1 கொரிந்தியர் 6:1-7

1 கொரிந்தியர் 6:1-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி? இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா? சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான். நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?

1 கொரிந்தியர் 6:1-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்களில் யாருக்காவது வேறொருவருடன் ஒரு தகராறு ஏற்படுமாயின், அவன் தீர்ப்புக்காக பரிசுத்தவான்களிடம் போகாமல் அநீதியுள்ளவர்களிடம் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள்தான் உலகத்தை ஒரு நாள் நியாயந்தீர்ப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தையே நீங்கள் நியாயந்தீர்க்கப் போகிறவர்களாயின், சிறிய வழக்குகளை நியாயந்தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையோ? இறைவனுடைய தூதர்களையும் நாம்தான் நியாயந்தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால், இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை நியாயந்தீர்ப்பதில் நீங்கள் இன்னும் அதிக தகுதியுடையவர்களாய் இருக்கிறீர்களே. ஆதலால், அத்தகைய காரியங்களைக்குறித்து உங்களுக்குத் தகராறு ஏற்படுமாயின், திருச்சபையில் புறக்கணிக்கப்பட்டவர்களையே நியாயத்தீர்ப்பு செய்யும் நடுவர்களாக நியமித்துக்கொள்ளுங்கள். உங்களை வெட்கப்படுத்துவதற்காகவே நான் இதைச் சொல்கிறேன். சகோதரர்களிடையே உள்ள தகராறைத் தீர்க்கக்கூடிய ஞானமுள்ள ஒருவனாவது உங்கள் மத்தியில் இல்லையோ? மாறாக, ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு விரோதமாக நீதிமன்றத்துக்குப் போகிறானே. அதுவும் அவிசுவாசிகளுக்கு முன்பாகவே இப்படிச் செய்கிறானே. உங்களிடையே நீதிமன்ற வழக்குகள் இருப்பது ஏற்கெனவே நீங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படுவீர்கள் என்பதையே காட்டுகிறது. மாறாக உங்களுக்குச் செய்யப்படும் தீமையை நீங்கள் ஏன் சகித்துக்கொள்ளக்கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் ஏன் அதைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது?

1 கொரிந்தியர் 6:1-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல், அநியாயக்காரர்களிடம் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று உங்களுக்குத் தெரியாதா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, சாதாரண வழக்குகளைத் தீர்க்க நீங்கள் தகுதியற்றவர்களா? நாம் தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியிருக்க, இந்த வாழ்க்கைக்குரியவைகளை நீங்கள் நியாயந்தீர்த்துக்கொள்ளமுடியாதிருக்கிறது எப்படி? இந்த வாழ்க்கைக்குரிய வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் சாதாரணமாக எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க பகுத்தறிவு உள்ளவன் ஒருவன்கூட உங்களுக்குள் இல்லையா? சகோதரனோடு சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச்செய்கிறான். நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எல்லாவிதத்திலும் குற்றமாக இருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?

1 கொரிந்தியர் 6:1-7 பரிசுத்த பைபிள் (TAERV)

உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்? தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள். நீங்கள் வெட்கப்படும்படியாக இதனைக் கூறுகிறேன். நிச்சயமாய் உங்கள் மத்தியிலேயே இரு சகோதரர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஞானமுள்ள சிலர் இருக்கிறார்கள். ஆனால் இப்போதோ ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகிறான். இயேசுவை நம்பாதவர்களான மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்படியாக எதற்காக அனுமதிக்கிறீர்கள்? உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும்.