2 இராஜாக்கள் 13:1-19

2 இராஜாக்கள் 13:1-19 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான்; அவைகளை விட்டு அவன் விலகவில்லை. ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார். யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார். கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள். ஆகிலும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள் விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலையாயிருந்தது. யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரரையும், பத்து இரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமே அல்லாமல், ஜனங்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்துப் போரடிக்கும் இடத்துத் தூளைப்போல ஆக்கிப்போட்டான். யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான். யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான். அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான். எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து: கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது; நீர் ஆப்பெக்கிலே சீரியரைத் தீர முறிய அடிப்பீர் என்றான். பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்று தரம் அடித்து நின்றான். அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசை மாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.

2 இராஜாக்கள் 13:1-19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதாவின் அரசன் அகசியாவின் மகன் யோவாஸ் அரசாண்ட இருபத்துமூன்றாம் வருடத்தில், யெகூவின் மகன் யோவாகாஸ் சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் பதினேழு வருடங்கள் அரசாண்டான். இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களையே இவனும் பின்பற்றி யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். அவன் அவைகளைவிட்டு விலகவேயில்லை. எனவே யெகோவாவின் கோபம் இஸ்ரயேலுக்கு எதிராகப் பற்றி எரிந்தது. இதனால் யெகோவா அவர்களை நெடுங்காலத்திற்கு சீரிய அரசன் ஆசகேலின் வலிமையின் கீழும், அவனுடைய மகன் பெனாதாத்தின் கீழும் வைத்திருந்தார். அதன்பின் யோவாகாஸ் யெகோவாவின் தயவைத் தேடினான். சீரிய அரசன் எவ்வளவாய் இஸ்ரயேலை ஒடுக்கித் துன்புறுத்தினான் என்பதை யெகோவா கண்டபடியால், அவர் அவனுடைய மன்றாட்டைக் கேட்டார். யெகோவா இஸ்ரயேலருக்கு ஒரு விடுதலை வீரனைக் கொடுத்தார். இஸ்ரயேலர் சீரியருடைய பிடியிலிருந்து தப்பினார்கள். அதன்பின் இஸ்ரயேலர் முன்பு வாழ்ந்ததுபோல தங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்தார்கள். ஆயினும் யெரொபெயாம் இஸ்ரயேலைச் செய்யப்பண்ணின பாவங்களிலிருந்து அவர்கள் திரும்பாமல், அவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டுவந்தார்கள். அத்துடன் அசேரா விக்கிரக தூண் இன்னும் சமாரியாவில் இருந்தது. யோவாகாஸின் இராணுவத்தில் ஐம்பது குதிரைவீரர், பத்து தேர்கள், பத்தாயிரம் காலாட்படை வீரரைத் தவிர வேறொன்றும் மீந்திருக்கவில்லை. ஏனெனில் சீரிய அரசன் இஸ்ரயேலில் மீதியானவர்களை அழித்து, சூடுமிதிக்கும் காலத்திலுள்ள புழுதியைப்போலாக்கிப் போட்டான். யோவாகாஸின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோவாகாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோவாஸ் அரசனானான். யூதாவின் அரசன் யோவாசின் ஆட்சியின் முப்பத்தேழாம் வருடத்தில் யோவாகாஸின் மகன் யோவாஸ் இஸ்ரயேலில் அரசனானான். இவன் சமாரியாவிலிருந்து பதினாறு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் எதையும் அவன் விடாமல் அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தான். இஸ்ரயேல் அரசன் யோவாஸ் நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் யூதாவின் அரசன் அமத்சியாவுடன் அவன் செய்த யுத்தம் உட்பட அவனுடைய சதிகள் யாவும், இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோவாஸ் தன் முற்பிதாக்களுடன் இளைப்பாறினான். மற்ற இஸ்ரயேல் அரசர்களை அடக்கம்பண்ணும் இடத்தில் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய அரியணையில் யெரொபெயாம் அரசனானான். இந்த நாட்களில் எலிசா வியாதியினால் துன்பப்பட்டான். இந்த வியாதியே பின் அவனுடைய மரணத்துக்குக் காரணமாயிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் அவனைப் பார்க்கப்போய், “என் தந்தையே! தந்தையே! இஸ்ரயேலுக்கு தேர்களையும், குதிரைவீரர்களையும்போல் இருந்தவரே!” என்று சொல்லி அவனுக்காக அழுதான். எலிசா அவனை நோக்கி, “ஒரு வில்லும் சில அம்புகளும் கொண்டுவா” என்றான் அவன் அப்படியே கொண்டுவந்தான். எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “வில்லை உம்முடைய கைகளில் எடும்” என்றான். அரசன் அவ்வாறே எடுத்தபோது, எலிசா தன் கையை அரசனின் கையில் வைத்தான். “கிழக்குப் பக்கமாக ஜன்னலைத் திறந்திடும்” என்றான். அப்படியே அரசன் ஜன்னலைத் திறந்தான். அப்பொழுது எலிசா, “எய்திடும்” என்றான். அவன் அப்படியே செய்தான். எலிசா அவனைப் பார்த்து, “இது யெகோவாவினுடைய வெற்றியின் அம்பு. சீரியரின்மேல் வெற்றியைக் கொண்டுவரும் அம்பு; நீ சீரியரை ஆப்பெக்கில் முழுவதுமாக அழித்துப்போடுவாய்” என்று கூறினான். அதன்பின்பும் எலிசா அரசனை நோக்கி, “அந்த அம்புகளை எடும்” என்றான். அரசன் அவற்றை எடுத்தான். அப்பொழுது எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “அவற்றை நிலத்தில் அடியும்” என்றான். அவன் மூன்றுமுறை அடித்து நிறுத்தினான். இறைவனுடைய மனிதன் அவன்மேல் கோபங்கொண்டு, “நீர் நிலத்தில் ஐந்துமுறை அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும். அவ்வாறு அடித்திருந்தால் சீரியாவை முழுவதும் தோற்கடித்திருப்பீர். இப்போதோ மூன்றுமுறை மாத்திரம் தான் சீரியாவை தோற்கடிப்பீர்” என்றான்.

2 இராஜாக்கள் 13:1-19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருட ஆட்சியில் யெகூவின் மகனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே பதினேழுவருடங்கள் அரசாட்சிசெய்து, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான்; அவைகளைவிட்டு அவன் விலகவில்லை. ஆகையால் யெகோவாவுக்கு இஸ்ரவேலர்களின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் மகனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார். யோவாகாஸ் யெகோவாவுடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: யெகோவா அவனுக்குச் செவிகொடுத்தார். யெகோவா இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததால், அவர்கள் சீரியருடைய ஆளுகையின்கீழிருந்து விடுதலையானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் மக்கள் முன்புபோல தங்களுடைய கூடாரங்களிலே குடியிருந்தார்கள். ஆகிலும் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள்விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலைத்திருந்தது. யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரர்களையும், பத்து இரதங்களையும், பத்தாயிரம் காலாட்களையுமே அல்லாமல், மக்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்து, போரடிக்கும்இடத்தின் தூளைப்போல ஆக்கிவிட்டான். யோவாகாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. யோவாகாஸ் இறந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோவாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான். யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருட ஆட்சியில் யோவாகாசின் மகனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருடங்கள் அரசாட்சிசெய்து, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளையெல்லாம் செய்தான். யோவாசின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் போர்செய்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. யோவாஸ் இறந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களின் அருகில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுடைய நாட்களில் எலிசா மரணத்திற்கு ஏதுவான வியாதியாகக் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்திற்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான். எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து: கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது யெகோவாவுடைய ரட்சிப்பின் அம்பும், சீரியர்களிடமிருந்து விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமாக இருக்கிறது; நீர் ஆப்பெக்கிலே சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர் என்றான். பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுமுறை அடித்து நின்றான். அப்பொழுது தேவனுடைய மனிதன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுமுறை அடித்தீரானால், அப்பொழுது சீரியர்களை முற்றிலும் முறியடிப்பீர்; இப்பொழுதோ சீரியர்களை மூன்றுமுறை மாத்திரம் முறியடிப்பீர் என்றான்.

2 இராஜாக்கள் 13:1-19 பரிசுத்த பைபிள் (TAERV)

சமாரியாவில் யெகூவின் குமாரனான யோவாகாஸ் இஸ்ரவேலின் புதிய ராஜா ஆனான். இது அகசியாவின் குமாரனான யோவாசின் 23வது ஆட்சியாண்டின்போது ஏற்பட்டது. யோவாகாஸ் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தான். கர்த்தருக்கு வேண்டாதவற்றையே யோவாகாஸ் செய்து வந்தான். இஸ்ரவேலரின் பாவத்துக்குக் காரணமாயிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவச்செயல்களை இவனும் பின்பற்றினான். அதனைச் செய்வதை நிறுத்தவில்லை. அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருக்கு கோபம் வந்தது. எனவே அவர்களை கர்த்தர் ஆராம் ராஜா ஆசகேலின் கையிலும், ஆசகேலின் குமாரனான பெனாதாத் கையிலும் ஒப்படைத்தார். பிறகு தமக்கு உதவி செய்யும்படி யோவாகாஸ் கர்த்தரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். கர்த்தரும் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலரின் துன்பங்களைப் பார்த்தார். ஆராம் ராஜா இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்துவதைக் கவனித்தார். எனவே கர்த்தர் இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒருவனை அனுப்பினார். இஸ்ரவேலர்கள் ஆராமியர்களிடமிருந்து விடுதலை பெற்றனர். முன்பு போல, அவர்கள் தமது கூடாரங்களுக்கு (வீடுகள்) சென்றனர். எனினும் அவர்கள் தாம் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் பாவம் செய்வதற்குக் காரணமான யெரொபெயாமின் குடும்பத்தார் பாவங்களை அவர்கள் தொடர்ந்து செய்தனர். அவர்கள் சமாரியாவில் அஷெரா தூண்களையும் வைத்திருந்தனர். ஆராமின் ராஜா யோவாகாசின் படையைத் தோற்கடித்தான். படையில் பல வீரர்களைக் கொன்றான். 50 குதிரை வீரர்கள், 10 இரதங்கள், 10,000 காலாட் வீரர்களை மட்டுமே விட்டுவிட்டான். யோவாகாசின் வீரர்கள் காலடியில் மிதிபட்ட தூசியைப்போன்று ஆனார்கள். யோவாகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களைப் பற்றியும் அவனது வலிமைபற்றியும் இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாகாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் அவனை சமாரியாவில் அடக்கம் செய்தனர். பிறகு அவனது குமாரன் யோவாஸ் ராஜா ஆனான். யோவாகாசின் குமாரன் யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலரின் ராஜா ஆனான். இது யூதாவின் ராஜாவாகிய யோவாசின் 37வது ஆட்சியாண்டில் நிகழ்ந்தது. யோவாஸ் 16 ஆண்டுகள் இஸ்ரவேலை ஆண்டான். யோவாசும் கர்த்தருக்குப் பிடிக்காதவற்றைச் செய்தான். இஸ்ரவேலர்களுக்குப் பாவத்தைத் தேடித்தந்த, பாவத்தை உண்டு பண்ணிய நேபாத்தின் குமாரனான யெரொபெயாமின் பாவச்செயல்களைச் செய்வதை இவனும் நிறுத்தவில்லை. அவன் அவற்றைத் தொடர்ந்து செய்தான். யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வலிமையும் அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு செய்த போர்களும் பற்றி இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாஸ் மரித்ததும் இஸ்ரவேல் ராஜாக்களான அவனது முற்பிதாக்களோடு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். யோவாசின் சிம்மாசனத்தில் யெரொபெயாம் ராஜாவாக அமர்ந்தான். எலிசா நோயுற்றான். பின், இந்த நோயாலேயே அவன் மரித்துப்போனான். இஸ்ரவேல் ராஜாவாகிய யோவாஸ், எலிசாவைப் பார்க்கப் போனான். யோவாஸ் எலிசாவுக்காக அழுதான். அவன் “என் தந்தையே! என் தந்தையே! இது இஸ்ரவேலின் இரதமும் அதன் குதிரைகளுக்கும் ஏற்ற நேரமா?” என்றான். எலிசா அவனிடம், “ஒரு வில்லையும் சில அம்புகளையும் எடுத்துக்கொள்” என்றான். யோவாஸ் ஒரு வில்லையும், சில அம்புகளையும் எடுத்துக்கொண்டான். பிறகு எலிசா இஸ்ரவேல் ராஜாவிடம், “வில்லில் உனது கையை வை” என்றான். யோவாஸ் அவ்வாறே செய்தான். பிறகு எலிசா தன் கையை ராஜாவின் கையோடு வைத்தான். எலிசா, “கிழக்கு ஜன்னலைத் திறவுங்கள்” என்றான், யோவாஸ் அவ்வாறே திறந்தான். பிறகு எலிசா “எய்துவிடு” என்றான். யோவாஸ் எய்தான். பிறகு எலிசா, “இது கர்த்தருடைய வெற்றி அம்பு! இது ஆராம் மேல் கொள்ளும் வெற்றியாகும்! நீ ஆராமியர்களை ஆப்பெக்கில் வெல்வாய். அவர்களை அழிப்பாய்” என்றான். எலிசா மேலும், “அம்புகளை எடு” என்றான். யோவாஸ் எடுத்தான். “தரையின் மேல் அடி” என்று இஸ்ரவேல் ராஜாவிடம் கூறினான். யோவாஸ் மூன்று முறை தரையின் மீது அடித்தான். பிறகு நிறுத்தினான். அதனால் தேவமனிதனுக்கு (எலிசாவிற்கு) யோவாசின் மேல் கோபம் வந்தது. அவன், “நீ ஐந்து அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும்! அதனால் ஆராமை அது அழியும்வரை தோற்கடித்திருப்பாய்! ஆனால் இப்போது நீ மூன்றுமுறை மட்டுமே ஆராமை வெல்வாய்!” என்றான்.