1 தெசலோனிக்கேயர் 2:3-10

1 தெசலோனிக்கேயர் 2:3-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஏனெனில், எங்களுடைய போதனை பிழைகளிலிருந்தோ, கெட்ட நோக்கங்களிலிருந்தோ உருவாகவில்லை அல்லது உங்களை ஏமாற்றுவதற்காகவோ செய்யப்படவில்லை. மாறாக, நற்செய்தி ஒப்படைக்கப்படுவதற்கு, இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மனிதர்களாக நாங்கள் பேசுகிறோம். நாங்கள் மனிதரை அல்ல, எங்கள் உள்ளங்களை சோதித்து அறிகிற இறைவனைப் பிரியப்படுத்தவே முயலுகிறோம். நாங்கள் ஒருபோதும் உங்களைப் போலியாக புகழ்ந்து பேசவோ, மறைக்கப்பட்ட முகமூடி போட்டு பேராசையுடன் நடந்துகொள்ளவோ இல்லை. இதற்கு இறைவனே எங்களுக்கு சாட்சி. உங்களிடமிருந்தோ, வேறு எவரிடமிருந்தோ, நாங்கள் மனிதனால் வரும் புகழ்ச்சியைத் தேடவுமில்லை. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர் என்ற முறையில், உங்களுக்கு ஒரு சுமையாய் இருந்திருக்கலாம். ஆனால், நாங்கள் ஒரு தாய் தன்னுடைய குழந்தையைப் பராமரிப்பதுபோல, உங்களுடனே கனிவாய் நடந்து கொண்டோம். நாங்கள் உங்களில் அதிக அன்பாய் இருந்ததினால், உங்களுடன் இறைவனுடைய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் மட்டுமல்ல, எங்களுடைய வாழ்க்கையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி கொண்டோம்; ஏனெனில், நீங்கள் எங்களின் அன்புக்குரியவர்களானீர்கள். பிரியமானவர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் கஷ்டமும் உங்களுக்கு நிச்சயமாக நினைவிருக்குமே; இறைவனுடைய நற்செய்தியை நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்தபோது யாருக்கும் நாங்கள் சுமையாய் இராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்தோம். நற்செய்தியை விசுவாசித்தவர்களாகிய உங்களிடையே, நாங்கள் எவ்வளவு பரிசுத்தமாயும், நீதியாயும், குற்றம் காணப்படாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, இறைவனும் சாட்சியாய் இருக்கிறார்.

1 தெசலோனிக்கேயர் 2:3-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

எங்களுடைய போதகம் வஞ்சகத்தினாலும் தவறான விருப்பத்தினாலும் உண்டாகவில்லை, அது தந்திரமுள்ளதாகவும் இருக்கவில்லை. தேவன் எங்களை நேர்மையானவர்கள் என்று நம்பி நற்செய்தியை எங்களிடம் ஒப்புவித்தார். நாங்கள் மனிதர்களுக்கு அல்ல, எங்களுடைய இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருபோதும் முகத்துதியான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாக மாயம்பண்ணவும் இல்லை; தேவனே சாட்சி. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக உங்களுக்குப் பாரமாக இருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனிதர்களால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல நாங்கள் உங்களிடம் கனிவாக நடந்துகொண்டோம்; நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாக இருந்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்களுடைய உயிரையும் உங்களுக்குக் கொடுக்க விருப்பமாக இருந்தோம். சகோதரர்களே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாக இருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம். விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையில்லாமலும் நடந்தோம் என்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.

1 தெசலோனிக்கேயர் 2:3-10 பரிசுத்த பைபிள் (TAERV)

நாங்கள் மக்களுக்கு ஊக்கமூட்டுகிறோம். ஒருவரும் எங்களை முட்டாளாக்கவில்லை. நாங்கள் தீயவர்கள் அல்லர். மக்களிடம் நாங்கள் தந்திரம் செய்ய முயற்சிக்கவில்லை. நாங்கள் நற்செய்தியைப் பரப்புகிறோம். ஏனென்றால் எங்களை சோதித்து அறிந்த பின் நற்செய்தியைச் சொல்லும் பொருட்டு தேவன் எங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார். ஆகவே நாங்கள் மனிதர்களை திருப்பதிப்படுத்த விரும்பவில்லை. தேவனை திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். தேவன் ஒருவரே நம் இதயங்களைத் தொடர்ந்து சோதனை செய்ய வல்லவர். உங்களைப் பற்றி உங்களுக்குப் பிடித்த வகையில் முகஸ்துதி செய்து திருப்திப்படுத்த நாங்கள் ஒருபோதும் முயலவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்கள் பணத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. உங்களிடம் மறைக்கத்தக்க சுயநலம் எதுவும் எங்களிடம் இருந்ததில்லை. இது உண்மை என்பது தேவனுக்குத் தெரியும். எவ்வித பாராட்டையும் மக்களிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ நாங்கள் எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர். எனவே நாங்கள் உங்களோடு இருக்கும்போது சில காரியங்களை நீங்கள் செய்யும் பொருட்டு உங்கள் மீது அதிகாரம் செலுத்தி இருக்ககூடும். எனினும் நாங்கள் மென்மையாகவே நடந்துகொண்டோம். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போன்று இருந்தோம். உங்களை நாங்கள் பெரிதும் நேசித்தோம். எனவே, தேவனுடைய நற்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்தோம். அதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாழ்க்கையையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ந்தோம். சகோதர சகோதரிகளே! நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பதை நான் அறிவேன். இரவும் பகலுமாக நாங்கள் பணியாற்றினோம். தேவனுடைய நற்செய்தியைப் பரப்பும்பொழுது உங்களில் எவர்மீதும் எவ்விதமான பொருளாதார பாரத்தையும் சுமத்த விரும்பவில்லை. விசுவாசிகளாகிய உங்களோடு நாங்கள் இருந்தபோது தூய்மையும் நீதியும் உள்ள வழியில் குற்றமற்று வாழ்ந்தோம். இது உண்மை என உங்களுக்குத் தெரியும். தேவனுக்கும் இது உண்மை எனத் தெரியும்.

1 தெசலோனிக்கேயர் 2:3-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை. சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி. நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம். விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.