1 தீமோத்தேயு 1:3-7

1 தீமோத்தேயு 1:3-7 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக, நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக. கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள். தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.

1 தீமோத்தேயு 1:3-7 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் மக்கெதோனியாவுக்குப் போனபோது உன்னிடம் வற்புறுத்தி வேண்டிக்கொண்டதுபோல, நீ எபேசுவிலே தங்கியிரு. அங்கே சிலர் பொய்யான கோட்பாடுகளைப் போதிக்கிறார்கள். நீ அவர்களுக்கு இனிமேலும் அப்படிச் செய்யாதபடி கட்டளையிடு. கட்டுக்கதைகளிலும், முடிவில்லாத வம்ச வரலாறுகளிலும் அவர்கள் ஈடுபடுவதை விட்டுவிடும்படி கட்டளையிடு. இவை வாக்குவாதத்தைப் பெருகச்செய்யுமேயல்லாமல், விசுவாசத்தின்மூலம் நடைபெற வேண்டிய இறைவனின் வேலைகளைப் பெருகச்செய்யாது. இந்தக் கட்டளையின் நோக்கம் அன்பே ஆகும். தூய்மையான இருதயத்திலும், நல்ல மனசாட்சியிலும், உண்மையான விசுவாசத்திலுமிருந்தே அந்த அன்பு உண்டாகிறது. சிலரோ இவற்றைவிட்டு வழிவிலகிப்போய், பயனற்ற பேச்சில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் மோசேயின் சட்ட ஆசிரியர்களாய் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் தாங்கள் எதைப்பற்றிப் பேசுகிறார்கள் என்றும், தாங்கள் மனவுறுதியுடன் வலியுறுத்துவது என்ன என்றும் அறியாதிருக்கிறார்கள்.

1 தீமோத்தேயு 1:3-7 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

மாறுபாடான உபதேசங்களைப் போதிக்காதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவளர்ச்சிக்கு ஏதுவாக இல்லாமல், வாக்குவாதங்களுக்கு ஏதுவாக இருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனிக்காதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்படி, நான் மக்கெதோனியாவிற்குப் போகும்போது, உன்னை எபேசு பட்டணத்தில் இருக்கக் கேட்டுக்கொண்டபடியே செய். இந்த கட்டளையின் பொருள் என்னவென்றால், சுத்தமான இருதயத்திலும் நல்லமனச்சாட்சியிலும் மாயமில்லாத விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. இவைகளைச் சிலர் பார்க்காமல் வீண்பேச்சுக்கு இடம்கொடுத்து விலகிப்போனார்கள். தாங்கள் சொல்லுகிறதும், தாங்கள் உறுதியாக நம்புகிறதும் என்னவென்றும் தெரியாமல், வேதபண்டிதர்களாக இருக்க விரும்புகிறார்கள்.

1 தீமோத்தேயு 1:3-7 பரிசுத்த பைபிள் (TAERV)

எபேசு நகரத்தில் நீ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் மக்கதோனியாவுக்குப் போனபோது நீ அவ்வாறு செய்யும்படி கேட்டேன். எபேசு நகரில் சிலர் தவறானவற்றைப் போதித்து வருகிறார்கள். இது போல் செய்ய வேண்டாம் என்று ஆணையிட்டுச் சொல்லும் பொருட்டு நீ அங்கே தங்கி இரு. உண்மையற்ற கட்டுக்கதைகளைக் கேட்டு காலத்தை வீணாக்க வேண்டாம் என்றும், குடும்ப வரலாற்றுப் பட்டியல்களைக் கேட்க வேண்டாம் என்றும் கூறு. அவை வெறும் விவாதங்களை மட்டுமே உருவாக்கும். அவை தேவனுடைய பணிக்கு உதவாதவை. விசுவாசத்தின் மூலமே தேவனுடைய பணி நடைபெறும். மக்கள் அன்புகொள்ள வேண்டும் என்பதே இக்கட்டளையின் நோக்கம். இந்த அன்பைப் பெற மக்கள் தூய இதயத்தைப் பெற வேண்டும். எது சரியானது என்று எண்ணுகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். உண்மையான விசுவாசம் கொள்ளவேண்டும். சிலர் இக்காரியங்களைச் செய்யத் தவறினார்கள். ஆகையால் அவர்கள் அதிலிருந்து விலகி ஒன்றுக்கும் உதவாத காரியங்களைப் பற்றி இப்பொழுது பேசுகிறார்கள். அந்த மக்கள் நியாயப்பிரமாண போதகர்களாக இருக்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தாம் என்ன சொல்கிறோம் என்பது தெரியவில்லை. அதோடு தாம் உறுதியாகச் சொல்கின்றவற்றைப் பற்றியும் புரிந்துகொள்ளவில்லை.