1 யோவான் 5:7-13
1 யோவான் 5:7-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆகவே, சாட்சி கொடுப்பவை மூன்று இருக்கின்றன: ஆவியானவர், தண்ணீர், இரத்தம்; இந்த மூன்று சாட்சிகளும், ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனிதனின் சாட்சியை ஏற்றுக்கொள்கிறோமே, அப்படியானால் இறைவனுடைய சாட்சி அதிலும் மேலானது அல்லவா! ஏனெனில், இதுவே இறைவன் தமது மகனைக்குறித்துக் கொடுத்த சாட்சியாய் இருக்கிறது. இறைவனின் மகனாகிய கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிறவர்கள் யாரோ அவர்களுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறார்கள். இறைவனை விசுவாசிக்காதவர்கள் யாரோ அவர்கள் இறைவனை பொய்யராக்கியிருக்கிறார்கள். ஏனெனில், இறைவன் தமது மகனாகிய கிறிஸ்துவைக்குறித்துக் கொடுத்த சாட்சியை அவர்கள் நம்பவில்லை. இறைவன் நமக்கு நித்திய வாழ்வைக் கொடுத்திருக்கிறார். இந்த வாழ்வு அவருடைய மகனில் இருக்கிறது என்பதே அந்தச் சாட்சி. இறைவனுடைய மகனை தன் உள்ளத்தில் உடையவர்கள் யாரோ அவர்கள் நித்திய வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள். இறைவனுடைய மகனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நித்தியவாழ்வு இல்லாதவர்கள். இறைவனின் மகனின் பெயரில் விசுவாசமாய் இருக்கிறவர்களே, நீங்கள் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படியாகவே இவற்றை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
1 யோவான் 5:7-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் என்பவர்களே, இந்த மூவரும் ஒன்றாக இருக்கிறார்கள்; பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, தண்ணீர், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனிதனுடைய சாட்சியை ஏற்றுக்கொள்கிறோம். அதைவிட தேவனுடைய சாட்சி மேன்மையாக இருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே பெற்றிருக்கிறான்; தேவனை விசுவாசிக்காதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசிக்காததினால், அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்தியஜீவனைத் கொடுத்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சி ஆகும். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாக இருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாக இருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.
1 யோவான் 5:7-13 பரிசுத்த பைபிள் (TAERV)
எனவே இயேசுவைக் குறித்து நமக்குக் கூறும் மூன்று சாட்சிகள் இருக்கின்றன. ஆவி, நீர், இரத்தம் இந்த மூன்று சாட்சிகளும் ஒப்புக்கொள்கின்றன. சிலவற்றை உண்மையானவையாக மக்கள் கூறும்போது அவற்றை நம்புகிறோம். ஆனால் தேவன் சொல்வது அதைக் காட்டிலும் முக்கியமானது. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். அவரது சொந்த குமாரனைக் குறித்து உண்மையை அவர் நமக்குக் கூறினார். தேவனின் குமாரனை நம்புகிற மனிதன் தேவன் நமக்குக் கூறிய உண்மையை தனக்குள் கொண்டிருக்கிறான். தேவனை நம்பாத மனிதனோ தேவனைப் பொய்யராக்குகிறான். ஏன்? தேவன் அவரது குமாரனைக் குறித்துக் கூறிய செய்திகளை அம்மனிதன் நம்பவில்லை. இதுவே தேவன் நமக்குக் கூறியதாகும். தேவன் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுத்துள்ளார். மேலும் இந்த நித்திய ஜீவன் அவரது குமாரனில் உள்ளது. குமாரனைக் கொண்டிருக்கிற மனிதனுக்கு உண்மையான ஜீவன் உண்டு. ஆனால் தேவனின் குமாரனைக் கொண்டிராத ஒருவன் அந்த ஜீவனைக் கொண்டிருப்பதில்லை. தேவனின் குமாரனை நம்புகிற மக்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். உங்களுக்கு இப்போது நித்திய ஜீவன் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படியாக இதை எழுதுகிறேன்.
1 யோவான் 5:7-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
(பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்.