2 நாளாகமம் 7:6-22

2 நாளாகமம் 7:6-22 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள். சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான். அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து, எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள். ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடை கொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள். இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும், தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமாயிற்று. கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குத் தரிசனமாகி: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன். நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது, என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும். என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும். உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால், அப்பொழுது இஸ்ரவேலை அரசாளும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கைபண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன். நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில், நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன். அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: கர்த்தர் இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான். அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

2 நாளாகமம் 7:6-22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றார்கள். லேவியர்களும் யெகோவாவின் கீதவாத்திய கருவிகளை வைத்துக்கொண்டு நின்றார்கள். இவற்றைத் தாவீது அரசன் யெகோவாவைத் துதிப்பதற்காக செய்திருந்தான். “யெகோவாவின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று சொல்லி அவன் நன்றி செலுத்தும்போது, இவை பயன்படுத்தப்பட்டன. லேவியர்களுக்கு எதிராக ஆசாரியர்கள் நின்று அவர்களின் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா இஸ்ரயேல் மக்களும் நின்றுகொண்டிருந்தனர். சாலொமோன் அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் அவன் செய்திருந்த வெண்கல பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், கொழுப்புப் பங்குகளையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது. எனவே சாலொமோனும், மிகப்பெரிய கூட்டமாய் லேபோ ஆமாத் எல்லைமுதல் எகிப்து நதிவரை அவனோடிருந்த எல்லா இஸ்ரயேல் மக்களும் அந்த நாளிலிருந்து ஏழுநாட்களுக்கு பண்டிகையை கொண்டாடும்படி பெருந்திரளாய் கூடினர். எட்டாவது நாள் ஒன்றாகக் கூடினார்கள். ஏழுநாட்களுக்கு பலிபீட அர்ப்பணிப்பைக் கொண்டாடியிருந்தார்கள். இன்னும் ஏழுநாட்களுக்குப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். ஏழாம் மாதம் இருபத்துமூன்றாம் நாளில் சாலொமோன் மக்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் யெகோவா செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள். இவ்வாறு சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரச அரண்மனையையும் கட்டிமுடித்தான். யெகோவாவின் ஆலயத்தையும், தனது அரண்மனையையும் எவ்வாறு கட்டவேண்டுமென மனதில் எண்ணியிருந்தானோ அவ்வாறே எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்துமுடித்தான். அப்பொழுது இரவில் யெகோவா சாலொமோனுக்குத் காட்சியளித்து சொன்னதாவது: “நான் உனது விண்ணப்பத்தைக் கேட்டேன்; இந்த இடத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன். “நான் மழை பெய்யாதபடி வானத்தை அடைத்து, அல்லது நாட்டை அழிக்கும்படி வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டு, அல்லது எனது மக்களுக்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, எனது பெயரால் அழைக்கப்படும் என் மக்கள் தங்களைத் தாழ்த்தி மன்றாடி, என் முகத்தைத் தேடி, தங்கள் கொடிய வழிகளைவிட்டு விலகுவார்களேயானால், அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் நாட்டைக் குணப்படுத்துவேன். இந்த இடத்தில் செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்திருக்கும்; என் செவிகள் கவனமாயிருக்கும். நான் என்றென்றைக்கும் என் பெயர் இந்த ஆலயத்திலிருக்கும்படி, அதைத் தெரிந்துகொண்டு, பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். எனது கண்களும், எனது இருதயமும் எப்பொழுதும் அங்கிருக்கும். “நீயோ உனது தகப்பன் தாவீது செய்ததுபோல் எனக்கு முன்பாக நடந்து, நான் கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்து, எனது விதிமுறைகளையும் சட்டங்களையும் கைக்கொள்வாயானால், நான் உனது தகப்பன் தாவீதுடன், ‘இஸ்ரயேலை ஆட்சிசெய்ய உனது மகன்களில் ஒருவனாவது ஒருபோதும் இல்லாமல் போகமாட்டான்’ என்று சொல்லி, உடன்படிக்கை செய்ததின்படியே உன் அரச அரியணையை நிலைநிறுத்துவேன். “ஆனால் நீங்களோ நான் உங்களுக்குக் கொடுத்த விதிமுறைகளையும், கட்டளைகளையும் கைக்கொள்ளாமல், வேறே தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளை வழிபடும்படி விலகிப்போனால், நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்த என் நாட்டிலிருந்து அவர்களை வேரோடு பிடுங்கிப் போடுவேன். நான் என் பெயருக்கென்று பரிசுத்தமாக்கிய இந்த ஆலயத்தையும் புறக்கணித்து விடுவேன். நான் அதை எல்லா மக்களுக்குள்ளும் பழிச்சொல்லாகவும், கேலிப்பொருளாகவும் ஆக்குவேன். இந்த ஆலயம் அழிவின் குவியலாக மாறும். இதைக் கடந்து போகிறவர்கள் இதைக்கண்டு திகைத்து, ‘இந்த நாட்டுக்கும் இந்த ஆலயத்துக்கும் யெகோவா ஏன் இப்படி செய்தார்?’ என்பார்கள். அப்பொழுது மக்கள், ‘எகிப்திலிருந்து அவர்களுடைய முற்பிதாக்களை மீட்டுக் கொண்டுவந்த அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டார்கள். அவர்கள் வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றை வழிபட்டு, அவற்றிற்குப் பணிசெய்தார்கள். இதனால்தான் யெகோவா அவர்கள்மீது இந்த பேரழிவைக் கொண்டுவந்தார்’ என்பார்கள்.”

2 நாளாகமம் 7:6-22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியர்களைக்கொண்டு, யெகோவாவுடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடுவதற்காகச் செய்யப்பட்ட யெகோவாவின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லோரும் நின்றுகொண்டிருந்தார்கள். சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் கொழுப்பையும் வைக்க போதுமானதாக இல்லாததால், யெகோவாவுடைய ஆலயத்திற்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான். அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிவரை வந்து, அவனோடுகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாட்கள்வரையும் பண்டிகையை ஆசரித்து, எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாகக் கொண்டாடினார்கள்; ஏழுநாட்கள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாட்கள் பண்டிகையையும் ஆசரித்தார்கள். ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக மக்களுக்கு விடை கொடுத்தான்; யெகோவா தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது மக்களாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷத்தோடும் மனமகிழ்ச்சியோடும் போனார்கள். இந்தவிதமாக சாலொமோன் யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜ அரண்மனையையும் கட்டி முடித்தான்; யெகோவாவுடைய ஆலயத்திலும், தன் அரண்மனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமானது. யெகோவா இரவிலே சாலொமோனுக்குக் காட்சியளித்து: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த இடத்தை எனக்கு பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன். நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு அல்லது என் மக்களுக்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது, என் நாமம் சூட்டப்பட்ட என் மக்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்செய்து, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்களுடைய பாவத்தை மன்னித்து, அவர்களுடைய தேசத்திற்கு செழிப்பைக் கொடுப்பேன். இந்த இடத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் காதுகள் கவனிக்கிறவைகளுமாக இருக்கும். என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும். உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால், அப்பொழுது இஸ்ரவேலை அரசாளுபவன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடு உடன்படிக்கை செய்தபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கச்செய்வேன். நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்பாக வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும்விட்டு, வேறே தெய்வங்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களென்றால், நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்திலிருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளி, அதை அனைத்து மக்களுக்குள்ளும் பழமொழியாகவும் பரியாசச் சொல்லாகவும் வைப்பேன். அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான். அதற்கு அவர்கள்: தங்கள் முற்பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த தங்கள் தேவனாகிய யெகோவாவைவிட்டு, வேறே தெய்வங்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை வணங்கி, சேவித்ததால், யெகோவா இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரச்செய்தார் என்று சொல்லுவார்கள் என்றார்.

2 நாளாகமம் 7:6-22 பரிசுத்த பைபிள் (TAERV)

ஆசாரியர்கள் தமது பணியைச் செய்ய எப்போதும் தயாராக இருந்தார்கள். லேவியர்களும் கர்த்தரைப் பாட எப்பொழுதும் தயாராக இசைக் கருவிகளோடு நின்றனர். இந்த இசைக் கருவிகள் தாவீது ராஜாவால் கர்த்தருக்கு நன்றி சொல்வதற்காக உருவாக்கப்பட்டவை. ஆசாரியர்களும், லேவியர்களும், “கர்த்தரைத் துதியுங்கள், அவருடைய அன்பு என்றென்றும் தொடர்கிறது” என்றனர். ஆசாரியர்கள் தங்கள் எக்காளங்களை லேவியர்களுக்கு எதிராக நின்று ஊதினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் நின்று கொண்டு இருந்தனர். சாலொமோன் பிரகாரத்தின் நடுப்பகுதியை பரிசுத்தமாக்கினான். அது கர்த்தருடைய ஆலயத்திற்கு முன்பாக இருந்தது. அந்த இடத்தில்தான் சாலொமோன் தகன பலிகளையும், சமாதான பலியின் கொழுப்பையும் கொடுத்தான். வெண்கல பலிபீடமானது எல்லா தகனபலிகளையும் தானியக் காணிக்கைகளையும், நிணத்தையும் தாங்காது என்பதாலேயே சாலொமோன் இந்த நடுப்பகுதியைப் பயன்படுத்தினான். சாலொமோனும் இஸ்ரவேல் ஜனங்களும் ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடினார்கள். சாலொமோனோடு பெரிய அளவிலான கூட்டம் சேர்ந்திருந்தது. அவர்கள் ஆமாத் நகரத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதி மட்டும் கூடினார்கள். எட்டாவது நாள் அவர்களுக்குப் பரிசுத்தக் கூட்டம் இருந்தது. ஏனென்றால் அவர்கள் ஏழுநாட்கள் பண்டிகை கொண்டாடினார்கள். அவர்கள் பலிபீடத்தைப் பரிசுத்தமாக்கினார்கள். அதனை கர்த்தரை தொழுதுகொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தினார்கள். அவர்கள் அந்தப் பண்டிகையை ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். ஏழாவது மாதத்தின் 23வது நாளில் சாலொமோன் ஜனங்களை வீட்டிற்குத் திரும்ப அனுப்பினான். ஜனங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களின் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. ஏனென்றால் கர்த்தர் தாவீதிடமும் சாலொமோனிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் அன்பாக இருந்தார். சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தான். கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரண்மனையிலும் திட்டமிட்டபடியே வெற்றிகரமாகக் கட்டி முடித்தான். பிறகு இரவில் சாலொமோனிடம் கர்த்தர் வந்தார். கர்த்தர் அவனிடம், “சாலொமோன், நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். நான் இந்த இடத்தை எனக்குப் பலிகள் தருவதற்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தேன். நான் வானத்தை மூடினால் பின் மழை வராமல் போகும். நான் வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டால் அது பயிரை அழித்துப்போடும் அல்லது என் ஜனங்களிடம் நான் நோயை அனுப்புவேன். என் நாமத்தால் அழைக்கப்படும் என் ஜனங்கள் மனம் வருந்தி, ஜெபம் செய்து, என்னைத் தேடினால், மேலும் தம் பாவங்களை விட்டுவிட்டால் நான் பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபங்களைக் கேட்பேன். அவர்களது பாவங்களை மன்னித்து இந்த நாட்டை வளப்படுத்துவேன். இப்போது என் கண்கள் திறந்திருக்கின்றன. இந்த இடத்திலிருந்து ஜெபம் செய்யப்படுபவற்றைக் கேட்க என் காதுகள் திறந்திருக்கின்றன. நான் இவ்வாலயத்தைத் தேர்ந்தெடுத்தேன். இதனைப் பரிசுத்தப்படுத்தினேன். எனவே எனது நாமம் இங்கு என்றென்றும் நிலைத்திருக்கும். எனது கண்ணும் மனமும் எப்பொழுதும் இங்கே இந்த ஆலயத்திலேயே இருக்கும். இப்போது சாலொமோனே, உன் தந்தையைப் போலவே நீயும் என் முன்பாக வாழ்ந்தால், என் கட்டளைகளுக்கெல்லாம் நீ கீழ்ப்படிந்து வந்தால், எனது சட்டங்களையும் விதிகளையும் கடைபிடித்தால், பிறகு நான் உன்னைப் பலமுள்ள ராஜாவாக ஆக்குவேன். உனது அரசு பெருமைக்குரியதாக இருக்கும். உனது தந்தையான தாவீதோடு நான் செய்து கொண்ட உடன்படிக்கை இதுதான். நான் அவனிடம் ‘தாவீது, இஸ்ரவேலின் ராஜாவாகிறவன் எப்பொழுதும் உனது குடும்பத்திலிருந்தே வருவான்’ என்று கூறினேன். “ஆனால் நான் அளித்த சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படியவில்லையென்றால், நீங்கள் மற்ற தெய்வங்களை தொழுதுகொண்டு சேவை செய்வீர்களானால், நான் கொடுத்த எனது நிலத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வெளியேற்றுவேன். எனது நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகக் கட்டிய இவ்வாலயத்தை விட்டுவிலகுவேன். எல்லா நாட்டினரும் இவ்வாலயத்தைப் பற்றி தீயதாகப் பேசும்படி செய்வேன். மிக்க உயர்ந்த மாட்சிமை கொண்ட இவ்வாலயத்தைக் கடந்துபோகிற ஒவ்வொருவனும் வியந்து போகும்படி செய்வேன். அவர்கள், ‘ஏன் கர்த்தர் இதுபோன்ற மோசமான காரியத்தை இந்த நாட்டிற்கும் ஆலயத்திற்கும் செய்தார்?’ என்று கூறுவார்கள். அதற்கு மற்ற ஜனங்கள், ‘இதன் காரணம் என்னவென்றால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது முற்பிதாக்களைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிய மறுத்தனர். இந்த தேவன்தான் அவர்களை எகிப்தைவிட்டு வெளியே மீட்டுவந்தார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் விக்கிரகங்களை தொழுதுகொள்ளவும் சேவைசெய்யவும் தொடங்கிவிட்டனர். அதனால்தான் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு இத்தகைய துன்பங்களைக் கொடுத்துள்ளார் என்பார்கள்’” என்றனர்.