1 தீமோத்தேயு 5:1-18

1 தீமோத்தேயு 5:1-18 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும், பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள். உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு ஏற்ற ஆதரவைக்கொடு. ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், முதலாவது அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதின் மூலம், இறை பக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும்; இப்படித் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில், இதுவே இறைவனுக்குப் பிரியமாயிருக்கிறது. ஒரு விதவை உண்மையாகவே தேவையுடையவளாக இருந்து, கைவிடப்பட்டுத் தனிமையாக இருந்தால், அவள் தனது எதிர்பார்ப்பை இறைவனிலேயே வைத்திருக்கிறாள். அவள் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடுவதிலும், உதவி கேட்பதிலும் நிலைத்திருப்பாள். ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே. ஒருவர் மேலும் குற்றஞ்சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு. யாராவது தனது உறவினர்களுக்கு, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிசெய்யாவிட்டால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிக்கிறான். அவன் விசுவாசம் இல்லாதவனைவிடக் கேவலமானவன். ஒரு விதவை அறுபது வயதிற்கு மேற்பட்டவளாயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, அவளை விதவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். அத்துடன் அவள் தனது நல்ல செயல்களினால், அதாவது தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லா விதமான நல்ல செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தியவளாக, மற்றவர்களால் நற்சாட்சி பெற்றிருக்கவேண்டும். இந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்த்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களுடைய உடல் இச்சைகள், அவர்களை கிறிஸ்துவின் அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்கும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள். இப்படி அவர்கள் முதலில் செய்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள். அதுத்தவிர அவர்கள் சோம்பல்தனமுள்ளவர்களாகி, வீட்டுக்கு வீடு போகப் பழகிக்கொள்வார்கள். அவர்கள் சோம்பேறிகளாக மட்டுமல்ல, பிறர் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும், தேவையற்ற காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித்திரிவார்கள். எனவே இளம் விதவைகள் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்தவேண்டும் என்பதே நான் அவர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை. அப்பொழுது இதன் நிமித்தம் பகைவன் அவதூறு பேசுவதற்கு இடமில்லாமல் போகும். ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி சாத்தானின் பின்னே போய்விட்டார்கள். ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும். திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும். ஏனெனில், “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” என்றும் “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்” என்றும், வேதவசனம் சொல்லுகிறதே.

1 தீமோத்தேயு 5:1-18 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

முதிர்வயதானவரைக் கடிந்துபேசாமல், அவரைத் தகப்பனைப்போலவும், வாலிபர்களை சகோதரர்களைப்போலவும், முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு. ஆதரவற்ற விதவைகளைக் கனம்பண்ணு. விதவையானவளுக்கு குழந்தைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்களுடைய சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாக நடத்தி, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாக இருக்கிறது. ஆதரவற்ற விதவையாக இருந்து தனிமையாக இருக்கிறவள் தேவன்மேல் நம்பிக்கையுள்ளவளாக, இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள். சுகபோகமாக வாழ்கிறவள் உயிரோடு செத்தவள். அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாக இருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு. ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான். அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே கணவனுக்கு மனைவியாக இருந்து, குழந்தைகளை வளர்த்து, அந்நியர்களை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, எல்லா நல்லகிரியைகளையும் கவனமாக செய்து, இவ்விதமாக நற்கிரியைகளைக்குறித்து நற்பெயர் பெற்றவளுமாக இருந்தால், அப்படிப்பட்ட விதவைகளையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளம்வயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனென்றால், அவர்கள் கிறிஸ்துவிற்கு விரோதமாக காமஇச்சைகொள்ளும்போது திருமணம் செய்துகொள்ள விரும்பி, முதலில் கொண்டிருந்த வாக்குறுதியை விட்டுவிடுவதினாலே தண்டிக்கப்படுவார்கள். அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாக, வீடுவீடாகத் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாக மட்டுமல்ல, அலப்புகிறவர்களாகவும், மற்றவர்களுடைய வேலையில் தலையிடுகிறவர்களாகவும், வேண்டாத காரியங்களைப் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள். எனவே இளவயதுள்ள விதவைகள் திருமணம்செய்யவும், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவும், வீட்டை நடத்தவும், எதிரியானவன் அவதூறாக பேசுவதற்கு இடம்கொடுக்காமலும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால், இதற்குமுன்பு சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள். விசுவாசியாகிய பெண்ணின் சொந்தத்தில் விதவைகள் இருந்தால், அவள் அவர்களுக்கு உதவிசெய்யவேண்டும்; சபையானது ஆதரவற்ற விதவைகளுக்கு உதவிசெய்யவேண்டியிருப்பதால் அந்தச் சுமையை அதின்மேல் வைக்கக்கூடாது. நன்றாக விசாரிக்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்கு தகுதியுள்ளவர்களாகக் கருதவேண்டும். போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக்கூடாது என்றும், வேலைசெய்கிறவன் தன் கூலிக்குத் தகுதியானவன் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.

1 தீமோத்தேயு 5:1-18 பரிசுத்த பைபிள் (TAERV)

முதியோர்களிடம் கோபமாகப் பேசாதே. ஆனால் அவர்களைத் தந்தையாக மதித்து நடத்து. இளைஞர்களை சகோதரர்களாக மதித்து நடத்து. முதிய பெண்களைத் தாயாகக் கருது. வயது குறைந்த பெண்களை சகோதரிகளாக நினை. அவர்களை எப்பொழுதும் நல்ல முறையில் நடத்து. உண்மையிலேயே தனியாக உள்ள விதவைகளைப் பாதுகாத்து மதித்து நட. ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், இவர்கள் தம் பெற்றோர்களுக்கு உதவுவதன் மூலம் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதை முதலில் கற்கவேண்டும். இவர்கள் இதைச் செய்தால் பெற்றோர்களுக்கும் மூதாதையர்களுக்கும் நன்றிக் கடன் செலுத்தியவர்களாவார்கள். இதையே தேவன் ஒப்புக்கொள்கிறார். விதவையாக இருக்கும் ஒருத்தி தேவனைத் தன் ஒரே விசுவாசமாகக்கொண்டிருப்பாள். இரவு பகல் என அவள் எப்பொழுதும் பிரார்த்தனை செய்வாள். தேவனிடம் உதவியை வேண்டுவாள். தனக்கு சந்தோஷம் தரும் செயல்களைச் செய்வதிலேயே ஒரு விதவை தன் வாழ்வை கழித்தாளெனில் உயிரோடு இருந்தாலும் இறந்தவளுக்குச் சமமாவாள். அங்குள்ள விசுவாசிகளிடம் தங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும்படி கூறு. அதனால் மற்றவர்கள் அவர்கள் தவறாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறமாட்டார்கள். ஒருவன் தன் சொந்த மக்களிடமும் அக்கறை காட்ட வேண்டும். அதைவிட முக்கியமாக அவன் தன் சொந்தக் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருவன் இதைச் செய்யாவிட்டால் பிறகு அவன் உண்மையான விசுவாசத்தைக் கைவிட்டவன் ஆகிறான். அவன் விசுவாசம் அற்றவனை விட மோசமானவனாகிறான். உன் விதவைகள் பட்டியலில் சேர்க்கப்பட, விதவையானவளுக்கு அறுபது வயதுக்கு மேலாகி இருக்கவேண்டும். அவள் தன் கணவனுக்கு உண்மையானவளாக இருந்திருக்க வேண்டும். நல்ல காரியங்களைச் செய்யும் ஒரு பெண் என அறியப்பட்டிருக்க வேண்டும். அதாவது பிள்ளைகளை வளர்த்தல், வீட்டில் அந்நியர்களை உபசரித்தல், தூயவர்களின் கால்களைக் கழுவுதல், துன்பப்படுகிறவர்களுக்குத் துணை புரிதல் போன்று தன் வாழ்க்கை முழுவதும் பலவித நன்மைகளைச் செய்தல் வேண்டும். அந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்க்காதீர்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குத் தம்மை ஒப்படைத்தாலும், பலமான காம ஆசைகளால் அவரை விட்டு வெளியே இழுக்கப்படுவர். அவர்கள் மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பலாம். இதற்காகவே அவர்கள் குற்றவாளியாவார்கள். தாங்கள் முதலில் வாக்குறுதி கொடுத்தபடி நடந்துகொள்ளாததால் குற்றவாளியாவார்கள். இவர்கள் வீடு வீடாகப் போய்த் தங்கள் நேரத்தை வீணாகப் போக்குவார்கள். அது மட்டும் அல்ல, வீண் பேச்சு பேசுவார்கள். மேலும் மற்ற மனிதர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கை பற்றிய வதந்திகளையும், எதைச் சொல்லக் கூடாதோ அவற்றையுமே சொல்வார்கள். ஆகையால் இளம் விதவைகள் மீண்டும் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, வீட்டைக் கவனித்துக்கொள்வார்களாக. இதுவே அவர்கள் செய்ய வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த வழியில் அவர்கள் எதிரிக்கு விமர்சிக்கும் வாய்ப்பை கொடுக்கமாட்டார்கள். ஆனால், ஏற்கெனவே சில இளம் விதவைகள் சாத்தானைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்கள். விசுவாசமுள்ள ஒரு பெண்ணின் குடும்பத்தில் எவரேனும் விதவைகள் இருந்தால் அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யவேண்டும். அவர்கள் கவனிக்கப்பட வேண்டும் என உதவிகளுக்காக சபையில் சென்று தொந்தரவு செய்யக் கூடாது. அப்பொழுது குடும்பமே அற்ற விதவைகளைக் கவனிக்கும் பொறுப்பை மட்டுமே சபை ஏற்றுக்கொள்ள இயலும். சபைகளை நன்றாக நடத்திச்செல்லும் மூப்பர்கள் தக்க கௌரவம் பெற வேண்டும். பேசுவதன் மூலமும், போதிப்பதன்மூலம் உழைப்பவர்களாய் இருப்பவர்களே அத்தகு கௌரவத்தைப் பெறுவர். ஏனென்றால், “பிணையல் அடிக்கிற மாட்டின் வாயைக் கட்டாதே. அது உண்ணட்டும்” என்று வேதவாக்கியம் கூறுகிறது. “உழைக்கிறவனுக்கு அதற்கேற்ற கூலி கொடுக்கப்படவேண்டும்” என்றும் கூறுகிறது.

1 தீமோத்தேயு 5:1-18 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு. உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு. விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள். சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள். அவர்கள் குற்றஞ்சாட்டப்படா தவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு. ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான். அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி, பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி, முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள். அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள். ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன். ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள். விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்ய வேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது. நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.