1 கொரிந்தியர் 12:4-11

1 கொரிந்தியர் 12:4-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படும் பல்வேறு வகையான ஆவிக்குரிய வரங்கள் உண்டு. ஆனால் ஆவியானவர் ஒருவரே அவற்றைக் கொடுக்கிறார். இறைபணிகளும் பல்வேறு வகையானவை. ஆனால், ஒரே கர்த்தருக்கே அவற்றைச் செய்கிறோம். இறைசெயல்களும் பல்வேறு வகையானவை. ஆனால், இறைவன் ஒருவரே எல்லா மனிதரிலும், எல்லாவற்றையும் செயல்படுத்துகிறார். பொதுவான நன்மைக்காக, ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு கொடுக்கப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர்மூலம் ஒருவருக்கு ஞானமுள்ள வார்த்தையை வெளிப்படுத்தும் வரமும், இன்னொருவருக்கு அதே ஆவியானவர்மூலம் அறிவை வெளிப்படுத்தும் வரமும் கொடுக்கப்படுகிறது. அதே ஆவியானவர் மூலமாக, மற்றொருவருக்கு விசுவாசம் கொடுக்கப்படுகிறது. அதே ஆவியானவர்மூலம், இன்னொருவருக்கு சுகமளிக்கும் வரங்கள் கொடுக்கப்படுகின்றன. மற்றொருவருக்கு அற்புதங்களைச் செய்யும் வல்லமைகளும், வேறொருவருக்கு இறைவாக்கு உரைக்கவும், இன்னொருவருக்கு ஆவிகளைப் பகுத்தறியும் ஆற்றலும் கொடுக்கப்படுகின்றன. ஒருவருக்கும் ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகளும், மற்றொருவருக்கு அந்தப் பல்வகையான வேற்று மொழிகளை விளக்கிச்சொல்லும் ஆற்றலும் கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம், ஒரே ஆவியானவரின் செயல்பாடுகளே. அவர் தாம் தீர்மானிக்கிறபடியே, ஒவ்வொருவருக்கும் இவற்றைக் கொடுக்கிறார்.

1 கொரிந்தியர் 12:4-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லோருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. ஒவ்வொருவனுக்கும் அருளப்பட்ட ஆவியானவரின் வரங்கள் அனைவருடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒருவனுக்கு ஆவியானவராலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியானவராலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல மொழிகளைப் பேசுதலும், வேறொருவனுக்கு மொழிகளை வியாக்கியானம் செய்தலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது விருப்பத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

1 கொரிந்தியர் 12:4-11 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை. ஊழியம் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் கர்த்தரிடமிருந்தே வருபவை. மனிதரிடம் தேவன் செயல்படும் வழிகள் பல உண்டு. ஆனால் அவை அனைத்தும் நமக்குள் செயல்படுகிற தேவனிடமிருந்து வருபவை. நாம் ஒவ்வொன்றையும் செய்ய தேவன் நம்மில் செயல்படுகிறார். ஆவியானவரின் வரங்களில் சில ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும். பிறருக்கு உதவும்படியாய் ஆவியானவர் இதை ஒவ்வொருவருக்கும் அளிப்பார். ஒருவனுக்கு ஞானத்துடன் பேசும் ஆற்றலைப் பரிசுத்த ஆவியானவர் வழங்குகிறார். அதே பரிசுத்த ஆவியானவர் அறிவோடு பேசும் ஆற்றலை இன்னொருவனுக்குக் கொடுக்கிறார். அதே பரிசுத்த ஆவியானவர் விசுவாசத்தை ஒருவனுக்கு அளிக்கிறார். குணப்படுத்தும் வல்லமையை மற்றொருவனுக்கு அதே பரிசுத்த ஆவியானவர் தருகிறார். அதிசயங்களைச் செய்யும் சக்தியை இன்னொரு மனிதனுக்கு ஆவியானவர் கொடுக்கிறார். இன்னொருவனுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லும் திறனையும், மற்றொருவனுக்கு நல்ல, தீய ஆவிகளின் வேறுபாட்டைக் காணும் திறனையும் அளிக்கிறார். பல்வேறு மொழிகளிலும் பேசும் ஆற்றலை ஒருவனுக்கும், அம்மொழிகளை விளக்கியுரைக்கும் திறமையை மற்றொருவனுக்கும் அளிக்கிறார். ஒரே ஆவியானவரே இவற்றையெல்லாம் செய்கிறார். ஒவ்வொருவனுக்கும் எதனைக் கொடுக்க வேண்டும் என்பதை ஆவியானவரே தீர்மானிக்கிறார்!

1 கொரிந்தியர் 12:4-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்.