2 கொரிந்தியர் 9:1-5

2 கொரிந்தியர் 9:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று, நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு. அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன். மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும். ஆகையால், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது.

2 கொரிந்தியர் 9:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்கு செய்யப்படும் இந்தப் பணியைக் குறித்து நான் தொடர்ந்து உங்களுக்கு எழுதவேண்டிய அவசியமில்லை. நீங்கள் உதவிசெய்ய ஆவலாய் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் மக்கெதோனியாவில் உள்ளவர்களிடம், உங்களைக்குறித்துப் பெருமையாகவும் பேசியிருக்கின்றேன். நான் அவர்களிடம், அகாயாவிலுள்ள நீங்கள் கடந்த வருடத்தில் இருந்தே உதவிசெய்ய ஆயத்தமாக இருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கின்றேன். உங்களுடைய அந்த ஆர்வம் அவர்களில் அநேகரை செயலாற்றுவதற்கு உற்சாகப்படுத்தியது. இப்பொழுது இந்த விஷயத்தில், நாங்கள் உங்களைக்குறித்துப் பெருமையாய்ப் பேசியது, வெறும் வார்த்தைகளாய்ப் போகாதபடி, நான் இந்த சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் ஆயத்தமாய் இருப்பீர்கள் என்று நான் அவர்களுக்குச் சொன்னதுபோலவே, நீங்களும் ஆயத்தமாயிருங்கள். மக்கெதோனியாவிலுள்ளவர்களில் யாராவது என்னுடன் வரும்போது, நீங்கள் ஆயத்தமாய் இல்லையெனக் கண்டால், நாங்கள் உங்களில் வைத்த மனவுறுதியின் நிமித்தம் வெட்கப்பட நேரிடும் எனச் சொல்லவேண்டியதில்லை. நீங்களும் வெட்கப்பட்டுப் போவீர்களே. எனவே இந்தச் சகோதரர்கள் எனக்கு முன்பாகவே உங்களிடம் வந்து, நீங்கள் கொடுப்பதாக வாக்குப்பண்ணிய நன்கொடைகளைச் சேர்த்து ஆயத்தப்படுத்தும்படி, இவர்களை முன்னதாக அனுப்புவது அவசியம் என்று நான் எண்ணினேன். நான் உங்களிடம் வரும்போது, நீங்கள் கட்டாயப்படுத்தப்பட்டதின் நிமித்தம் கொடுத்ததாக இருக்காமல், தாராள மனதுடன் கொடுக்கும் நன்கொடையாக அது இருக்கும்.

2 கொரிந்தியர் 9:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பரிசுத்தவான்களின் ஊழியத்திற்கு செய்யவேண்டிய உதவிகளைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டியதில்லை. உங்களுடைய மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவில் உள்ளவர்கள் ஒருவருடமாக ஆயத்தமாக இருக்கிறார்கள் என்று, நான் மக்கெதோனியரிடம் சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்களுடைய வாஞ்சை அநேகரை செயலில் ஈடுபடவைத்தது. அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாகப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாக இருப்பதற்கு, இந்தச் சகோதரர்களை அனுப்பினேன். மக்கெதோனியர்கள் என்னோடு வந்து, நீங்கள் ஆயத்தப்படாதவர்களாக இருப்பதைப் பார்த்தால், இவ்வளவு உறுதியாக உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்கள் என்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாக இருக்கும். ஆகவே, வாக்குறுதிபண்ணப்பட்டிருக்கிற உங்களுடைய தர்ம உதவியானது கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இல்லாமல், தாராளமாகக் கொடுக்கப்பட்டதாக இருப்பதற்காக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரர்களை முதலில் உங்களிடம் அனுப்புவது அவசியம் என்று எனக்குத் தோன்றியது.

2 கொரிந்தியர் 9:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுடைய மக்களுக்கு செய்ய வேண்டிய இந்த உதவி பற்றி உங்களுக்கு நான் அதிகமாக எழுத வேண்டிய தேவையில்லை. நீங்கள் உதவ விரும்புவதை நான் அறிவேன். மக்கதோனியா மக்களிடம் நான் இதைப்பற்றிப் பெருமையாகப் பேசி இருக்கிறேன். அகாயாவிலுள்ள நீங்கள் உதவி செய்ய ஓராண்டாகத் தயாராய் உள்ளீர்கள் என்பதைக் கூறி இருக்கிறேன். உங்களது உற்சாகம் இங்குள்ள பலரையும் தூண்டியது. ஆனால் நான் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். இக்காரியத்தில் உங்களைப் பற்றி நாங்கள் சொன்ன பாராட்டுகள் பொய்யாகப் போகாமல் நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாக இருங்கள். நான் சில மக்கதோனியர்களோடு அங்கே வரும்போது நீங்கள் தயாராய் இல்லாமல் இருந்தீர்களெனில் அதனால் எனக்கு மிகவும் வெட்கம் உண்டாகும். ஏனென்றால் உங்களைப் பற்றி அவ்வளவு உறுதியாகக் கூறியிருக்கிறேன். (அது உங்களுக்கும் அவமானத்தைத் தரும்.) ஆகையால் நாங்கள் வருவதற்கு முன்னரே எங்கள் சகோதரர்களை உங்களிடம் அனுப்பி வைப்பது அவசியம் என்று நினைத்தேன். நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி விருப்பமுடன் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அச்சகோதரர்கள் அவற்றைச் சேர்த்துத் தயாராக வைத்திருப்பர்.