1 கொரிந்தியர் 15:5-28
1 கொரிந்தியர் 15:5-28 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அவர் கேபாவுக்கு காட்சியளித்தார். பின்பு பன்னிரண்டு அப்போஸ்தலருக்கும் காட்சியளித்தார். அதற்குப் பின்பு, அவர் ஒரே நேரத்தில் ஐந்நூறுக்கும் அதிகமான சகோதரர்களுக்கும் காட்சியளித்தார். அவர்களில் பலர் இன்னும் உயிருடனேயே இருக்கிறார்கள். ஆனால் சிலர் மரண நித்திரையடைந்து விட்டார்கள். பின்பு அவர், யாக்கோபுக்கு காட்சியளித்தார். அதற்குப் பின்பு அவர் எல்லா அப்போஸ்தலர்களுக்கும் காட்சியளித்தார். இறுதியாக, குறைமாதத்தில் பிறந்த பிள்ளை போன்ற எனக்குங்கூட காட்சியளித்தார். ஏனெனில், அப்போஸ்தலரில் நானே மிகச்சிறியவன். நான் அப்போஸ்தலன் என்று அழைக்கப்படத் தகுதியுடையவனும் அல்ல. ஏனெனில் நான் இறைவனுடைய திருச்சபையைத் துன்புறுத்துகிறவனாய் இருந்தேனே. ஆனால் இறைவனுடைய கிருபையினாலேயே, நான் இப்பொழுது இந்நிலையில் இருக்கிறேன். அவர் எனக்குக் கொடுத்த கிருபை வீணாய்ப் போகவில்லை. மற்ற அப்போஸ்தலர் எல்லோரையும்விட, நான் அதிகம் பாடுபட்டு ஊழியம் செய்தேன். ஆனால், அந்த ஊழியத்தைச் செய்தது நான் அல்ல, எனக்குள் செயலாற்றுகின்ற இறைவனுடைய கிருபையே அதைச் செய்கிறது. எனவே நானாயிருந்தாலென்ன, அவர்களாயிருந்தாலென்ன, இந்த நற்செய்தியையே நாங்கள் எல்லோரும் பிரசங்கிக்கிறோம். இதையே நீங்கள் விசுவாசித்தீர்கள். ஆனால், கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டார் என்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லையே. கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பிரசங்கம் செய்வதும் வீண். உங்கள் விசுவாசமும் வீணானதே. அதுவுமல்லாமல், இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படவில்லை என்பது உண்மையானால், இறைவன் கிறிஸ்துவையும் உயிருடன் எழுப்பவில்லை என்றே அர்த்தமாகிறது. எனவே, இறைவன் கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார் என்று நாங்கள் சாட்சி கூறியிருக்கிறபடியால், நாங்கள் இறைவனைப்பற்றி பொய்ச்சாட்சி சொல்கிறவர்களாய் காணப்படுவோமே. ஏனெனில், இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகிறது இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிருடன் எழுப்பப்படவில்லை. கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், உங்களுடைய விசுவாசமும் பயனற்றது; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களிலேயே இருக்கிறீர்கள். அப்படியானால், கிறிஸ்துவில் மரண நித்திரையானவர்களுங்கூட அழிந்துபோனார்கள். இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரமே நாம் கிறிஸ்துவில் நம்பிக்கைகொண்டவர்களாய் இருந்தால், எல்லா மனிதருக்குள்ளும் நாமே மிகவும் பரிதாபத்திற்குள்ளானவர்கள் ஆவோம். ஆனால் உண்மையிலேயே கிறிஸ்து மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டிருக்கிறார். மரண நித்திரை அடைந்தவர்களில், அவரே முதற்கனி ஆவார். ஏனெனில் ஒரு மனிதனின் வழியாக மரணம் வந்தது போலவே, ஒரு மனிதனின் வழியாக இறந்தவர்களின் உயிர்த்தெழுதலும் வருகிறது. ஆதாமுக்குள் எல்லோரும் இறந்து போகிறதுபோல, கிறிஸ்துவில் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய ஒழுங்கு வரிசையின்படியே உயிருடன் எழுப்பப்படுவார்கள்: கிறிஸ்துவே முதற்கனி; அதற்குப் பின்பு அவர் மீண்டும் வரும்போது, அவருக்குரியவர்கள் உயிருடன் எழுப்பப்படுவார்கள். அப்பொழுது முடிவுவரும். கிறிஸ்து எல்லா ஆட்சிகளையும், அதிகாரங்களையும், வல்லமைகளையும் அழித்துவிட்டு, பிதாவாகிய இறைவனிடம் அரசை ஒப்படைப்பார். எனவே, எல்லாப் பகைவர்களையும் இறைவன் கிறிஸ்துவினுடைய கால்களின்கீழ் போடும் வரைக்கும், கிறிஸ்துவே ஆளுகை செய்யவேண்டும். அழிக்கப்பட வேண்டிய கடைசிப் பகைவன், மரணமே. ஏனெனில் இறைவன், “எல்லாவற்றையும்” அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார் என்று எழுதியிருக்கிறது. “எல்லாம்” அவருக்குக் கீழாக கொண்டுவரப்பட்டிருக்கின்றன என்று சொல்லும்போது, அது இறைவனை உள்ளடக்கவில்லை என்பது தெளிவாகின்றது. ஏனெனில், இறைவனே எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படுத்தினார். அவர் இவற்றையெல்லாம் செய்தபின்பு, மகனாகிய அவரும் எல்லாவற்றையும் தனக்குக் கீழ்ப்படுத்தியவருக்குத் தன்னைக் கீழ்ப்படுத்துவார். எனவே, இறைவனே எல்லாவற்றிலும் எல்லாமாய் இருப்பார்.
1 கொரிந்தியர் 15:5-28 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கேபாவிற்கும், பின்பு பன்னிரண்டுபேருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரர்களுக்கும் ஒரே நேரத்தில் காட்சியளித்தார்; அவர்களில் அநேகர் இந்தநாள்வரை இருக்கிறார்கள், சிலர்மட்டும் மரணமடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலர்கள் எல்லோருக்கும் காட்சியளித்தார். எல்லோருக்கும்பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். நான் அப்போஸ்தலர்கள் எல்லோரையும்விட குறைந்தவனாக இருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலன் என்று பேர்பெறுவதற்கும் தகுதியற்றவன். ஆனாலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை வீணாயிருக்கவில்லை; அவர்கள் எல்லோரையும்விட நான் அதிகமாகப் பிரயாசப்பட்டேன்; ஆனாலும் நான் இல்லை, என்னுடன் இருக்கிற தேவகிருபையே அப்படிச்செய்தது. ஆகவே, நானாயிருந்தாலும் அவர்களாயிருந்தாலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இதையே விசுவாசித்திருக்கிறீர்கள். கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து உயிரோடு எழுந்திருக்கவில்லையென்றால், எங்களுடைய பிரசங்கமும் வீண், உங்களுடைய விசுவாசமும் வீண். மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினார் என்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சி சொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் உயிரோடு எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து உயிரோடு எழுந்திராவிட்டால், உங்களுடைய விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்களுடைய பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவிற்குள் மரணமடைந்தவர்களும் அழிந்து போயிருப்பார்களே. இவ்வுலக வாழ்விற்காகமட்டும் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால், எல்லா மனிதர்களையும்விட மிகவும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாக இருப்போம். கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்து, மரணமடைந்தவர்களில் முதற்பலனானார். மனிதனால் மரணம் உண்டானபடியால், மனிதனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டானது. ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் எல்லாத் துரைத்தனத்தையும் எல்லா அதிகாரத்தையும் வல்லமையையும் அழித்து, தேவனும் பிதாவுமாக இருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும். அழிக்கப்படும் கடைசி விரோதி மரணம். எல்லாவற்றையும் அவருடைய காலுக்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆனாலும் அனைத்தும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, அனைத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லை என்பது வெளியரங்கமாக இருக்கிறது. அனைத்தும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே எல்லாவற்றிலும் எல்லாமாக இருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்கு எல்லாவற்றையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
1 கொரிந்தியர் 15:5-28 பரிசுத்த பைபிள் (TAERV)
கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார். அதற்குப் பிறகு கிறிஸ்து 500 சகோதரர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே சமயத்தில் தன்னை வெளிப்படுத்தினார். அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர். அதன் பின்னர் கிறிஸ்து யாக்கோபுக்கும் பிறகு மீண்டும் எல்லாச் சீஷர்களுக்கும் காட்சியளித்தார். இறுதியாக வழக்கமற்ற முறையில் பிறந்த ஒருவனைப் போன்ற எனக்கும் கிறிஸ்து தன்னைக் காண்பித்தார். மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள். நான் தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தியவன். எனவே அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்கும் நான் தகுதியுடையவன் அல்ல. ஆனால் தேவனுடைய இரக்கத்தினால் இப்போதைய எனது தகுதியைப் பெற்றேன். தேவன் என்னிடம் காட்டிய இரக்கம் வீணாய் போகவில்லை. நான் மற்ற எல்லா அப்போஸ்தலரைக் காட்டிலும் கடினமாய் உழைத்தேன். (ஆனால், உண்மையில் உழைப்பவன் நான் அல்ல. தேவனுடைய இரக்கமே என்னோடு இருந்தது.) நான் உங்களுக்குப் போதித்தேனா, அல்லது மற்ற அப்போஸ்தலர்கள் உங்களுக்குப் போதித்தார்களா என்பது முக்கியமில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே விஷயத்தையே போதிக்கிறோம். இதையே நீங்களும் நம்பினீர்கள். கிறிஸ்து மரணத்தில் இருந்து எழுப்பப்பட்டார் என்று போதிக்கிறோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்பட முடியாது என்று உங்களில் சிலர் கூறுவதேன்? மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படமாட்டார்கள் என்றால் கிறிஸ்துவும் ஒருபோதும் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். மரணத்திலிருந்து ஒருபோதும் கிறிஸ்து எழுப்பப்பட்டிருக்கவில்லை எனில், பிறகு எங்கள் போதனை எந்தத் தகுதியுமற்றது. மேலும் உங்கள் விசுவாசம் தகுதியற்றதாகிறது. நாம் தேவனைப் பற்றி பொய்யுரைக்கும் களங்கம் உடையவர்கள் ஆவோம். ஏனென்றால் தேவன் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பினாரென்று நாம் தேவனைக் குறித்துப் போதித்துள்ளோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் தேவனால் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். இறந்தோர் எழுப்பப்படாவிட்டால் கிறிஸ்துவும் கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை எனலாம். கிறிஸ்து எழுப்பப்படவில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீணானது. இன்னும் நீங்கள் அனைவரும் பாவிகளாக இருக்கிறீர்கள். ஏற்கெனவே இறந்துபோன கிறிஸ்துவின் மக்களும் அழிந்துபோயிருப்பார்கள். இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்குரியவர்களாகக் காணப்படுவோம். ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார். ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. ஆதாமில் நாம் எல்லாரும் இறக்கிறோம். அதைப்போன்று கிறிஸ்துவில் நாம் அனைவரும் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறோம். ஆனால் தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். அப்போது முடிவு வரும். எல்லா ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், சக்திகளையும் கிறிஸ்து அழிப்பார். பிதாவாகிய தேவனிடம் கிறிஸ்து இராஜ்யத்தை ஒப்படைப்பார். கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் எல்லா பகைவர்களும் வரும்வரைக்கும் கிறிஸ்து ஆளவேண்டும். கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும். “தேவன் அவரது அதிகாரத்துக்குள் எல்லாவற்றையும் வைத்தார்” என்று வேதவாக்கியங்கள் சொல்கின்றன. “எல்லாப் பொருள்களும் அவரது (கிறிஸ்துவின்) அதிகாரத்துக்கு உட்பட்டது” எனும்போது தேவனை உள்ளடக்கிக் கூறவில்லை என்பது தெளிவாகிறது. எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தியவர் தேவனே. எல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தப்பட்டதும் தேவனுடைய அதிகாரத்துக்குள் குமாரனும் (கிறிஸ்துவும்) உட்படுத்தப்படுவார். அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.
1 கொரிந்தியர் 15:5-28 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது. ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள். கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது. பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு மரணம். சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.