1 தீமோத்தேயு 3:1-16
1 தீமோத்தேயு 3:1-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும். அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும், விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும். மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம். அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்க வேண்டும். மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும். இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன். தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
1 தீமோத்தேயு 3:1-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
யாராவது திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்க விரும்பினால், அவன் நல்ல பணியை விரும்புகிறான். அது உண்மையான நம்பத்தகுந்த வாக்கு. திருச்சபையின் மேற்பார்வையாளனாக இருக்கவேண்டியவன், குற்றம் காணப்படாதவனாகவும், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாகவும், சுயக்கட்டுப்பாடு உடையவனாகவும், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உடையவனாகவும், மதிப்புக்குரியவனாகவும், உபசரிக்கும் பண்பு உடையவனாகவும், போதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருக்கவேண்டும். அவன் மதுபான வெறிகொள்ளும் பழக்கம் இல்லாதவனாகவும், கலகக்காரனாக இல்லாமல், கனிவு உடையவனாகவும் இருக்கவேண்டும். அவன் வாக்குவாதம் செய்யாதவனாகவும், பண ஆசை இல்லாதவனாகவும் இருக்கவேண்டும். அவன் தனது சொந்த குடும்பத்தை நல்லமுறையில் நடத்தவேண்டும். அவனது பிள்ளைகள் அவனுக்கு மதிப்புக்கொடுத்து, கீழ்ப்படியும்படி பார்த்துக்கொள்ளவும் வேண்டும். தனது சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பது எப்படியெனத் தெரியாதவன் இறைவனின் திருச்சபையை எப்படி பராமரிக்க முடியும்? அவன் ஒரு புதிதாக மனமாற்றம் அடைந்த விசுவாசியாய் இருக்கக்கூடாது. அப்படியிருந்தால், அவன் வீண்பெருமை அடைந்து, பிசாசு அடைந்த நியாயத்தீர்ப்புக்குள் விழக்கூடும். அவன் திருச்சபையைச் சேராதவர்கள் மத்தியிலும் நற்பெயர் பெற்றவனாயிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அவமானத்துக்குள்ளாகி, பிசாசின் கண்ணியில் விழுந்துபோக நேரிடலாம். அதேபோல் திருச்சபையின் உதவி ஊழியரும் மதிப்புக்குரியவர்களாகவும், உண்மைத்தனம் உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் மதுபானத்தால் வெறிகொள்கிறவர்களாகவோ, நீதியற்ற முறையில் இலாபத்தைத் தேடுகிறவர்களாகவோ இருக்கக்கூடாது. அவர்கள் விசுவாசத்தின் ஆழமான இரகசியத்தை நல்ல மனசாட்சியுடன் பற்றிப்பிடித்துக் கொள்கிறவர்களாய் இருக்கவேண்டும். முதலாவது அவர்களை சோதித்துப் பார்க்கவேண்டும்; அதற்குப் பின்பு அவர்களுக்கெதிராக குற்றம் ஒன்றும் இல்லையானால், அவர்கள் உதவி ஊழியராகப் பணிசெய்யலாம். அதேபோல் அவர்களுடைய மனைவிகளும், மதிப்புக்குரிய பெண்களாய் இருக்கவேண்டும். அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாக இருக்காமல், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு உள்ளவர்களாகவும் நம்பத்தகுந்தவர்களாகவும் இருக்கவேண்டும். ஒரு திருச்சபையின் உதவி ஊழியன், ஒரு மனைவியை மட்டும் உடைய கணவனாக இருக்கவேண்டும்; அவன் தனது பிள்ளைகளையும், தனது குடும்பத்தையும் நல்லமுறையில் நடத்துகிறவனாகவும் இருக்கவேண்டும். நல்லமுறையில் இந்த பணியைச் செய்கிறவர்கள் பிறரிடமிருந்து உயர் மதிப்பைப் பெறுவார்கள். கிறிஸ்து இயேசுவிலுள்ள தங்கள் விசுவாசத்தில் மிகுந்த உறுதியையும் பெற்றுக்கொள்வார்கள். நான் விரைவில் உன்னிடம் வருவேன் என எதிர்பார்க்கிறேன். ஆனால், இந்த அறிவுறுத்தல்களை உனக்கு எழுதுகிறேன். ஏனெனில் நான் வரத்தாமதித்தாலும், இறைவனின் குடும்பத்தில் மக்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ அறிந்துகொள்ளும்படியே இதை எழுதுகிறேன்; இறைவனின் குடும்பமானது ஜீவனுள்ள இறைவனின் திருச்சபையாயிருக்கிறது. அதுவே சத்தியத்தைத் தாங்கும் தூணும், அஸ்திபாரமுமாயிருக்கிறது. இறை பக்தியைக்குறித்த இரகசியம் மிகப்பெரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை: இறைவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். ஆவியானவரால் நிரூபிக்கப்பட்டார். இறைத்தூதர்களால் காணப்பட்டார். அவர் யூதரல்லாதவர்கள் மத்தியில் பிரசங்கிக்கப்பட்டார். அவர் உலகத்திலுள்ளவர்களால் விசுவாசிக்கப்பட்டார். அவர் மகிமையில் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
1 தீமோத்தேயு 3:1-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும். அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து, தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புதிய சீடனாக இருக்கக்கூடாது. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும். அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும், விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும். மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்றால் உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம். அப்படியே பெண்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும். இப்படி உதவிக்காரர்களுடைய ஊழியத்தை நன்றாகச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன். தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது. அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
1 தீமோத்தேயு 3:1-16 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் சொல்வதெல்லாம் உண்மையே, மூப்பரின் சேவையை விரும்புகிறவன் நல்ல வேலையைச் செய்வதையே விரும்புகிறான். ஒரு மூப்பன் நல்லவனாகவே இருக்க வேண்டும். அவன் தன்னைக் குற்றம் சாட்டப்படாதவனாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாகவும், சுயக்கட்டுப்பாடும், ஞானமும் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும் மக்களை உபசரிப்பவனாக இருக்க வேண்டும். நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் மது அருந்துபவனாகவும், சண்டையிட விரும்புகிறவனாகவும் இருக்கக் கூடாது. அவன் பொறுமையும், சமாதானமும் உடையவனாக இருக்கவேண்டும். அதோடு அவன் பண ஆசை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். அவன் தன் குடும்பத்தில் சிறந்த தலைவனாக இருக்க வேண்டும். அதாவது அவனது பிள்ளைகள் அவனிடம் முழு மரியாதையோடு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தில் நல்லதொரு தலைவனாக இருக்க தெரியாவிட்டால், பிறகு எப்படி அவனால் தேவனுடைய சபைப்பொறுப்பை ஏற்று நடத்த முடியும்? ஆனால் மூப்பராக வருகிற ஒருவன் புதிதாக விசுவாசம் கொண்டவனாக இருக்கக்கூடாது. இதில் அவன் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவ்வாறு செய்தால் அவன் தற்பெருமைக்காகத் தண்டிக்கப்படுவான். அது சாத்தான் பெற்ற தண்டனையைப்போன்று இருக்கும். சபையில் இல்லாதவர்களின் மரியாதையையும் பெற்றவனாக மூப்பர் இருக்க வேண்டும். பிறகு அவன் மற்றவர்களால் விமர்சிக்கப்படாமல் இருப்பான். சாத்தானின் தந்திரத்துக்கும் பலியாகாமல் இருப்பான். இதே விதத்திலேயே மக்களின் மரியாதைக்கு உரியவர்களாக சிறப்பு உதவியாளர்களும் இருக்க வேண்டும். அவர்கள் நினைப்பொன்றும் சொல்லொன்றுமாக இல்லாமலும், மதுக்குடியர்களாக இல்லாமலும் இருக்கவேண்டும். மற்றவர்களை ஏமாற்றி செல்வம் சேர்ப்பவர்களாகவும் இருக்கக் கூடாது. அவர்கள், தேவன் நமக்கு வெளிக்காட்டிய உண்மைகளைக் கடைப்பிடிக்கிறவர்களாகவும் சரியெனப்படுவதை மட்டுமே செய்பவர்களாவும் இருக்க வேண்டும். முதலில் நீங்கள் அவர்களைச் சோதனை செய்யுங்கள். அவர்களில் எதுவும் குற்றம் இல்லாவிட்டால் பிறகு அவர்கள் விசேஷ உதவியாளர்களாக சேவைசெய்ய முடியும். இதைப்போலவே மற்றவர்கள் மதிக்கத்தக்கவர்களாக பெண்கள் இருக்க வேண்டும். பிறர்மேல் அவதூறு பேசாதவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாகவும், எல்லாவற்றிலும் உண்மை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். விசேஷ உதவியாளர்களாக இருப்பவர்கள் ஒரே ஒரு மனைவி உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தம் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் நல்ல தலைவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு நல்ல வழியில் சேவை செய்கிறவர்கள் ஒரு மரியாதைக்குரிய நிலையை அடைவார்கள். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் மேலும் உறுதி பெறுவார்கள். விரைவில் நான் உங்களிடம் வருவேன் என நம்புகிறேன். ஆனால் இப்பொழுது இதை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். பிறகு நான் விரைவில் வராவிட்டாலும் தேவனுடைய குடும்பத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். தேவனுடைய குடும்பம் என்பது ஜீவனுள்ள தேவனின் சபைதான். உண்மையின் தூணாகவும் அடித்தளமாகவும் சபை இருக்கிறது. நம் வழிபாட்டு வாழ்வின் இரகசியம் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் மிக உயர்ந்தது ஆகும்.