1 சாமுவேல் 15:12-35

1 சாமுவேல் 15:12-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது. சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான். அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே. இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார். இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான். சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான். அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று. அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான். பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான். சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப் போட்டான். பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான். சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தான்.

1 சாமுவேல் 15:12-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

மறுநாள் அதிகாலையில் சாமுயேல் எழுந்து சவுலைச் சந்திப்பதற்காகப் போனபோது, அங்குள்ளவர்கள் அவனிடம், “சவுல் கர்மேலுக்குப் போய்விட்டான். அங்கே அவன் தன்னைக் கனம்பண்ணும்படி ஒரு நினைவுச் சின்னத்தை நாட்டிவிட்டு பின் திரும்பி கில்காலுக்குப் போய்விட்டான்” என்றார்கள். அப்பொழுது சாமுயேல் சவுலிடம் போனபோது, சவுல் சாமுயேலிடம், “யெகோவா உம்மை ஆசீர்வதிப்பாராக. நான் யெகோவாவினுடைய அறிவுறுத்தல்களை நிறைவேற்றிவிட்டேன்” என்றான். அதற்குச் சாமுயேல் அவனிடம், “அப்படியானால் என் காதுகளில் விழுகின்ற செம்மறியாடுகள் கத்தும் சத்தம் என்ன? நான் கேட்கின்ற ஆடுமாடுகள் கதறும் சத்தம் என்ன?” என்று கேட்டான். அதற்கு சவுல், “அவற்றை அமலேக்கியரிடமிருந்து இராணுவவீரர்கள் கொண்டுவந்தார்கள். உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு பலி செலுத்துவதற்காக ஆடு மாடுகளில் சிறந்தவற்றைத் தப்பவிட்டார்கள். மற்றவைகளை நாங்கள் முற்றிலும் அழித்துவிட்டோம்” என்றான். அப்பொழுது சாமுயேல், “உன் பேச்சை நிறுத்து. நேற்றிரவு யெகோவா எனக்குச் சொன்னவற்றை நான் உனக்குச் சொல்லுகிறேன்” என்றான். அதற்குச் சவுல், “சொல்லும்” என்றான். எனவே சாமுயேல் சவுலிடம், “நீ உன்னுடைய பார்வையில் சிறியவனாயிருந்தபோதும் நீ இஸ்ரயேல் கோத்திரங்களுக்குத் தலைவனாகவில்லையா? யெகோவாவே உன்னை இஸ்ரயேலருக்கு அரசனாக அபிஷேகம் பண்ணினார். யெகோவாவே உன்னை, ‘நீ போய்க் கொடியவர்களாகிய அமலேக்கியரை முழுவதும் அழித்துவிடு. அவர்களை முழுவதும் அழிக்கும்வரை அவர்களுடன் யுத்தம் செய்’ என்று உன்னை அனுப்பினார். ஆனால் நீ ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. நீ ஏன் அந்த கொள்ளைப்பொருட்களை பாய்ந்து எடுத்து யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தாய்?” என்று கேட்டான். அதற்குச் சவுல் சாமுயேலை நோக்கி, “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். யெகோவா செய்யச் சொன்ன பணியைச் செய்து, அமலேக்கியரை முற்றிலும் அழித்து, அவர்கள் அரசனான ஆகாகையும் சிறைபிடித்து வந்தேன். இராணுவவீரர்களோ இறைவனுக்கு அழிக்கப்பட ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளிலிருந்து சிறந்த செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு கில்காலிலே பலியிடுவதற்காகவே கொண்டுவந்தார்கள்” என்றான். அதற்கு சாமுயேல் பதிலாகச் சொன்னதாவது: “யெகோவா தனது குரலுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், தகன காணிக்கைகளிலும் பலிகளிலும் மகிழ்ச்சியடைவாரோ? கீழ்ப்படிதலே, பலி செலுத்துவதிலும் மேலானது; அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதே, ஆட்டுக்கடாக்களின் கொழுப்பிலும் மேலானது. கலகம் பண்ணுவது, குறிசொல்லும் பாவத்தைப் போன்றது. அகங்காரம், விக்கிரக வழிபாட்டைப்போல் தீமையானது. நீ யெகோவாவின் வார்த்தையைத் தள்ளிவிட்டபடியால், அவரும் நீ அரசனாய் இராதபடி உன்னைப் புறக்கணித்துவிட்டார்.” அப்பொழுது சவுல் சாமுயேலிடம், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் யெகோவாவினுடைய கட்டளையையும், உம்முடைய அறிவுறுத்தல்களையும் மீறினேன். நான் மக்களுக்குப் பயந்ததினால் அவர்களின் விருப்பத்திற்கு இடங்கொடுத்தேன். எனவே இப்போது நான் யெகோவாவை வழிபடும்படி என் பாவத்தை மன்னித்து, என்னுடன் திரும்பிவரும்படி உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன்” என்று கேட்டான். அதற்கு சாமுயேல் சவுலிடம், “நான் உன்னோடு திரும்பிவரமாட்டேன். நீ யெகோவாவின் வார்த்தையை புறக்கணித்ததால், நீ இஸ்ரயேல்மீது அரசனாய் இராதபடி யெகோவாவும் உன்னைப் புறக்கணித்துவிட்டார்” என்றான். பின்பு சாமுயேல் போகும்படி திரும்பவே, சவுல் அவன் மேலாடையின் ஓரத்தைப் பிடித்தபோது, அது கிழிந்து போயிற்று. அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “இன்றே யெகோவா இஸ்ரயேலின் அரசை உன்னிடமிருந்து கிழித்தெடுத்து, உன் அயலவர்களுக்குள் உன்னிலும் சிறந்த ஒருவனுக்குக் கொடுத்திருக்கிறார். இஸ்ரயேலின் மகிமையான இறைவன் பொய் சொல்வதுமில்லை, மனம் மாறுவதுமில்லை. ஏனெனில் மனம் மாறுவதற்கு அவர் ஒரு மனிதனல்ல” என்று சொன்னான். அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். ஆயினும் என் மக்களின் முதியவர் முன்பாகவும், இஸ்ரயேலர் முன்பாகவும் என்னைத் தயவுசெய்து கனம்பண்ணும். நான் உம்முடைய இறைவனாகிய யெகோவாவை வழிபடும்படி என்னோடு திரும்பி வாரும்” என்று கேட்டான். எனவே சாமுயேல் திரும்பிச் சவுலுடன் சென்றான். சவுல் யெகோவாவை வழிபட்டான். அதன்பின் சாமுயேல் சவுலிடம், “அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டுவா” என்றான். “மரணத்தின் கசப்பு என்னைவிட்டு நீங்கி விட்டது” என்று எண்ணி தைரியத்துடன் ஆகாக் அங்கே வந்தான். ஆனால் சாமுயேல் அவனிடம், “உன் வாள் பெண்களைப் பிள்ளையற்றவர்கள் ஆக்கிற்று; அப்படியே உன் தாயும் பெண்களுக்குள் பிள்ளையற்றவளாவாள்” என்று சொல்லி சாமுயேல் யெகோவாவுக்கு முன்பாக கில்காலிலே ஆகாகைக் கொன்றான். பின்பு சாமுயேல் ராமாவுக்கு போனான். சவுல் தன் ஊரான கிபியாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான். சாமுயேல் சவுலுக்காகத் துக்கப்பட்டபோதிலும்கூட, தான் சாகும்வரை திரும்பவும் சவுலைச் சந்திப்பதற்கு போகவில்லை. இஸ்ரயேலருக்குமேல் அரசனாகத் தாம் சவுலை நியமித்ததின் நிமித்தம் யெகோவா மனம் வருந்தினார்.

1 சாமுவேல் 15:12-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மறுநாள் அதிகாலையில் சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு வெற்றிதூண் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது. சாமுவேல் சவுலினிடத்திற்கு போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் யெகோவாவால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; யெகோவாவுடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். அதற்குச் சவுல்: அமலேக்கியர்களிடத்திலிருந்து அவைகளைக் கொண்டு வந்தார்கள்; மக்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், யெகோவா இந்த இரவில் எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான். அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராக இருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; யெகோவா உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தாரே. இப்போதும் யெகோவா: நீ போய் அமலேக்கியர்களாகிய அந்தப் பாவிகளைக் கொன்று, அவர்களை முழுவதுமாக அழிக்கும்வரை, அவர்களோடு யுத்தம்செய் என்று சொல்லி, உம்மை அந்த வழியாக அனுப்பினார். இப்படியிருக்க, நீர் யெகோவாவுடைய சொல்லைக்கேட்காமல், கொள்ளைப்பொருட்களின் மேல் ஆசைவைத்து, யெகோவாவுடைய பார்வைக்குப் தீங்கானதை செய்தது என்ன என்றான். சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய சொல்லைக் கேட்டு, யெகோவா என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவான ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியர்களைக் கொலை செய்தேன். மக்களோ உம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குக் கில்காலிலே பலியிடுவதற்காக, கொள்ளைப்பொருட்களிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே முதன்மையானவகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான். அதற்குச் சாமுவேல்: “யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைவிட, சர்வாங்க தகனங்களும் பலிகளும் யெகோவாவுக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைவிட கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் கொழுப்பைவிட செவிகொடுத்தலும் உத்தமம். கலகம்செய்தல் பில்லிசூனிய பாவத்திற்கும், பிடிவாதம்செய்தல் அவபக்திக்கும் விக்கிரக ஆராதனைக்கும் சமமாக இருக்கிறது; நீர் யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்ததாலே, அவர் உம்மை ராஜாவாக இல்லாதபடி புறக்கணித்துத் தள்ளினார்” என்றான். அப் பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் யெகோவாவுடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதால் பாவம் செய்தேன்; நான் மக்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் யெகோவாவை தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான். சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடு திரும்பிவருவதில்லை; யெகோவாவுடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாக இல்லாதபடி, யெகோவா உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று. அப்பொழுது சாமுவேல் அவனை பார்த்து: யெகோவா இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்ஜியத்தைக் கிழித்துப்போட்டு, உம்மைவிட உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். இஸ்ரவேலின் பெலனாக இருப்பவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதிலிருந்து மனம் மாறுவதும் இல்லை; மனம் மாற அவர் மனிதன் அல்ல என்றான். அதற்கு அவன்: நான் பாவம் செய்தேன்; இப்போது என் மக்களின் மூப்பர்களுக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனப்படுத்தி, நான் உம்முடைய தேவனாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான். அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் யெகோவாவைத் தொழுதுகொண்டான். பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவான ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு போனது நிச்சயம் என்றான். சாமுவேல்: உன் பட்டயம் பெண்களைப் பிள்ளை இல்லாதவர்களாக ஆக்கினதுபோல, பெண்களுக்குள்ளே உன் தாயும் பிள்ளை இல்லாதவள் ஆவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே யெகோவாவுக்கு முன்பாக ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டிப்போட்டான். பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான். சவுல் மரணமடையும் நாள்வரை சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் யெகோவா மன வருத்தப்பட்டதினால், சாமுவேல் சவுலுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.

1 சாமுவேல் 15:12-35 பரிசுத்த பைபிள் (TAERV)

சாமுவேல் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து சவுலை சந்திக்க சென்றான். ஆனால் ஜனங்கள் அவனிடம், “கர்மேல் என்ற பேருள்ள யூதேயாவின் நகருக்கு சவுல் போயிருக்கிறான். அங்கே தன்னை பெருமைப்படுத்தும் நினைவு கல்லை எழுப்புகிறான். அவன் பல இடங்களை சுற்றிவிட்டு கில்காலுக்கு வருவான்” என்றனர். எனவே சாமுவேல் அவனிருக்கும் இடத்துக்கே சென்று சவுலைத் தேடிப் பிடித்தான். சவுல் அப்போதுதான் கர்த்தருக்கு அமலேக்கியரிடம் இருந்து எடுத்த முதல் பாகங்களை தகனபலி செலுத்திக்கொண்டிருந்தான். சவுல் சாமுவேலை வரவேற்றான், “கர்த்தர் உம்மை ஆசீர்வதிக்கிறார்! கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றினேன்” என்றான். ஆனால் சாமுவேலோ, “அப்படியானால் நான் கேட்ட சத்தம் எத்தகையது? ஆடுகளின் சத்தத்தையும், மாடுகளின் சத்தத்தையும் நான் எதற்காகக் கேட்டேன்?” என்று கேட்டான். அதற்கு சவுல், “இவை அமலேக்கியரிடமிருந்து வீரர்கள் எடுத்தவை. உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும் பொருட்டு சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் பிடித்து வந்தனர். மற்றபடி நாங்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம்” என்றான். சாமுவேலோ, “நிறுத்து! நேற்று இரவு கர்த்தர் சொன்னதை நான் சொல்லட்டுமா” என சவுலிடம் கேட்டான். சவுல், “நல்லது சொல்லுங்கள்” என்றான். சாமுவேல், “முக்கியமானவன் இல்லை என்று கடந்த காலத்தில் நீ உன்னை நினைத்திருந்தாய். பின்பு இஸ்ரவேல் ஜனங்களின் தலைவன் ஆனாய். கர்த்தர் உன்னை ராஜாவாக்கினார். கர்த்தருக்கு உன்னை சிறப்பான கடமை நிறைவேற்ற அனுப்பினார். கர்த்தர் சொன்னார், ‘போய் அமலேக்கியரை முழுமையாக அழி! அவர்கள் தீயவர்கள். எல்லோரும் கொல்லப்படும்வரை போரிடு!’ என்றார். ஆனால் நீ கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை! ஏன்? தீயவை என்று கர்த்தர் எதை ஒதுக்கினாரோ அவற்றை சேகரித்துக்கொள்ள நீ விரும்பிவிட்டாய்!” என்றான். சவுலோ, “கர்த்தருக்கு நான் கீழ்ப்படிந்தேன். அவர் சொன்ன இடத்திற்குப் போனேன். அமலேக்கியரை எல்லாம் அழித்தேன்! அவர்களின் ராஜா ஆகாக்கை மட்டுமே கொண்டுவந்தேன். வீரர்கள் நல்ல ஆட்டையும், மாட்டையும் கொண்டு வந்தனர். அவை கில்காலில் உள்ள உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிட காத்திருக்கின்றன!” என்றான். ஆனால் சாமுவேல், “கர்த்தருக்குப் பிடித்தமானது எது? தகனபலியா? அன்பளிப்பா? அல்லது கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதா? கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுதான் அனைத்திலும் சிறந்தது. கீழ்ப்படிய மறுப்பது தவறு, அது பில்லிசூனியத்திற்கு இணையான பெரும் பாவம். நீ கீழ்ப்படிய மறுப்பது பிடிவாதமாக பிற விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கு சமம் ஆகும். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தாய். அதனால் கர்த்தர் உன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான். அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. நீர் சொன்னதையும் செய்யவில்லை. ஜனங்களுக்கு பயந்தேன். அவர்கள் சொன்னபடி செய்தேன். இப்போது கெஞ்சுகிறேன். என் பாவத்தை மன்னியுங்கள். என்னுடன் மீண்டும் வாருங்கள் எனவே கர்த்தரை நான் தொழுதுக்கொள்வேன்” என்றான். ஆனால் சாமுவேலோ, “நான் உன்னோடு வரமாட்டேன். நீ கர்த்தருடைய கட்டளையை ஒதுக்கிவிட்டாய். இப்போது கர்த்தர் உன்னை ராஜாவாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான். சாமுவேல் திரும்பியபோது சவுல் அவரது சால்வை நுனியைப் பிடித்தான். அது கிழிந்தது. சாமுவேலோ, “என் சால்வையைக் கிழித்துவிட்டாய். இதுபோல் இன்று கர்த்தர் உன்னிடமிருந்து இஸ்ரவேலின் இராஜ்யத்தைக் கிழிப்பார். உன் நண்பன் ஒருவனுக்கு கர்த்தர் அரசைக் கொடுப்பார். அவன் உன்னைவிட நல்லவனாக இருப்பான். கர்த்தரே இஸ்ரவேலரின் தேவன். கர்த்தர் என்றென்றும் ஜீவிப்பவர். கர்த்தர் பொய் சொல்லவோ மனதை மாற்றவோமாட்டார். அவர் மனிதனைப் போன்று மனதை மாற்றுபவர் அல்ல” என்றான். சவுலோ, “சரி நான் பாவம் செய்தேன்! எனினும் என்னுடன் திரும்பி வாருங்கள். இஸ்ரவேலின் தலைவர்கள் மற்றும் ஜனங்களின் முன்னால் எனக்கு மரியாதைக் காட்டுங்கள். என்னுடன் திரும்பி வாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் தொழுதுகொள்வேன்” என்றான். சாமுவேல் சவுலோடு திரும்பிப் போனான். சவுல் கர்த்தரை தொழுதுகொண்டான். “அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை என்னிடம் கொண்டு வா” என்றான் சாமுவேல். ஆகாக் சாமுவேலிடம் வந்தான். அவன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான். “நிச்சயம் நம்மை இவர் கொல்லமாட்டார்” என்று ஆகாக் எண்ணினான். ஆனால் சாமுவேலோ, “உனது வாள் குழந்தைகளை தாயிடமிருந்து எடுத்துக் கொண்டது. எனவே இப்போது உன் தாய் பிள்ளையற்றவள் ஆவாள்” எனக் கூறி அவன் ஆகாகை கில்காலில் கர்த்தருக்கு முன்பாக துண்டுகளாக வெட்டிப்போட்டான். பிறகு சாமுவேல் ராமாவிற்குத் திரும்பிப் போனான். சவுல் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான். இதற்குப் பின் சாமுவேல் தன் வாழ்நாளில் சவுலைப் பார்க்கவில்லை. சவுலுக்காக வருத்தப்பட்டான். சவுலை ராஜாவாக்கியதற்கு கர்த்தரும் வருத்தப்பட்டார்.