1 யோவான் 2:4-7
1 யோவான் 2:4-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
“இறைவனை நான் அறிந்திருக்கிறேன்” என்று சொல்லும் ஒருவன், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவன் ஒரு பொய்யன்; சத்தியம் அவனுக்குள் இல்லை. ஆனால் யாராவது, இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், இறைவனின் அன்பு உண்மையிலேயே அவனில் முழுநிறைவு பெறுகிறது. நாம் இறைவனில் இருக்கிறோம் என்பதை இவ்விதமாகத்தான் அறிந்துகொள்கிறோம்: ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால், அவன் இயேசுவைப் போலவே தானும் நடக்கவேண்டும். அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் செய்தி ஒரு புதிய கட்டளை அல்ல; பழைய கட்டளையைத்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று நீங்கள் கேட்ட செய்தியே அந்த முந்திய கட்டளை.
1 யோவான் 2:4-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவரை அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதவன் பொய்யனாக இருக்கிறான், அவனுக்குள் சத்தியம் இல்லை. அவருடைய வசனத்தைக் கடைபிடிக்கிறவனிடத்தில் தேவ அன்பு உண்மையாகவே பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோம் என்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். சகோதரர்களே, நான் உங்களுக்குப் புதிய கட்டளையை அல்ல, ஆரம்பமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கட்டளையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கட்டளை நீங்கள் ஆரம்பமுதல் கேட்டிருக்கிற வசனம்தானே.
1 யோவான் 2:4-7 பரிசுத்த பைபிள் (TAERV)
ஒருவன், “நான் தேவனை அறிவேன்!” என்கிறான். ஆனால் அவன் தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லையென்றால் அவன் ஒரு பொய்யன். அவனில் உண்மை இல்லை. ஆனால் ஒருவன் தேவனின் போதனைக்குக் கீழ்ப்படியும்போது, அம்மனிதனில் தேவனின் அன்பு முழுமை பெற்றிருக்கும். நாம் தேவனைப் பின்பற்றுகிறோம் என்பதை இவ்வாறே அறிந்துகொள்கிறோம். ஒரு மனிதன் தான் தேவனில் வாழ்வதாகக் கூறினால், அவன் இயேசு வாழ்ந்ததைப் போன்று வாழ வேண்டும். எனது அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையை எழுதவில்லை. துவக்கத்திலிருந்தே உங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டளை அது. நீங்கள் ஏற்கெனவே கேட்ட போதனையே இக்கட்டளையாகும்.
1 யோவான் 2:4-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.