2 நாளாகமம் 5:1-9

2 நாளாகமம் 5:1-9 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தருடைய ஆலயத்துக்காகச் சாலொமோன் செய்த வேலையெல்லாம் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான். பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர் எல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான். அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள். இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு லேவியர் பெட்டியை எடுத்து, பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியரே. ராஜாவாகிய சாலொமோனும், அவனோடே கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள். அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள். கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது. பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.

2 நாளாகமம் 5:1-9 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவாவின் ஆலயத்துக்காக சாலொமோன் செய்த எல்லா வேலைகளும் செய்துமுடிக்கப்பட்டன. பின்பு சாலொமோன் தன் தகப்பன் தாவீது அர்ப்பணித்த பொருட்களான வெள்ளியையும், தங்கத்தையும், எல்லா பொருட்களையும் கொண்டுவந்தான். அவற்றை இறைவனின் ஆலயத்தின் களஞ்சியத்துக்குள் கொண்டுபோய் வைத்தான். பின்பு சாலொமோன் தாவீதின் நகரமான சீயோனிலிருந்து யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி வரவழைத்தான். ஏழாம் மாதத்தின் பண்டிகைக் காலத்தில் இஸ்ரயேல் மனிதர் யாவரும் அரசனிடம் ஒன்றுகூடி வந்தார்கள். இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் வந்துசேர்ந்ததும் லேவியர்கள் பெட்டியைத் தூக்கினார்கள். அவர்கள் பெட்டியையும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களையும் தூக்கிக்கொண்டு வந்தனர். லேவியர்களான ஆசாரியர்கள் அதைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். அரசன் சாலொமோனும் பெட்டிக்கு முன்னால் அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின்முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை. அதன்பின் ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடத்துக்குக் கொண்டுபோய், அங்கிருந்த கேருபீன்களின் செட்டைகளின்கீழ் வைத்தார்கள். விரிக்கப்பட்ட கேருபீன்களின் சிறகுகள் உடன்படிக்கைப் பெட்டிக்கும் அதைத் தூக்கும் கம்புகளையும் மூடிக்கொண்டிருந்தன. இந்தக் கம்புகள் மிகவும் நீளமாயிருந்தபடியால், பெட்டியிலிருந்து வெளியே நீண்டிருந்த அவற்றின் முனைகள் பரிசுத்த இடத்திற்கு முன்பாக மகா பரிசுத்த இடத்திலிருந்து பார்க்கக்கூடியதாயிருந்து. ஆனால் பரிசுத்த இடத்திற்கு வெளியிலிருந்து பார்க்கும்போது அவை தெரியப்படவில்லை. இன்றுவரை அவ்வாறே இருக்கின்றன.

2 நாளாகமம் 5:1-9 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவாவுடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்த வேலைகள் அனைத்தும் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம் செய்வதற்காக பொருத்தனை செய்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், அனைத்து பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான். பின்பு யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர்கள் எல்லோரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான். அப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள். இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் வந்தபின்பு லேவியர்கள் பெட்டியை எடுத்து, பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியர்களே. ராஜாவாகிய சாலொமோனும், அவனோடு கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள். அப்படியே ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய இறக்கைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள். கேருபீன்கள், பெட்டி இருக்கும் இடத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு சிறகுகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது. பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாக அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; வெளியே அவைகள் காணப்படவில்லை; அது இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.

2 நாளாகமம் 5:1-9 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்யவேண்டிய வேலையெல்லாம் முடிக்கப்பட்டது. ஆலயத்திற்காக தாவீது தந்த பொருட்களையெல்லாம் சாலொமோன் கொண்டு வந்தான். பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களையும் மேஜை நாற்காலிகளையும் கொண்டுவந்து தேவனுடைய ஆலயத்தில் கருவூலத்தின் அறைகளில் வைத்தான். இஸ்ரவேலில் இருக்கிற மூத்தவர்களையும், எல்லாக் கோத்திரங்களின் தலைவர்களையும், குடும்பத் தலைவர்களையும் சாலொமோன் எருசலேமில் ஒன்றாகக் கூட்டினான். தாவீதின் நகரிலிருந்து கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவரவே இவ்வாறு செய்தான். சீயோன் தாவீதின் நகரமாகும். இஸ்ரவேலின் அனைத்து ஆட்களும் சாலொமோனுடன் அடைக்கல கூடாரப் பண்டிகை விருந்தில் கூடினார்கள். இவ்விருந்து ஏழாவது மாதத்தில் (செப்டம்பர்) நடைபெற்றது. இஸ்ரவேலின் மூப்பர்கள் அனைவரும் கூடியதும் லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள். உடனே ஆசாரியர்களும் லேவியர்களும் எருசலேமுக்கு உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தனர். மேலும் ஆசாரியர்களும் லேவியர்களும் ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திற்குள் இருந்த பரிசுத்தமானப் பொருட்களையும் கூட எருசலேமுக்குக் கொண்டுவந்தனர். சாலொமோன் ராஜாவும் இஸ்ரவேல் ஜனங்களும் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் செம்மறியாட்டுக் கடாக்களையும் காளைகளையும் பலிகொடுத்தனர். எவராலும் எண்ணி கணக்கிட முடியாத செம்மறியாட்டுக் கடாக்கள், மற்றும் காளைகளின் எண்ணிக்கை மிகுதியாக இருந்தது. பிறகு ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை அதனை வைப்பதற்காகச் செய்யப்பட்ட மகா பரிசுத்தமான இடத்திற்கு ஆலயத்திற்குள் கொண்டுவந்தார்கள். அவர்கள் அதனைக் கேருபீன்களின் சிறகுகளுக்கு அடியில் வைத்தனர். உடன்படிக்கைப் பெட்டிக்கு மேலே கேருபீன்கள் தமது சிறகுகளை விரித்து அதனை மூடியவண்ணம் இருந்தது. இச்சிறகுகள் அப்பெட்டியைத் தூக்கப் பயன்படும் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன. மகா பரிசுத்த இடத்தின் முன்பிருந்து காணத்தக்கவையாகப் பெட்டியிலிருந்த தண்டுகள் மிகவும் நீளமானவையாக இருந்தன. அதனை எவராலும் ஆலயத்திற்கு வெளியே இருந்து காணமுடியவில்லை. ஆனால் அத்தண்டுகள் இன்றும் கூட அங்கேயே உள்ளன.