1 சாமுவேல் 2:1-35
1 சாமுவேல் 2:1-35 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். கர்த்தரைப் போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள். திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப்பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள். கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்பண்ணுகிறவர். கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள். பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை. அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து, அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள். கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன் கையிலே வாங்குகிறதில்லை என்பான். அதற்கு அந்த மனுஷன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக்கொள்ளுவேன் என்பான். ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள். சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான். அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள். ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக் கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள். அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியிலே வளர்ந்தான். ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு, அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன். என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே. மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக்கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார். சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான். தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, என் பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபங்காட்டவும், என் சமுகத்தில் ஏபோத்தைத் தரிக்கவும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன் பிதாவின் வீட்டாருக்கு இஸ்ரவேல் புத்திரருடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா? என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக்கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார். ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். உன் வீட்டில் ஒரு கிழவனும் இராதபடிக்கு உன் புயத்தையும் உன் பிதாவின் வீட்டாருடைய புயத்தையும் நான் தறித்துப்போடும் நாட்கள் வரும். இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் சகல நன்மைக்கும் மாறாக என் வாசஸ்தலத்திலே உபத்திரவத்தைக் காண்பாய்; ஒருபோதும் உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்லை. என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப்பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள். ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள். நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்.
1 சாமுவேல் 2:1-35 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது அன்னாள் இவ்வாறு சொல்லி ஜெபித்தாள்: “யெகோவாவுக்குள் என் இருதயம் மகிழ்ச்சியடைகிறது; யெகோவாவுக்குள் என் தலை நிமிர்ந்திருக்கிறது. என் வாய் என் பகைவருக்கு மேலாகப் பெருமிதம் பேசுகிறது; ஏனெனில் உமது மீட்பில் நான் மகிழ்கிறேன். “யெகோவாவைப்போல் பரிசுத்தமானவர் ஒருவரும் இல்லை; எங்கள் இறைவனைப்போல் கற்பாறையும் இல்லை, உம்மைவிட வேறு ஒருவரும் இல்லை. “மேட்டிமையாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டாம். உனது வாய் அகங்காரமானதைப் பேசாதிருக்கட்டும்; யெகோவாவே எல்லாம் அறிந்த இறைவன்; அவர் செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கிறார். “வீரரின் வில்லுகள் முறிந்தன; ஆனால் இடறி விழுந்தவர்கள் பலத்தைத் தரித்திருக்கிறார்கள். நிறைவடைந்தோர் உணவுக்காகக் கூலி வேலைசெய்கிறார்கள்; பசியோடிருந்தவர்களோ இனி பசியோடிருக்கமாட்டார்கள். மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்; ஆனால் அநேக மகன்களைப் பெற்றவளோ நலிந்துபோனாள். “சாவைக் கொண்டுவருபவரும், வாழ்வைக் கொடுப்பவரும் யெகோவாவே; பாதாளத்தில் இறக்குகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. வறுமையையும் செல்வத்தையும் அனுமதிக்கிறவர் யெகோவாவே; தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரும் அவரே. அவரே ஏழையைப் புழுதியிலிருந்து தூக்குகிறார், வறியவரை சாம்பலிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு அமர்த்துகிறார், ஒரு மகிமையான அரியணையை அவர்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி செய்கிறார். “பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவினுடையவை; அவற்றின் மேலே உலகத்தை அமைத்திருக்கிறார். தமது பரிசுத்தரின் பாதங்களைப் பாதுகாப்பார்; கொடியவர் இருளில் மெளனமாவார்கள். “பெலத்தினால் ஒருவனும் வெற்றிகொள்வதில்லை; யெகோவாவை எதிர்ப்பவர்கள் நொறுக்கப்படுவார்கள். அவர் வானத்திலிருந்து அவர்களுக்கெதிராய் முழங்குவார்; யெகோவா பூமியின் கடையாந்தரங்கள்வரை நியாயந்தீர்ப்பார். “தனது அரசனுக்கு வல்லமையைக் கொடுப்பார்; தாம் அபிஷேகித்தவரின் தலையை உயர்த்துவார்.” அதன்பின் எல்க்கானா ராமாவிலுள்ள தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். சாமுயேலோ ஆசாரியன் ஏலியின் மேற்பார்வையில் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். ஏலியின் மகன்கள் பொல்லாதவர்களாயிருந்தார்கள். அவர்கள் யெகோவாவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை. மக்களில் எவராவது பலி செலுத்தும்போது, இறைச்சி வேகும் வேளையில் ஆசாரியனின் பணியாளன் ஒருவன், மூன்று கூருள்ள ஒரு கரண்டியைக் கொண்டுவருவது அவர்களின் நடைமுறையாயிருந்தது. பணியாளன் இறைச்சி வேகும் சட்டியிலோ, கிண்ணத்திலோ, அண்டாவிலோ, பானையிலோ அந்த கரண்டியை உள்ளேவிட்டுக் குத்துவான். அப்பொழுது ஆசாரியன் அந்த கரண்டியால் குத்தி எடுப்பது எதுவோ அதைத் தனக்கென எடுத்துக்கொள்வான். இவ்விதமாக சீலோவுக்கு வருகிற இஸ்ரயேலர் எல்லோரையும் அவர்கள் இப்படியே நடத்தினார்கள். மேலும், பலியின் கொழுப்பை எரிப்பதற்கு முன்னரே ஆசாரியனின் பணியாள் பலி செலுத்துபவனிடம் வந்து, “ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி கொஞ்சம் இறைச்சி கொடு; அவர் பச்சை இறைச்சியே அல்லாமல், வேகவைத்த இறைச்சியை உன்னிடமிருந்து ஏற்றுக்கொள்ளமாட்டார்” என்பான். அப்பொழுது பலிசெலுத்துபவன் பணியாளனிடம், “கொழுப்பு முதலில் எரிக்கப்படட்டும். அதன்பின் நீ விரும்பிய எதையும் எடுத்துக்கொள்” என்று சொன்னால் அதற்கு பணியாளன், “இல்லை, இப்பொழுதே கொடு; கொடுக்காவிட்டால் நான் பலவந்தமாய் அதை எடுத்துக்கொள்வேன்” என்பான். இதனால், ஏலியின் மகன்களின் இந்த பாவம் யெகோவாவின் பார்வையில் கொடியதாயிருந்தது. ஏனெனில் அவர்கள் யெகோவாவின் காணிக்கையை கேவலமாய் எண்ணினார்கள். சிறுவனாகிய சாமுயேல் பஞ்சுநூல் ஏபோத்தை அணிந்துகொண்டு, யெகோவாவுக்குப் பணிசெய்தான். அவனுடைய தாய் தங்கள் வருடாந்த பலியைச் செலுத்துவதற்கு ஒவ்வொரு வருடமும் தன் கணவனுடன் அங்கே வரும்போது, சாமுயேலுக்கு ஒரு சின்ன அங்கியைத் தைத்துக் கொண்டுவருவாள். அவ்வேளை ஏலி எல்க்கானாவையும், அவன் மனைவியையும் ஆசீர்வதித்து அவர்களிடம், “இப்பெண் யெகோவாவிடம் மன்றாடிப்பெற்று, யெகோவாவுக்கே திரும்பக் கொடுத்த தனது பிள்ளைக்குப் பதிலாக, அவர் இவள்மூலம் உனக்குப் பிள்ளைகளைக் கொடுப்பராக” என்பான். அதன்பின் அவர்கள் தங்கள் வீட்டுக்குப் போவார்கள். அப்படியே யெகோவா அன்னாள்மேல் கிருபையாயிருந்தார். அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள். சிறுவன் சாமுயேல் யெகோவா முன்னிலையில் வளர்ந்தான். இப்பொழுது அதிக வயதுசென்று கிழவனாயிருந்த ஏலி, தன் பிள்ளைகள் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்துவந்த தீமைகளையும், சபைக்கூடார வாசலில் பணிபுரியும் பெண்களுடன் தகாத உறவுகொள்வதையும் கேள்விப்பட்டான். எனவே அவன் தன் பிள்ளைகளிடம், “நீங்கள் இப்படிப்பட்ட செயல்களை ஏன் செய்கிறீர்கள்? நான் எல்லா மக்களிடமிருந்தும் உங்கள் கொடுமையான செயல்களைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். என் பிள்ளைகளே, வேண்டாம். யெகோவாவின் பிள்ளைகளின் மத்தியில் பரவுவதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், இறைவன் அவர்களுக்கு நடுவராய் இருக்கக்கூடும். ஒரு மனிதன் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், அவனுக்காகப் பரிந்து பேசுவது யார்?” என்றான். ஏலியின் மகன்களோ தங்கள் தகப்பனின் கண்டனத்திற்குச் செவிகொடுக்கவில்லை. அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பது யெகோவாவின் சித்தமாயிருந்தது. ஆனால் சிறுவன் சாமுயேலோ பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்தான். அப்பொழுது இறைமனிதன் ஒருவன் ஏலியிடம் வந்து, “யெகோவா சொல்வது இதுவே: ‘உன் தகப்பன் குடும்பத்தார் எகிப்தில் பார்வோனுக்கு அடிமைகளாய் இருந்தபோது, நான் என்னை அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தவில்லையா? இஸ்ரயேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து உன் தகப்பனை எனது பலிபீடத்தின்மேல் செல்லவும், தூபங்காட்டவும், என் முன்னிலையில் ஏபோத்தை அணியவும், ஆசாரியனாக இருக்கும்படி தெரிந்துகொண்டேன். இஸ்ரயேலரால் செலுத்தப்பட்ட நெருப்பின் காணிக்கைகளையும் உன் தகப்பன் குடும்பத்திற்கு நான் கொடுத்தேன். எனது குடியிருப்புக்களுக்கென நான் வகுத்த பலிகளையும், காணிக்கைகளையும் நீங்கள் ஏன் இகழ்கிறீர்கள்? என் மக்களாகிய இஸ்ரயேலர் செலுத்திய எல்லாக் காணிக்கைகளிலும் சிறந்தவற்றை உனது மகன்களுக்குக் கொடுத்து, அவர்களைக் கொழுக்கப்பண்ணுவதால் அவர்களை என்னிலும் மேன்பட்டவர்களாக ஏன் மதிக்கிறாய்?’ “எனவே இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது, ‘உன் குடும்பத்தாரும், உன் தகப்பன் குடும்பத்தாரும் என்றென்றைக்கும் என் முன்னிலையில் எனக்குப் பணிசெய்வீர்கள்’ என்று வாக்குப்பண்ணினேன்; ஆனால் இப்பொழுது யெகோவா அறிவிக்கிறதாவது: நான் முன் சொன்னபடியே இது நடக்காது! என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன். என்னை அவமதிக்கிறவர்கள் வெறுக்கப்படுவார்கள். உனது வல்லமையையும், உனது தகப்பன் குடும்பத்தாரின் வல்லமையையும் நான் குறைக்கும் காலம் வருகிறது. எனவே உனது பரம்பரையில் ஒரு முதியவனும் இருக்கமாட்டான். அப்பொழுது என் உறைவிடத்தில் நீ துன்பத்தைக் காண்பாய். இஸ்ரயேலருக்கு நன்மை செய்யப்பட்டாலும், உன் குடும்பத்தில் முதியவன் ஒருவனும் ஒருபோதும் இருக்கமாட்டான். என் பலிபீடத்திலிருந்து, நான் நீக்காத உன் குடும்பத்தவரில் ஒவ்வொருவரும் தங்கள் கண்களைக் கண்ணீரால் மூடவும், தங்கள் இருதயத்தைத் துக்கப்படுத்தவுமே தப்பவிடப்படுவீர்கள். ஆனாலும் உன் சந்ததியினர் ஒவ்வொருவனும் இளவயதில் இறந்துபோவான். “ ‘உன் மகன்களான ஒப்னிக்கும், பினெகாசுக்கும் நேரிடுவது உனக்கு ஒரு அடையாளமாயிருக்கும். அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள். அதன்பின்பு நான் என் மன எண்ணப்படியும் விருப்பப்படியும் செய்யக்கூடிய ஒரு உண்மையுள்ள ஆசாரியனை ஏற்படுத்துவேன். அவன் குடும்பத்தை நிலைநிறுத்துவேன்; அவன் நான் அபிஷேகம் பண்ணினவருக்கு முன்பாக எப்பொழுதும் பணிசெய்வான்.
1 சாமுவேல் 2:1-35 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது அன்னாள் ஜெபம்செய்து: “என்னுடைய இருதயம் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது; என்னுடைய பெலன் யெகோவாவுக்குள் உயர்ந்திருக்கிறது; என்னுடைய எதிரியின்மேல் என்னுடைய வாய் தைரியமாகப் பேசும்; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்களுடைய வாயிலிருந்து வெளியே வரவேண்டாம்; யெகோவா ஞானமுள்ள தேவன்; அவர் செயல்கள் யதார்த்தமல்லவா? பலவான்களினுடைய வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பெலத்தினால் வலிமையடைந்தனர். திருப்தியாக இருந்தவர்கள் அப்பத்திற்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாக இருந்தவர்களோ இனிப் பசியாக இருக்கமாட்டார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பிள்ளைகளை பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ இளைத்துப்போனாள். யெகோவா கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாக இருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும்செய்கிறவர். யெகோவா தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையச்செய்கிறவருமாக இருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் செய்கிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் யெகோவாவுடையவைகள்; அவரே அவைகளின்மேல் உலகத்தை வைத்தார். அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர்கள் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் வெற்றிபெறுவதில்லை. யெகோவாவோடு வாதாடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழக்கமிடுவார்; யெகோவா பூமியின் கடைசிவரை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் செய்தவரின் பெலனை உயரச்செய்வார்” என்று துதித்தாள். பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். ஏலியின் மகன்கள் துன்மார்க்கத்தின் மனிதர்களாக இருந்தார்கள்; அவர்கள் யெகோவாவை அறியவில்லை. அந்த ஆசாரியர்கள் மக்களை நடத்தினவிதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்தும் காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று முனை கூருள்ள ஒரு ஆயுதத்தைத் தன்னுடைய கையிலே பிடித்துவந்து, அதினாலே, உலோகத்தட்டிலோ, பானையிலோ, மரத்தொட்டியிலோ, சட்டியிலோ குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதை ஆசாரியன் எடுத்துக்கொள்வான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலர்களுக்கு எல்லாம் செய்தார்கள். கொழுப்பைத் தகனம் செய்வதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனிதனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், வேக வைத்ததை உன்னுடைய கையிலே வாங்கமாட்டேன் என்பான். அதற்கு அந்த மனிதன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனம் செய்யட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன் என்பான். ஆதலால் அந்த வாலிபர்களின் பாவம் யெகோவாவுக்கு முன்பாக மிகவும் பெரிதாக இருந்தது; மனிதர்கள் யெகோவாவுடைய காணிக்கையை வெறுப்பாக நினைத்தார்கள். சாமுவேல் என்னும் பிள்ளை சணல்நூல் ஏபோத்தை அணிந்தவனாகக் யெகோவாவுக்கு முன்பாகப் பணிவிடை செய்தான். அவனுடைய தாய் ஒவ்வொரு வருடந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன்னுடைய கணவனோடு வரும்போதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள். ஏலி எல்க்கானாவையும் அவனுடைய மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த பெண் யெகோவாவுக்கென்று ஒப்புக் கொடுத்ததற்குப் பதிலாகக் யெகோவா உனக்கு அவளாலே அனேகம் பிள்ளைகளைக் கொடுப்பாராக என்றான்; அவர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள். அப்படியே யெகோவா அன்னாளுக்கு உதவிசெய்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளை யெகோவாவுக்கு முன்பாக வளர்ந்தான். ஏலி மிகுந்த வயதானவனாக இருந்தான்; அவன் தன்னுடைய மகன்கள் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூடுகிற பெண்களோடு தகாதஉறவு கொள்வதையும் கேள்விப்பட்டு, அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த மக்கள் எல்லோரும் உங்கள் தீய செய்கைகளைச் சொல்லக்கேட்கிறேன். என்னுடைய மகன்களே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; யெகோவாவுடைய மக்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாக இருக்கிறீர்களே. மனிதனுக்கு விரோதமாக மனிதன் பாவம்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம்செய்தால், அவனுக்காக விண்ணப்பம் செய்கிறவன் யார் என்றான்; அவர்களோ தங்களுடைய தகப்பனுடைய சொல்லைக்கேட்காமல் போனார்கள்; அவர்களைக் கொலைசெய்வதற்கு யெகோவா சித்தமாக இருந்தார். பிள்ளையாகிய சாமுவேல், பெரியவனாக வளர்ந்து, யெகோவாவுக்கும் மனிதனுக்கும் பிரியமாக நடந்துகொண்டான். தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: யெகோவா சொல்கிறது என்னவென்றால், உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்கள் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கும்போது, நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, என்னுடைய பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபம் காட்டவும், என்னுடைய சமுகத்தில் ஏபோத்தை அணிந்துகொள்ளவும், இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களுக்கு இஸ்ரவேல் மக்களுடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா? நான் தங்குமிடத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என்னுடைய பலியையும், என்னுடைய காணிக்கையையும், நீங்கள் ஏன் உதைக்கிறீர்கள்? என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளில் எல்லாம் சிறந்தவைகளைக்கொண்டு உங்களைக் கொழுக்கச்செய்ய, நீ என்னைவிட உன்னுடைய மகன்களை ஏன் மதிக்கிறாய் என்கிறார். ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்கிறதாவது: உன்னுடைய வீட்டார்களும் உன்னுடைய முன்னோர்களின் வீட்டார்களும் என்றைக்கும் என்னுடைய சந்நிதியில் நடந்துகொள்வார்கள் என்று நான் நிச்சயமாகச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாக இருப்பதாக; என்னை மதிக்கிறவர்களை நானும் மதிப்பேன்; என்னை அசட்டை செய்கிறவர்கள் அசட்டை செய்யப்படுவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார். உன்னுடைய வீட்டில் ஒரு முதிர்வயதானவனும் இல்லாதபடி உன்னுடைய பெலனையும் உன்னுடைய தகப்பனுடைய வீட்டின் பெலனையும் நான் வெட்டிப்போடும் நாட்கள் வரும். இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் எல்லா நன்மைக்கும் மாறாக நான் தங்குமிடத்திலே உபத்திரவத்தைப் பார்ப்பாய்; ஒருபோதும் உன்னுடைய வீட்டில் ஒரு முதிர்வயதானவனும் இருப்பதில்லை. என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன்னுடைய சந்ததியில் நான் அழிக்காதவர்களோ, உன்னுடைய கண்களைப் பூத்துப்போகச்செய்யவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன்னுடைய வம்சத்திலுள்ள எல்லோரும் இளவயதிலே இறப்பார்கள். ஒப்னி பினெகாஸ் என்னும் உன்னுடைய இரண்டு மகன்களின்மேல் வருவதே உனக்கு அடையாளமாக இருக்கும்; அவர்கள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள். நான் என்னுடைய உள்ளத்திற்கும் என்னுடைய சித்தத்திற்கும் தகுந்தபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பச்செய்து, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் செய்யப்பட்டவனுக்கு முன்பாக எல்லா நாட்களும் நடந்துகொள்வான்.
1 சாமுவேல் 2:1-35 பரிசுத்த பைபிள் (TAERV)
அன்னாள் ஜெபம் பண்ணி, “என் இதயம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது! நான் என் தேவனுக்குள் மிக்க பலத்துடன் இருப்பதை உணருகிறேன்! என் எதிரிகளைக் கண்டு நகைக்கிறேன். உமது இரட்சிப்பினாலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்! கர்த்தரைப்போல பரிசுத்தமான வேறு தேவன் இல்லை. உம்மைத் தவிர வேறு தேவன் இல்லை! நமது தேவனைப் போன்ற ஒரு கன்மலை வேறில்லை. இனி அகம்பாவத்தோடும் தற்பெருமையோடும் பேசாதிருங்கள்! ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் எல்லாவற்றையும் அறிவார், செய்கைகள் அவராலே நியாயந்தீர்க்கப்படும். வலிமையான வீரர்களின் வில்கள் முறிகிறது! பலவீனமானவர்கள் பெலன் பெறுகிறார்கள். கடந்த காலத்தில் ஏராளமான உணவுப் பொருட்களை வைத்திருந்த ஜனங்கள் இப்போது உணவுக்காகக் கஷ்டப்பட்டு வேலை செய்யவேண்டும். ஆனால் கடந்த காலத்தில் பசியோடு இருந்தவர்கள், எல்லாம் இனிமேல் பசியாயிரார்கள். முன்பு குழந்தை பேறு இல்லாமல் இருந்த பெண் இப்போது ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள்! ஆனால் முன்பு நிறைய குழந்தைகளைப் பெற்ற பெண் அக்குழந்தைகள் தம்மை விட்டு விலகியதால் வருத்தமாயிருக்கிறாள். கர்த்தர் மரணத்தைக் கொண்டு வருகிறவராகவும் வாழ வைக்கிறவராகவும் இருக்கின்றார். அவரே பாதாளத்தில் இறங்கவும், அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர். கர்த்தர் சிலரை ஏழையாக்குகிறார், அவரே இன்னும் சிலரைச் செல்வந்தராக்குகிறார். கர்த்தர் சிலரைத் தாழ்த்துகிறார், மற்றவர்களை மேன்மையாக்குகிறார். கர்த்தர் ஏழை ஜனங்களை புழுதியிலிருந்து உயிர்ப்பிக்கிறார் மற்றும் அவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிறார். கர்த்தர் ஏழை ஜனங்களை முக்கியமானவர்களாக்குகிறார். அவர்களை அவர் இளவரசர்களோடும் மதிப்புக்குரிய விருந்தினர்களோடும் அமர வைக்கிறார். கர்த்தர் உலகம் முழுவதையும் படைத்தார்! இந்த முழு உலகமும் அவருக்குரியது! கர்த்தர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைப் பாதுகாக்கிறார். அவர்களை அழிவினின்றும் காப்பார். ஆனால் தீயவர்கள் இருளிலே அமைதியாவார்கள். அவர்களின் பெலன் அவர்களை வெற்றியடையச் செய்யாது. கர்த்தரை எதிர்ப்பவர்கள் சிதறடிக்கப்படுவார்கள். உன்னதமான தேவன் பரலோகத்திலிருந்த தமது எதிரிகளுக்கு எதிராக இடியாய் முழங்குவார். கர்த்தர் பூமியின் கடைசி பகுதியையும் நீயாயந்தீர்ப்பார். அவர் தமது ராஜாவுக்கு வல்லமையை அளிப்பார். தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார்” என்றாள். பிறகு எல்க்கானா ராமாவிலுள்ள தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினான். ஆனால் அந்தப் பிள்ளை சீலோவில் தங்கி ஆசாரியனாகிய ஏலிக்குக் கீழ் கர்த்தருக்கு முன்பாக பணிவிடைச் செய்தான். ஏலியின் குமாரர்கள் எல்லாரும் தீயவர்கள். அவர்கள் கர்த்தருக்கு பயப்படாதவர்கள். ஜனங்களிடம் ஆசாரியர்கள் எவ்வாறு நடக்கவேண்டும் என்பது பற்றியும் கவலைப்படாதவர்கள் ஒவ்வொரு முறையும் ஜனங்கள் பலி செலுத்தும்போது, ஆசாரியர்கள் இறைச்சியைக் கொதிக்கும் தண்ணீருள்ள பாத்திரத்தில் போடவேண்டும். பிறகு ஆசாரியனின் வேலைக்காரன் மூன்று முனைகளை உடைய பெரியமுள் கரண்டியைக் கொண்டு வருவான். பாத்திரத்தில் இருக்கிற இறைச்சியை எடுக்க ஆசாரியரின் வேலைக்காரன் இந்த ஆயுதத்தைத்தான் பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில் இருந்து அந்த வேலைக்காரன் எடுத்துத் தரும் இறைச்சியை மட்டுமே ஆசாரியன் எடுத்துக்கொள்ள வேண்டும். சீலோவிற்கு பலிகளை கொடுக்க வந்த இஸ்ரவேலர் அனைவருக்கும் ஆசாரியர்கள் செய்ய வேண்டியமுறை இதுவே ஆகும். ஆனால் ஏலியின் பிள்ளைகளோ இப்படிச் செய்யவில்லை. பலிபீடத்தில் கொழுப்பு எரிக்கப்படுமுன்னரே அவர்களின் வேலைக்காரர்கள் பலி கொடுக்கும் ஜனங்களிடம் சென்று, “பொறிப்பதற்காக ஆசாரியருக்குக் கொஞ்சம் இறைச்சியைக் கொடுங்கள். அவர், உங்களிடமிருந்து வேகவைத்த இறைச்சியைப் பெறமாட்டார்” என்றுச் சொல்வார்கள். பலியை கொடுக்கவந்த ஜனங்களோ, “முதலில் கொழுப்பை எரியுங்கள், பிறகு உங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்வார்கள். இவ்வாறு நடந்தால் உடனே ஆசாரியனின் அந்த வேலைக்காரன், “இல்லை, அந்த இறைச்சியை இப்போதே கொடுங்கள், நீங்கள் அதனைக் கொடுக்காவிட்டால் அதனைப் பலவந்தமாக எடுத்துக்கொள்வேன்!” என்று சொல்வான். இவ்வாறு ஓப்னியும் பினெகாசும் கர்த்தருக்கு கொடுக்கும் பலிக்கு மரியாதை தராமல் இருந்தார்கள். இது கர்த்தருக்கு விரோதமான மிக மோசமான பாவமாயிற்று! ஆனால் சாமுவேல் கர்த்தருக்கு சேவை செய்தான். அவன் இளம் உதவியாளனாக ஆசாரியர்கள் அணிகின்ற சணல் நூல் ஏபோத்தை அணிந்திருந்தான். ஒவ்வொரு ஆண்டும் சாமுவேலின் தாய் அவனுக்காக ஒரு சின்ன சட்டையைத் தைப்பாள். அவள் தன் கணவனோடு சீலோவிற்கு பலிசெலுத்த வரும்போதெல்லாம் அதனைக் கொண்டு வந்து தருவாள். ஏலி, எல்க்கானாவையும் அவனது மனைவியையும் ஆசீர்வதித்தான். அவன், “அன்னாள் மூலமாக கர்த்தர் மேலும் பல குழந்தைகளைத் தரட்டும். கர்த்தரிடம் ஜெபித்துக்கொண்டபடி, அவருக்கே அளிக்கப்பட்ட அன்னாளின் மகனுடைய இடத்தை இந்த பிள்ளைகள் பிறந்து நிரப்பட்டும்” என்றான். எல்க்கானாவும், அன்னாளும் வீட்டிற்குத் திரும்பினார்கள். கர்த்தர் அன்னாளிடம் கருணையாக இருந்தார். அவளுக்கு மேலும் மூன்று குமாரர்களும், இரண்டு குமாரத்திகளும் பிறந்தனர். சாமுவேல் பரிசுத்த இடத்தில் கர்த்தர் அருகிலேயே வளர்ந்து ஆளானான். ஏலிக்கு மிகவும் வயது ஆயிற்று, சீலோவிற்கு வரும் இஸ்ரவேலரிடம் தம் பிள்ளைகள் நடந்து கொள்வதைப்பற்றி, அவன் மீண்டும், மீண்டும் கேள்விப்பட்டான். அதோடு அவன் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் வேலை செய்த பெண்களோடுப் படுத்துக்கொள்வதாகவும் கேள்விப்பட்டான். ஏலி தன் பிள்ளைகளிடம், “நீங்கள் செய்த கெட்டக் காரியங்களைப் பற்றியெல்லாம், இங்குள்ளவர்கள் என்னிடம் கூறினார்கள். ஏன் இது போல் செய்கிறீர்கள்? இவ்வாறு செய்யாதீர்கள். கர்த்தருடைய பிள்ளைகள் உங்களைப் பற்றி தவறாகச் சொல்லுகிறார்கள். ஒருவன் இன்னொருவனுக்கு எதிராகப் பாவம் செய்தால் தேவன் அவனுக்கு உதவலாம். ஆனால் ஒருவன் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தால், யார் அவனுக்கு உதவமுடியும்?” என்று கேட்டான். ஆனால் ஏலியின் குமாரர்கள் அவன் கூறியதைக் கேட்க மறுத்துவிட்டனர். எனவே ஏலியின் பிள்ளைகளைக் கொல்ல கர்த்தர் தீர்மானித்தார். சாமுவேல் வளர்ந்து வந்தான். அவன் தேவனுக்கும், ஜனங்களுக்கும் பிரியமாயிருந்தான். தேவனுடைய மனிதன் ஒருவன் ஏலியிடம் வந்தான். அவன், “கர்த்தர் இவற்றைச் சொன்னார், ‘உன் முற்பிதாக்கள் எகிப்தில் பார்வோனின் அடிமைகளாய் இருந்தார்கள். அந்த காலத்தில் நான் உன் முற்பிதாக்களுக்குத் தோன்றினேன். நான் உன் கோத்திரத்தை மற்ற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்தேன். உனது சந்ததியை எனது ஆசாரியர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை என் பலிபீடத்திற்குப் பலி செலுத்துகிறவர்களாகத் தேர்ந்தெடுத்தேன். அவர்களை நான் ஏபோத் அணியவும் நறுமணப் பொருட்களை எரிக்கவும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரவேலர், எனக்குத் தரும் பலிகளிலிருந்து இறைச்சியை உங்கள் கோத்திரம் உண்ணும்படியும் செய்தேன். இவ்வாறு இருக்க நீங்கள் ஏன் எனது அன்பளிப்புகளையும் பலி பொருட்களையும் மதிப்பதில்லை? நீ என்னைவிட உன் குமாரர்களையே அதிகம் உயர்த்துகிறாய். இஸ்ரவேலர், இறைச்சியை எனக்காக கொண்டு வரும்போது, அதன் நல்ல பாகங்களையெல்லாம் தின்று நீங்கள் கொழுத்துப்போய் இருக்கிறீர்கள்.’ “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், உங்கள் தந்தையின் குடும்பமே, எல்லா காலத்திலும் சேவை செய்யும் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால் இப்போது கர்த்தர் சொல்கிறார், ‘அது அவ்வாறு நடக்காது! என்னை கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம்பண்ணுவேன். என்னை அசட்டை செய்பவர்களுக்கு தீமை ஏற்படும். உனது சந்ததிகளையெல்லாம் அழிக்கின்ற காலம் வந்துவிட்டது. உன் குடும்பத்தில் உள்ள யாரும் முதிய வயதுவரை வாழமாட்டார்கள். இஸ்ரவேல் ஜனங்களுக்கு நன்மைகள் ஏற்படும், ஆனால் உன் வீட்டில் மட்டும் தீமை ஏற்படுவதைக் காண்பாய். உன் குடும்பத்தில் யாரும் முதுமைவரை வாழமாட்டார்கள். நான் ஒருவனை மாத்திரம் ஆசாரியனாக என் பலிபீடத்தில் சேவை செய்யப் பாதுகாப்பேன். அவன் முதுமைவரை வாழ்வான். அவன் கண்பார்வை போகு மட்டும், சக்தியெல்லாம் ஓயுமட்டும் வாழ்வான். உன் சந்ததிகள் எல்லோரும் வாளால் மரித்துப் போவார்கள். இவைகள் உண்மையில் நிறைவேறும் என்பதற்கும் ஒரு அடையாளம் காட்டுவேன். உனது குமாரர்களான ஓப்னியும் பினெகாசம் ஒரே நாளில் மரித்து போவார்கள். நான் எனக்காக ஒரு உண்மையுள்ள ஆசாரியனைத் தேர்ந்தெடுத்துக்கொள்வேன். அவன் எனக்குச் செவிகொடுத்து நான் சொல்லுகிறபடி செய்வான். நான் அந்த ஆசாரியனின் குடும்பத்தைப் பலமுள்ளதாகச் செய்வேன். அவன் அபிஷேகம் செய்யப்பட்ட எனது ராஜாவின் முன்னிலையில் எப்போதும் சேவை செய்வான்.