2 கொரிந்தியர் 3:1-13
2 கொரிந்தியர் 3:1-13 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ? எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே. ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல. அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.
2 கொரிந்தியர் 3:1-13 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நாங்களே மறுபடியும் எங்களை பாராட்டிக்கொள்ளத் தொடங்குகிறோமா? அல்லது சில மனிதருக்கு நற்சான்றுக் கடிதங்கள் தேவைப்படுகிறது போல, நாங்கள் உங்களுக்கு நற்சான்றுக் கடிதங்களைக் காட்டவேண்டுமா? அல்லது உங்களிடமிருந்தும் நற்சான்றுக் கடிதங்கள் எங்களுக்குத் தேவையா? இல்லையே; நீங்களே எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லோராலும் அறிந்து, வாசிக்கப்படுகின்ற எங்கள் நற்சான்றுக் கடிதமாயிருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் ஊழியத்தின் பலனாக, கிறிஸ்துவிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஒரு கடிதம் என்பதைக் காண்பிக்கிறீர்கள். அது மையினால் எழுதப்படவில்லை, ஜீவனுள்ள இறைவனின் ஆவியானவராலே எழுதப்பட்டிருக்கிறது. கற்பலகைகளில் எழுதப்படவில்லை, மனித இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட மனவுறுதி, இறைவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் மூலமாய் எங்களுக்கு உண்டு. நாங்கள் எங்கள் இயல்பினால் எதையும் செய்யமுடியும் என்று சொல்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. எங்கள் தகுதி இறைவனிடமிருந்தே வருகிறது. அவர் எங்களை ஒரு புது உடன்படிக்கையின் ஊழியக்காரராய் இருப்பதற்கு தகுதியுள்ளவராக்கினார். அந்த உடன்படிக்கை எழுதப்பட்ட மோசேயின் சட்டத்தைச் சார்ந்ததல்ல, ஆவியையே சார்ந்தது. எழுதப்பட்ட மோசேயின் சட்டம் கொல்லுகிறது, ஆனால் ஆவியானவரோ வாழ்வைக் கொடுக்கிறார். கற்களின்மேல் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, மரணத்தைக் கொண்டுவந்த பணி மகிமையுடன் வந்தது. மோசேயின் முகம் பிரகாசிக்கின்ற ஒளியாய் இருந்தபடியினால், இஸ்ரயேலர்களால் அவனுடைய முகத்தை நேராகப் பார்க்க முடியாதிருந்தது! ஆனால், அது மங்கிப்போகின்ற ஒளியாகவே இருந்தது. அதுவே அப்படியிருந்தது என்றால், பரிசுத்த ஆவியானவரின் பணி எத்தனை அதிக மகிமையுள்ளதாய் இருக்கும்? மனிதருக்குத் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கும் பணி இத்துணை மகிமையுடையதாய் இருந்தால், அவர்களுக்கு நீதியைக் கொண்டுவரும் பணி எத்தனை மகிமையுள்ளதாய் இருக்கும்? முந்திய மகிமையுடன் இப்பொழுதுள்ள மகிமையை ஒப்பிடும்போது, இப்பொழுதுள்ள மகிமைக்கு முன்பாக இணையற்றது. அன்றியும், மங்கிப்போகும் தன்மையுடையதே மகிமையுடன் வந்ததானால், நிலைத்திருப்பதின் மகிமை எவ்வளவு பெரிதானது? ஆகவே, இத்தகைய ஒரு எதிர்பார்ப்பு நமக்கிருப்பதால், நாங்கள் மிகவும் துணிவுள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் மோசேயைப் போன்றவர்கள் அல்ல. மறைந்துபோகும் மகிமையை, இஸ்ரயேலர் பார்க்காதபடி மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டான்.
2 கொரிந்தியர் 3:1-13 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எங்களை நாங்களே மீண்டும் பெருமைப்படுத்தத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாக இருக்கிறதுபோல, உங்களுக்கு சிபாரிசுக் கடிதங்களை அனுப்புவதும், உங்களிடமிருந்து சிபாரிசுக் கடிதங்களைப் பெற்றுக்கொள்வதும் எங்களுக்குத் தேவையோ? எங்களுடைய இருதயங்களில் எழுதப்பட்டும், எல்லா மனிதர்களாலும் அறிந்தும், படித்தும் இருக்கிற எங்களுடைய சிபாரிசுக் கடிதங்கள் நீங்கள்தானே. ஏனென்றால், நீங்கள் எங்களுடைய ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் கடிதமாக இருக்கிறீர்கள் என்று வெளிக்காட்டப்பட்டிருக்கிறது; அது மையினால் இல்லை, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளில் இல்லை, இருதயங்களாகிய பலகைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாக இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாக இருக்கிறோம். எங்களால் ஏதாவது ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் இல்லை; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக இருப்பதற்கு, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாக இல்லாமல், ஆவியானவருக்குரியதாக இருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆனால், ஆவியோ உயிர் கொடுக்கிறது. எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பொறிக்கப்பட்டிருந்த மரணத்திற்கான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமையின் பிரகாசம் உண்டானதினால், இஸ்ரவேல் மக்கள் அவன் முகத்தை நேரடியாகப் பார்க்கமுடியாமல் இருந்தார்களே. மங்கிப்போகிற மகிமையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாக இருந்தால், ஆவியானவருக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாக இருக்கும்? அழிவுக்கான தீர்ப்பைக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாக இருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாக இருக்குமே. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்கு முன்பாக மகிமையே அல்ல. அன்றியும் மங்கிப்போவதே மகிமையுள்ளதாக இருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாக இருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாக இருப்பதால், மிகவும் தாராளமாகப் பேசுகிறோம். மேலும் மங்கிப்போகிற மகிமையின் முடிவை இஸ்ரவேல் மக்கள் நோக்கிப் பார்க்காதபடி, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.
2 கொரிந்தியர் 3:1-13 பரிசுத்த பைபிள் (TAERV)
நாங்கள் மீண்டும் எங்களைப்பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டோமா? மற்றவர்களைப் போன்று எனக்கோ அல்லது என்னிடமிருந்தோ அறிமுக நிருபங்கள் தேவையா? எங்கள் நிருபம் நீங்கள் தான். எங்கள் இதயங்களில் நீங்கள் எழுதப்பட்டிருக்கிறீர்கள். அனைவராலும் அறியப்படுகிறவர்களாகவும், வாசிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறீர்கள். கிறிஸ்துவிடமிருந்து எங்கள் மூலம் அனுப்பிய நிருபம் நீங்கள் தான் என்று காட்டிவிட்டீர்கள். இந்நிருபம் மையால் எழுதப்படவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய ஆவியால் எழுதப்பட்டுள்ளது. இது கற்பலகையின் மீது எழுதப்படவில்லை. மனித இதயங்களின் மீது எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்னால் உறுதியாக நம்புவதால் எங்களால் இவற்றைச் சொல்ல முடிகிறது. எங்களால் நல்லதாக எதனையும் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுவதாக அர்த்தம் இல்லை. செய்யவேண்டிய எல்லாக் காரியங்களுக்குமான வல்லமையை எங்களுக்குத் தருபவர் தேவனே ஆவார். புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது. மரணத்துக்கு வழி வகுக்கும் சேவைக்குரிய பிரமாணங்கள் கற்களில் எழுதப்பட்டன. அது தேவனுடைய மகிமையோடு வந்தது. அதனால் மோசேயின் முகம் ஒளி பெற்றது. அந்த ஒளி இஸ்ரவேல் மக்களைப் பார்க்க இயலாதபடி செய்தது. அந்த மகிமை பிறகு மறைந்துபோனது. எனவே ஆவிக்குரிய சேவை நிச்சயமாக மிகுந்த மகிமையுடையதாக இருக்கும். மக்களை நியாயம் தீர்க்கிற சேவைகள் மகிமையுடையதாக இருக்கும்போது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே சீரான உறவுக்கு உதவும் சேவைகளும் மிகுந்த மகிமை உடையதாக இருக்கும். பழைய சேவைகளும் மகிமைக்குரியதே. எனினும் புதிய சேவைகளால் வரும் மகிமையோடு ஒப்பிடும்போது அதன் பெருமை அழிந்துபோகிறது. மறைந்து போகிறவை மகிமையுடையதாகக் கருதப்படுமானால் என்றென்றும் நிலைத்து இருப்பவை மிகுந்த மகிமையுடையதே. எங்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதால் நாங்கள் தைரியமாக இருக்கிறோம். நாங்கள் மோசேயைப் போன்றில்லை. அவர் தன் முகத்தை முக்காடிட்டு மூடி மறைத்துக்கொண்டார். அவரது முகத்தை இஸ்ரவேல் மக்களால் பார்க்க முடியவில்லை. அந்த வெளிச்சமும் மறைந்து போயிற்று. அவர்கள் அதன் மறைவைப் பார்ப்பதை மோசே விரும்பவில்லை.