய் இருப்பதை நான் விரும்பவில்லை. கர்த்தருடைய பாத்திரத்திலிருந்தும், பிசாசுகளுடைய பாத்திரத்திலிருந்தும் நீங்கள் குடிக்க முடியாது; கர்த்தரின் பந்தியும், பிசாசுகளின் பந்தியும் ஆகிய இரண்டிலும் நீங்கள் பங்குள்ளவர்கள் ஆகமுடியாது. இவ்வாறு, நாம் கர்த்தருக்கு எரிச்சலூட்ட முயலுகிறோமா? நாம் அவரைவிடப் பலமுள்ளவர்களா? “எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமையுண்டு” என்று சொல்லப்படுகிறது. ஆனால் எல்லாமே பயனுள்ளதாயிராது. “எல்லாவற்றையும் அனுபவிக்க உரிமையுண்டு.” ஆனால், எல்லாம் வளர்ச்சியடைவதற்கு உகந்தவையல்ல.

1 கொரிந்தியர் 10:1-23 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்று இருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லோரும் மேகத்திற்குக் கீழே இருந்தார்கள், எல்லோரும், கடலின்வழியாக நடந்துவந்தார்கள். எல்லோரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் கடலினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள். எல்லோரும் ஒரே ஆவிக்குரிய ஆகாரத்தைச் சாப்பிட்டார்கள். எல்லோரும் ஒரே ஆவிக்குரிய தண்ணீரைக் குடித்தார்கள். எப்படியென்றால், அவர்களோடுகூடச்சென்ற ஆவிக்குரிய கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானவர்களிடத்தில் தேவன் பிரியமாக இருக்கவில்லை; ஆகவே வனாந்திரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் இச்சித்ததுபோல நாமும் தீங்கானவைகளை இச்சிக்காதபடிக்கு, இவைகள் நமக்கு அடையாளமாக இருக்கிறது. மக்கள் உட்கார்ந்து உண்ணவும், குடிக்கவும், வேசித்தன எண்ணத்தோடு விளையாடவும் எழுந்திருந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரக ஆராதனைக்காரர்களானதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். அவர்களில் சிலர் வேசித்தனம்செய்து, ஒரேநாளில் இருபத்து மூவாயிரம்பேர் இறந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்செய்யாதிருப்போமாக. அவர்களில் சிலர் கர்த்த்தரைச் சோதித்துப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைச் சோதித்துப்பார்க்காமலிருப்போமாக. அவர்களில் சிலர் முறுமுறுத்து, மரண தூதனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காமலிருங்கள். இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று நினைக்கிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மனிதர்களுக்குச் சம்பவிக்கிற சோதனையே அல்லாமல் வேறு சோதனை உங்களுக்குச் சம்பவிக்கவில்லை. தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்; உங்களுடைய பெலத்திற்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடுக்காமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான வழியையும் உண்டாக்குவார். ஆகவே, எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள். உங்களைப் புத்திமான்களென்று நினைத்துப்பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள். நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாக இருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லோரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாக இருக்கிறோம். மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைச் சாப்பிடுகிறவர்கள் பலிபீடத்தோடு ஐக்கியமாக இருக்கிறார்களல்லவா? இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்திற்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? பிறமார்க்கத்தார்கள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு இல்லை, பேய்களுக்கே பலியிடுகிறார்கள் என்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடு ஐக்கியமாக இருக்க எனக்கு மனதில்லை. நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய உணவு பந்திக்கும் பேய்களுடைய உணவு பந்திக்கும் பங்குள்ளவர்களாக இருக்கக்கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலைத் தூண்டலாமா? அவரைவிட நாம் பலவான்களா? எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் தகுதியாக இருக்காது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆனாலும் எல்லாம் பக்திவளர்ச்சியை உண்டாக்காது.

1 கொரிந்தியர் 10:1-23 பரிசுத்த பைபிள் (TAERV)

சகோதர சகோதரிகளே, மோசேயைப் பின்பற்றிய நமது முன்னோர்களுக்கு நேர்ந்தது என்னவென்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்: அவர்கள் எல்லாரும் மேகத்தின் கீழ் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கடல்வழியே கடந்து சென்றார்கள். அந்த மக்கள் எல்லாரும் மேகத்திலும் கடலிலும் மோசேயோடு உள்ள நல்லுறவில் ஞானஸ்நானம் செய்யப்பட்டார்கள். ஒரே வகையான ஆன்மீக உணவை அவர்கள் அனைவரும் உட்கொண்டார்கள். ஒரே வகையான ஆன்மீக பானத்தை அவர்கள் பருகினார்கள். அவர்களோடிருந்த ஆன்மீகப் பாறையில் இருந்து அவர்கள் பருகினர். அந்தப் பாறை கிறிஸ்து. ஆனால் அம்மக்கள் பலர் தேவனுக்கு உகந்தவர்களாய் இருக்கவில்லை. வானந்தரத்தில் அவர்கள் கொல்லப்பட்டார்கள். நடந்தேறிய இக்காரியங்கள் நமக்கு உதாரணங்களாக அமையும். அந்த மக்கள் செய்த தீய காரியத்தைச் செய்ய விரும்புவதினின்று இவை நம்மைத் தடுத்து நிறுத்தும். அந்த மக்களில் சிலர் செய்தது போல் விக்கிரகங்களை வணங்காதீர்கள். “மக்கள் உண்பதற்காகவும் பருகுவதற்காகவும் அமர்ந்தனர். மக்கள் நடனமாடுவதற்காக எழுந்து நின்றனர்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த மக்களுள் சிலர் செய்ததைப்போல் பாலுறவுப் பாவங்களை நாம் செய்யக் கூடாது. ஒரே நாளில் தம் பாவத்தினால், 23,000 பேர் இறந்தனர். அம்மக்களில் சிலர் செய்தது போல் நாம் கர்த்தரைச் சோதித்துப் பார்க்கக் கூடாது. கர்த்தரைச் சோதித்ததால் அவர்கள் பாம்புகளினால் கொல்லப்பட்டார்கள். அம்மக்களுள் சிலர் செய்ததுபோல் முறுமுறுக்காதீர்கள். அழிவுக்கான தேவ தூதனால் அம்மக்கள் கொல்லப்பட்டார்கள். அம்மக்களுக்கு நடந்தவை நமக்கு உதாரணங்கள் ஆகும். நமக்கு எச்சரிக்கையாக அவை எழுதப்பட்டுள்ளன. அப்பழைய வரலாறுகள் முடிவடையும் காலத்தில் நாம் வாழ்கிறோம். அதனால், உறுதியாக நிற்பதாக எண்ணும் ஒருவன் விழுந்துவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும். எல்லா மனிதர்களுக்கும் வரும் சோதனைகளே உங்களுக்கும் வரும். ஆனால் நீங்கள் தேவனை நம்பமுடியும். நீங்கள் தாங்க இயலாத அளவு சோதனைகளை தேவன் உங்களுக்குத் தரமாட்டார். உங்களுக்குச் சோதனை வரும்போது அச்சோதனையில் இருந்து விடுபடவும் தேவன் உங்களுக்கு வழிகாட்டுவார். அப்போது நீங்கள் சோதனையைத் தாங்கிக்கொள்ளக்கூடும். என் அன்புக்குரிய நண்பர்களே, அதனால் நீங்கள் விக்கிரக வழிபாட்டிலிருந்து விலகுங்கள். நீங்கள் அறிவுள்ள மனிதர்கள் என்பதால் உங்களோடு பேசுகிறேன். நான் சொல்வதை நீங்களே சரியா, தவறா எனத் தீர்மானித்துக்கொள்ளுங்கள். நாம் நன்றியறிதலுடன் பங்குபெறும் ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவின் இரத்தத்தைப் பங்கிடுவதாகும். நாம் பகிர்ந்துண்ணும் அப்பமோ கிறிஸ்துவின் சரீரத்தைப் பகிர்தலாகும். ஒரு அப்பம் உள்ளது. நாமோ பலர். ஆனால் அந்த ஒரே அப்பத்தை நாம் பகிர்ந்துகொள்கிறோம். எனவே நாம் உண்மையாகவே ஒரே சரீரமாக இருக்கிறோம். இஸ்ரவேல் மக்களை நினைத்துப்பாருங்கள். படைக்கப்பட்டவற்றைப் புசிப்பவர்கள் பலிபீடத்துடன் நல்லுறவுகொண்டிருக்கிறார்கள் அல்லவா. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு முக்கியத்துவம் உடையது என்று சொல்ல நான் முன் வரவில்லை. விக்கிரகம் ஒரு குறிப்பிடத்தக்க பொருள் எனவும் நான் கூறவில்லை. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட பொருள்கள் பிசாசுகளுக்கே கொடுக்கப்படுகின்றன, தேவனுக்கல்ல. நீங்கள் பிசாசுகளோடு எந்தப் பொருளையும் பகிர்ந்துகொள்வதை நான் விரும்பமாட்டேன். கர்த்தருடைய பாத்திரத்திலிருந்தும் பிசாசுகளின் பாத்திரத்திலும் நீங்கள் பருக முடியாது. கர்த்தரின் மேசையிலும் பிசாசுகளின் மேசையிலும் உங்களால் உண்ண முடியாது. கர்த்தரை எரிச்சல் கொள்ளச் செய்யலாமா? நாம் அவரைவிட பலசாலிகளா? இல்லை. “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆம், ஆனால் எல்லாப் பொருள்களும் நல்லதல்ல. “எல்லாப் பொருள்களும் அனுமதிக்கப்பட்டவை” எனினும், சில பொருள்கள் பக்தியில் வளருவதற்குப் பிறருக்கு உதவுவதில்லை.