2 கொரிந்தியர் 6:1-10
2 கொரிந்தியர் 6:1-10 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
இறைவனுடைய உடன் வேலையாட்களாகிய நாங்கள் இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட கிருபையை வீணாக்க வேண்டாம் என உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறோம். ஏனெனில், அவர் சொன்னதாவது: “என் தயவின் காலத்தில் நான் உங்களுக்கு செவிகொடுத்தேன். இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்.” நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்பொழுதே இறைவனது தயவின் காலம். இப்பொழுதே இரட்சிப்பின் நாள். எங்கள் ஊழியத்தைப்பற்றி யாரும் குறைகூறாதபடி, நாங்கள் எவருடைய வழியிலும் இடறுதலை ஏற்படுத்துகிறதில்லை. மாறாக, நாங்கள் இறைவனின் உண்மையான ஊழியர்கள் என்பதை எல்லாவிதத்திலும், எங்கள் நடத்தையின் மூலமாகக் காண்பிக்கிறோம்: எல்லாவற்றையும் சகித்தலிலும்; கஷ்டங்களிலும், துன்பங்களிலும், துயரங்களிலும்; அடிக்கப்பட்டதிலும், சிறைவைக்கப்பட்டதிலும், கலவரங்களில் அகப்பட்டதிலும்; கஷ்டமான வேலையில் ஈடுபட்டதிலும், இரவில் நித்திரை இல்லாமலும், உணவு இல்லாமல் இருந்ததிலும்; தூய்மையிலும், விளங்கிக்கொள்வதிலும், பொறுமையிலும், தயவிலும்; பரிசுத்த ஆவியானவர் எங்களில் இருப்பதிலும், உண்மை அன்பிலும்; சத்திய போதனையிலும், இறைவனின் வல்லமையில் நடப்பதிலும், நீதியின் ஆயுதத்தை வலதுகையிலும் இடது கையிலும் பிடித்திருப்பதிலும், எங்கள் முன்மாதிரியைக் காண்பிக்கிறோம்; நாங்கள் மதிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு, புகழப்பட்டு, தூற்றப்பட்டு, ஏமாற்றுக்காரர்கள் என எண்ணப்பட்ட போதிலும், நாங்கள் உண்மை ஊழியர்களாகவே இருக்கிறோம்; நாங்கள் அங்கீகரிக்கப் படாதவர்களென எண்ணப்பட்டாலும், அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருக்கிறோம்; நாங்கள் செத்தவர்கள் என சிலர் எண்ணினாலும், நாங்கள் தொடர்ந்து வாழ்கிறோம்; அடிக்கப்படுகிறோம், ஆனால் கொல்லப்படவில்லை; துக்கமடைகிறோம், ஆனால் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருக்கிறோம்; ஏழைகளாய் இருக்கிறோம், ஆனால் பலரைச் செல்வந்தர்களாக்குகிறோம்; நாங்கள் ஒன்றுமில்லாதவர்களாய் இருக்கிறோம், ஆனால் யாவும் இருக்கின்றது! வெளிச்சத்திற்கும், இருளுக்கும் ஐக்கியம் இருக்க முடியுமா?
2 கொரிந்தியர் 6:1-10 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
தேவனுடைய கிருபையை நீங்கள் வீணாகப் பெற்றுக்கொள்ளாதபடி, தேவனுடைய உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். சரியான காலத்திலே நான் உன் வார்த்தையைக் கேட்டு, இரட்சிப்பின் நாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே சரியான காலம், இப்பொழுதே மீட்பின் நாள். இந்த ஊழியம் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க, நாங்கள் யாருக்கும் இடறல் உண்டாக்காமல், எல்லாவிதத்திலும், எங்களை தேவ ஊழியர்களாக விளங்கப்பண்ணுகிறோம். அதிக பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமில்லாத அன்பிலும், சத்தியவசனத்திலும், தேவபலத்திலும்; நீதியாகிய வலது இடதுபக்கத்து ஆயுதங்களை அணிந்திருக்கிறதிலும், கனத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும்; ஏமாற்றுபவர்கள் என்று சொல்லப்பட்டாலும், உண்மை உள்ளவர்களாகவும், அறியப்படாதவர்கள் என்னப்பட்டாலும் நன்றாகத் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடு இருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.
2 கொரிந்தியர் 6:1-10 பரிசுத்த பைபிள் (TAERV)
நாங்கள் தேவனோடு சேர்ந்து பணியாற்றுகிறவர்கள். எனவே, தேவனிடமிருந்து நீங்கள் பெற்ற கிருபையை பயனற்ற வகையில் வீணடிக்க வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன். “நான் சரியான சமயத்தில் உன்னைக் கேட்டேன். இரட்சிப்புக்கான நாளில் நான் உதவி செய்தேன்” என்று தேவன் கூறுகிறார். அவர் சொன்ன “சரியான நேரம்” என்பது இதுதான் என்று உங்களுக்குக் கூறுகிறேன். “இரட்சிப்புக்கான நாளும்” இதுதான். எங்களின் பணியில் எவரும் குற்றம் கண்டு பிடிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனாலும் மற்றவர்களுக்குப் பிரச்சனையாய் இருக்கும் எதையுமே நாங்கள் செய்யவில்லை. ஆனால், அனைத்து வழிகளிலும் நாங்கள் தேவனுடைய ஊழியக்காரர்கள் என்பதைக் காட்டி வருகிறோம். பல கஷ்டங்களிலும், பிரச்சனைகளிலும், துன்பங்களிலும் இதனை நாங்கள் வெளிப்படுத்துகிறோம். நாங்கள் அடிக்கப்பட்டுச் சிறையில் தள்ளப்படுகிறோம். மக்கள் அதிர்ச்சியடைந்து எங்களுடன் மோதுகிறார்கள். நாங்கள் கடின வேலைகளைச் செய்கிறோம். சில நேரங்களில் உணவும், உறக்கமும் இல்லாமல் இருக்கிறோம். எங்கள் அறிவினாலும், பொறுமையாலும், இரக்கத்தாலும், தூய வாழ்க்கையாலும் நாங்கள் தேவனுடைய ஊழியர்கள் எனக் காட்டிக்கொள்கிறோம். நாங்கள் இதனைப் பரிசுத்த ஆவியாலும், தூய அன்பாலும், உண்மையான பேச்சாலும் தேவனுடைய வல்லமையாலும் வெளிப்படுத்துகிறோம். எங்கள் சரியான வாழ்க்கையைப் பயன்படுத்தி எல்லாவற்றிலும் இருந்தும் எங்களைக் காத்துக்கொள்கிறோம். சிலர் எங்களை மதிக்கிறார்கள். மற்றும் சிலர் எங்களை அவமானப்படுத்துகிறார்கள். சிலர் எங்களைப் பற்றி நல்ல செய்திகளையும் வேறு சிலர் கெட்ட செய்திகளையும் பரப்புகிறார்கள். சிலர் எங்களைப் பொய்யர்கள் என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால் நாங்கள் உண்மையையே பேசுகிறோம். இன்னும் சிலருக்கு நாங்கள் முக்கியமற்றவர்கள். ஆனால் நாங்கள் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர்கள். நாங்கள் மடிந்து போவதுபோல் இருக்கிறோம். ஆனால் தொடர்ந்து வாழ்கிறோம். நாங்கள் தண்டிக்கப்படுகிறோம். ஆனால் கொல்லப்படவில்லை. எங்களுக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால் நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். நாங்கள் ஏழைகள்தான். ஆனால் பலரைச் செல்வராக்குகிறோம். எங்களுக்கென்று எதுவுமில்லை. ஆனால் உண்மையில் எங்களுக்கு எல்லாம் இருக்கிறது.
2 கொரிந்தியர் 6:1-10 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள். இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும், சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும், கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும், அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.