1 தெசலோனிக்கேயர் 2:17-20
1 தெசலோனிக்கேயர் 2:17-20 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனாலும் பிரியமானவர்களே, நாங்கள் சிறிதுகாலம் உங்களைவிட்டுப் பிரிக்கப்பட்டிருந்தோம். எங்கள் உடல்தான் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததே தவிர, எங்கள் உள்ளம் உங்களைவிட்டுப் பிரிந்திருக்கவில்லை. பிரிந்திருந்தக் காலத்தில் உங்களை நேரில் காண மிகுந்த ஆவலுடையவர்களாய் இருந்தபடியால், நாங்கள் உங்களைப் பார்ப்பதற்கு எல்லாவித முயற்சிகளையும் எடுத்தோம். உண்மையிலேயே உங்களிடம் வருவதற்கு நாங்கள் விரும்பினோம். அதிலும் பவுலாகிய நான் உங்களிடம் வருவதற்கு மீண்டும், மீண்டும் முயற்சிசெய்தேன். ஆனாலும், சாத்தான் எங்களைத் தடை செய்தான். நம்முடைய கர்த்தராகிய இயேசு வரும்போது, எங்களுடைய எதிர்பார்ப்பாயும் மகிழ்ச்சியாயும், எங்களுக்கு மேன்மையைக் கொடுக்கும் கிரீடமாயும் அவருக்கு முன்னிலையில் இருக்கப்போவது யார்? அது நீங்கள் அல்லவா? உண்மையாக நீங்களே எங்கள் மகிமையும் மகிழ்ச்சியுமாய் இருக்கிறீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 2:17-20 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சகோதரர்களே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சநாட்கள் உங்களைவிட்டுப் பிரிந்திருந்ததினாலே, உங்களுடைய முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடு அதிகமாக முயற்சி செய்தோம். ஆகவே, நாங்கள் உங்களிடம் வர ஒன்று இரண்டுமுறை விருப்பமாக இருந்தோம். பவுலாகிய நானே வர விருப்பமாக இருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைசெய்தான். எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாக இருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 2:17-20 பரிசுத்த பைபிள் (TAERV)
சகோதர சகோதரிகளே! கொஞ்ச காலமாக நாங்கள் உங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். (அங்கே நாங்கள் உங்களோடு இல்லாவிட்டாலும் எங்கள் நினைவுகள் உங்களோடு இருந்தன.) உங்களைப் பார்க்க நாங்கள் மிகவும் விரும்பினோம். அதற்காக மிகவும் கடுமையாய் முயற்சி செய்தோம். ஆம், உங்களிடம் வர நாங்கள் விரும்பினோம். உண்மையில் பவுலாகிய நான் பலமுறை வர முயன்றேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது நாங்கள் பெருமைப்படக் கூடிய எங்களது நம்பிக்கையும், மகிழ்ச்சியும், கிரீடமும் நீங்கள் தானே. உண்மையில் நீங்களே எங்கள் மகிழ்ச்சியும் மகிமையும் ஆவீர்கள்.
1 தெசலோனிக்கேயர் 2:17-20 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம். ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான். எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.