1 சாமுவேல் 15:1-11

1 சாமுவேல் 15:1-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

சாமுயேல் சவுலிடம், “தம் மக்களான இஸ்ரயேலர்மேல் உன்னை அரசனாக அபிஷேகம் பண்ணும்படி யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் நானே. எனவே இப்பொழுது யெகோவாவிடமிருந்து வந்த செய்தியைக் கேள். சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களை அமலேக்கியர் வழிமறித்த செயலுக்காக நான் அவர்களைத் தண்டிக்கப் போகிறேன். இப்பொழுது நீ போய் அமலேக்கியரைத் தாக்கி அவர்களின் உடைமைகள் அனைத்தையும் முழுவதும் அழித்துவிடு. அவர்களைத் தப்பவிடாதே. ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், மாடுகள், செம்மறியாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்றுவிடு” என்று சொன்னான். சவுல் மனிதர்களை அழைப்பித்து தெலாயிமிலே அவர்களைக் கணக்கெடுத்தான். அப்பொழுது இரண்டு இலட்சம் காலாட்படையினரும், யூதாவிலிருந்து பத்தாயிரம் மனிதரும் இருந்தார்கள். சவுல் அமலேக்கியருடைய பட்டணத்துக்கு வந்து, அவர்களைத் தாக்குவதற்காகக் பள்ளத்தாக்கிலே பதுங்கியிருந்தான். அப்பொழுது சவுல் கேனியரிடம், “நான் அமலேக்கியருடன் உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்களைவிட்டுப் போய்விடுங்கள். ஏனெனில் இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வெளியே வந்தபோது நீங்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டினீர்கள்” என்றான். அதைக் கேட்டவுடன் கேனியர் அமலேக்கியரை விட்டு அப்பால் போய்விட்டார்கள். பின்பு சவுல் ஆவிலா தொடங்கி எகிப்திற்குக் கிழக்கேயுள்ள சூர் வரைக்கும் இருந்த அமலேக்கியரைத் தாக்கினான். அத்துடன் அமலேக்கியரின் அரசனான ஆகாகை உயிரோடே பிடித்தான். அங்குள்ள மக்கள் அனைவரையும் வாளால் அழித்தான். ஆனால் சவுலும், இராணுவப் படையினரும் ஆகாக் அரசனையும், முதற்தரமான செம்மறியாடுகள், ஆடுமாடுகள், கொழுத்த கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் ஆகிய தரமான எல்லாவற்றையும் தப்பவிட்டார்கள். அவற்றை முழுவதும் அழிக்க அவர்கள் விரும்பவில்லை. ஆனால் தரமற்றதும், பலவீனமுமானவற்றை முழுவதும் அழித்தார்கள். அதன்பின் யெகோவாவினுடைய வார்த்தை சாமுயேலுக்கு வந்தது. “சவுலை அரசனாக்கியதை முன்னிட்டு நான் மனம் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னைப் பின்பற்றாமல் என்னைவிட்டு விலகிவிட்டான். என் அறிவுறுத்தல்களை நிறைவேற்றவுமில்லை” என்றார். இது சாமுயேலுக்கு மனவேதனையைக் கொடுத்தது. இதனால் சாமுயேல் அன்றிரவு முழுவதும் யெகோவாவிடம் அழுதான்.

1 சாமுவேல் 15:1-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு சாமுவேல் சவுலைப் பார்த்து: இஸ்ரவேலர்களாகிய தம்முடைய மக்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்செய்வதற்குக் யெகோவா என்னை அனுப்பினாரே; இப்போதும் யெகோவாவுடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கைக் கொன்று, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அழித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடு என்கிறார் என்று சொன்னான். அப்பொழுது சவுல்: இதை மக்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களை கணக்கெடுத்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா மக்கள் பத்தாயிரம்பேருமாக இருந்தார்கள். சவுல் அமலேக்குடைய பட்டணம் வரை வந்து, பள்ளத்தாக்கிலே காத்திருந்தான். சவுல் கேனியரை பார்த்து: நான் அமலேக்கியர்களோடு உங்களையும் அழிக்காதபடி, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லோருக்கும் தயைசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர்கள் அமலேக்கியர்களின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள். அப்பொழுது சவுல்: ஆவிலா துவங்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லை வரை இருந்த அமலேக்கியர்களை முறியடித்து, அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தான்; மக்கள் அனைவரையும் கூர்மையான பட்டயத்தாலே படுகொலை செய்தான். சவுலும் மக்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் சிறந்தவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனமில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான அனைத்தையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு வருத்தமாக இருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமல் போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் வருந்தி, இரவு முழுவதும் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்.

1 சாமுவேல் 15:1-11 பரிசுத்த பைபிள் (TAERV)

ஒரு நாள் சாமுவேல் சவுலிடம், “உன்னை அபிஷேகித்து அவருடைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு ராஜாவாக்கும்படி கர்த்தர் என்னை அனுப்பினார். இப்போது கர்த்தருடைய செய்தியைக் கேள். சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வரும்போது கானானுக்குப் போகாமல் அமலேக்கியர்கள் தடுத்தனர். அவர்கள் செய்தவற்றை நான் பார்த்தேன். இப்போது அவர்களோடு போரிடு, அவர்களையும் அவர்கள் உடமையையும் முழுவதுமாக அழி, எதையும் உயிரோடு விடாதே. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள், பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் எதையும் விடாதே என்கிறார்’” என்றான். சவுல் தன் படையை தெலாயிமில் கூட்டினான். 2,00,000 காலாட்படையும் யூதாவிலுள்ள 10,000 சேனையாட்களும் இருந்தனர். பிறகு சவுல் அமலேக்கு நகருக்குப் போய் பள்ளத்தாக்கில் காத்திருந்தான். அங்கு கேனியரிடம், “அமலேக்கியரை விட்டுப் போங்கள், நான் உங்களை அழிக்கமாட்டேன். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறும்போது நீங்கள் கருணை காட்டினீர்கள்” என்றான். எனவே கேனியர் அமலேக்கியரை விட்டு வெளியேறினார்கள். சவுல் அமலேக்கியரைத் தோற்கடித்தான். அவர்களை, ஆவிலாவில் இருந்து சூர் வரை துரத்தியடித்தான். ஆகாக் அமலேக்கியரின் ராஜா. சவுல், அவனை உயிருடன் பிடித்தான். மற்றவர்களைக் கொன்றான். எல்லாவற்றையும் அழிக்க சவுலும் வீரர்களும் தயங்கினார்கள். ஆகாக் என்பவனை உயிருடன்விட்டனர். மேலும் கொழுத்த பசுக்களையும் நல்ல ஆடுகளையும் சிறந்த பொருட்களையும் கூட அழிக்காமல் விட்டுவிட்டனர். பயனுள்ள எல்லாவற்றையும் வைத்துக் கொண்டனர். அவற்றை அழிக்க அவர்கள் விரும்பவில்லை, பயனற்றவற்றையே அவர்கள் அழித்தார்கள். பிறகு சாமுவேல், கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். அதற்கு கர்த்தர், “சவுல் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டான், அவனை ராஜாவாக்கியதற்காக வருந்துகிறேன். நான் சொல்வதை அவன் செய்வதில்லை” என்றார். சாமுவேலும் கோபங்கொண்டு இரவு முழுவதும் அழுது கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான்.

1 சாமுவேல் 15:1-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்று போடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகை பார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள். சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான். சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள். அப்பொழுது சவுல்: ஆவிலாதுவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து, அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான். சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.