1 கொரிந்தியர் 10:24-33
1 கொரிந்தியர் 10:24-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஒருவனும் தனது நலனை மட்டுமே தேடக்கூடாது; மற்றவர்களது நலனையும் தேடவேண்டும். இறைச்சிக் கடையில் விற்கும் எதையும் மனசாட்சியின் நிமித்தம் எவ்வித கேள்வியும் கேட்காமல் நீங்கள் வாங்கி சாப்பிடலாம். ஏனெனில், “பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் கர்த்தருடையவை.” அவிசுவாசியொருவன் உங்களை சாப்பாட்டிற்கு அழைக்கும்போது, அங்கு நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன்னால் வைக்கப்படுகிறதை மனசாட்சியின் நிமித்தம், எவ்வித கேள்விகளையும் கேட்காமல் வாங்கி சாப்பிடுங்கள். ஆனால் ஒருவன் உங்களுக்கு, “இது பலியிடப்பட்டது” என்று சொன்னால், அவனுக்காகவும், மனசாட்சியின் நிமித்தமும் அதைச் சாப்பிடவேண்டாம். நான் குறிப்பிடுவது உங்களுடைய மனசாட்சியை அல்ல, மற்றவனுடைய மனசாட்சியையே குறிப்பிடுகிறேன். ஏனெனில் எனது சுதந்திரம், ஏன் இன்னொருவனது மனசாட்சியின் தீர்ப்புக்கு உள்ளாக வேண்டும்? இறைவனுக்கு நன்றி செலுத்தியே நான் உணவைச் சாப்பிடுகிறேன். அப்படியானால் நான் நன்றி செலுத்தியதைக்குறித்து, ஏன் யாராவது என்னைக் குற்றப்படுத்தவேண்டும்? ஆகவே நீங்கள் சாப்பிட்டாலும், குடித்தாலும் வேறு எதைச் செய்தாலும், அவையனைத்தையும் இறைவனுடைய மகிமைக்காகவே செய்யுங்கள். யாருக்குமே இடறலை ஏற்படுத்தக் காரணமாயிராதேயுங்கள். நீங்கள் யூதர்களுக்கோ, கிரேக்கர்களுக்கோ இறைவனுடைய திருச்சபைக்கோ, இடையூறாய் இருக்காதீர்கள். அவ்வாறே நானும், எல்லாவற்றிலும், ஒவ்வொருவரையும் பிரியப்படுத்தவே முயற்சிக்கிறேன். நான் என்னுடைய நன்மையைத் தேடுகிறவனாயிராமல், பலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதற்காக, அநேகருடைய நன்மையையேத் தேடுகிறேன்.
1 கொரிந்தியர் 10:24-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஒவ்வொருவனும் தன் சொந்த ஆதாயத்தைத் தேடாமல், மற்றவர்களுடைய ஆதாயத்தைத் தேடவேண்டும். கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிச்சாப்பிடுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. அன்றியும் விசுவாசம் இல்லாதவர்களில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனமிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரிக்காமல், உங்கள்முன் வைக்கப்படுகிற எல்லாவற்றையும் சாப்பிடுங்கள். ஆனாலும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் சாப்பிடாமலிருங்கள்; பூமியும் அதில் உள்ளவைகளும் கர்த்தருடையது. உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுதந்திரம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாக நினைக்கவேண்டியதென்ன? மேலும் நான் அதை நன்றியோடு அநுபவித்தால், நன்றிசெலுத்தி அனுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூற்றப்படுவானேன்? ஆகவே, நீங்கள், சாப்பிட்டாலும் குடித்தாலும், எதைச்செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். நான் என் சொந்தப் பிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லோருக்கும் பிரியமாக நடக்கிறதுபோல; நீங்களும் யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், தேவனுடைய சபைக்கும் இடறல் இல்லாதவர்களாக இருங்கள்.
1 கொரிந்தியர் 10:24-33 பரிசுத்த பைபிள் (TAERV)
தனக்கு மட்டுமே உதவக்கூடிய காரியங்களை ஒருவன் செய்ய முயலக்கூடாது. பிறருக்குப் பயன்படக் கூடிய செயல்களை அவன் செய்ய முயற்சி செய்தல் வேண்டும். சந்தையில் விற்கப்படும் எந்த இறைச்சியையும் சாப்பிடுங்கள். சரி அல்லது தவறு என்பது பற்றி (அதைச் சாப்பிடுவது தொடர்பாக) எந்தக் கேள்வியையும் கேட்காதீர்கள். “இந்த உலகமும் அதிலுள்ள அனைத்தும் கர்த்தருக்கு உரியவை.” ஆதலால் நீங்கள் அதைச் சாப்பிடலாம். அவிசுவாசியான ஒரு மனிதன் அவனோடு உண்ணுவதற்கு உங்களை அழைக்கக் கூடும். நீங்கள் போக விரும்பினால், உங்கள் முன் வைக்கப்படும் உணவு எதுவாயினும் அதனை உண்ணுங்கள். சாப்பிடத் தகுந்ததா, இல்லையா என அறியும் பொருட்டு வினா எழுப்பாதீர்கள். ஆனால் ஒருவன் உங்களுக்கு “அது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவு” என்று கூறினால், பின்னர் அதை உண்ணுவது குற்றமாகும். ஏனெனில் அது குற்றம் என மக்கள் நினைக்கிறார்கள். அதைக் கூறிய மனிதனின் மனச்சாட்சியை நீங்கள் கெடுக்கக் கூடாது. நீங்கள் அது குற்றமென நினைப்பதாக நான் கருதவில்லை. ஆனால் மற்ற மனிதன் அதைக் குற்றமென எண்ணுகிறான். அதனால் நான் அந்த இறைச்சியை உண்ணமாட்டேன். மற்றொரு மனிதன் என்ன நினைப்பானோ என்கிற எண்ணத்தால் எனது சுதந்திரம் தீர்மானிக்கப்பட நான் அனுமதிக்கமாட்டேன். நான் உணவை நன்றியுணர்வுடன் உண்ணுகிறேன். எனவே தேவனுக்கு நான் நன்றி தெரிவிக்கிற ஏதோ சிலவற்றில் என்னைப் பற்றி பிறர் விமர்சிப்பதை நான் விரும்புவதில்லை. எனவே உண்டாலும், பருகினாலும், வேறு எதைச் செய்தாலும் ஒவ்வொன்றையும் தேவனுடைய மகிமைக்காகச் செய்யுங்கள். யூதர்கள், கிரேக்கர்கள் அல்லது தேவனுடைய சபையார் தவறிழைக்கும்படிச் செய்யவைக்கிற எந்தச் செயலையும் செய்யாதீர்கள். நானும் அதனையே செய்கிறேன். எல்லாரையும் எல்லா வகைகளிலும் திருப்திப்படுத்த முனைகிறேன். எனக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றை நான் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் அநேக மக்களுக்கு சந்தோஷம் தரக் கூடியவற்றைச் செய்ய முயற்சிக்கிறேன். பிறர் இரட்சிக்கப்படுவதற்காக பலருக்குப் பயன்படுவதையே செய்ய முயற்சி செய்கிறேன்.
1 கொரிந்தியர் 10:24-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள். ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன? மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்? ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல; நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.