2 இராஜாக்கள் 17:1-5

2 இராஜாக்கள் 17:1-5 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் செய்யவில்லை. அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனைச் சேவிக்கிறவனாகி, அவனுக்குப் பகுதி கட்டினான். ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான். அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்றுவருஷம் முற்றிக்கை போட்டிருந்தான்.

2 இராஜாக்கள் 17:1-5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யூதாவின் அரசன் ஆகாஸ் அரசாண்ட பன்னிரண்டாம் வருடத்தில் ஏலாவின் மகன் ஓசெயா சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். அவன் ஒன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். யெகோவாவின் பார்வையில் தீமையானதையே இவனும் செய்தான். ஆனால் இஸ்ரயேலின் முந்தைய அரசர்கள் செய்ததுபோல செய்யவில்லை. அசீரிய அரசன் சல்மனாசார் ஓசெயாவை தாக்கவந்ததால், ஓசெயா அவனுக்குக் கீழ்பட்டவனாகி வரி செலுத்தி வந்தான். ஆனால் பின்பு ஓசெயா எகிப்திய அரசன் சோ என்பவனிடம் தூதுவரை அனுப்பியதோடு, அசீரிய அரசனுக்கு வருடாவருடம் செலுத்திவந்த வரியைக் கொடுக்காமலும் இருந்தான். இதனால் ஓசெயா ஒரு துரோகி என்று அசீரிய அரசன் கண்டுபிடித்தான். எனவே சல்மனாசார் அவனைப் பிடித்துச் சிறையிலிட்டான். சமாரியாவின் வீழ்ச்சி அசீரிய அரசன் முழு நாட்டையும் தாக்கி, சமாரியாவுக்கு அணிவகுத்துப் போய் அதை மூன்று வருடங்களாக முற்றுகையிட்டிருந்தான்.

2 இராஜாக்கள் 17:1-5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருட ஆட்சியில், ஏலாவின் மகனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருடங்கள் அரசாட்சிசெய்து, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் செய்யவில்லை. அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனுக்குக் கீழிருந்து, அவனுக்கு வரி செலுத்தினான். ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பினதும், தனக்கு வருடந்தோறும் செய்ததுபோல், வரி செலுத்தாமல் போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான். அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்றுவருடங்கள் முற்றுகையிட்டிருந்தான்.

2 இராஜாக்கள் 17:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் 12ஆம் ஆட்சியாண்டில் ஏலாவின் குமாரனாகிய ஓசெயா என்பவன் இஸ்ரவேலின் ராஜாவானான். இவன் ஒன்பது ஆண்டுகள் சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை அரசாண்டான். கர்த்தரால் தவறு என்று குறிப்பிடப்பட்ட காரியங்களையே ஓசெயா செய்துவந்தான். ஆனால் இவன் இதற்கு முன் இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்களைப் போன்று அவ்வளவு கெட்டவனாக இல்லை. அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் என்பவன் இவனுக்கு எதிராகப் போர்செய்ய வந்தான். ஓசெயா சல்மனாசாரின் சேவகன் ஆகி அவனுக்கு வரி செலுத்தி வந்தான். ஆனால், பிறகு ஓசெயா தனக்கு எதிராகச் சதி செய்வதை அசீரியா ராஜா அறிந்துகொண்டான். ஓசெயா எகிப்து ராஜாவுக்குத் தூதுவர்களை அனுப்பியிருந்தான். எகிப்து ராஜாவின் பெயர் சோ ஆகும். அந்த ஆண்டில், முன்னைய ஆண்டுகளை போன்று ஓசெயா சல்மனாசாருக்கு வரி செலுத்தவில்லை. அதனால் சல்மனாசார் ஓசெயாவைப் பிடித்து சிறையில்போட்டான். பிறகு அசீரிய ராஜா இஸ்ரவேல் முழுவதும் பயணம் செய்தான். அவன் சமாரியாவிற்கு வந்தான். அவன் அதனை மூன்று ஆண்டுகள் முற்றுகையிட்டான்.