2 கொரிந்தியர் 12:7-10
2 கொரிந்தியர் 12:7-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பற்ற மேன்மையான வெளிப்பாடுகளின் காரணமாக, பெருமைகொள்ளாதபடி எனது உடலில் ஒருமுள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னைத் துன்புறுத்தும்படி சாத்தானால் அனுப்பப்பட்ட தூதுவனாயிருக்கிறது. அதை என்னைவிட்டு நீக்கும்படி மூன்றுமுறை நான் கர்த்தரிடம் கெஞ்சிக்கேட்டேன். ஆனால் அவர் என்னிடம், “என்னுடைய கிருபை உனக்குப் போதும். ஏனெனில் உன் பெலவீனத்தில், என் வல்லமை முழு நிறைவாக விளங்கும்” என்றார். எனவே நான் எனது பெலவீனங்களைக் குறித்து இன்னும் அதிக மகிழ்ச்சியுடன் பெருமையாய்ப் பேசுவேன். இவ்விதமாக கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கட்டும். அந்தப்படியே கிறிஸ்துவின் நிமித்தம் நான் அனுபவித்த பெலவீனங்களைக் குறித்தும், அவமானங்களைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும், துன்புறுத்தல்களைக் குறித்தும், பாடுகளைக் குறித்தும், நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் நான் பெலவீனமுள்ளவனாய் இருக்கும்போது பெலமுள்ளவனாய் இருக்கிறேன்.
2 கொரிந்தியர் 12:7-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன். அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
2 கொரிந்தியர் 12:7-10 பரிசுத்த பைபிள் (TAERV)
எனக்குக் காட்டப்பட்ட அதிசயங்களைக் குறித்து நான் அதிகம் பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. வேதனை மிக்க ஒரு பிரச்சனை எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. (மாம்சத்தில் ஒரு முள் என்பது அதன் பொருள்) அது சாத்தானிடம் இருந்து அனுப்பப்பட்ட தூதுவன். நான் அதிக அளவு பெருமை பாராட்டிக்கொள்வதில் இருந்து அது என்னை அடித்துக் கட்டுப்படுத்தும். அப்பிரச்சனையில் இருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் மூன்று முறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால் கர்த்தரோ என்னிடம், “என் கிருபை உனக்குப் போதும். நீ பலவீனப்படும்போது என் பெலன் உனக்குள் முழுமையாகும்” என்றார். எனவே நான் என் பலவீனத்தைப் பற்றி மேன்மைப்படுத்தி பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கியிருக்கிறது. எனவே பலவீனனாக இருக்கும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் என்னைப்பற்றி அவதூறாகப் பேசும்போதும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குக் கஷ்ட காலங்கள் வரும்போது மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் என்னை மோசமாக நடத்தும்போதும் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குப் பிரச்சனைகள் வரும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும் கிறிஸ்துவுக்காகத்தான். நான் பலவீனப்படும்போதெல்லாம், உண்மையில் பலமுள்ளவன் ஆகிறேன்.
2 கொரிந்தியர் 12:7-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.