1 சாமுவேல் 28:8-25
1 சாமுவேல் 28:8-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நீர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான். அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள். ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான். சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்ய வேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான். அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்? கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்துமுடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார். கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான். அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள். அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான். அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு, சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப் போனார்கள்.
1 சாமுவேல் 28:8-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எனவே சவுல் மாறுவேடம் தரித்து, அன்றிரவு அவனும் அவனோடு இரண்டு மனிதரும் அந்தப் பெண்ணிடம் போனார்கள். சவுல் அவளிடம், “நீ எனக்காக ஒரு ஆவியை விசாரி. நான் பெயரிடும் ஆவியை எழுந்துவரச் சொல்” என்றான். அந்தப் பெண்ணோ அவரிடம், “சவுல் செய்தது உமக்குத் தெரியும்தானே. அவன், ஆவியுடன் தொடர்பு கொள்கிறவர்களையும் நாட்டில் இராதபடி செய்திருக்கிறான். அப்படியிருக்க எனக்கு மரணம் ஏற்படும்படி ஏன் என் உயிருக்குக் கண்ணி வைக்கிறீர்” என்று கேட்டாள். அதற்குச் சவுல், “யெகோவா இருப்பது நிச்சயமெனில், நீ இதற்காகத் தண்டிக்கப்பட மாட்டாய் என்பதும் நிச்சயம்” என யெகோவாவின் பெயரில் ஆணையிட்டான். அப்பொழுது அந்தப் பெண் சவுலிடம், “உமக்காக யாரை அழைக்கவேண்டும்” என்றாள். அதற்குச் சவுல், “சாமுயேலை அழைப்பி” என்றான். அந்தப் பெண் சாமுயேலைக் கண்டவுடன் உரத்த சத்தமாய்ச் சவுலைக் கூப்பிட்டு, “நீர்தானே சவுல்? ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்றாள். அதற்குச் சவுல் அரசன், “பயப்படாதே! உனக்கு என்ன தெரிகிறது?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண், “ஒரு தெய்வ உருவம் நிலத்துக்குள்ளிருந்து எழும்பி வருவது தெரிகிறது” என்றாள். அதற்குச் சவுல், “அதனுடைய தோற்றம் எப்படியிருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு அவள், “மேலங்கி உடுத்திய வயது முதிர்ந்த ஒருவர் எழும்பி வருகிறார்” என்றாள். அவர் சாமுயேல் எனச் சவுல் அறிந்துகொண்டான். உடனே தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கினான். அப்பொழுது சாமுயேல் சவுலிடம், “நீ என்னை வெளியே கொண்டுவந்து ஏன் என்னைக் குழப்பினாய்” என்று கேட்டான். அதற்குச் சவுல், “நான் பெரிய ஆபத்திலிருக்கிறேன். பெலிஸ்தியர் எனக்கெதிராக யுத்தம் செய்கிறார்கள். இறைவனோ என்னைவிட்டு விலகிவிட்டார். இறைவாக்கினர் மூலமாகவோ, கனவு மூலமாகவோ அவர் இப்போது எனக்குப் பதிலளிப்பதில்லை. இதனால்தான் நான் என்ன செய்யவேண்டுமென்று அறிவிக்கும்படி உம்மை அழைத்தேன்” என்றான். அதற்குச் சாமுயேல், “இப்பொழுது யெகோவா உன்னைவிட்டு விலகி உன் பகைவனாய் இருக்கும்போது நீ ஏன் என்னைக் கேட்கிறாய்? யெகோவா என் மூலமாய் உனக்கு முன்னறிவித்தபடி செய்திருக்கிறார். உன் அரசை உன்னிடமிருந்து பறித்து உன் அயலானான தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். நீ யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல், அமலேக்கியருக்கு விரோதமான அவருடைய கடுங்கோபத்தினாலான அவரின் தீர்ப்பை நிறைவேற்றவில்லை. அதனால்தான் அவர் இன்று உனக்கு இப்படிச் செய்தார். மேலும் யெகோவா இஸ்ரயேலரையும், உன்னையும் பெலிஸ்தியரிடம் ஒப்படைப்பார். எனவே நாளைக்கு நீயும் உன் மகன்களும் என்னோடு இருப்பீர்கள். இஸ்ரயேலின் இராணுவப் படையையும் பெலிஸ்தியரிடம் ஒப்படைப்பார்” என்றான். சாமுயேல் சொன்னவற்றைக் கேட்டவுடனே சவுல் பயந்து தரையில் முகங்குப்புற விழுந்தான். அவன் அன்று பகலும், இரவும் ஒன்றுமே சாப்பிடாதபடியால் பலவீனமாய் இருந்தான். அப்பொழுது சவுல் மிகவும் கலக்கமடைந்திருப்பதைக் கண்ட அந்தப் பெண், “நான் உமக்குக் கீழ்ப்படிந்தேன். என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நீர் சொன்னபடியே செய்தேன். இப்பொழுது நீரும் உமது அடியாளுடைய வார்த்தைகளைக் கேட்டு நீர் பயணம் செய்வதற்கு ஏற்ற பெலன் பெறும்படி நான் உமக்குக் கொடுக்கும் உணவைச் சாப்பிடும்” என்றாள். சவுலோ, “நான் சாப்பிடமாட்டேன்” என மறுத்தான். ஆனால் அவன் பணியாட்களும் அவளுடன் சேர்ந்து சவுலை வற்புறுத்தவே அவன் சம்மதித்தான். அவன் நிலத்திலிருந்து எழுந்து ஒரு படுக்கையின்மேல் உட்கார்ந்தான். அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று இருந்தது. உடனே அவள் அதைக் கொன்று சமைத்தாள். மாவைப் பிசைந்து புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டாள். அவற்றைச் சவுலுக்கும் அவன் பணியாட்களுக்கும் முன்பாக வைத்தபோது அவர்கள் சாப்பிட்டார்கள், அன்றிரவே அவர்கள் எழுந்து அவ்விடமிருந்து போனார்கள்.
1 சாமுவேல் 28:8-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது சவுல் வேடம் மாறி, வேறு உடை அணிந்துகொண்டு, அவனும் அவனோடு இரண்டுபேரும் இரவிலே அந்த பெண்ணிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் பார்த்து: நீ எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். அதற்கு அந்த பெண்: சவுல் இறந்தவர்களோடும், ஆவிகளோடும் பேசுகிறவர்களை தேசத்தில் இல்லாதபடி, தடை செய்த செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என்னுடைய உயிருக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் தீங்கு வராது என்பதைக் யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் யெகோவாவின்மேல் ஆணையிட்டான். அப்பொழுது அந்த பெண்: உமக்கு நான் யாரை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரச் செய்யவேண்டும் என்றான். அந்த பெண் சாமுவேலைப் பார்த்தவுடன் மகா சத்தமாய் அலறி, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தானே சவுல் என்றாள். ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ பார்க்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த பெண்: முதியவர் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனிதன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைவரை முகங்குனிந்து வணங்கினான். சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரச் செய்து, என்னைத் தொந்தரவு செய்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர்கள் எனக்கு விரோதமாய் யுத்தம்செய்கிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலும், சொப்பனங்களினாலும் எனக்கு பதில் சொல்கிறதில்லை; எனவே, நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைத்தேன் என்றான். அதற்குச் சாமுவேல்: யெகோவா உன்னைவிட்டு விலகி, உனக்கு எதிரியாக இருக்கும்போது, நீ என்னிடத்தில் ஏன் கேட்கிறாய்? யெகோவா என்னைக்கொண்டு சொன்னபடியே செய்துமுடித்து, ராஜ்ஜியத்தை உன்னுடைய கையிலிருந்து பறித்து, அதை உன்னுடைய தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். நீ யெகோவாவுடைய சொல் கேட்காமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியால், யெகோவா இன்றையதினம் உனக்கு இப்படிச் செய்தார். யெகோவா உன்னையும், உன்னுடைய மக்களாகிய இஸ்ரவேலர்களையும் பெலிஸ்தர்கள் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன்னுடைய மகன்களும் என்னோடு இருப்பீர்கள்; இஸ்ரவேலின் முகாமையும் யெகோவா பெலிஸ்தர்களின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். அதை கேட்டவுடனே சவுல் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் அன்று பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தபடியால், அவன் பெலவீனமாக இருந்தான். அப்பொழுது அந்த பெண் சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என்னுடைய உயிரை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைச் சாப்பிடுவீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள். அவனோ அதை மறுத்து, நான் சாப்பிடமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரர்களும் அந்த பெண் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான். அந்த பெண்ணிடம் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதை விரைவாக அடித்து, மாவு எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு, சவுலுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் சாப்பிட்டு எழுந்து, அந்த இரவிலேயே புறப்பட்டுப் போனார்கள்.
1 சாமுவேல் 28:8-25 பரிசுத்த பைபிள் (TAERV)
சவுல் தன்னை மறைத்து மாறுவேடத்தில் போனான். அன்று இரவு சவுல் இரண்டு ஆட்களோடு அந்தப் பெண்ணை சந்தித்தான். அவன் அவளிடம், “நீ ஒரு ஆவியைக் கூப்பிடு. நான் விரும்பி பேர் சொல்லுகிறவனின் ஆவியை நீ அழைக்க வேண்டும்” என்றான். ஆனால் அந்தப் பெண்ணோ சவுலிடம், “சவுல் என்ன செய்தான் என்று உனக்குத் தெரியும்! அவன் குறி பார்ப்பவர்கள் எல்லாரையும் இஸ்ரவேல் நாட்டை விட்டுத் துரத்திவிட்டான். நீயும் என்னை சூழ்ச்சியின் மூலம் குற்றத்தில் அகப்படுத்தி என்னைக் கொல்லப் பார்க்கிறாய்” என்றாள். சவுல் கர்த்தருடைய நாமத்தில் ஆணையிட்டான். “இதற்காக நீ தண்டிக்கப்படமாட்டாய். இது கர்த்தருடைய ஜீவன் மீது ஆணை” என்றான். அப்பெண்ணோ சவுலிடம், “உனக்காக யாரை வரவழைக்க நீ விரும்புகிறாய்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “சாமுவேலின் ஆவியை” என்றான். அப்படியே ஆயிற்று! அப்பெண் சாமுவேலின் ஆவியைப் பார்த்து மகா சத்தமாய் கூப்பிட்டு, “நீ சூழ்ச்சி செய்துவிட்டாய்! நீ தானே சவுல்” என்று கேட்டாள். ராஜா அவளிடம், “பயப்படாதே! நீ என்ன பார்க்கிறாய்?” எனக் கேட்டான். “நான் ஆவியொன்று பூமிக்குள்ளிருந்து வெளியே வருவதைப் பார்க்கிறேன்” என்றாள். சவுல் அவளிடம், “அந்த ஆவி யாரைப் போல் இருக்கிறது?” என்று கேட்டான். அதற்கு அப்பெண், “அது சிறப்பான சால்வையைப் போர்த்திக் கொண்டு மிக வயதான தோற்றத்தில் தெரிகிறது” என்றாள். அப்போது சவுலுக்கு அது சாமுவேலின் ஆவி என்று புரிந்தது. சவுல் குனிந்து வணங்கினான். அவன் முகம் தரையைத் தொட்டது. சாமுவேலின் ஆவி சவுலிடம், “என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? எதற்காக எழுப்பினாய்!” என்று கேட்டது. அதற்கு சவுல், “நான் ஆபத்தில் சிக்கி இருக்கிறேன். பெலிஸ்தியர் எனக்கு எதிராகச் சண்டையிட வந்திருக்கிறார்கள். தேவன் என்னை கைவிட்டு விலகிவிட்டார். தேவன் இனி எனக்கு பதில் சொல்வதில்லை. அவர் தீர்க்கதரிசியையோ, கனவையோ பயன்படுத்தி பதில் சொல்லுவதில்லை. அதனால் உங்களை அழைத்தேன், நான் செய்யவேண்டியது இன்னது என்று நீங்கள் சொல்ல விரும்புகிறேன்” என்றான். சாமுவேலின் ஆவி, “கர்த்தர் உன்னைவிட்டு விலகிவிட்டார். அவர் இப்போது உனக்கு அருகிலுள்ள தாவீதோடு இருக்கிறார். அதற்கு என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்? கர்த்தர் என்ன செய்ய இருக்கிறாரோ அதையே என் மூலம் எற்கனவே கூறிவிட்டார்! கர்த்தர் சொன்னதை இப்போது நிறைவேற்றுகிறார். உனது கைகளிலிருந்து கர்த்தர் அரசைக் கிழித்தெடுத்து, உனக்கு அருகிலுள்ள தாவீதுக்குக் கொடுத்திருக்கிறார். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. அமலேக்கியரை நீ முழுமையாக அழிக்கவில்லை. கர்த்தர் அவர்கள் மீது கோபமுடையவராக இருக்கிறார் என்பதைக் காட்டவில்லை. அதனால் இன்று கர்த்தர் உனக்கு இவ்வாறு செய்கிறார். கர்த்தர் உன்னையும் இஸ்ரவேல் படையையும் பெலிஸ்தர்கள் மூலமாகத் தோற்கடிப்பார். நாளை நீயும், உனது குமாரர்களும் இங்கே என்னோடு இருப்பீர்கள்!” என்றது. சவுல் உடனே தரையில் விழுந்து கிடந்தான். சாமுவேல் சொன்னதைக் கேட்டு மிகவும் பயந்தான். அன்று சவுல் இரவும் பகலும் உண்ணாமல் இருந்ததால் மிகவும் பலவீனமாக இருந்தான். அந்தப் பெண் சவுலிடம் வந்து, உண்மையில் அவன் பயப்படுவதைக் கவனித்தாள். அவள் “நான் உங்கள் வேலைக்காரி, நான் உங்களுக்கு கீழ்ப்படிந்து இருக்கிறேன். என் உயிரைப் பணயம் வைத்து நீங்கள் சொன்னப்படி செய்தேன். இப்போது தயவு செய்து எனக்குச் செவிகொடுங்கள், உங்களுக்குச் சிறிது உணவு கொடுக்க அனுமதியுங்கள், நீங்கள் அதனை உண்ணவேண்டும். பின் உங்கள் வழியில் செல்லப் போதுமான பலம் கிடைக்கும்” என்றாள். ஆனால் சவுல், “நான் உண்ணமாட்டேன்” என மறுத்துவிட்டான். சவுலின் அதிகாரிகளும் அந்தப் பெண்ணோடு சேர்ந்து கெஞ்சினார்கள். இறுதியில் அவள் சொன்னதைக் கேட்டான், தரையிலிருந்து எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். அப்பெண்ணின் வீட்டில் கொழுத்த கன்றுகுட்டி இருந்தது. அவள் அதை வேகமாகக் கொன்று சமைத்தாள். மாவை பிசைந்து புளிப்பு இல்லாத அப்பம் சுட்டாள். சவுல் மற்றும் அவனது அதிகாரிகளின் முன்னர் அவள் அந்த உணவை வைத்தாள். அவர்கள் அதை புசித்தப்பின், அன்று இரவே புறப்பட்டுச் சென்றார்கள்.