2 கொரிந்தியர் 4:3-14
2 கொரிந்தியர் 4:3-14 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம். இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன் செய்கிறது. விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம். கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:3-14 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
எங்களுடைய நற்செய்தி மறைக்கப்பட்டிருந்தால், அது அழிந்து போகிறவர்களுக்கே மறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. ஏனெனில் நாங்கள் எங்களைக் குறித்து பிரசங்கிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். “இருளின்மேல் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்” எனக்கூறிய இறைவன், தமது ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார். கிறிஸ்துவின் முகத்திலே உள்ள இறைவனது மகிமையின் அறிவின் ஒளியை எங்களுக்குக் கொடுப்பதற்கே அவர் இதைச் செய்தார். ஆனால் இந்தச் செல்வத்தை மண்பாண்டங்களில் நாங்கள் பெற்றிருக்கிறோம். இதனால், எல்லாவற்றிற்கும் மேலான இந்த வல்லமை எங்களிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே கிடைக்கின்றது என்பதை எல்லோரும் அறிவார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் எங்களுக்கு நெருக்கடியே ஏற்படுகிறது, ஆனாலும் நாங்கள் நசுங்குண்டு போவதில்லை; குழப்பமடைந்திருக்கிறோம், ஆனாலும் மனந்தளர்ந்து போவதில்லை; துன்புறுத்தப்பட்டோம், ஆனாலும் கைவிடப்படுவதில்லை; அடித்து வீழ்த்தப்பட்டோம், ஆனாலும் அழிந்து போவதில்லை. எங்கள் உடலில் இயேசுவின் வாழ்வு வெளிப்படுபடி, நாங்கள் எப்பொழுதும் இயேசுவின் மரண வேதனையை எங்கள் உடலில் அனுபவிக்கிறோம். இதனால் உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவினிமித்தம் எப்பொழுதும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இதனால் அவருடைய வாழ்வு சாகும் தன்மையுள்ள எங்கள் உடலில் வெளிப்படுகிறது. இப்படியாகவே, மரணம் எங்களில் செயலாற்றுகிறது. அதனால் வாழ்வு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. “நான் விசுவாசித்தேன்; ஆகையால்தான் நான் பேசினேன்” என்று வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி. அந்த விசுவாசத்தின் ஆவியினாலேயே, நாங்களும் விசுவாசிக்கிறோம். ஆதலால் பேசுகிறோம். ஏனெனில், கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இறைவன், இயேசுவுடன்கூட எங்களையும் உயிரோடு எழுப்புவார். இவ்விதம் அவர் எங்களையும் உங்களோடுகூட தமது சமுகத்தில் நிறுத்துவார். இதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:3-14 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எங்களுடைய நற்செய்தி மறைபொருளாக இருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாக இருக்கும். தேவனுடைய சாயலாக இருக்கிற கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தியின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாக இல்லாதபடி, இந்த உலகத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். நாங்கள் எங்களையே பிரசங்கிக்காமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் நாங்கள் உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார். இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். நாங்கள் எல்லாப் பக்கங்களிலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கம் அடைவதும், மனம் உடைவதும் இல்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவன் எங்களுடைய சரீரத்திலே தெரியும்படி, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்களுடைய சரீரத்தில் சுமந்து திரிகிறோம். எப்படியென்றால், மரணத்திற்குரிய எங்களுடைய சரீரத்திலே இயேசுவினுடைய ஜீவன் தெரியும்படி உயிரோடு இருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவுக்காக மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இப்படி மரணமானது எங்களிடமும், ஜீவனானது உங்களிடமும் பெலன் செய்கிறது. விசுவாசித்தேன், ஆகவே, பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாக இருந்து, விசுவாசிக்கிறதினால் பேசுகிறோம். கர்த்தராகிய இயேசுவை உயிரோடு எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களோடு தமக்குமுன்பாக நிறுத்துவார் என்று அறிந்திருக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:3-14 பரிசுத்த பைபிள் (TAERV)
நாம் பரப்புகிற நற்செய்தி மறை பொருளாக இருக்கலாம். ஆனால் அது கெட்டுப்போகிறவர்கட்கே மறை பொருளாய் இருக்கும். இந்த உலகத்தை ஆள்பவனாகிய சாத்தான் விசுவாசம் இல்லாதவர்களின் மனதைக் குருடாக்கினான். அவர்களால் கிறிஸ்துவின் நற்செய்தியின் ஒளியைப் பார்க்க இயலாது. கிறிஸ்துவின் மகிமைக்குரிய நற்செய்தியையும் அறியார்கள். கிறிஸ்து மட்டுமே தேவன் போன்று இருப்பவர். நாங்கள் எங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவே நமது கர்த்தர் என்றும் நாங்கள் இயேசுவுக்காக உங்களுடைய ஊழியக்காரர்கள் என்றும் பிரச்சாரம் செய்கிறோம். “இருளிலிருந்து வெளிச்சம் பிரகாசிக்கும்” என்று தேவன் ஒருமுறை சொன்னார். எங்கள் இதயங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்திய தேவனும் இவரே ஆவார். தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் முகத்தில் தெரியச் செய்வதன் மூலம் அவர் எங்களுக்கு ஒளியைத் தந்தார். இப்பொக்கிஷத்தை நாம் தேவனிடமிருந்து பெற்றுள்ளோம். ஆனால் நாங்களோ பொக்கிஷத்தைத் தாங்கியுள்ள மண் ஜாடிகளைப் போன்றே இருக்கிறோம். இப்பேராற்றலானது எங்களிடமிருந்து அல்ல, தேவனிடம் இருந்தே வருகிறது என்பதை இது காட்டும். எங்களைச் சுற்றிலும் தொல்லைகள் உள்ளன. ஆனால் அவற்றால் நாங்கள் தோல்வி அடையவில்லை. அவ்வப்போது செய்வது தெரியாமல் திகைக்கிறோம். ஆனால் முயற்சி செய்வதை ஒருபோதும் கைவிடவில்லை. நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் தேவன் எங்களைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நாங்கள் தூக்கியெறியப்படுகிறோம். ஆனால் அழிந்துபோகவில்லை. எங்கள் சொந்த சரீரங்களில் இயேசுவின் மரணத்தைச் சுமந்து திரிகிறோம். அதனால் எங்கள் சரீரங்களில் இயேசுவின் வாழ்வும் புலப்படவேண்டும் என்பதற்காகவே மரணத்தைச் சுமந்து திரிகிறோம். நாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்றாலும் இயேசுவுக்காக எப்போதும் மரண ஆபத்தில் உள்ளோம். அழியும் நம் சரீரங்களில் இயேசுவின் வாழ்வைக் காணமுடியும் என்பதற்காகவே இது எங்களுக்கு நேர்ந்திருக்கிறது. ஆகையால் மரணம் எங்களுக்குள் பணிபுரிகிறது; வாழ்வு உங்களுக்குள் பணிபுரிகிறது. “நான் விசுவாசித்தேன், அதனால் பேசுகிறேன்” என்று எழுதப்பட்டுள்ளது. எங்கள் விசுவாசமும் அத்தகையது தான். நாங்கள் விசுவாசிக்கிறோம், அதனால் பேசுகிறோம். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். அதோடு இயேசுவுடன் தேவன் எங்களையும் எழுப்புவார் என்று அறிவோம். தேவன் உங்களோடு எங்களையும் ஒன்று சேர்ப்பார். நாம் அவருக்கு முன் நிற்போம்.