1 தீமோத்தேயு 4:6-16

1 தீமோத்தேயு 4:6-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இக்காரியங்களைச் சகோதரருக்கு எடுத்துக் கூறினால், நீ கைக்கொண்ட விசுவாசத்தின் வார்த்தைகளிலும், நல்ல போதனைகளிலும் வளர்ச்சிப்பெற்ற கிறிஸ்து இயேசுவின் ஒரு நல்ல ஊழியனாயிருப்பாய். பக்தியில்லாதவர்களின் கற்பனைக் கதைகளிலும், கிழவிகளின் கட்டுக்கதைகளிலும் நீ சம்பந்தப்படாமல்; இறை பக்தியுள்ளவனாய் இருக்க உன்னைப் பயிற்சி செய். உடற்பயிற்சி ஓரளவு பயனுள்ளதே. ஆனால் இறை பக்தியாயிருப்பது எல்லாவற்றிற்கும் மிகப் பயனுள்ளது. அந்த பக்தி தற்போதைய வாழ்வுக்கும், வருங்கால வாழ்வுக்கும் உதவும் வாக்குறுதியைக் கொண்டிருக்கிறது. இந்த வார்த்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பத் தகுந்ததாயிருக்கிறது. எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கு இரட்சகரான ஜீவனுள்ள இறைவனில் நாம் நமது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறோம். இதற்காகத்தான் நாம் கடுமையாக பாடுபட்டு முயற்சிக்கிறோம். இந்தக் காரியங்களை நீ போதித்துக் கட்டளையிடு. நீ வாலிபனாய் இருப்பதால், உன்னை யாரும் தாழ்வாக எண்ண இடங்கொடாதே. அதனால் உன் பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய வாழ்விலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. நான் வரும்வரைக்கும் நீ திருச்சபையில் வேதவசனங்கள் வாசிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும், போதிப்பதிலும் உன் கவனத்தை ஈடுபடுத்து. சபைத்தலைவர்களின் குழு உன்மேல் தங்கள் கைகளை வைத்தபோது, இறைவாக்கின் மூலமாக உனக்குக் கொடுக்கப்பட்ட வரத்தை அலட்சியம் செய்யாதே. இந்தக் காரியங்களில் கவனத்தைச் செலுத்து; அவைகளுக்கு உன்னை முழுமையாக ஒப்புக்கொடு. அப்போது எல்லோரும் உன் முன்னேற்றத்தைத் தெளிவாய் காண்பார்கள். உன் வாழ்க்கை முறையைப் பற்றியும், உபதேசத்தைப் பற்றியும் மிகக் கவனமாயிரு. நீ அவைகளில் நிலைத்திரு, நீ அப்படியிருந்தால் உன்னையும் உனக்குச் செவிகொடுப்பவர்களையும் நீ இரட்சித்துக்கொள்வாய்.

1 தீமோத்தேயு 4:6-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

இவைகளை நீ சகோதரர்களுக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நல்லபோதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவிற்கு நல்ல ஊழியக்காரனாக இருப்பாய். சீர்கேடும், கிழவிகள் பேச்சுமாக இருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கானவைகளை முயற்சிபண்ணு. சரீரமுயற்சி கொஞ்சம் பிரயோஜனமுள்ளது; ஆனால், தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப்பின்பு வரும் ஜீவனுக்கும் உள்ள வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் தகுதி உள்ளதாக இருக்கிறது. இதற்காகவே பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனென்றால், எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடி, நீ உன் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. நான் வரும்வரைக்கும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாக இரு. சபை மூப்பர்களாகிய சங்கத்தினர்கள் உன்மேல் கரங்களை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைக்குறித்து அசதியாக இருக்கவேண்டாம். உன்னுடைய வளர்ச்சி எல்லோருக்கும் தெரியும்படி இவைகளையே நீ சிந்தித்து, இவைகளில் நிலைத்திரு. உன்னைக்குறித்தும், உன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாக இரு, இவைகளில் நிலைகொண்டிரு, நீ இப்படிச் செய்தால், உன்னையும், உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

1 தீமோத்தேயு 4:6-16 பரிசுத்த பைபிள் (TAERV)

அங்குள்ள சகோதர சகோதரிகளிடமும் இவற்றைக் கூறு. இவை நீ இயேசு கிறிஸ்துவின் நல்ல வேலையாள் என்பதைக் காட்டும். விசுவாசமான வார்த்தைகளாலும், பின்பற்றப்படுகிற நல்ல போதனையாலும் நீ பலப்படுத்தப்படுகிறாய் என்றும் காட்டுவாய். மக்கள் சொல்கிற அர்த்தமற்ற கதைகள் தேவனுடைய உண்மையோடு சற்றும் பொருந்தாதவை. அவற்றின் கூற்றுக்களைப் பின்பற்றாதே. தேவனுக்கு உண்மையான சேவையைச் செய்ய கற்றுக்கொள். உடற்பயிற்சியானது சில வழிகளில் உதவிகரமானது. ஆனால் தேவபக்தியானது எல்லா வழிகளிலும் உதவுவதாகும். அது இவ்வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் இனிவரும் வாழ்வுக்கும் ஆசீர்வாதம் தரும். நான் சொல்வதெல்லாம் உண்மை, அவற்றை முழுமையாக நீ ஏற்றுக்கொள்ளவேண்டும். இதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். போராடுகிறோம்; தேவனில் விசுவாசம் கொள்கிறோம்; அவரே அனைத்து மக்களின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார். கட்டளையிட்டு இவ்விஷயங்களைப் போதனை செய். நீ இளமையாக இருக்கிறாய். ஆனால் உன்னை முக்கியம் அற்றவனாக நடத்த யாரையும் அனுமதிக்காதே. விசுவாசம் உடையவர்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இரு. வார்த்தையிலும், வாழும் வகையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய நடத்தையிலும் விசுவாசிகளுக்கு முன் மாதிரியாக இரு. மக்களுக்குத் தொடர்ந்து வேதவாக்கியங்களை வாசித்துக்காட்டு. அவர்களை பலப்படுத்து, அவர்களுக்குப் போதனைசெய். நான் வரும்வரை இவற்றைச் செய். உனக்குக் கிடைத்துள்ள வரத்தைப் பயன்படுத்த நினைவுகொள். மூப்பராகிய சபையோர் உன் மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தின் மூலம் இந்த வரத்தைப் பெற்றாய். இவற்றைத் தொடர்ந்து செய். இவற்றுக்காக உன் வாழ்வைக் கொடு. பிறகு, உன் பணியின் வளர்ச்சியை அனைவரும் கண்டுகொள்வர். உன் வாழ்விலும் போதனையைக் குறித்து எச்சரிக்கையாக இரு. சரியாய் வாழ்ந்து இவற்றைப் போதனை செய். அதனால் உன் வாழ்வையும், உன் போதனையைக் கேட்பவர்களின் வாழ்வையும் நீ காப்பாற்றிக்கொள்ள முடியும்.

1 தீமோத்தேயு 4:6-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய், சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு, சரீரமுயற்சி அற்பபிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது. இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே. நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.