2 கொரிந்தியர் 11:6-33

2 கொரிந்தியர் 11:6-33 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்குமுன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே. நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ? உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்ற சபைகளிடத்தில் சம்பளத்தைப்பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன். நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன். அகாயா நாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன். இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார். மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன். அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். அநேகர் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன். நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே. ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே. நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்து தரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார். தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக்காத்தான்; அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.

2 கொரிந்தியர் 11:6-33 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

நான் ஒரு பயிற்சி பெற்ற பேச்சாளனாய் இல்லாதிருந்தாலும், எனக்கு அறிவு உண்டு என்பதை எல்லாவிதத்திலும் உங்களுக்கு மிகவும் தெளிவுபடுத்தியே இருக்கிறோம். நான் இறைவனுடைய நற்செய்தியை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்தபோது, நீங்கள் உயர்வடையும்படி நான் என்னைத் தாழ்த்தினேன். இப்படிச் செய்தது பாவமா? நான் உங்களுக்குப் பணிசெய்வதற்காக மற்றத் திருச்சபைகளிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டேன். இப்படி உங்களுக்காக நான் அவர்களைக் கொள்ளையிட்டேன். நான் உங்களுடன் இருக்கையில், எனக்குத் தேவையேற்பட்டபோது, அதற்காக நான் யாருக்கும் கஷ்டம் கொடுக்கவில்லை. ஏனெனில் எனக்குத் தேவையானவற்றையெல்லாம், மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்களே கொடுத்து உதவினார்கள். நான் முன்பு செய்ததுபோலவே இனிமேலும், என்னுடைய தேவைகளுக்காக எவ்விதத்திலும் உங்களுக்குப் பாரமாயிருக்க மாட்டேன். கிறிஸ்துவின் உண்மை எனக்குள் இருப்பது நிச்சயம்போலவே, அகாயா பகுதியிலுள்ள யாரும் என்னுடைய இந்தப் பெருமைபாராட்டுதலை நிறுத்தமுடியாது என்பதும் நிச்சயம். ஏன் இதை இப்படிச் சொல்கிறேன்? நான் உங்களில் அன்பாயிராததினாலா? நான் உங்களில் அன்பாயிருக்கிறேன் என்பதை இறைவன் அறிவார். நாங்கள் ஊழியம் செய்கிறதுபோலவே, தாங்களும் ஊழியம் செய்வதாக பெருமை பேசிக்கொள்கிறவர்கள், அப்படிச் சொல்ல இயலாதபடி நான் இவ்விதமே தொடர்ந்து செய்வேன். ஏனெனில், இப்படிப்பட்ட மனிதர் பொய்யான அப்போஸ்தலர்கள். கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரைப்போல் வேஷம் தரித்து, ஏமாற்றுகிற வேலைக்காரர்கள். அதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், சாத்தானுங்கூட ஒளியின் தூதனைப்போல் வேஷம் தரித்துக்கொள்கிறான். எனவே அவனுடைய வேலைக்காரர்களும், நீதியின் ஊழியக்காரர்கள்போல் வேஷம் தரித்து ஏமாற்றுவது புதுமையான ஒன்று அல்ல. அவர்களின் முடிவோ தங்கள் செயல்களுக்கேற்ற பலனாயிருக்கும். நான் மறுபடியும் சொல்கிறேன்: நான் ஒரு முட்டாள் என்று ஒருவரும் நினைக்கவேண்டாம். அப்படி நீங்கள் நினைத்தால், என்னை முட்டாளாகவே ஏற்றுக்கொண்டு, நான் இன்னும் பெருமையடித்துக் கொள்வதையும் சிறிது கேளுங்கள். இந்தப் பெருமை பேசும் விஷயத்தில் நான் கர்த்தர் விரும்பிய விதத்தில் பேசவில்லை. நான் ஒரு முட்டாளைப் போலவே பேசுகிறேன். பலர் உலகரீதியாகப் பெருமை பேசுகிறார்கள். நானும் அப்படியே பெருமை பேசுவேன். நீங்களோ எவ்வளவு பெரிய ஞானிகள்! முட்டாள்களை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களை அடிமைப்படுத்துகிறவனையும், உங்களைச் சுரண்டிப் பிழைக்கிறவனையும், உங்களைத் தன் நலனுக்காகப் பயன்படுத்துகிறவனையும், உங்கள் மத்தியில் பெருமையாய் நடக்கிறவனையும் உங்கள் முகத்தில் அடிக்கிறவனையும், நீங்கள் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கிறீர்கள். நாங்களோ இப்படிப்பட்டவைகளைச் செய்யமுடியாத அளவுக்குப் பலவீனர்களாய் இருந்தோம்! இதை நான் வெட்கத்துடன் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், யாராவது எதைக் குறித்தாவது பெருமைப்படத் துணிந்தால், அவ்விதமாய் பெருமைப்பட்டுக்கொள்ள, நானும் துணிவேன். நான் ஒரு மூடனைப்போல் இதையும் சொல்கிறேன். அவர்கள் எபிரெயரா? அப்படியானால் நானும் எபிரெயன்தான். அவர்கள் இஸ்ரயேலரா? அப்படியானால், நானும் இஸ்ரயேலன்தான். அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளா? அப்படியானால், நானும் ஆபிரகாமின் சந்ததிதான். நான் ஒரு பைத்தியக்காரனைப்போல, பேசுகிறேன். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியரா? அப்படியானால், நான் அவர்களைவிட மிகச்சிறந்த ஊழியன். நான் இந்த ஊழியத்தில் கடுமையாக உழைத்தேன். பலமுறை சிறையில் அடைக்கப்பட்டேன். அதிகமாக அடிக்கப்பட்டேன். அநேகந்தரம் மரணத் தருவாயில் இருந்தேன். நாற்பது அடிகளுக்கு ஒன்று குறைவாக யூதரினால் ஐந்துமுறை சவுக்கால் அடிக்கப்பட்டேன். மூன்றுதரம் தடியால் அடிக்கப்பட்டேன். ஒருதரம் என்மேல் கல்லெறிந்தார்கள். மூன்றுமுறை நான் பயணம் செய்த கப்பல்கள் உடைந்து சிதைந்தன. ஒருமுறை இரவும் பகலுமாக நடுக்கடலில் கிடந்தேன். ஓயாது பிரயாணம் செய்தேன். அப்பொழுது ஆறுகளில் ஆபத்துக்குள்ளானேன். கொள்ளைக்காரராலும் ஆபத்து ஏற்பட்டது. எனது சொந்த நாட்டு மக்களாலும் ஆபத்து வந்தது; அந்நியராலும் ஆபத்து வந்தது. பட்டணத்திலும் ஆபத்து வந்தது; நாட்டுப்புறத்திலும் ஆபத்து வந்தது; கடலிலும் ஆபத்து வந்தது. கள்ளச் சகோதரராலும் எனக்கு ஆபத்து வந்தது. கடின உழைப்புக்கும், கஷ்டத்திற்கும் உள்ளானேன். பல இரவுகள் நித்திரையின்றியும் இருந்தேன். பசியும், தாகமும் உடையவனாக இருந்தேன். பலமுறை உணவு இல்லாமலும் இருந்தேன். குளிருக்குள் அகப்பட்டும், உடை இல்லாதவனாகவும் இருந்தேன். இவை எல்லாவற்றையும்விட, எல்லாத் திருச்சபைகளையும் குறித்து எனக்கிருக்கிற அக்கறையினால் வரும் கவலை நாள்தோறும் என்னை நெருக்கியது. யாராவது பலவீனமானவனாக இருந்தால், அந்தப் பலவீனத்தைக் குறித்து நான் அக்கறை கொள்ளாதிருப்பேனோ? யாராவது பாவத்திற்குள் வழிநடத்தப்பட்டால், அதைக்குறித்து என் உள்ளத்தில் கொதிப்படையாதிருப்பேனோ? நான் பெருமைபாராட்ட வேண்டுமானால், எனது பலவீனத்தைக் காண்பிக்கும் காரியங்களைக்குறித்தே நான் பெருமைபாராட்டுவேன். இறைவனும் கர்த்தராகிய இயேசுவின் பிதாவுமானவர், நான் சொல்வது பொய் அல்ல என்று அறிவார். அவரே என்றென்றைக்கும் துதிக்கப்பட வேண்டியவர். தமஸ்குவில் அரேத்தா அரசனின் கீழே ஆளுநராய் இருந்தவன், என்னைக் கைதுசெய்வதற்காக தமஸ்கருடையப் பட்டணத்தைச் சுற்றிக் காவல் ஏற்படுத்தியிருந்தான். ஆனால் சிலர் என்னை ஒரு கூடையில் வைத்து, பட்டணத்து மதிலிலிருந்த, ஒரு ஜன்னலின் வழியாக என்னை இறக்கிவிட்டார்கள். இவ்விதம் அந்த ஆளுநரின் கைக்கு நான் தப்பினேன்.

2 கொரிந்தியர் 11:6-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் பேச்சிலே கற்றுக்கொள்ளாதவனாக இருந்தாலும், அறிவிலே கற்றுக்கொள்ளாதவன் இல்லை; எல்லாக் காரியத்திலும், எல்லோருக்கும் முன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் இதை வெளிப்படுத்தியிருக்கிறோமே. நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய நற்செய்தியை இலவசமாக உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றம் செய்தேனோ? உங்களுக்கு ஊழியம் செய்யும்படிக்கு, மற்றச் சபைகளில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன். நான் உங்களோடு இருந்து குறைவுபட்டபோதும், யாரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவில் இருந்து வந்த சகோதரர்கள் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எந்தவிதத்திலும் நான் உங்களுக்குச் சுமையாக இல்லாதபடிக்கு ஜாக்கிரதையாக இருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாக இருப்பேன். அகாயா நாட்டின் பகுதிகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லை என்று என்னில் உள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன். இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களை நேசிக்காதபடியாலோ? தேவன் அறிவார். மேலும், எங்களை எதிர்க்க நேரம் தேடுகிறவர்களுக்கு நேரம் கிடைக்காதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன். அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தை அணிந்துகொண்டவர்களாக இருக்கிறார்கள். அது ஆச்சரியம் இல்லை, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தை அணிந்துகொள்வானே. எனவே அவனுடைய ஊழியக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்களுடைய வேஷத்தை அணிந்துகொண்டால் அது ஆச்சரியம் இல்லையே; அவர்கள் முடிவு அவர்கள் செய்கைகளைப் பொருத்திருக்கும். பின்னும் நான் சொல்லுகிறேன்; யாரும் என்னைப் புத்தியீனன் என்று நினைக்கவேண்டாம்; அப்படி நினைத்தால், நானும் கொஞ்சம் மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாவது ஏற்றுக்கொள்ளுங்கள். இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். அநேகர் சரீரத்திற்கேற்றபடி மேன்மை பாராட்டிக்கொள்ளும்போது, நானும் மேன்மைபாராட்டுவேன். நீங்கள் புத்தி உள்ளவர்களாக இருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாகச் சகித்திருக்கிறீர்களே. ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களை அழித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே. நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப்பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாக இருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாக இருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாகப் பேசுகிறேன். அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான். அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களா? நான் அதிகம்; புத்தியீனமாகப் பேசுகிறேன்; நான் அதிகமாகப் பிரயாசப்பட்டவன், அதிகமாக அடிபட்டவன், அதிகமாக சிறைக் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகமுறை மரணவேதனையில் சிக்கிக்கொண்டவன். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பது அடிகளாக ஐந்து முறை அடிக்கப்பட்டேன்; மூன்றுமுறை பிரம்புகளால் அடிக்கப்பட்டேன், ஒருமுறை கல்லெறியப்பட்டேன், மூன்றுமுறை கப்பல் சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இரவும் பகலும் கழித்தேன். அநேகமுறை பயணம் செய்தேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், திருடர்களால் வந்த மோசங்களிலும், என் சொந்த மக்களால் வந்த மோசங்களிலும், யூதரல்லாதவர்கள் மூலம் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்திரத்தில் உண்டான மோசங்களிலும், கடலில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரர்களால் வந்த மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும் அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். இவைகள் மட்டுமல்லாமல், எல்லா சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை தினந்தோறும் துக்கப்படுத்துகிறது. ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறது இல்லையோ? ஒருவன் பாவத்தில் விழுந்தால் என் மனம் எரியாமல் இருக்குமோ? நான் மேன்மைபாராட்டவேண்டுமென்றால், என் பலவீனங்களைக் காண்பிக்கிறவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன். என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறது இல்லை என்று அறிவார். தமஸ்கு பட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய படைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டும் என்று தமஸ்கருடைய பட்டணத்தைச் சுற்றி காவல்வைத்துக் காத்தான்; அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, மதிலிலிருந்த ஜன்னல் வழியாக இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.

2 கொரிந்தியர் 11:6-33 பரிசுத்த பைபிள் (TAERV)

நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம். நான் உங்களுக்கு இலவசமாக தேவனுடைய நற்செய்தியைப் போதித்திருக்கிறேன். உங்களை உயர்த்துவதற்காக நான் பணிந்துபோயிருக்கிறேன். அதனைத் தவறு என்று எண்ணுகிறீர்களா? உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன். நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர். எந்த வகையிலும் நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இனிமேலும் பாரமாக இருக்கமாட்டேன். இதைப் பற்றி நான் பெருமைபட்டுக்கொள்வதை அகாயாவிலுள்ள எவரும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை நான் என்னோடு இருக்கிற கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு கூறுகிறேன். உங்களுக்குப் பாரமாயிருக்க விரும்பவில்லை என்று ஏன் கூறுகிறேன். உங்கள் மீது எனக்கு அன்பில்லையா? உண்டு. அதைப்பற்றி தேவன் நன்கு அறிவார். நான் இப்பொழுது செய்வதைத் தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் எங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் தேடுகிறவர்களுக்குக் காரணம் கிடைக்கக் கூடாது. தம் வேலையைப் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் தம் வேலையை நம் வேலையைப் போன்ற ஒன்றாகச் சொல்லிக்கொள்ள விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் உண்மையான அப்போஸ்தலர்கள் அல்லர்; பொய் நிறைந்த பணியாளர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தர்களின் வேடத்தைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். இது எங்களை வியப்படையச் செய்யவில்லை. ஏனென்றால், சாத்தானே ஒளியின் தூதனாக மாறுவேடம் அணிந்திருக்கிறான். எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர். நான் மீண்டும் கூறுகிறேன். நான் அறிவற்றவன் என்று எவரும் எண்ண வேண்டாம். ஆனால் நீ என்னை அறிவற்றவன் என்று எண்ணினால் ஒரு அறிவற்றவனை ஏற்றுக்கொள்வது போல் என்னையும் ஏற்றுக்கொள். பின்பு இதைப் பற்றி நானும் பெருமைப்பட்டுக்கொள்ளுவேன். ஏனென்றால் என்னைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன். நான் கர்த்தரைப் போன்று பேசுபவன் அல்லன். நான் அறிவற்றவன் போன்றே பெருமை பாராட்டுகிறேன். உலகத்தில் ஏராளமானவர்கள் தம்மைப் பற்றிப் பெருமைபட்டுக்கொள்ளுகிறார்கள். நானும் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். நீங்கள் புத்திசாலிகள். எனவே புத்தியற்றவர்களோடு நீங்கள் சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ளுங்கள். நீங்கள் சகித்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒருவன் உங்களைக் கட்டாயப்படுத்தி காரியங்களைச் செய்யச் சொன்னாலும், ஒருவன் உங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டாலும், ஒருவன் உங்களை ஏமாற்றினாலும், ஒருவன் தன்னை உயர்த்திக்கொண்டாலும், ஒருவன் உங்கள் முகத்தில் அறைந்தாலும் நீங்கள் அனைத்தையும் பொறுத்துக்கொள்வீர்கள். இதனைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்கு நாம் பலவீனம் உள்ளவர்களாய் இருக்கிறோம். எவனாவது தன்னைப் பாராட்டிப் பேச தைரியம் உள்ளவனாய் இருந்தால் நானும் தைரியம் உள்ளவனாய் இருப்பேன். (நான் அறிவற்றவனைப் போன்று பேசிக்கொண்டிருக்கிறேன்.) அவர்கள் எபிரேயர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் ஆபிரகாமின் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் கிறிஸ்துவுக்குச் சேவை செய்பவர்களானால் நான் அவர்களை விட மிகுதியாகச் செய்துகொண்டே இருக்கிறேன். (நான் பைத்தியக்காரனைப் போன்று பேசுகிறேன்) நான் அவர்களைவிடக் கடினமாக உழைத்திருக்கிறேன். நான் பல முறைகள் சிறைபட்டிருக்கிறேன். நான் மிக அதிகமாக அடி வாங்கி இருக்கிறேன். நான் பலமுறை மரணத்தின் அருகில் சென்று வந்திருக்கிறேன். நான் யூதர்களால் சவுக்கால் முப்பத்தொன்பது அடிகளை ஐந்து தடவை பெற்றிருக்கிறேன். மூன்று முறை மிலாறுகளால் அடிபட்டேன். ஒருமுறை நான் கல்லால் எறியப்பட்டு ஏறக்குறைய சாகும் தருவாயில் இருந்தேன். மூன்று முறை கப்பல் விபத்தில் சிக்கிக்கொண்டேன். ஒரு முறை கடலிலேயே ஒரு இராப்பகல் முழுவதையும் கழித்தேன். நான் பலமுறை பயணங்கள் செய்திருக்கிறேன். நான் ஆறுகளாலும், கள்ளர்களாலும், யூத மக்களாலும், யூதரல்லாதவர்களாலும் ஆபத்துக்குட்பட்டிருக்கிறேன். நகரங்களுக்குள்ளும், மக்களே வசிக்காத இடங்களிலும், கடலுக்குள்ளேயும், ஆபத்துகளில் சிக்கியிருக்கிறேன். சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டு உண்மையில் சகோதரர்களாக இல்லாத சிலராலும் நான் ஆபத்துக்குள்ளானேன். நான் பலமுறை கடினமாக உழைக்க, கடினமான சோர்வூட்டத்தக்கவற்றைச் செய்ய நேர்ந்தது. பல தடவை நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். பல முறை நான் உணவில்லாமல் பட்டினியாகவும், தாகத்தோடும் இருந்திருக்கிறேன். பல சமயங்களில் உண்ணுவதற்கு எதுவுமேயற்ற நிலையில் இருந்திருக்கிறேன். குளிரில் ஆடையில்லாமல் நிர்வாணமாகவும் இருந்திருக்கிறேன். இவற்றைத் தவிர மேலும் பல பிரச்சனைகளும் எனக்குண்டு. குறிப்பாக எல்லா சபைகளைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். ஒருவன் பலவீனமடைவதைக் கண்டால் நானும் பலவீனனாகி விடுகிறேன். ஒருவன் பாவம் செய்வதைப் பார்த்தால் கோபத்தால் நான் எரிச்சலாகிவிடுகிறேன். நான் என்னையே பாராட்டிக்கொள்ள வேண்டுமானால் என் பலவீனத்தை வெளிப்படுத்தும் காரியங்களைக் குறித்தே பெருமை பாராட்டிக்கொள்ள வேண்டும். நான் பொய் சொல்வதில்லையென்று தேவனுக்குத் தெரியும். அவரே தேவன். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா. அவர் எக்காலத்திலும் பாராட்டுக்கு உரியவர். நான் தமஸ்குவில் இருந்தபோது, அரேத்தா ராஜாவினுடைய படைத் தளபதி என்னைக் கைது செய்ய விரும்பினான். அதற்காக நகரைச் சுற்றிக் காவலர்களை நிறுத்தினான். ஆனால் சில நண்பர்கள் என்னைக் கூடைக்குள் வைத்து சுவரில் ஒரு சிறிய துளை செய்து அதன் வழியே என்னை இறக்கிவிட்டனர். எனவே நான் அந்த படைத் தளபதியிடமிருந்து தப்பினேன்.