1 சாமுவேல் 1:1-20
1 சாமுவேல் 1:1-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள ராமதாயீமைச் சேர்ந்த சோப்பீம் ஊரிலே ஒரு மனிதனிருந்தான். அவனுடைய பெயர் எல்க்கானா. இவன் எரோகாமின் மகன். எரோகாம் எலிகூவின் மகன். எலிகூ தோகுவின் மகன். தோகு எப்பிராயீமியனான சூப்பின் மகன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஒருத்தியின் பெயர் அன்னாள்; மற்றவளின் பெயர் பெனின்னாள். பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள். அன்னாளுக்கோ பிள்ளைகள் ஒருவரும் இருக்கவில்லை. எல்க்கானா ஒவ்வொரு வருடமும் சேனைகளின் யெகோவாவுக்குப் பலி செலுத்தவும், அவரை வழிபடவும் தன் ஊரிலிருந்து சீலோவுக்குப் போய்வருவான். அங்கே ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் யெகோவாவின் ஆசாரியர்களாக இருந்தார்கள். எல்க்கானா பலிசெலுத்தும் நாள் வரும்போதெல்லாம் இறைச்சியின் பங்குகளை மனைவி பெனின்னாளுக்கும் அவளுடைய எல்லா மகன்களுக்கும், மகள்களுக்கும் கொடுப்பான். ஆனால் எல்க்கானா அன்னாளின்மேல் அன்பு செலுத்தியபடியால் அவளுக்கு இரண்டு மடங்கு பங்கைக் கொடுத்தான். யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுத்திருக்கவில்லை. யெகோவா அவளுக்குப் பிள்ளைப்பேற்றைக் கொடுக்காதபடியால், பெனின்னாள் அவள் மனம் வருந்தும்படி அவளுக்குச் சினமூட்டிக் கொண்டிருந்தாள். இவ்விதமாக ஒவ்வொரு வருடமும் நடந்தது. அன்னாள் யெகோவாவினுடைய ஆலயத்துக்குப் போகும்போதெல்லாம் பெனின்னாள் அவளுக்குச் சினமூட்டினாள். இதனால் அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். இதைக் கண்டவுடன் அவள் கணவன் எல்க்கானா அவளிடம், “அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாமல் இருக்கிறாய்? ஏன் கவலைப்படுகிறாய்? பத்து மகன்களிலும் பார்க்க நான் உனக்கு மேலானவன் அல்லவா?” என்று கேட்பான். ஒருமுறை சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின், அன்னாள் எழுந்தாள். அந்நேரம் ஆசாரியன் ஏலி, யெகோவாவினுடைய ஆலயத்தின் கதவு நிலையருகிலிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அன்னாள் மனங்கசந்து மிகவும் அழுது, யெகோவாவிடம் மன்றாடினாள். அவள் யெகோவாவிடம், “சேனைகளின் யெகோவாவே, உம்முடைய அடியாளின் அவலத்தைப் பார்த்து என்னை நினைவுகூர்ந்து, உமது அடியாளை மறவாமல் எனக்கு ஒரு மகனைக் கொடுப்பீரானால், நான் அவன் வாழ்நாள் முழுவதும் அவனை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன். சவரக்கத்தி ஒருபோதும் அவன் தலையில் படாது” என்று ஒரு நேர்த்திக்கடன் செய்தாள். அவள் அவ்வாறு யெகோவாவிடம் மன்றாடும்போது, ஏலி அவள் வாயைக் கவனித்தான். அன்னாள் தன் உள்ளத்தில் மன்றாடிக்கொண்டிருந்தாள். அதனால் அவள் உதடுகள் அசைந்துகொண்டிருந்தன. ஆனால் அவளுடைய சத்தம் கேட்கவில்லை. அதனால் அவள் மதுபோதையில் இருக்கிறாள் என ஏலி நினைத்தான். அப்பொழுது ஏலி அவளிடம், “நீ எவ்வளவு காலத்துக்கு மது குடிப்பதை விடாதிருப்பாய்? உன் குடிப்பழக்கத்தை விட்டுவிடு” என்றான். அதற்கு அன்னாள், “இல்லை ஐயா, நானோ கவலை நிறைந்த மனதையுடைய பெண். நான் திராட்சை இரசமோ, மதுவோ குடிக்கவில்லை. நான் யெகோவாவுக்குமுன் என் துயரத்தைச் சொல்லி அழுகிறேன். உம்முடைய அடியாளை கெட்ட நடத்தையுள்ள பெண் என எண்ணவேண்டாம். நான் மிகுந்த துயரத்தினாலும் கவலையினாலும் மன்றாடுகிறேன்” என்றாள். அப்பொழுது ஏலி அவளிடம், “நீ சமாதானத்தோடே போ. இஸ்ரயேலின் இறைவனிடம் நீ கேட்டுக்கொண்டதை அவர் உனக்குத் தருவாராக” என்றான். அதற்கு அவள், “உமது அடியாளுக்கு உமது கண்களில் தயவு கிடைப்பதாக” என்றாள். அன்னாள் அவ்விடமிருந்து போய் சிறிது உணவு சாப்பிட்டாள். அதன்பின் அவள் முகம் துக்கமுகமாக இருக்கவில்லை. அவர்கள் மறுநாள் அதிகாலையில் எழுந்து யெகோவாவுக்கு முன்பாக வழிபட்டபின், அவ்விடத்தைவிட்டு ராமாவிலுள்ள தங்கள் வீட்டுக்குப் போனார்கள். எல்க்கானா, தன் மனைவி அன்னாளை நேசித்து, அவளோடு இணைந்தான். ஆண்டவர் அன்னாளின் வேண்டுதலை நினைத்தார். சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். “யெகோவாவிடமிருந்து அவனைக் கேட்டுப் பெற்றேன்” என்று சொல்லி அவனுக்கு, சாமுயேல் என்று பெயரிட்டாள்.
1 சாமுவேல் 1:1-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனிதன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பெயர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் மகனான எலிகூவின் மகனான எரோகாமின் மகன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவள் பெயர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. அந்த மனிதன் சீலோவிலே சேனைகளின் யெகோவாவை தொழுதுகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே யெகோவாவின் ஆசாரியரான ஏலியின் இரண்டு மகன்களான ஒப்னியும், பினெகாசும் இருந்தார்கள். அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே அவன் தன்னுடைய மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் பங்குபோட்டுக் கொடுப்பான். அன்னாளை நேசித்ததினால், அவளுக்கு இரண்டு பங்கு கொடுப்பான்; யெகோவாவோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார். யெகோவா அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளுக்கு மிகவும் எரிச்சலுண்டாக்குவாள். அவள் யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போகும்போது, அவன் ஒவ்வொரு வருடமும் அப்படியே செய்வான்; இவள் அன்னாளை மனவேதனைப்படுத்துவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். அவளுடைய கணவனான எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்து மகன்களைவிட நான் உனக்கு மேலானவன் அல்லவா? என்றான். சீலோவிலே அவர்கள் சாப்பிட்டுக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்தாள்; ஆசாரியனான ஏலி யெகோவாவுடைய ஆலயத்தின் வாசற்கதவருகில் ஒரு இருக்கையின்மேல் உட்கார்ந்திருந்தான். அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள். அவள் யெகோவாவுக்கு முன்பாக அதிகநேரம் விண்ணப்பம்செய்கிறபோது, ஏலி அவளுடைய வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். அன்னாள் தன்னுடைய இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மட்டும் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கவில்லை; ஆகவே, அவள் குடிவெறியில் இருக்கிறாள் என்று ஏலி நினைத்து, அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் குடிவெறியில் இருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். அதற்கு அன்னாள் பதிலாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனவேதனையுள்ள பெண்; நான் திராட்சை ரசமோ, மதுவோ குடிக்கவில்லை; நான் யெகோவாவுக்கு முன்பாக என்னுடைய இருதயத்தை ஊற்றிவிட்டேன். உம்முடைய அடிமையை துன்மார்க்கத்தின் பெண்ணாக நினைக்கவேண்டாம்; மிகுதியான துன்பத்தினாலும், துயரத்தினாலும் இந்த நேரம்வரை விண்ணப்பம்செய்தேன் என்றாள். அதற்கு ஏலி சமாதானத்துடன் போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயவு கிடைக்கட்டும் என்றாள்; பின்பு அந்த பெண் புறப்பட்டுப்போய் சாப்பிட்டாள்; அதன்பின்பு அவள் துக்கமுகமாக இருக்கவில்லை. அவர்கள் அதிகாலையில் எழுந்து, யெகோவாவைத் தொழுதுகொண்டு, ராமாவிலிருக்கிற தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளுடன் இணைந்தான்; யெகோவா அவளை நினைத்தார். சிலநாட்கள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்று, யெகோவாவிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்.
1 சாமுவேல் 1:1-20 பரிசுத்த பைபிள் (TAERV)
எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் உள்ள ராமா என்னும் நகரில் எல்க்கானா என்னும் பெயருள்ள மனிதன் இருந்தான். அவன் சூப் என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவன். எல்க்கானா எரோகாமின் குமாரன், எரோகாம் எலிகூவின் குமாரன், எலிகூ தோகுவின் குமாரன், தோகு சூப்பின் குமாரன், எப்பிராயீம் என்னும் கோத்திரத்திலிருந்து வந்தவன். எல்க்கானாவிற்கு இரண்டு மனைவிமார்கள் இருந்தனர். அவர்களில் ஒருத்தியின் பெயர் அன்னாள், மற்றொருவள் பெயர் பெனின்னாள், பெனின்னாளுக்கு பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்னாளுக்கோ பிள்ளைகள் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் எல்க்கானா தனது நகரமான ராமாவை விட்டு சீலோவுக்குப் போவான். அங்கு அவன் சர்வ வல்லமையுள்ள கர்த்தரை தொழுதுகொண்டான், அங்கு கர்த்தருக்குப் பலிகளும் செலுத்தினான். சீலோவில் ஓப்னியும் பினெகாசும் கர்த்தருடைய ஆசாரியர்களாக சேவை செய்து வந்தனர். இவர்கள் ஏலியின் குமாரர்கள். ஒவ்வொரு முறையும் எல்க்கானா பலிகளை செலுத்தும் போது அதில் ஒரு பங்கினை பெனின்னாளுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் கொடுத்து வந்தான். எல்க்கானா அன்னாளுக்கும் இரட்டிப்பான பங்கினை எப்போதும் கொடுத்து வந்தான். ஏனென்றால் அவளில் அவன் அன்பு செலுத்தினான். கர்த்தர் அவளது கர்ப்பத்தை அடைத்திருந்தார். பெனின்னாள் எப்பொழுதும் அன்னாளைத் துக்கப்படுத்தி அவள் துயருறுமாறு செய்வாள், ஏனென்றால் அன்னாள் குழந்தைப்பேறு இல்லாதவளாக இருந்தாள். இது ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து வந்தது. ஒவ்வொரு முறையும் அவர்களின் குடும்பம் சீலோவிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு போகும் போதும், பெனின்னாள் அன்னாளை வேதனைப்படுத்துவாள். ஒரு நாள் எல்க்கானா பலிகளைச் செலுத்திக்கொண்டிருந்தான். அன்னாள் துக்கம் மீறி அழ ஆரம்பித்தாள். அவள் அன்று எதையும் உண்ணவில்லை. அவளது கணவனான எல்க்கானா அவளிடம், “அன்னாள்! ஏன் நீ அழுகிறாய்? ஏன் உண்ணாமல் இருக்கிறாய்? ஏன் துக்கமாய் இருக்கிறாய்? நீ எனக்குரியவள், நான் உனது கணவன். நான் பத்து குமாரர்களை விட உனக்கு மேலானவன் என்பதை சிந்திக்க கூடாதா” என்றான். உணவை உண்டு குடித்த பின் அன்னாள் அமைதியாக எழுந்து கர்த்தரிடம் ஜெபம் செய்யச் சென்றாள். கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தின் கதவருகில் ஏலி எனும் ஆசாரியன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அன்னாள் மிகவும் துக்கமாக இருந்தபடியால் அவள் கர்த்தரிடம் அழுது கொண்டே வேண்டுதல் செய்தாள், அவள் தேவனிடம் ஒரு விசேஷ வாக்குறுதியைக் கொடுத்தாள். அவள், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, நான் எவ்வளவு துக்கத்தில் இருக்கிறேன் என்பதைப் பாரும். என்னை நினைவு கூறும்! என்னை மறவாதேயும். நீர் எனக்கு ஒரு குமாரனைத் தந்தால், நான் அவனை உமக்கே தருவேன். அவன் நசரேயனாக இருப்பான். அவன் திராட்சை ரசமோ அல்லது வெறிகொள்ளத்தக்கவைகளை அருந்தாமலும் இருப்பான். எவரும் அவனது தலை மயிரை வெட்டாமல் இருப்பார்கள்” என்று வேண்டிக்கொண்டாள். இவ்வாறு அன்னாள் நீண்ட நேரம் கர்த்தரிடம் ஜெபிக்கும்பொழுது அவளது வாயையே ஏலி கவனித்துக்கொண்டிருந்தான். அன்னாள் தன் இருதயத்தில் ஜெபித்துக் கொண்டிருந்தாள். அவளது உதடுகள் அசைந்தன, ஆனால் அவள் உரக்க எதையும் சொல்லவில்லை. எனவே ஏலி, அன்னாளைக் குடித்திருப்பவளாக எண்ணினான். ஏலி அன்னாளிடம், “நீ அதிகப்படியாகக் குடித்திருக்கின்றாய்! இது குடியை விடவேண்டிய நேரம்” என்றான். அதற்கு அன்னாள், “ஐயா, நான் திராட்சை ரசமோ அல்லது மதுவையோ குடிக்கவில்லை. நான் ஆழமான துயரத்தில் இருக்கிறேன். நான் எனது துன்பங்களையெல்லாம் கர்த்தரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். மோசமான பெண் என்று என்னை எண்ணவேண்டாம். நான் நீண்ட நேரமாக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு அநேக தொல்லைகள் உள்ளன. மற்றும் நான் மிகவும் துக்கத்தில் இருக்கிறேன்” என்றாள். ஏலி அவளிடம், “சமாதானத்துடனே போ. இஸ்ரவேலரின் தேவன் நீ கேட்டதையெல்லாம் உனக்குத் தருவாராக” என்றான். அன்னாள், “உம்முடைய அடியாளுக்கு உம் கண்களில் இரக்கத்தைக் காணட்டும்” என்றாள். பிறகு அவள் அங்கிருந்து போய் உணவருந்தினாள். அதற்குப்பின் அவள் துக்கமாயிருக்கவில்லை. மறுநாள் அதிகாலையில் எல்க்கானாவின் குடும்பம் எழுந்து கர்த்தரைத் தொழுதுகொண்ட பிறகு ராமாவிலுள்ள தங்கள் வீட்டிற்கு திரும்பிப் போனார்கள். எல்க்கானா தன் மனைவியான அன்னாளோடு பாலின உறவுகொண்டான், கர்த்தர் அன்னாளை நினைவுக்கூர்ந்தார். அதே காலம் அதற்கடுத்த ஆண்டில் அவள் கர்ப்பமுற்று ஒரு குமாரனைப் பெற்றெடுத்தாள். அவள் தன் குமாரனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். அவள், “இவன் பெயர் சாமுவேல் ஏனென்றால் நான் கர்த்தரிடம் இவனைக் கேட்டேன்” என்றாள்.
1 சாமுவேல் 1:1-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எப்பிராயீம் மலைதேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஒப்னியும் பினெகாசும் இருந்தார்கள். அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்குபோட்டுக் கொடுப்பான். அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார். கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான். சீலோவிலே அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள். அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து, அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள். அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார். சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.