1 சாமுவேல் 24:1-5
1 சாமுவேல் 24:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பெலிஸ்தியரைத் துரத்திவிட்டுச் சவுல் திரும்பியபோது, “தாவீது என்கேதி பாலைவனத்திலே தங்கியிருக்கிறான்” என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல் இஸ்ரயேல் மக்கள் அனைவரிடமிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, “காட்டாடுகளின் குன்றுகள்” என்ற இடத்திற்கு அருகே தாவீதையும், அவன் ஆட்களையும் தேடிப்பார்க்கப் போனான். போகும் வழியில் ஆட்டுத்தொழுவங்கள் இருந்த இடத்திற்கு வந்தான். அங்கே ஒரு குகை இருந்தது. சவுல் மலசலம் கழிப்பதற்காக அதற்குள் போனான். தாவீதும் அவன் மனிதரும் குகையினுள்ளே இருந்தார்கள். அப்பொழுது தாவீதின் மனிதர், “நீ விரும்பியபடி உன் பகைவனுக்கு செய்வதற்கு அவனை உன் கையில் ஒப்படைப்பேன் என்று யெகோவா உனக்குச் சொல்லிய நாள் இன்றுதான்” என்றார்கள். உடனே தாவீது சவுல் அறியாதபடி தவழ்ந்துபோய், அவன் அங்கியின் ஒரு மூலையை வெட்டினான். பின் சவுலின் அங்கியின் மூலையை வெட்டியதற்காக தாவீதின் மனசாட்சி அவனை உறுத்தியது.
1 சாமுவேல் 24:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சவுல் பெலிஸ்தர்களைப் பின்தொடர்வதைவிட்டுத் திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்திரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட 3,000 பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான். வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு குகை இருந்தது; அதிலே சவுல் காலைக்கடன் கழிக்கப்போனான்; தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தக் குகையின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது தாவீதின் மனிதர்கள் அவனை நோக்கி: இதோ, நான் உன்னுடைய எதிரியை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன்னுடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று யெகோவா உன்னோடு சொன்ன நாள் இதுவே என்றார்கள்; தாவீது எழுந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெதுவாக அறுத்துக்கொண்டான். தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினால் அவனுடைய மனது அடித்துக்கொண்டிருந்தது.
1 சாமுவேல் 24:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
சவுல் பெலிஸ்தியரை விரட்டின பின்பு, “தாவீது என்கேதி அருகிலுள்ள பாலைவனப்பகுதியில் இருக்கிறான்” என்று ஜனங்கள் அறிவித்தனர். எனவே சவுல் இஸ்ரவேலரில் 3,000 பேரைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை கூட்டிக்கொண்டு தாவீதையும் அவனது ஆட்களையும் காட்டு ஆடுகள் உள்ள பாறைப் பகுதிகளில் தேடினான். சவுல் சாலையோரத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்திற்கு வந்தான். அதன் அருகில் ஒரு குகை இருந்தது. சவுல் அதனுள்ளே தீட்டுக்கழிக்கச் சென்றான். அதன் பின் பகுதியில் தாவீதும் அவனது ஆட்களும் ஒளிந்திருந்தனர். தாவீதிடம் அவனது ஆட்கள், “கர்த்தர் சொன்ன நாள் இதுவே! கர்த்தர், ‘நான் உனது பகைவனை உன்னிடம் தருவேன். நீ அவனை என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றார்கள். தாவீது சவுலின் அருகில் ஊர்ந்து சென்றான். சவுலின் சால்வை நுனியை அறுத்தான். அதனைச் சவுல் கவனிக்கவில்லை. பின்னர் இதற்காக தாவீது வருத்தப்பட்டான்.
1 சாமுவேல் 24:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான். வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான். தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது.