1 பேதுரு 5:7-11

1 பேதுரு 5:7-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

1 பேதுரு 5:7-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

உங்கள் கவலைகளையெல்லாம் இறைவனிடத்தில் கொடுத்துவிடுங்கள். ஏனெனில் அவர் உங்கள்மேல் அக்கறையுள்ளவராய் இருக்கிறார். தன்னடக்கம் உள்ளவர்களாயும் விழிப்புள்ளவர்களாயும் இருங்கள். உங்கள் பகைவனான பிசாசு கர்ஜிக்கின்ற சிங்கத்தைப்போல், யாரை விழுங்கலாம் என்று அலைந்து தேடித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசை எதிர்த்து நில்லுங்கள். ஏனெனில் உலகமெங்குமுள்ள உங்கள் சகோதர சகோதரிகளும் இதேவிதமான வேதனைகளின் வழியாக போய்க்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எல்லாக் கிருபையையும் கொடுக்கிற இறைவனே உங்களைக் கிறிஸ்துவில் தமது நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். சிறிது காலத்திற்கு நீங்கள் துன்பத்தை அனுபவித்த பின்பு, அவரே உங்களைச் சீர்ப்படுத்தி பெலப்படுத்துவார். உங்களை உறுதியாய் நிலைப்படுத்துவார். என்றென்றைக்கும் அவருக்கே வல்லமை உண்டாவதாக. ஆமென்.

1 பேதுரு 5:7-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவர் உங்களை விசாரிக்கிறவராக இருப்பதினால், உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

1 பேதுரு 5:7-11 பரிசுத்த பைபிள் (TAERV)

அவர் உங்களைக் கவனிப்பதால் உங்கள் கவலைகளை அவரிடம் விட்டு விடுங்கள். உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு கவனமாக வாழுங்கள்! பிசாசு உங்கள் பகைவன். உண்ணும்பொருட்டு எந்த மனிதனாவது அகப்படுவானா என்று தேடிக்கொண்டே கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போலவே அவன் அலைகிறான். பிசாசைப் பின்பற்ற மறுத்துவிடுங்கள். உங்கள் விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள். நீங்கள் அனுபவிக்கிற அதே துன்பங்களை உலகத்தின் எல்லா பாகங்களிலுமுள்ள உங்கள் சகோதரரும் சகோதரிகளும் அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆம், குறுகிய காலம் நீங்கள் துன்பப்படுவீர்கள். ஆனால் அதற்குப் பிறகு, தேவன் எல்லாவற்றையும் சரிப்படுத்துவார். அவர் உங்களை பலப்படுத்துவார். அவர் உங்களைத் தாங்கிக்கொண்டு, நீங்கள் விழாதபடி பாதுகாப்பார். எல்லா கிருபையையும் அருளுகின்ற தேவன் அவரே. கிறிஸ்துவின் மகிமையில் பங்குகொள்ளும்படி அவர் உங்களை அழைத்தார். அம்மகிமை என்றென்றும் தொடரும். எல்லா வல்லமையும் என்றென்றும் அவருக்குரியது. ஆமென்.