1 சாமுவேல் 29:3-11
1 சாமுவேல் 29:3-11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான். அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடே கூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள். அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல. ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான். தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான். ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள். இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான். அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.
1 சாமுவேல் 29:3-11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அப்பொழுது பெலிஸ்தியரின் படைத்தலைவர்கள் ஆகீஸிடம், “இந்த எபிரெயர் ஏன் இங்கு இருக்கின்றனர்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆகீஸ், “தாவீது இஸ்ரயேலின் அரசனான சவுலின் ஒரு அதிகாரி அல்லவா? இவன் ஒரு வருடத்துக்கு மேலாக என்னுடனிருக்கிறான். இவன் என்னிடம் வந்தநாள் முதல் இன்றுவரை அவனிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை” என்றான். ஆனால் பெலிஸ்திய தளபதிகள் கோபமடைந்து ஆகீஸிடம், “நீர் இவனுக்குக் கொடுத்த இடத்துக்கு இவனைத் திருப்பி அனுப்பும். இவன் எங்களுடன் போருக்கு வரக்கூடாது. இவன் யுத்தம் நடக்கும்போது எங்களுக்கு எதிரியாய் மாறுவான். எங்கள் சொந்த போர்வீரரின் தலைகளை வெட்டிக்கொண்டுபோய்த் தன் தலைவனைப் பிரியப்படுத்துவதற்கு, வேறு சிறந்த வழி அவனுக்கு உண்டோ? இந்தத் தாவீதைக் குறித்தல்லவா மக்கள் இப்படி ஆடிப்பாடி சொன்னார்கள்: “ ‘சவுல் கொன்றது ஆயிரங்கள், தாவீது கொன்றது பத்தாயிரங்கள்’ என்று ஆடிப்பாடி வாழ்த்தியது இந்தத் தாவீதையல்லவா?” எனவே ஆகீஸ் தாவீதை அழைத்து, “யெகோவா இருப்பது நிச்சயமெனில் நீ கடமை தவறாதவன் என்பதும் நிச்சயம். நீ படையிலே என்னுடன் பணிசெய்வதை நான் விரும்புகிறேன். நீ என்னிடம் வந்துசேர்ந்த நாள் முதல் இன்றுவரை உன்னிடம் ஒரு குற்றத்தையும் நான் காணவில்லை. ஆனாலும் என் ஆளுநர்கள் நீ என்னுடன் வருவதை விரும்பவில்லை. அதனால் சமாதானத்தோடே திரும்பிப்போ. பெலிஸ்திய ஆளுநர்களை கோபப்படுத்தக்கூடிய ஒன்றையும் செய்யாதே” என்றான். அதற்குத் தாவீது, “நான் என்ன செய்துவிட்டேன்? நான் வந்தநாள் தொடங்கி இன்றுவரை உமது அடியவனிடம் என்ன குற்றம் கண்டீர்? நான் என் தலைவனாகிய அரசனின் பகைவருடன் யுத்தம் செய்யக்கூடாதா?” என்று கேட்டான். அப்பொழுது ஆகீஸ் தாவீதிடம், “இறைவனுடைய தூதனைப்போல் எனக்குப் பிரியமானவனாய் இருந்தாய். ஆனாலும் பெலிஸ்திய படைத் தளபதிகள், ‘நீ எங்களோடு யுத்த களத்துக்கு வரக்கூடாது’ என்கிறார்கள். ஆகையால் நாளை அதிகாலையில் எழுந்து வெளிச்சம் வந்தவுடன், நீயும் உன்னுடன்கூட வந்த உனது தலைவனுடைய பணியாட்களும் புறப்பட்டுப் போங்கள்” என்றான். எனவே தாவீதும் அவன் ஆட்களும் அதிகாலையில் பெலிஸ்தியரின் நாட்டுக்குத் திரும்பிப்போக எழுந்தார்கள். பெலிஸ்தியரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.
1 சாமுவேல் 29:3-11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அப்பொழுது பெலிஸ்தர்களின் பிரபுக்கள்: இந்த எபிரெயர்கள் எதற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருடங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான். அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனிதன் நீர் குறித்த தன்னுடைய இடத்திற்குத் திரும்பிப்போகும்படி, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்கு எதிரியாய் மாறாதபடி, இவன் நம்மோடு யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனிதர்களுடைய தலைகளினால் அல்லவா? சவுல் கொன்றது 1,000, தாவீது கொன்றது 10,000” என்று இந்த தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள். அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ முகாமில் என்னோடே போக்கும் வரத்துமாக இருக்கிறது என்னுடைய பார்வைக்கு நல்லது என்றும், யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றுவரை நான் உன்னில் ஒரு தீங்கும் காணவில்லை; ஆனாலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல. ஆகையால் பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் உன்மேல் சங்கடம் அடையாதபடி, இப்போது சமாதானத்தோடு திரும்பிப் போய்விடு என்றான். தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய எதிரிகளோடு யுத்தம்செய்யாதபடி, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதல் இன்றுவரை உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான். ஆகீஸ் தாவீதுக்குப் பதிலாக: நான் அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என்னுடைய பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடு யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தர்களின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள். இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடு வந்த உன்னுடைய ஆண்டவனுடைய வேலைக்காரர்களைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலை வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான். அப்படியே தாவீது அதிகாலையில் தன்னுடைய மனிதர்களைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தர்களின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோ யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.
1 சாமுவேல் 29:3-11 பரிசுத்த பைபிள் (TAERV)
பெலிஸ்திய தலைவர்கள், “இந்த எபிரெயர் இங்கே என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள்?” என்று கேட்டனர். அதற்கு ஆகீஸ் பெலிஸ்திய தலைவரிடம், “இவன் தாவீது, இவன் முன்பு சவுலின் அதிகாரிகளுள் ஒருவனாக இருந்தான். என்னிடம் இப்போது நீண்ட காலம் இருக்கிறான். அவன் சவுலை விட்டு என்னிடம் வந்து சேர்ந்த நாள் முதல் இன்றுவரை அவனிடம் எந்தக் குறையும் காணவில்லை” என்றான். ஆனால் பெலிஸ்திய தலைவர்கள் ஆகீஸின் மீது கோபங்கொண்டு, “தாவீதைத் திரும்ப அனுப்பிவிடு. நீ கொடுத்த நகரத்திற்கே அவன் திரும்பிப் போகட்டும். அவன் நம்மோடு யுத்தத்துக்கு வரக் கூடாது. அவன் இங்கே இருப்பதும் எதிரி நமது முகாமிற்குள் இருப்பதும் ஒன்றே. அவன் நமது வீரர்களைக் கொல்வதன் மூலம் அவனது ராஜாவாகிய சவுலுக்கு ஆதரவாகிவிடுவான். தாவீதைப்பற்றி ஏற்கெனவே இஸ்ரவேல் ஜனங்கள் ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார்கள். “‘சவுல் ஆயிரக்கணக்கான பகைவர்ளைக் கொன்றான். ஆனால் தாவீதோ பத்தாயிரக்கணக்கான பகைவர்களைக் கொன்றிருக்கிறான்!’” என்றனர். எனவே ஆகீஸ் தாவீதை அழைத்து, “கர்த்தருடைய ஜீவன் மேல் ஆணையாக, நீ எனக்கு உண்மையாக இருக்கிறாய், நீ எனது படையில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. என்னிடம் நீ சேர்ந்த நாள் முதலாக உன்னிடம் எந்தக் குற்றமும் காணவில்லை. ஆனால் பெலிஸ்திய படைத்தலைவர்கள் உன்னை அங்கீகரிக்கவில்லை. என்றாலும் சமாதானமாகத் திரும்பிப் போ. பெலிஸ்திய ராஜாக்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் இரு” என்றான். அதற்கு தாவீது, “நான் என்ன குற்றம் செய்தேன்? நான் உங்களிடம் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை என்னிடம் என்ன தவறு கண்டீர்கள்? என் ராஜாவுக்கு எதிரான பகைவர்களோடு சண்டையிட ஏன் என்னை அனுமதிக்கவில்லை?” என்று கேட்டான். ஆகீஸோ, “நான் உன்னை விரும்புகிறேன். அது உனக்குத் தெரியும். நீ தேவனிடமிருந்து வந்த தூதுவனைப் போன்றவன், ஆனால் பெலிஸ்திய ராஜாக்களோ, ‘நம்மோடு தாவீது போருக்கு வரக்கூடாது’ என்கின்றனர். அதிகாலையில், நீயும் உனது ஆட்களும் திரும்பி, நான் கொடுத்த நகரத்திற்கே போங்கள். தலைவர்கள் சொன்னதுபோல் கெட்டக் காரியங்களில் கவனம் செலுத்தாதீர்கள். நீ நல்லவன், எனவே, சூரியன் உதிக்கும் முன் புறப்பட்டு போ” என்றான். ஆகவே, தாவீதும் அவனது ஆட்களும் அதிகாலையில் எழுந்து, பெலிஸ்திய நகரத்திற்குத் திரும்பினார்கள். பெலிஸ்தர்களோ யெஸ்ரயேலுக்குச் சென்றனர்.