1 சாமுவேல் 25:39-43

1 சாமுவேல் 25:39-43 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நாபால் இறந்ததைக் கேள்விப்பட்ட தாவீது, “என்னை அவமானப்படுத்திய நாபாலுக்கு எதிரான எனது வழக்கை வாதாடிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அவர் தமது அடியவனை குற்றம் செய்யாதபடி தற்காத்து, நாபாலின் அநியாயத்தை அவனுடைய தலையிலேயே சுமரப்பண்ணினார்” என்றான். அதன்பின் தாவீது அபிகாயிலைத் தன் மனைவியாக்கும்படி கேட்டு அவளிடம் ஆளனுப்பினான். தாவீதின் பணியாட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “தாவீது உம்மைத் தன் மனைவியாக்கிக் கொள்வதற்காகத் தன்னிடம் கூட்டிக்கொண்டு வரும்படி எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்றார்கள். அவள் எழுந்து முகங்குப்புற விழுந்து வணங்கி, அவர்களிடம், “இதோ நான் உங்கள் பணிப்பெண். உங்களுக்குப் பணிசெய்யவும், என் எஜமானின் பணியாட்களின் கால்களைக் கழுவவும் நான் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றாள். அபிகாயில் விரைவாகக் கழுதையில்மேல் ஏறி தன் ஐந்து தோழிகளும் பின்செல்ல தாவீதின் தூதுவர்களுடன் சென்று அவனுக்கு மனைவியாகினாள். தாவீது யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமையும் திருமணம் செய்திருந்தான். அவர்கள் இருவரும் தாவீதின் மனைவிகளாயிருந்தார்கள்.

1 சாமுவேல் 25:39-43 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என்னுடைய நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானை தீங்கு செய்யாதபடிக்குத் தடுத்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; யெகோவா தாமே நாபாலின் தீங்கை அவன் தலையின்மேல் திரும்பச்செய்தார் என்று சொல்லி, அபிகாயிலை திருமணம் செய்வற்காக அவளோடு பேச, தாவீது ஆட்களை அனுப்பினான். தாவீதின் ஊழியக்காரர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாயிலினிடம் வந்து, தாவீது உன்னை திருமணம் செய்ய விரும்பி, எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடு சொல்லுகிறபோது, அவள் எழுந்திருந்து தரைவரை முகங்குனிந்து, இதோ, நான் என்னுடைய ஆண்டவனுடைய ஊழியக்காரர்களின் கால்களைக் கழுவும் பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள். பின்பு அபிகாயில் விரைவாக எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து பணிப்பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் தூதுவர்கள் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள். யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது திருமணம் செய்தான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள்.

1 சாமுவேல் 25:39-43 பரிசுத்த பைபிள் (TAERV)

நாபால் மரித்துப்போனதை தாவீது கேள்விப்பட்டு, “கர்த்தரைப் போற்றுங்கள்! நாபால் என்னைப் பற்றி அவதூறு சொன்னான். கர்த்தர் எனக்கு உதவினார். நான் தீமை செய்யாதபடி கர்த்தர் என்னை விலக்கினார். நாபால் கேடு செய்ததால் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்” என்றான். பிறகு தாவீது அபிகாயிலிடம் தனது மனைவியாகுமாறு செய்தி அனுப்பினான். தாவீதின் ஆட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “உங்களை அழைத்துவர தாவீது எங்களை அனுப்பினார். நீங்கள் அவரது மனைவியாக வேண்டுமென்று விரும்புகிறார்” என்றார்கள். அபிகாயில் தன் முகம் தரையில் படும்படி வணங்கி, “நான் உங்கள் வேலைக்காரி. உங்களுக்கு சேவைசெய்ய தயார். எனது எஜமானனாகிய தாவீதின் வேலைக்காரரின் பாதங்களையும் கழுவ ஆயத்தமாக இருக்கிறேன்” என்றாள். அவள் உடனே ஒரு கழுதையின் மீது ஏறித் தாவீதின் ஆட்களுடன் புறப்பட்டாள். அவள் தன்னோடு 5 பணிப்பெண்களையும் அழைத்து வந்து, தாவீதின் மனைவி ஆனாள். யெஸ்ரயேல் ஊரினவளாகிய அகினோவாளையும் தாவீது மணம் செய்துகொண்டான். அகினோவாளும், அபிகாயிலும், தாவீதின் மனைவிகள்.

1 சாமுவேல் 25:39-43 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான். தாவீதின் ஊழியக்காரர் கர்மேலில் இருக்கிற அபிகாயிலண்டைக்கு வந்து, தாவீது உன்னை விவாகம்பண்ண மனதாய், எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது, அவள் எழுந்திருந்து தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள். பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப்பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள். யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள்.