1 தெசலோனிக்கேயர் 5:1-8
1 தெசலோனிக்கேயர் 5:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இப்பொழுதும் பிரியமானவர்களே, இவை நிகழும் காலங்களையும் வேளைகளையும் குறித்து, நாங்கள் உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. ஏனெனில் கர்த்தருடைய நாள் இரவில் திருடன் வருகிறதைப்போலவே வரும் என்று நீங்கள் நன்றாய் அறிந்திருக்கிறீர்களே. “சமாதானமும் பாதுகாப்பும்” உண்டு என்று மக்கள் சொல்லிக்கொண்டிருக்கையில், ஒரு கர்ப்பவதியான பெண்ணுக்கு பிரசவவேதனை வருவதுபோல, திடீரென அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. ஆனால் பிரியமானவர்களே, நீங்கள் இருளில் இருக்கிறவர்கள் இல்லை. ஆதலால், அந்நாள் ஒரு திருடனைப்போல் வந்து உங்களை வியப்பிற்குள்ளாக்காது. நீங்கள் எல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும் பகலின் பிள்ளைகளுமாய் இருக்கிறீர்கள். நாம் இரவுக்கோ, இருளுக்கோ உரியவர்களல்ல. ஆகவே நாம் தூங்குகிற மற்றவர்களைப்போல் இருக்காமல், விழிப்புடனும் தன்னடக்கத்துடனும் இருப்போமாக. ஏனெனில் நித்திரை செய்கிறவர்கள் இரவில் நித்திரை செய்கிறார்கள். மதுவெறி கொள்கிறவர்கள் இரவிலே வெறிகொள்கிறார்கள். ஆனால் நாமோ பகலுக்குரியவர்களாய் இருக்கிறபடியால் தன்னடக்கத்துடன் இருந்து, விசுவாசத்தையும் அன்பையும் மார்புக்கவசமாக அணிந்துகொள்வோம். இரட்சிப்பைப் பற்றிய எதிர்பார்ப்பை தலைக்கவசமாய் அணிந்துகொள்வோம்.
1 தெசலோனிக்கேயர் 5:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
சகோதரர்களே, இவைகள் நடக்கும் நாட்களையும் நேரங்களையும்குறித்து உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாகக் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாக அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் பாதுகாப்பும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு திடீரென அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. சகோதரர்களே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் இருளில் இருக்கிறவர்களில்லையே. நீங்களெல்லோரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாக இருக்கிறீர்கள்; நாம் இரவிற்கும் இருளுக்கும் உரியவர்களல்ல. ஆகவே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாமும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாக இருக்கக்கடவோம். தூங்குகிறவர்கள் இரவிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இரவிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாக இருந்து, விசுவாசம், அன்பு என்னும் மார்புக்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைக்கவசத்தையும் அணிந்துகொண்டிருக்கக்கடவோம்.
1 தெசலோனிக்கேயர் 5:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)
சகோதர சகோதரிகளே, இப்பொழுது இவை நடக்கும் காலத்தையும் தேதியையும் எழுதத் தேவை இல்லை. கர்த்தர் வரும் நாள் இரவில் திருடன் திடீரென்று வருவது போல் ஆச்சரியமாக இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். “நாங்கள் சமாதானத்தோடும், பாதுகாப்போடும் இருக்கிறோம்” என்று மக்கள் சொல்வார்கள். அப்பொழுது அவர்களுக்கு அழிவு திடீரென வரும். அவ்வழிவு கர்ப்பவதியின் பிரசவ வேதனை போன்று திடீரென வரும். அவர்கள் தப்பமுடியாது. ஆனால் நீங்கள் இருட்டில் வாழவில்லை. எனவே திருடனைப்போல அந்த நாள் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தராது. நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை. எனவே நாம் ஏனைய மக்களைப்போன்று இருக்கக் கூடாது. நாம் தூங்கிக்கொண்டிருக்கக் கூடாது. விழிப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும் இருக்கவேண்டும். தூங்கும் மக்கள் இரவுப்பொழுதில் தூங்குவார்கள். குடித்து வெறிகொள்பவர்கள் இரவுப் பொழுதில் குடிப்பார்கள். ஆனால் நாம் பகலுக்குரியவர்கள். எனவே நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்மைக் காத்துக்கொள்வதற்காக விசுவாசம், அன்பு என்னும் மார்புக் கவசத்தை அணிந்துகொள்வோம். நம் தலைக்கவசமாய் இட்சிப்பின் நம்பிக்கை அமையும்.
1 தெசலோனிக்கேயர் 5:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே, நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம்.