2 கொரிந்தியர் 7:2-16
2 கொரிந்தியர் 7:2-16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
உங்கள் இருதயங்களில் எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் ஒருவருக்கும் தீமை செய்யவில்லை. நாங்கள் ஒருவரையும் கெடுக்கவில்லை. நாங்கள் ஒருவரையும் சுரண்டி வாழவுமில்லை. நான் உங்களைக் குற்றப்படுத்தும்படி இதைச் சொல்லவில்லை; ஏனெனில் உங்களுடன் வாழவும், சாகவும் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்குமளவுக்கு, நீங்கள் எங்கள் இருதயத்தில் இடம்பெற்றிருக்கிறீர்கள் என்று முன்பே உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேனே. நான் உங்களிடம் அதிக வெளிப்படையாக பேசியிருக்கிறேன்; நான் உங்களைக்குறித்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். நான் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறேன்; இதனால் எனது எல்லாத் துன்பங்களின் மத்தியிலும் எனது மகிழ்ச்சியோ அளவிடமுடியாதது. நாங்கள் மக்கெதோனியாவை வந்துசேர்ந்த போதும், எங்கள் உடலுக்கு எவ்வித ஆறுதலும் இல்லாதிருந்தது. எல்லாப் பக்கங்களிலும் கஷ்டங்களே எங்களைச் சூழ்ந்திருந்தன; வெளியே முரண்பாடுகளும், உள்ளே பயங்களும் ஆட்கொண்டிருந்தன. ஆனால் மனசோர்வு அடைகிறவர்களை ஆறுதல்படுத்துகிற இறைவன், தீத்துவின் வரவால் எங்களை ஆறுதல்படுத்தினார். அவன் வருகையால் மட்டுமல்ல, நீங்கள் எவ்விதம் அவனை உற்சாகப்படுத்தினீர்கள் என்று கேள்விப்பட்டதினாலும், நாங்கள் ஆறுதலடைந்தோம். நீங்கள் என்னைப் பார்க்க எவ்வளவாக விரும்புகிறீர்கள் என்பதையும், நீங்கள் எவ்வளவாய் கவலைப்படுகிறீர்கள் என்பதையும், என்னை ஆதரிக்க நீங்கள் எவ்வளவு ஆவலுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் குறித்தும் அவன் எங்களுக்குச் சொன்னான். இதனால் நான் மிகவும் சந்தோஷமடைந்தேன். நான் உங்களுக்கு எழுதிய கடிதம் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தாலும், அதை எழுதியதற்காக நான் கவலைப்படவில்லை. எனது கடிதம் உங்களைக் கவலைப்படுத்தியதை அறிந்தபோது நான் கவலைப்பட்டது உண்மைதான். நீங்கள் சிறிது காலத்திற்கு மட்டுமே கவலைப்பட்டிருந்தீர்கள். ஆனால், இப்பொழுது நான் மகிழ்ச்சியடைகிறேன்; நீங்கள் கவலைப்பட்டதற்காக அல்ல, உங்களுடைய துக்கம் உங்களில் மனமாறுதலை ஏற்படுத்தியதற்காகவே மகிழ்ச்சியடைகிறேன். இறைவனுடைய எண்ணத்தின்படி நீங்கள் துக்கமடைந்தீர்கள். இதனால், எங்கள் மூலமாய் உங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில், இறைவன் ஏற்படுத்தும் துக்கம் மனமாறுதலைக் கொண்டுவந்து, நம்மை இரட்சிப்புக்குள் வழிநடத்துகிறது. அது தொடர்ந்து மனவருத்தத்தை ஏற்படுத்துவதில்லை. ஆனால், உலகப்பிரகாரமான துக்கம் மரணத்தையே கொண்டுவரும். இறைவன் ஏற்படுத்திய இந்தத் துக்கம், உங்களில் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாருங்கள்: நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க உங்களுக்கு எவ்வளவு ஆர்வம்! எவ்வளவு வாஞ்சை! அதைப்பற்றி எவ்வளவு கோபம்! எவ்வளவு அச்சம்! நியாயப்படுத்துதலைக் காண எவ்வளவு ஆவல்! எவ்வளவு அக்கறை! எவ்வளவு ஆயத்தம்! இவ்வாறு இவ்விஷயத்தில் எல்லாவிதத்திலும் நீங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். எனவே நான் உங்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதியபோதும்கூட, அந்தத் தீமை செய்தவனுக்காகவோ, அந்தத் தீமையினால் பாதிக்கப்பட்டவனுக்காகவோ எழுதவில்லை. இறைவனுடைய பார்வையில், நீங்கள் எங்களுக்காக உங்களை எவ்வளவாய் அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே அறியும்படியாகவே நான் அதை எழுதினேன். இவை எல்லாவற்றினாலும் நாங்கள் உற்சாகமடைந்திருக்கிறோம். நாங்கள் இவ்விதம் உற்சாகம் அடைந்ததினாலே, தீத்து எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறான் என்பதைக் கண்டு, நாங்கள் இன்னும் அதிகமாய் மகிழ்ச்சியடைந்தோம். ஏனெனில், நீங்கள் எல்லோரும் தீத்துவை ஆவியில் உற்சாகப்படுத்தினீர்கள். நான் உங்களைக்குறித்து பெருமைக்குரிய விதமாகவே, அவனுக்குச் சொல்லியிருந்தேன். நீங்களும் என்னை அவற்றில் வெட்கப்படுத்தவில்லை. நாங்கள் எப்பொழுதும், உங்களுடன் உண்மையையேப் பேசினோம். அதுபோலவே, தீத்துவுடன் நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமையாகப் பேசியதும் உண்மையாயிற்று. நீங்கள் எவ்விதம் கீழ்ப்படிந்து, பயத்தோடும், நடுக்கத்தோடும் அவனை வரவேற்றீர்கள் என்பதை அவன் நினைவில்கொள்ளும்போது, உங்கள்மேல் அவனுக்கு அன்பு பெருகுகிறது. உங்கள்மேல் எனக்கு ஒரு முழுமையான மனவுறுதி உண்டாயிருக்கிறதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
2 கொரிந்தியர் 7:2-16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எங்களுக்கு உங்கள் இருதயத்தில் இடங்கொடுங்கள்; நாங்கள் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை, யாரையும் கெடுக்கவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை. உங்களைக் குற்றவாளிகளாக்குவதற்கு இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களோடு மரிக்கவும் பிழைக்கவும் எங்களுடைய இருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே. அதிக தைரியத்தோடு உங்களோடு பேசுகிறேன்; உங்களைக்குறித்து அதிகமாக மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான எல்லா உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாக இருக்கிறேன். எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிற்கு வந்தபோது, எங்களுடைய சரீரத்திற்கு ஓய்வு இல்லாமல், எல்லாப் பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; வெளியே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. ஆனாலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன், தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல் செய்தார். அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்களுடைய வாஞ்சையையும், உங்களுடைய வருத்தத்தையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் பார்த்து, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாகச் சந்தோஷப்பட்டேன். ஆதலால் நான் கடிதத்தினால் உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்தக் கடிதம் கொஞ்சகாலம் உங்களைத் துக்கப்படுத்தினது என்று பார்த்து நான் வருத்தப்பட்டிருந்தும், இப்பொழுது வருத்தப்படுகிறது இல்லை. இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக இல்லை, மனம்திரும்புகிறதற்கேற்றத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடி, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு வருத்தப்படுகிறதற்கு ஏதுவாக இல்லாமல் இரட்சிப்பிற்குரிய மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; உலகத்தின் துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடம் எவ்வளவு வாஞ்சையையும், குற்றம் தீர எவ்வளவு நியாயம் சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கியது. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைக் குற்றமற்றவர்கள் என்று விளங்கப்பண்ணினீர்கள். எனவே, நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயம் செய்தவனாலும் இல்லை, அநியாயம் செய்யப்பட்டவனாலும் இல்லை, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற வாஞ்சையை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவே அப்படி எழுதினேன். இதனால் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதல் அடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம். இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாக நான் அவனுடன் சொன்ன எதைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் எல்லாவற்றையும் உங்களுக்குச் சத்தியமாகச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாகச் சொன்னதும் சத்தியமாக விளங்கினதே. மேலும் நீங்கள் எல்லோரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கும்போது, அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாக இருக்கிறது. எனவே, எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடமான நம்பிக்கை இருக்கிறது என்று சந்தோஷப்படுகிறேன்.
2 கொரிந்தியர் 7:2-16 பரிசுத்த பைபிள் (TAERV)
எங்களுக்காக உங்கள் இதயங்களைத் திறந்து வைத்திருங்கள். நாங்கள் யாருக்கும் தீமை செய்ததில்லை. நாங்கள் எவரது நம்பிக்கையையும் அழித்ததில்லை. எவரையும் ஏமாற்றியதில்லை. உங்களைக் குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை. எங்கள் வாழ்வும் சாவும் உங்கள் உடனே இருக்கும் அளவுக்கு உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை ஏற்கெனவே உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். நான் உங்களைப் பற்றி உறுதியாக உணர்கிறேன். உங்களைப் பற்றிப் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்கு மிகுந்த தைரியம் கொடுக்கிறீர்கள். அதனால் அனைத்து துன்பங்களுக்கு இடையிலும் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். நாங்கள் மக்கதோனியாவுக்கு வந்தபோது எங்களுக்கு ஓய்வு இல்லாமல் இருந்தது. எங்களைச் சுற்றிலும் நெருக்கடிகள் இருந்தன. நாங்கள் வெளியே போராடிக்கொண்டும் உள்ளுக்குள் பயந்துகொண்டும் இருந்தோம். ஆனால் தேவன் துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிறார். தீத்து வந்தபோது தேவன் ஆறுதல் தந்தார். அவனது வருகையிலும், நீங்கள் அவனுக்குக் கொடுத்த ஆறுதலாலும் நாங்கள் ஆறுதலடைந்தோம். என்னை நீங்கள் பார்க்க விரும்பியதைப் பற்றி தீத்து கூறினான். உங்களது தவறுகளுக்கு நீங்கள் வருந்தியது பற்றியும் கூறினான். என்மீது நீங்கள் கொண்ட அக்கறையைப் பற்றி அவன் சொன்னபோது மகிழ்ச்சி அடைந்தேன். நான் உங்களுக்கு எழுதிய நிருபம் ஏதேனும் வருத்தத்தை தந்திருக்குமானால் அதை எழுதியதற்காக நான் இப்பொழுது வருத்தப்படவில்லை. அந்நிருபம் உங்களுக்கு வருத்தத்தை தந்தது என அறிவேன். அதற்காக அப்பொழுது வருந்தினேன். ஆனால் அது கொஞ்ச காலத்துக்குத்தான் உங்களுக்குத் துயரத்தைத் தந்தது. இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது நீங்கள் துயரப்படும்படி ஆனதால் அன்று. அத்துயரம் உங்கள் இதயங்களை மாற்றியதற்காக நான் மகிழ்கிறேன். தேவனுடைய விருப்பப்படியே நீங்கள் துக்கப்பட்டீர்கள். எனவே நீங்கள் எங்களால் எவ்வகையிலும் பாதிக்கப்படவில்லை. தேவனுடைய விருப்பப்படி நேரும் வருத்தம் ஒருவனது இதயத்தை மாற்றி, வாழ்வையும் மாற்றுகிறது. அவனுக்கு இரட்சிப்பையும் தருகிறது. அதற்காக வருத்தப்படவேண்டாம். ஆனால் உலகரீதியிலான துயரங்களோ மரணத்தை வரவழைக்கின்றது. தேவனின் விருப்பப்படியே நீங்கள் வருத்தம் அடைந்தீர்கள். இப்பொழுது அவ்வருத்தம் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தது என்று பாருங்கள். அது உங்களிடம் ஜாக்கிரதையை உருவாக்கியது. குற்றமற்றவர்கள் என உங்களை நிரூபிக்கத் தூண்டியது. அது கோபத்தையும், பயத்தையும் தந்தது. அது என்னைக் காணத் தூண்டியது. அது உங்களை அக்கறை கொள்ளச் செய்தது. அது நல்லவற்றைச் செய்ய ஒரு காரணமாயிற்று. இக்காரியத்தில் எவ்விதத்திலும் நீங்களும் குற்றம் இல்லாதவர்கள் என்று உங்களை நிரூபித்துக்கொண்டீர்கள். நான் உங்களுக்கு நிருபம் எழுதியதின் காரணம் ஒருவன் தவறு இழைத்துவிட்டான் என்பதாலல்ல, அதேபோல ஒருவன் பாதிக்கப்பட்டுவிட்டான் என்பதாலும் உங்களுக்கு நிருபம் எழுதவில்லை. தேவனுக்கு முன்பாக உங்களுக்காக நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் காணும்பொருட்டே அப்படி எழுதினேன். இதனால்தான் நாங்கள் ஆறுதலடைந்தோம். நாங்கள் மிகவும் ஆறுதலடைந்தோம். தீத்து மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்து நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம். அவன் நலமடைய நீங்கள் அனைவரும் உதவினீர்கள். உங்களைப் பற்றி தீத்துவிடம் பெருமையாகச் சொன்னவை அனைத்தும் உண்மை என்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். உங்களுக்கு நாங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாகும். நீங்கள் கீழ்ப்படியத் தயாராக இருக்கிறீர்கள். இதை நினைத்து தீத்து உங்கள் மீது உறுதியான அன்பைக் கொண்டிருக்கிறான். நீங்கள் அவனைப் பயத்தோடும் மரியாதையோடும் ஏற்றுக்கொண்டீர்கள். நான் உங்களை முழுமையாக நம்பலாம் என்பதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.
2 கொரிந்தியர் 7:2-16 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை. உங்களைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும் கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே. மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன். எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார். அவன் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன். ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுதிறதில்லை. இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள். ஆதலால் நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயஞ்செய்தவனிமித்தமுமல்ல, அநியாயஞ்செய்யப்பட்டவனிமித்தமுமல்ல, தேவனுக்கு முன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற ஜாக்கிரதை உங்களுக்கு வெளிப்படும் பொருட்டே அப்படி எழுதினேன். இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலைடந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம். இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன யாதொன்றைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே. மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது. ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன்.