1 கொரிந்தியர் 6:18-20
1 கொரிந்தியர் 6:18-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
முறைகேடான பாலுறவிலிருந்து விலகியோடுங்கள். மனிதன் செய்யும் மற்ற எல்லாப் பாவங்களும் அவனுடைய உடலுக்கு வெளியே இருக்கும்; ஆனால் பாலுறவுப் பாவங்களைச் செய்கிறவன், தன் சொந்த உடலுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறான். உங்கள் உடல் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட ஆவியானவர் உங்களில் குடியிருக்கிறாரே. நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் உங்கள் உடலினால் இறைவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:18-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
வேசித்தனத்திற்கு விலகி ஓடுங்கள். மனிதன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்கு வெளியே இருக்கும்; வேசித்தனம் செய்கிறவனோ தன் சொந்த சரீரத்திற்கு விரோதமாகப் பாவம் செய்கிறான். உங்களுடைய சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்கள் அல்லவென்றும் உங்களுக்குத் தெரியாதா? விலைக்கு வாங்கப்பட்டீர்களே; ஆகவே, தேவனுக்கு உடையவைகளாகிய உங்களுடைய சரீரத்தினாலும் உங்களுடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:18-20 பரிசுத்த பைபிள் (TAERV)
உடலுறவிலான பாவத்தை விட்டு விலகுங்கள். ஒரு மனிதன் செய்கிற பிற பாவங்கள் அவன் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவையல்ல. உடலுறவு தொடர்பான பாவம் செய்கிறவன் தன் சரீரத்துக்கு எதிராகப் பாவம் செய்கிறான். பரிசுத்த ஆவியானவர் தங்கும் இடமாக உங்கள் சரீரம் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ளார். தேவனிடமிருந்து பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றீர்கள். நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல. தேவன் விலை கொடுத்து உங்களை மீட்டுக்கொண்டார். உங்களது சரீரத்தால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
1 கொரிந்தியர் 6:18-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ்செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.