2 நாளாகமம் 33:3-25

2 நாளாகமம் 33:3-25 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து, எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி, கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான். இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்றும், நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான். அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப் பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான். கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள். ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான். பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு தொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து, கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப் புறம்பாகப் போடுவித்து, கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திர பலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான். ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள். மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப் பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது. மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான். அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான். தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான். அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்று போட்டார்கள். அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

2 நாளாகமம் 33:3-25 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

தன் தகப்பன் எசேக்கியா அழித்திருந்த உயர்ந்த மேடைகளைத் திரும்பவும் கட்டினான். அத்துடன் அவன் பாகால்களுக்கு மேடைகளைக் கட்டியெழுப்பி, அசேரா விக்கிரக தூண்களையும் செய்தான். அவன் எல்லா நட்சத்திரக் கூட்டத்தையும் விழுந்து வணங்கினான். “என் பெயர் எருசலேமில் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று யெகோவா சொல்லியிருந்த யெகோவாவினுடைய ஆலயத்தில் அவன் பலிபீடங்களைக் கட்டினான். அத்துடன் அவன் யெகோவாவின் ஆலயத்தின் இரண்டு முற்றங்களிலும் எல்லா நட்சத்திரக் கூட்டங்களுக்கும் மேடைகளைக் கட்டினான். அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கில் தனது மகன்களை நெருப்பில் பலியிட்டான். அவன் மாந்திரீகம், குறிசொல்லுதல், பில்லிசூனியம் ஆகியவற்றில் ஈடுபட்டான். அத்துடன் அவன் ஆவிகளைக்கொண்டு குறிசொல்பவர்களிடமும், ஆவி உலகத் தொடர்புடையவர்களிடமும் அறிவுரை கேட்டுவந்தான். அவன் யெகோவாவின் பார்வையில் அதிகமான தீமையைச் செய்து அவருக்குக் கோபமூட்டினான். இறைவன் தாவீதிடமும், அவன் மகன் சாலொமோனிடமும், “இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து, நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும் இந்த ஆலயத்திலும் என்றென்றைக்குமாக எனது பெயரை வைப்பேன்” எனச் சொல்லியிருந்தார். அந்த ஆலயத்திலேயே அவன் தான் செய்த செதுக்கப்பட்ட உருவச் சிலைகளைக் கொண்டுபோய் வைத்தான். அத்துடன், “அவர்கள் மோசே மூலம் கொடுக்கப்பட்ட சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குவிதிகள் எல்லாவற்றையும் குறித்து நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்ய அவர்கள் கவனமாயிருப்பார்களானால், நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டிலிருந்து இஸ்ரயேலரின் காலடிகளைப் புறப்படப்பண்ண மாட்டேன்” என்றும் சொல்லியிருந்தார். ஆனால் மனாசேயோ யூதாவையும், எருசலேமின் மக்களையும் வழிவிலகச் செய்தான். அதனால் இஸ்ரயேலருக்கு முன்பாக யெகோவா அழித்த நாட்டினரைக் காட்டிலும் அதிகமான தீமையை இஸ்ரயேலர் செய்தார்கள். யெகோவா மனாசேயுடனும், அவன் மக்களுடனும் பேசினார். அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை. எனவே யெகோவா அசீரிய அரசனின் இராணுவ தளபதிகளை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவந்தார். அவர்கள் மனாசேயை கைதியாக்கி, அவனுடைய மூக்கில் கொக்கியை மாட்டி, வெண்கல சங்கிலியால் அவனைக் கட்டி, பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். அவன் தனது கடும் துன்பத்தில் தனது இறைவனாகிய யெகோவாவிடத்தில் தயவைத் தேடினான். தன் முற்பிதாக்களின் இறைவனுக்கு முன்பாக அவன் தன்னைத் தாழ்த்தினான். அவன் அவரிடத்தில் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, யெகோவா அவனுடைய வேண்டுதலினால் மனமிரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டார். அவர் அவனைத் திரும்பவும் எருசலேமுக்கும் அவனுடைய அரசுக்கும் கொண்டுவந்தார். அதன்பின்பு மனாசே யெகோவாவே இறைவன் என அறிந்தான். இவற்றிற்குப்பின் அவன் தாவீதின் நகரத்தில் வெளி மதிலைத் திரும்பக் கட்டினான். கீகோனுக்கு மேற்கேயுள்ள பள்ளத்தாக்கின் நீரூற்று தொடங்கி, மீன் வாசலின் நுழைவாசல்வரை ஓபேலின் குன்றைச் சுற்றியே அந்த மதிலைக் கட்டினான். அவன் அதை முன்னிருந்ததைவிட உயரமாகக் கட்டினான். அவன் யூதாவின் எல்லா அரணான பட்டணங்களிலும் இராணுவ தளபதிகளை நிறுத்தினான். அவன் அந்நிய தெய்வங்களையெல்லாம் ஒழித்து, யெகோவாவின் ஆலயத்தில் இருந்த உருவச்சிலையை அகற்றிப்போட்டான். அதேபோல் ஆலய மலையிலும், எருசலேமிலும் தான் கட்டியிருந்த பலிபீடங்களையும் அகற்றிப்போட்டான். அவன் அவற்றை பட்டணத்திற்கு வெளியே எறிந்துவிட்டான். அதன்பின் யெகோவாவின் பலிபீடத்தைத் திரும்பவும் கட்டி, அதில் சமாதானக் காணிக்கைகளையும், நன்றி செலுத்தும் காணிக்கைகளையும் பலியிட்டான். அத்துடன் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்ய வேண்டும் என யூதா மக்களிடம் சொன்னான். இருந்தும் மக்கள் தொடர்ந்து பலிபீடங்களின் மேலேயே பலியிட்டு வந்தனர். ஆனாலும் இறைவனாகிய தங்கள் யெகோவாவுக்கு என்றே பலியிட்டார்கள். மனாசேயின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் தனது இறைவனிடம் செய்த மன்றாடலும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயரில் தரிசனக்காரர் அவனுடன் பேசிய வார்த்தைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அவனுடைய மன்றாடலும், அவனுடைய வேண்டுதலினால் இறைவன் எவ்விதம் அவனுக்கு இரங்கினார் என்பதும், அவனுடைய பாவங்களும், நம்பிக்கைத் துரோகமும், அவன் தன்னைத் தாழ்த்துவதற்கு முன்பு உயர்ந்த மேடைகளைக் கட்டி, அசேரா விக்கிரக தூண்களையும், விக்கிரகங்களையும் அமைத்த இடங்களுமான இவையெல்லாம் தரிசனக்காரரின் பதிவேடுகளில் எழுதப்பட்டுள்ளன. மனாசே தன் முற்பிதாக்களைப்போல இறந்து அரண்மனையில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் ஆமோன் அவனுடைய இடத்தில் அரசனானான். ஆமோன் அரசனானபோது அவன் இருபத்திரண்டு வயதுடையவனாயிருந்தான். அவன் எருசலேமில் இரண்டு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனும் தன் தகப்பன் மனாசே செய்ததுபோல் யெகோவாவின் பார்வையில் தீமையானதையே செய்தான். மனாசே செய்திருந்த எல்லா விக்கிரகங்களையும் ஆமோன் வணங்கி, அவற்றில் பலிகளையும் செலுத்தினான். ஆனால் தன் தகப்பன் மனாசேயைப்போல் யெகோவாவுக்குமுன் தன்னைத் தாழ்த்தவில்லை. ஆமோன் தன் குற்றத்தை அதிகரித்துக் கொண்டான். ஆமோனின் அதிகாரிகள் அவனுக்கு எதிராகச் சதிசெய்து, அவனுடைய அரண்மனையில் அவனைக் கொலைசெய்தார்கள். அப்பொழுது நாட்டு மக்கள், அரசன் ஆமோனுக்கெதிராக குழப்பம் செய்த எல்லோரையும் கொலைசெய்தார்கள். பின் அவனுடைய இடத்திற்கு அவன் மகன் யோசியாவை அரசனாக்கினார்கள்.

2 நாளாகமம் 33:3-25 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் நட்சத்திரங்களையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளை வணங்கி, எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று யெகோவா சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி, யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் நட்சத்திரங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் மகன்களைத் தகனபலிகளாக தீயிலே பலியிட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான். இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் வம்சங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கச்செய்வேன் என்றும், நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் ஏற்றபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யக் கவனமாக இருந்தார்களேயானால், நான் இனி அவர்கள் கால்களை அவர்கள் முன்னோர்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகச்செய்வதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் மகனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் செய்த விக்கிரகமாகிய சிலையை நாட்டினான். அப்படியே யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்கு முன்பாக அழித்த மக்களைவிட, யூதாவும் எருசலேமின் மக்களும் பொல்லாப்புச் செய்யதக்கதாக, மனாசே அவர்களை வழிவிலகிப் போகச்செய்தான். யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள். ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான். அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய தேசத்திற்கு வரச்செய்தார்; யெகோவாவே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான். பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி மதிலைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு துவங்கி மீன்வாசல்வரை கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் படைத்தலைவரை ஏற்படுத்தி, யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து, யெகோவாவுடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான். ஆனாலும் மக்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; இருந்தாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள். மனாசேயின் மற்ற காரியங்களும், அவன் தன் தேவனை நோக்கிச் செய்த விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தில் அவனோடு பேசின தரிசனம் காண்கிறவர்களின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் யெகோவா இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே செய்த அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் நாட்டின இடங்களும், ஓசாயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மனாசே இறந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆமோன் அவனுடைய இடத்தில் ராஜாவானான். ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே செய்துவைத்த சிலைகளுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளை வணங்கினான். தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் யெகோவாவுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான். அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் அரண்மனையிலே அவனைக் கொன்று போட்டார்கள். அப்பொழுது தேசத்து மக்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாக சதிசெய்த அனைவரையும் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்.

2 நாளாகமம் 33:3-25 பரிசுத்த பைபிள் (TAERV)

மனாசே மீண்டும் தன் தந்தை உடைத்தெறிந்த மேடைகளைக் கட்டினான். பாகால் தெய்வத்துக்கு பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் அவன் கட்டினான். வானத்தின் சேனைகளையும், நட்சத்திரக் கூட்டங்களை அவன் தொழுது கொண்டான். மனாசே கர்த்தருடைய ஆலயத்தில் பொய் தெய்வங்களுக்கும் பலிபீடங்களைக் கட்டினான். கர்த்தர், ஆலயத்தைப்பற்றி, “என் நாமம் எருசலேமில் எப்பொழுதும் இருக்கும்” என்றார். மனாசே, கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள இரண்டு பிரகாரங்களிலும் வானத்து நட்சத்திரக் கூட்டங்களுக்கெல்லாம் பலிபீடத்தைக் கட்டினான். மனாசே பென்இன்னோம் பள்ளதாக்கிலே தன் பிள்ளைகளையே நெருப்பில் எரித்து பலி கொடுத்தான். இவன் நிமித்தம், குறிபார்ப்பது, பில்லிசூனியங்களை அனுசரித்து மந்திரவாதிகளையும், குறி சொல்லுகிறவர்களையும் அணுகினான். அவன் கர்த்தர் தவறு என்று சொன்ன பலவற்றைச் செய்தான். மனாசேயின் பாவங்கள் கர்த்தருக்குக் கோபத்தைத் தந்தது. அவன் ஒரு விக்கிரகத்தின் உருவச் சிலையைச் செய்து அதனை தேவனுடைய ஆலயத்திற்குள் வைத்தான். தேவன் ஆலயத்தைப் பற்றி தாவீதிடமும் அவனது குமாரன் சாலொமோனிடமும் பேசியிருக்கிறார். அவர், “நான் எனது பெயரை இவ்வாலயத்திலும் எருசலேமிலும் என்றென்றைக்கும் வைத்திருப்பேன். இஸ்ரவேலின் அனைத்து கோத்திரங்களிலிருந்தும் நான் எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். நான் இஸ்ரவேலர்களிடமிருந்து மீண்டும் அவர்களின் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டை எடுத்துக்கொள்ளமாட்டேன். ஆனால் அவர்கள் எனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அனைத்து சட்டங்களுக்கும், விதிகளுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படியவேண்டும். இவற்றை நான் மோசேக்குக் கொடுத்துள்ளேன்.” என்றார். யூதா ஜனங்களையும், எருசலேமில் வாழ்ந்த ஜனங்களையும் மனாசே தவறு செய்ய ஊக்குவித்தான். இஸ்ரவேலர்களுக்கு முன்னதாக அந்த நிலத்தில் வாழ்ந்து கர்த்தரால் அழிக்கப்பட்ட தேசத்தவர்களைவிட அவர்கள் மோசமானவர்களாக இருந்தார்கள். பாவங்களைச் செய்தனர். மனாசே மற்றும் அவனது ஜனங்களிடமும் கர்த்தர் பேசினார். ஆனால் அவர்கள் அதைக் கவனிக்க மறுத்துவிட்டனர். எனவே கர்த்தர் அசீரியா நாட்டு தளபதிகளை அழைத்து வந்து யூதாவைத் தாக்கினார். அந்தத் தளபதிகள் மனாசேயைப் பிடித்து அவனது உடலில் கொக்கிகளை மாட்டினார்கள். அவனது கைகளில் வெண்கலச் சங்கிலிகளைப் போட்டார்கள். அவனைக் கைதியாக பாபிலோனுக்கு கொண்டு போனார்கள். மனாசே கஷ்டப்பட்டான். அப்போது அவன் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தான். தன் முற்பிதாக்களின் தேவனிடம் மிகப்பணிவாக நடந்துக்கொண்டான். மனாசே கர்த்தரிடம் கெஞ்சி தன்னைக் காப்பாற்றும்படி ஜெபித்தான். கர்த்தர் அவனது வேண்டுகோளை கேட்டார். அவனுக்காக வருத்தப்பட்டார். பிறகு கர்த்தர் அவனை எருசலேமிற்குத் திரும்பி தனது சிங்காசனத்தில் அமரும்படிச்செய்தார். பின்னர் கர்த்தர்தான் உண்மையான தேவன் என்பதை மனாசே தெரிந்துகொண்டான். இது நடந்தப்பிறகு, மனாசே தாவீதின் நகரத்திற்கு ஒரு வெளிச்சுவரைக் கட்டினான். இந்த வெளிச்சுவர் கிதரான் பள்ளத்தாக்கில் கியோன் நீரூற்றுக்கு மேற்கிலிருந்து மீன் வாசல் வரை இருந்தது. ஒபேலைச் சுற்றிலும் அதனை வளைத்துக் கட்டினான். அதனை மிக உயரமாகக் கட்டினான். பிறகு அவன் யூதாவிலுள்ள அனைத்து கோட்டைகளுக்கும் அதிகாரிகளை நியமித்தான். மனாசே அந்நிய தெய்வங்களையும், விக்கிரகங்களையும் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து வெளியே எடுத்தான். அவன் எருசலேமிலும், மலை நகரங்களிலும் அமைத்த பலிபீடங்களையும் நீக்கினான். அவன் இவை அனைத்தையும் எருசலேம் நகருக்கு வெளியே தூக்கி எறிந்தான். பிறகு அவன் கர்த்தருக்காக பலிபீடத்தை அமைத்தான். அதில் அவன் சமாதானப் பலியையும், நன்றிக்குரிய பலியையும் செலுத்தினான். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுமாறு யூதாவிலுள்ள ஜனங்களுக்கெல்லாம் கட்டளையிட்டான். ஜனங்கள் தொடர்ந்து மேடைகளிலும் பலிகள் கொடுத்துவந்தனர். ஆனாலும் அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே செய்தனர். மனாசே செய்த மற்ற செயல்களும், அவன் தேவனிடம் செய்த ஜெபங்களும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தில் அவனோடு ஞானதிருஷ்டிக்காரர்கள் பேசிய பேச்சும் இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. மனாசேயின் வேண்டுதல்களும், அதனைக் கேட்டு தேவன் எப்படி வருத்தப்பட்டார் என்பதும் தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இதில் பணிவதற்கு முன் அவன் செய்த தவறுகளும், பாவங்களும், அவன் கட்டிய மேடைகளும், விக்கிரக தோப்புகளைபற்றியும் எழுதப்பட்டுள்ளன. அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். எனவே அவனை ஜனங்கள் அவனது சொந்த அரண்மனையிலேயே அடக்கம் செய்தனர். மனாசேயின் இடத்தில் ஆமோன் புதிய ராஜா ஆனான். அவன் மனாசேயின் குமாரன் ஆவான். ஆமோன் ராஜாவாகும்போது அவனுக்கு 22 வயது. அவன் எருசலேமில் 2 ஆண்டுகள் ராஜாவாக இருந்தான். ஆமோன் கர்த்தருக்கு முன்பாக எல்லா வகையான தீயச் செயல்களையும் செய்தான். அவனது தந்தை மனாசே செய்தது போன்று நல்ல காரியங்களை ஆமோன் செய்யவேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். ஆனால் ஆமோன், மனாசே வைத்த விக்கிரகங்களுக்கு பலிகளை கொடுத்தான். இவ்விக்கிரகங்களை ஆமோன் வழிபட்டான். அவனது தந்தையாகிய மனாசே கர்த்தருக்கு முன்னால் பணிவாக இருந்ததுபோல கர்த்தருக்கு முன்னால் ஆமோன் தன்னைத்தானே பணிவுடையவனாக்கிக் கொள்ளவில்லை. ஆனால் அவன் மேலும், மேலும் பாவங்களைச் செய்துக்கொண்டிருந்தான். ஆமோனின் வேலைக்காரர்கள் அவனுக்கு எதிராகத் திட்டங்கள் தீட்டினார்கள். அவர்கள் அவனை அவனது சொந்த வீட்டிலேயே கொன்றனர். ஆனால் யூதா ஜனங்கள் அவ்வேலைக்காரர்கள் அனைவரையும் கொன்றனர். பிறகு ஜனங்கள் யோசியாவைப் புதிய ராஜாவாகத் தேர்ந்தெடுத்தனர். யோசியா ஆமோனின் குமாரன்.