1 சாமுவேல் 19:11-24
1 சாமுவேல் 19:11-24 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அதன்பின், சவுல் தாவீதின் வீட்டை நோட்டமிட்டு அவனை மறுநாள் அதிகாலையில் கொலை செய்யும்படி, அவன் வீட்டிற்கு ஆட்களை அனுப்பினான். இதை அறிந்த அவன் மனைவி மீகாள் தாவீதிடம், “இன்றிரவு உமது உயிருக்காகத் தப்பி ஓடாவிட்டால் நாளை நீர் கொல்லப்படுவீர்” என்று எச்சரித்தாள். எனவே மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட அவன் தப்பி ஓடினான். பின்பு மீகாள் ஒரு விக்கிரகத்தை எடுத்து அவனுடைய கட்டிலின்மேல் வைத்து, ஒரு போர்வையால் மூடி வெள்ளாட்டு மயிரைத் தலைமாட்டில் வைத்தாள். தாவீதைப் பிடித்து வரும்படி சவுல் தன் ஆட்களை அனுப்பியபோது அவன் வியாதியாய் இருப்பதாக மீகாள் சொன்னாள். திரும்பவும் தாவீதைப் பார்ப்பதற்காக சவுல் தன் ஆட்களை அனுப்பி, “அவனைக் கொலை செய்யும்படி கட்டிலோடு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னான். அந்த மனிதர் அவனுடைய வீட்டுக்குள் வந்தபோது, அவனுடைய கட்டிலின்மேல் ஒரு விக்கிரகமும் அதன் தலையில் ஒரு வெள்ளாட்டு மயிர்த்தோலும் இருப்பதைக் கண்டார்கள். அப்பொழுது சவுல் மீகாளிடம், “என்னை ஏமாற்றி என் பகைவனை ஏன் இப்படி தப்பவைத்தாய்?” என்று கேட்டான். அதற்கு மீகாள், “தாவீது என்னிடம், என்னைத் தப்பிப் போகவிடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொன்றுவிடுவேன் என்று சொன்னான்” என்றாள். இவ்விதமாய்த் தாவீது தப்பி ஓடி ராமாவிலிருந்த சாமுயேலிடம் போய் சவுல் தனக்குச் செய்தவற்றையெல்லாம் சொன்னான். அதன்பின் அவனும் சாமுயேலும் நாயோத்திற்குப் போய் அங்கே தங்கியிருந்தார்கள். அப்பொழுது தாவீது ராமாவிலுள்ள நாயோதிலே தங்கியிருக்கிறான் என்பதைச் சவுல் கேள்விப்பட்டான். எனவே சவுல் தாவீதைப் பிடித்துக் கொண்டுவரும்படி தன் மனிதரை அனுப்பினான். அவர்கள் அங்கே இறைவாக்கு உரைப்போர் கூட்டத்தையும், அவர்களுக்குத் தலைவனாக சாமுயேல் நிற்பதையும் கண்டார்கள். அப்போது சவுலின் ஆட்கள் மேலும் யெகோவாவின் ஆவியானவர் இறங்கினார். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள். இதைப்பற்றிச் சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது வேறு மனிதரை அனுப்பினான். அவர்களும் அவ்வாறே இறைவாக்கு உரைத்தார்கள். மூன்றாம் முறையும் சவுல் மனிதரை அனுப்பினான். அவர்களும் இறைவாக்கு உரைத்தார்கள். இறுதியாகச் சவுல் தானே ராமாவிற்குப் போவதற்கு புறப்பட்டான். அவன் சேக்குவிலுள்ள பெரிய துரவுக்கு வந்தபோது, அங்கு நின்றவர்களிடம், “சாமுயேலும், தாவீதும் எங்கே?” என்று கேட்டான். அதற்கு அங்கு நின்றவர்கள், “ராமாவிலுள்ள நாயோதிலே அவர்கள் இருக்கிறார்கள்” என்றார்கள். அப்பொழுது சவுல் ராமாவிலுள்ள நாயோதுக்குப் போகும் வழியில் இறைவனின் ஆவியானவர் அவன் மேலும் இறங்கினார். அவன் நாயோதுக்குப் போய்ச் சேரும்வரைக்கும் இறைவாக்கு உரைத்துக்கொண்டே போனான். சவுல் தன் மேலுடையைக் கழற்றிவிட்டு சாமுயேலுக்கு முன்பாக மற்றவர்களைப்போல் இறைவாக்கு உரைத்தான். அன்று பகலும் இரவும் அவ்வாறே விழுந்து கிடந்தான். இதனாலேயே, “சவுலும் இறைவாக்கு உரைப்போரில் ஒருவனோ?” என்று மக்கள் கேட்கும் வழக்கம் உண்டாயிற்று.
1 சாமுவேல் 19:11-24 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தாவீதைக் காவல்செய்து, மறுநாள் காலையில் அவனைக் கொன்று போடும்படி, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இரவில் உம்முடைய ஜீவனை தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்று போடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான். மீகாளோ ஒரு சிலையை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத் தோலைப் போட்டு, போர்வையினால் மூடி வைத்தாள். தாவீதைக் கொண்டுவரச் சவுல் காவலர்களை அனுப்பினபோது, அவர் வியாதியாக இருக்கிறார் என்றாள். அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் காவலரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படி, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான். காவலர்கள் வந்தபோது, இதோ, சிலை கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள். அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏமாற்றி, என்னுடைய எதிரியைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள். தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள். தாவீது ராமாவில் உள்ள நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவர காவலரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய காவலர்களின்மேல் தேவனுடைய ஆவி இறங்கியதால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே காவலரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாம் முறையும் சவுல் காவலரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றின் அருகே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவிலுள்ள நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. அப்பொழுது ராமாவிலுள்ள நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கியதால் அவன் ராமாவிலுள்ள நாயோதிலே சேரும் வரை, தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து, தானும் தன்னுடைய உடைகளை கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் உடை இல்லாமல் விழுந்துகிடந்தான்; எனவே, சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.
1 சாமுவேல் 19:11-24 பரிசுத்த பைபிள் (TAERV)
தாவீதின் வீட்டுக்கு சவுல் ஆட்களை அனுப்பினான். அவர்கள் தாவீதின் வீட்டைக் கண்காணித்தார்கள். அன்றிரவு முழுக்க அவர்கள் அங்கேயே தங்கி இருந்தார்கள். அதிகாலையில் தாவீதைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டார்கள். தாவீதின் மனைவியான மீகாள் அவனை எச்சரித்து, “இந்த இரவே இங்கே இருந்து தப்பி ஓடி, உன் உயிரைக் காப்பாற்றிக்கொள். இல்லையென்றால் நாளை கொல்லப்படுவீர்” என்று சொன்னாள். அவள் அவனை ஜன்னல் வழியாக இறக்கிவிட, அவன் தப்பினான். மீகாள் கட்டில் மேல் ஒரு சிலையை வைத்து, தலை மாட்டில் வெள்ளாட்டுத் தோலைப் போட்டு ஆடையால் மூடி வைத்தாள். தாவீதைக் கைது செய்து அழைத்து வரும்படி சவுல் ஆட்களை அனுப்பினான். மீகாள் அவர்களிடம், “தாவீது நோயுற்றிருக்கிறான்” என்று சொன்னாள். தூதுவர்கள் சவுலிடம் சங்கதியைச் சொன்னார்கள். ஆனால் அவர்களை மீண்டும் சவுல் திருப்பி அனுப்பினான். அவர்களிடம், “தாவீதை என்னிடம் அழைத்து வாருங்கள். முடிந்தால் அவன் படுத்துக்கிடக்கும் கட்டிலோடு அவனைத் தூக்கி வாருங்கள், அவனை நான் கொல்வேன்” என்றான். தாவீதின் வீட்டுக்குத் தூதுவர்கள் சென்றார்கள். தாவீதைத் தூக்கி வர வீட்டிற்குள் நுழைந்தார்கள். ஆனால் படுக்கையில் வெறும் சிலையைத்தான் பார்த்தார்கள், ஆட்டு மயிர் அதன் போர்வையாக இருக்க கண்டனர். சவுல், மீகாளிடம், “ஏன் என்னிடம் நீ தந்திரம் செய்கிறாய்? நீ எனது எதிரியை தப்பிக்கவிட்டாய்!” என்று கேட்டான். அவள், “தாவீது தப்பிக்க நான் உதவி செய்யாவிட்டால் அவர் என்னை கொன்றுவிடுவதாகச் சொன்னார்!” என்றாள். தாவீது தப்பித்து ராமாவில் தங்கியிருந்த சாமுவேலிடம் போனான். தனக்கு சவுல் செய்தக் காரியங்கள் அனைத்தையும் சாமுவேலிடம் சொன்னான். பிறகு இருவரும் தீர்க்கதரிசிகள் தங்கி இருக்கிற முகாம்களுக்குச் சென்றனர். தாவீது அங்கேயே தங்கினான். ராமாவில் உள்ள முகாமில் தாவீது இருக்கும் செய்தியைப் பற்றி சவுல் கேள்விப்பட்டான். தாவீதை கைது செய்து அழைத்து வர சேவகர்களை அனுப்பினான். அவர்கள் வந்து தீர்க்கதரிசனம் சொல்கிற தீர்க்கதரிசிகளின் குழு மத்தியில் சாமுவேல் குழுத்தலைவனாக நிற்பதைக் கண்டனர். அப்போது சேவகர் மேல் தேவனுடைய ஆவியானவர் இறங்க அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இதை அறிந்த சவுல், வேறு சேவகர்களை அனுப்பினான். அவர்களும் அங்கு போய் தீர்க்கதரிசனம் சொல்ல, மூன்றாவது குழுவை அனுப்பினான். அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். சவுலும் ராமாவுக்குப் போய் சேக்குவிலுள்ள கிணற்றருகில் நின்று, “சாமுவேலும் தாவீதும் எங்கே?” என்று கேட்டான். ஜனங்கள், “ராமாவின் முகாமில் உள்ளனர்” என்று சொன்னார்கள். அவனும் ராமாவுக்கு அருகில் உள்ள முகாம்களுக்குப் போனான். அவன் மேலும் தேவனுடைய ஆவியானவர் இறங்கவே அவனும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தான். முகாமிற்குச் செல்லும் வரை அப்படியேச் சொல்லிக்கொண்டே சென்றான். சவுலும் தன் ஆடைகளை கழற்றிப் போட்டு சாமுவேலுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் சொல்லி இரவும் பகலும் ஆடையில்லாமல் கிடந்தான். எனவேதான், “சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனா?” என்று ஜனங்கள் கூறுகின்றனர்.
1 சாமுவேல் 19:11-24 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்று போடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக் கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்று போடப்படுவீர் என்று சொல்லி, மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான். மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத் தோலைப் போட்டு, துப்பட்டியினால் மூடி வைத்தாள். தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள். அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான். சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள். அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள். தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள். தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன் மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து, தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல்முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.