2 கொரிந்தியர் 11:1-5
2 கொரிந்தியர் 11:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்
2 கொரிந்தியர் 11:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் மதியீனத்தை நீங்கள் சற்றுப் பொறுத்துக்கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன். ஆம்; நீங்கள் ஏற்கெனவே சகித்தும் இருக்கிறீர்கள். நான் உங்களைக் கிறிஸ்து என்ற ஒரே கணவருக்கே திருமணம் செய்து கொடுக்கவே வாக்குப்பண்ணியிருக்கிறேன். இப்படி உங்களை ஒரு தூய்மையான கன்னிகையாகக் கொடுக்கவே விரும்புகிறேன். இதனாலேயே இறைவனுக்குத் தன் மக்கள்மேல் இருக்கிற வைராக்கியம், எனக்கும் உங்கள்மேல் இருக்கிறது. பாம்பு தனது சூழ்ச்சியினாலே ஏவாளை ஏமாற்றியது. அதுபோலவே உங்கள் மனதில் கிறிஸ்துவுக்கு இருக்கிற உண்மையிலும், தூய்மையான பக்தியிலுமிருந்து, நீங்கள் வழிவிலகி நடத்தப்படுவீர்களோ என்று, நான் பயப்படுகிறேன். ஏனெனில் யாராவது உங்களிடம் வந்து, நாங்கள் பிரசங்கிக்காத ஒரு வித்தியாசமான இயேசுவைப் பிரசங்கிக்கும் போதும், நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவரைத் தவிர, வேறொரு ஆவியை அறிமுகப்படுத்தும் போதும், நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைவிட, வேறொரு நற்செய்தியைக் கொண்டுவரும்போது, அவற்றை எளிதாக ஏற்றுக்கொள்கிறீர்கள். அந்த “மாண்புமிகு அப்போஸ்தலர்களை” விட நான் எவ்வகையிலும் குறைவுபட்டவனல்ல என எண்ணுகிறேன்.
2 கொரிந்தியர் 11:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் புத்தியீனத்தை நீங்கள் கொஞ்சம் சகித்துக்கொண்டால் நலமாக இருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே கணவனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன். ஆனாலும், பாம்பானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை ஏமாற்றினதுபோல, உங்களுடைய மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையிலிருந்து விலகும்படி கெடுக்கப்படுமோ என்று பயந்திருக்கிறேன். எப்படியென்றால், உங்களிடம் வருகிறவன் நாங்கள் பிரசங்கிக்காத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தால், அல்லது நீங்கள் பெற்றுக்கொள்ளாத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு நற்செய்தியையும் பெற்றீர்களானால், நன்றாகச் சகித்திருப்பீர்களே. மாபெரும் பிரதான அப்போஸ்தலர்களிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவன் இல்லை என்று நினைக்கிறேன்.
2 கொரிந்தியர் 11:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)
நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள். மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன்.