1 இராஜாக்கள் 11:1-8

1 இராஜாக்கள் 11:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாலொமோன் அரசன் பார்வோனின் மகளைத்தவிர மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், சீதோனியர், ஏத்தியர் ஆகிய நாடுகளிலுள்ள பல பெண்கள்மேலும் ஆசைவைத்தான். இந்த நாட்டினரைப் பற்றி யெகோவா முன்பே இஸ்ரயேலரிடம், “பிற நாட்டு மக்களுடன் நீங்கள் திருமண சம்பந்தம் வைக்கக்கூடாது. ஏனெனில் அவர்கள் நிச்சயமாய் உங்கள் இருதயங்களை அவர்களுடைய தெய்வங்களிடம் திரும்பச் செய்வார்கள்” என்று கூறியிருந்தார். அப்படியிருந்தும் சாலொமோன் அவர்களில்கொண்ட அன்பினால் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தான். அவனுக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த எழுநூறு மனைவிகளும், முந்நூறு வைப்பாட்டிகளும் இருந்தனர். அவனுடைய மனைவிகள் அவனை வழிதவறச் செய்தனர். சாலொமோன் வயதுசென்றவனானபோது அவனுடைய மனைவியர் வேறு தெய்வங்களுக்குப் பின்னால் அவனுடைய இருதயத்தைத் திருப்பினார்கள்; அவனுடைய தந்தையான தாவீதின் இருதயத்தைப்போல, அவனுடைய இருதயம் யெகோவாவை முழுமையாகப் பற்றிக்கொள்ளவில்லை. சாலொமோன் சீதோனியரின் தேவதையான அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருக்கப்படத்தக்க தெய்வமான மில்கோமையும் பின்பற்றினான். இப்படியாக சாலொமோன் யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தான். தன் தகப்பனாகிய தாவீது செய்ததுபோல யெகோவாவை முழுமனதோடு பின்பற்றவில்லை. சாலொமோன் எருசலேமின் கிழக்கே ஒரு குன்றின்மேல் மோவாபியரின் அருவருக்கப்படத்தக்க தெய்வமான கேமோசுக்கும், அம்மோனியரின் அருவருக்கப்படத்தக்க தெய்வமான மோளேகுக்கும் ஒரு மேடையைக் கட்டினான். அவன் தனது அந்நிய மனைவிகளுக்காக இவ்வாறு செய்தான். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டி பலிகளைச் செலுத்தினார்கள்.

1 இராஜாக்கள் 11:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் மகளை நேசித்ததுமட்டுமல்லாமல், மோவாபியர்களும், அம்மோனியர்களும், ஏதோமியர்களும், சீதோனியர்களும், ஏத்தியர்களுமாகிய அந்நியர்களான அநேக பெண்கள்மேலும் ஆசைவைத்தான். யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: நீங்கள் அவர்களுக்குள்ளும் அவர்கள் உங்களுக்குள்ளும் நுழையக்கூடாது; அவர்கள் நிச்சயமாகத் தங்கள் தெய்வங்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைத் திருப்புவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாக இருந்தான். அவனுக்கு ராஜ பரம்பரையுள்ள 700 மனைவிகளும், 300 மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய பெண்கள் அவனுடைய இருதயத்தைத் திரும்பச்செய்தார்கள். சாலொமோனுக்கு வயதானபோது, அவனுடைய மனைவிகள் அவனுடைய இருதயத்தை அந்நிய தெய்வங்களைப் பின்பற்றும்படி திருப்பிவிட்டார்கள்; அதினால் அவனுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயம் யெகோவாவிடத்தில் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதைப்போல, சாலொமோனின் இருதயம் தன்னுடைய தேவனாகிய யெகோவாவோடு முழுமையாக அர்ப்பணிக்கப்படவில்லை. சாலொமோன் சீதோனியர்களின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியர்களின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான். சாலொமோன் தன்னுடைய தகப்பனாகிய தாவீதைப்போல யெகோவாவைப் பூரணமாகப் பின்பற்றாமல், யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாதவைகளைச் செய்தான். அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியர்களின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் மக்களின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான். இப்படியே தங்கள் தெய்வங்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியர்களான தன்னுடைய மனைவிகள் எல்லோருக்காகவும் செய்தான்.

1 இராஜாக்கள் 11:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

சாலொமோன் ராஜா பெண்களை நேசித்தான்! அவன் இஸ்ரவேலில் உள்ள பெண்களை மட்டுமல்லாமல் பார்வோனின் குமாரத்தி, ஏத்தியர், மோவாப், அம்மோன், ஏதோம், சீதோன் எனப் பல நாட்டுப் பெண்களை விரும்பினான். முன்பு, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களிடம், “அடுத்த நாட்டு பெண்களை மணந்துக்கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால், அவர்களின் தெய்வங்களை நீங்கள் வணங்க வேண்டியது வரும்” என்றார். ஆனால், சாலொமோன் இதுபோன்ற பெண்களை நேசித்தான். சாலொமோனுக்கு 700 மனைவியர் இருந்தனர். (அவர்கள் அனைவரும் பிற நாட்டுத் தலைவர்களின் குமாரத்திகள் ஆவார்கள்.) இதுமட்டுமன்றி அவனுக்கு 300 அடிமைப் பெண்களும் மனைவியரைப் போன்று இருந்தனர். அவர்கள் அவனை தேவனுடைய வழியிலிருந்து திருப்பினார்கள். அவன் முதியவன் ஆனதும், அவர்கள் அவனை அந்நியதெய்வங்களை பின் பற்றும்படிச் செய்தனர். அவனது தந்தை தாவீதைப்போன்று சாலொமோன் முழுமையாக கர்த்தரைப் பின்பற்றவில்லை. சாலொமோன் அஸ்தரோத்தை தொழுதுகொண்டான். இது சீதோனியரின் தெய்வமாகும். அவன் மில்கோமையும் தொழுதுகொண்டான். இது அம்மோனியரின் அருவருப்பான விக்கிரகமாகும். எனவே சாலொமோன் கர்த்தருக்கு முன் தவறு செய்தான். அவன் தன் தந்தை தாவீதைப்போன்று கர்த்தரை முழுமையாகப் பின்பற்றவில்லை. சாலொமோன் காமோஸ் என்னும் பொய்த்தெய்வத்தை தொழுதுகொள்ள ஒரு இடத்தைக் கட்டினான். இது மோவாபியரின் அருவருப்பான விக்கிரகம் ஆகும். இவ்விடத்தை எருசலேமுக்கு எதிரில் உள்ள மலைமீது கட்டினான். அதே மலையில், மோளோகுக்கும் ஆலயம் கட்டினான். இது அம்மோன் ஜனங்களின் அருவருப்பான தோற்றமுடைய விக்கிரகமாகும். சாலொமோன் இதுபோலவே மற்ற மனைவியரின் நாட்டுத் தெய்வங்களுக்கும் செய்தான். அவனது மனைவியர் அத்தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து, பலியிட்டு வந்தனர்.

1 இராஜாக்கள் 11:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான். அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள். சாலொமோன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான். சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான். இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நிய ஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.