2 இராஜாக்கள் 17:6-41

2 இராஜாக்கள் 17:6-41 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள். செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி, உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி, கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து, இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்து வந்தார்கள். நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகள் ஞான திருஷ்டிக்காரர் எல்லாரையுங்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் திடச்சாட்சியாய் எச்சரித்துக்கொண்டிருந்தும், அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடேபண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று. தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள். அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா கோத்திரம் மாத்திரமே மீதியாயிற்று. யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார். இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான். அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து, கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள். அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது. அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள். அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான். அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான். ஆனாலும் அந்தந்த ஜாதி தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, அந்தந்த ஜாதியார் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர் உண்டுபண்ணின மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள். பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும், ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகனித்து வந்தார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள். அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள். இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை. கர்த்தர் இவர்களோடே உடன்படிக்கைபண்ணி, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்களுக்குப் பலியிடாமலும், உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு, அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார். ஆனாலும் அவர்கள் செவிகொடாமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள். அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.

2 இராஜாக்கள் 17:6-41 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

ஓசெயாவின் ஆட்சியின் ஒன்பதாம் வருடத்தில் அசீரிய அரசன் சமாரியாவைக் கைப்பற்றி இஸ்ரயேலரை அசீரியாவுக்கு நாடுகடத்தினான். அவன் ஆபோர் ஆற்றுக்கு அருகே கோசானிலும் ஆலாகிலும், மேதியாவின் பட்டணங்களிலும் அவர்களைக் குடியேற்றினான். இஸ்ரயேலர் எகிப்திய அரசனான பார்வோனின் அதிகாரத்திலிருந்து தங்களை விடுதலையாக்கிக் கொண்டுவந்த தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியாலேயே, அவர்களுக்கு இவையெல்லாம் ஏற்பட்டது. அவர்கள் வேறு தெய்வங்களையும் வணங்கி, யெகோவா தங்களுக்கு முன்னால் துரத்திவிட்ட நாட்டினரின் நடைமுறைகளையும் பின்பற்றினார்கள். அத்துடன் இஸ்ரயேல் அரசர்கள் உட்புகுத்திய பாரம்பரிய வழக்கங்களையும் பின்பற்றினர். மேலும் இஸ்ரயேல் மக்கள் தங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு எதிராக பிழையான செயல்களை இரகசியமாகவும் செய்தனர். அத்துடன் காவற் கோபுரத்திலிருந்து, அரணாக்கப்பட்ட பட்டணம் வரையும் தங்களுடைய எல்லாப் பட்டணங்களிலும் வழிபாட்டு மேடைகளைக் கட்டினார்கள். ஒவ்வொரு உயர்ந்த குன்றுகளிலும், விசாலமான ஒவ்வொரு மரத்தின் கீழும் புனித கற்களையும், அசேரா விக்கிரக தூண்களையும் நாட்டினார்கள். யெகோவா தங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட நாட்டினர் செய்ததுபோல் ஒவ்வொரு வழிபாட்டு மேடைகளிலும் தூபங்காட்டினார்கள். கொடிய காரியங்களையும் செய்து யெகோவாவைக் கோபப்படுத்தினார்கள். “இவற்றைச் செய்யவேண்டாம்” என்று யெகோவா குறிப்பாகத் திரும்பத்திரும்ப எச்சரித்த விக்கிரக வழிபாட்டையே அவர்கள் செய்துவந்தார்கள். யெகோவா தமது இறைவாக்கினர் மூலமும், தரிசனம் காண்பவர்கள் மூலமும், “உங்கள் பொல்லாத வழிகளைவிட்டு விலகுங்கள். நான் எனது பணியாட்களான இறைவாக்கினர்மூலம் கொடுத்து, உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்ட முழு சட்டத்தின்படி எனது கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளுங்கள்” என்று இஸ்ரயேலையும், யூதாவையும் எச்சரித்தார். ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்காத தங்கள் முற்பிதாக்களைப்போல பிடிவாதமுள்ளோராக இருந்தார்கள். யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கைக்கொள்ளும்படி எச்சரித்துக் கொடுத்த விதிமுறைகளையும், நியமங்களையும், அவர்களுடன் செய்த உடன்படிக்கையையும் அவர்கள் வெறுத்துத் தள்ளிவிட்டார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களைப் பின்பற்றி, தாங்களும் பயனற்றவர்களானார்கள். யெகோவா அவர்களுக்குக் கட்டளையிட்டு, “நீங்கள் உங்களைச்சுற்றி வாழும் நாட்டினர் செய்வதுபோல் செய்யவேண்டாம்” என்று சொல்லியுங்கூட, அவர்கள் அதையே பின்பற்றினார்கள். யெகோவா செய்யவேண்டாமென்று விலக்கியவற்றையே அவர்கள் செய்தார்கள். தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகள் யாவையும்விட்டு, தங்களுக்கு வார்க்கப்பட்ட உலோகத்தால் இரண்டு கன்றுக்குட்டிகளின் உருவத்தில் விக்கிரகங்களையும், அசேரா விக்கிரக தூணையும் செய்தார்கள். எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் வணங்கி, பாகாலையும் வழிபட்டார்கள். தங்கள் மகன்களையும், மகள்களையும் நெருப்பில் பலியிட்டார்கள். குறிகேட்டு சகுனம் பார்த்தல், மாயவித்தை முதலிய வழக்கங்களில் ஈடுபட்டு, யெகோவாவின் பார்வையில் தீய செயல்களைச் செய்வதற்குத் தங்களை விற்று யெகோவாவைக் கோபமூட்டினார்கள். இதனால் யெகோவா இஸ்ரயேலரில் அதிக கோபங்கொண்டு தமது சமுகத்திலிருந்து அவர்களை அகற்றிவிட்டார். யூதா கோத்திரம் மட்டுமே மீதியாயிருந்தது. யூதாவுங்கூட தங்கள் இறைவனாகிய யெகோவாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் இஸ்ரயேலர் அறிமுகப்படுத்திய நடைமுறைகளைப் பின்பற்றினர். இதனால் யெகோவா இஸ்ரயேலர் அனைவரையும் வெறுத்துத் தள்ளினார். அவர்களை அவர் துன்பத்துக்குள்ளாக்கி, தமது சமுகத்திலிருந்து முழுவதுமாகத் துரத்துண்டு போகும்வரையும் கொள்ளையிடுபவர்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தார். தாவீதின் வம்சத்திலிருந்து யெகோவா இஸ்ரயேலரை அகற்றியதும், அவர்கள் நேபாத்தின் மகன் யெரொபெயாமை தங்களுக்கு அரசனாக்கினார்கள். யெரொபெயாமோ இஸ்ரயேலை யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து வழிவிலகச் செய்து அவர்களைப் பெரும்பாவமொன்றைச் செய்யவும் தூண்டினான். இஸ்ரயேலர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களையும் தொடர்ந்து செய்தார்கள். அவற்றைவிட்டு விலகவில்லை. யெகோவா தமது பணியாளர்களான இறைவாக்கினர்மூலம் எச்சரித்திருந்தபடியே, அவர்களைத் தமது முன்னிருந்து நீக்கிப்போடும்வரை அவர்கள் இவற்றைவிட்டு விலகவில்லை. எனவே இஸ்ரயேலர் தங்கள் சொந்த நாட்டிலிருந்து அசீரியாவுக்கு நாடுகடத்தப்பட்டார்கள். அவர்கள் இன்றும் அங்கேயே இருக்கிறார்கள். அசீரிய அரசன், பாபிலோனிலிருந்தும், கூத்தா, ஆவா, ஆமாத், செப்பர்வாயீம் ஆகிய இடங்களிலிருந்தும் மனிதர்களைக் கொண்டுவந்து சமாரியாவின் பட்டணங்களில் இஸ்ரயேலருக்குப் பதிலாக குடியேற்றினான். அவர்கள் சமாரியாவைத் தங்களுடைய உடைமையாக்கிக் கொண்டு அந்தப் பட்டணங்களிலே வாழ்ந்தார்கள். அவர்கள் முதன்முதலாக அங்கு வந்து வாழ்ந்தபோது யெகோவாவை வழிபடவில்லை. அதனால் யெகோவா அவர்களின் மத்தியில் சிங்கங்களை அனுப்பினார். அவை அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டன. அப்பொழுது, “நீர் நாடுகடத்தி சமாரியா பட்டணங்களில் குடியேற்றிய மக்களுக்கு, இந்த நாட்டின் தெய்வத்தை எப்படி வழிபடவேண்டுமென்று தெரியவில்லை. இந்த நாட்டு தெய்வத்திற்கு என்ன செய்யவேண்டும் என்று அறியாதபடியால் அவர் சிங்கங்களை அவர்கள் மத்தியில் அனுப்பியிருக்கிறார். அவை அவர்களைக் கொல்கின்றன” என்று அசீரிய அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அசீரிய அரசன் அவர்களிடம், “சமாரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆசாரியர்களில் ஒருவனை அங்கு வாழ்வதற்காகத் திரும்பக் கூட்டிக்கொண்டு போங்கள். அவன் அங்கு வசித்து அந்நாட்டின் தெய்வத்தை எப்படி வணங்க வேண்டுமென்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கட்டும்” என்று கட்டளையிட்டான். அவ்வாறே சமாரியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஆசாரியர்களில் ஒருவன் பெத்தேலுக்கு வந்து அங்கே வாழ்ந்து அவர்களுக்கு யெகோவாவை எப்படி வழிபடவேண்டுமென்று கற்பித்தான். ஆனாலும் ஒவ்வொரு நாட்டினரின் மக்கள் குழுவும் தாங்கள் குடியமர்த்தப்பட்ட அநேக பட்டணங்களில், அவரவருடைய சொந்த தெய்வங்களை உருவாக்கி சமாரியரினால் கட்டப்பட்ட உயரமான வழிபாட்டு மேடைகளிலும், கோயில்களிலும் அவற்றை வைத்தார்கள். பாபிலோன் பட்டண மனிதர் சுக்கோத் பெனோத் தெய்வத்தையும், கூத் பட்டணத்து மனிதர் நேர்கால் தெய்வத்தையும், ஆமாத் பட்டணத்து மனிதர் அசிமா தெய்வத்தையும், ஆவீம் பட்டணத்து மனிதர் நிபேகாஸ் தெய்வத்தையும், தர்காக் தெய்வத்தையும் உருவங்களாகச் செய்தனர். செப்பர்வியர் தங்கள் செப்பர்வாயிமின் தெய்வங்களான அத்ரமெலேக்கு, அன்னமெலேக்கு என்னும் தெய்வங்களுக்கு தங்கள் பிள்ளைகளையும் நெருப்பில் பலி செலுத்தினார்கள். அவர்கள் யெகோவாவை வழிபட்டார்கள். ஆனாலும், வழிபாட்டு மேடைகளிலுள்ள கோவில்களில் தங்கள் பூசாரிகளாகப் பணிசெய்வதற்கு தங்கள் மக்களிலிருந்து பலதரப்பட்டவர்களையும் நியமித்தார்கள். அவர்கள் யெகோவாவை வழிபட்டாலும், தாங்கள் விட்டுவந்த நாட்டினரின் முறைகளுக்கேற்ப தங்கள் சொந்தத் தெய்வங்களுக்கும் பணிசெய்து வந்தார்கள். அவர்கள் இன்றுவரை தங்கள் முந்தைய கிரியைகளுக்கேற்றபடியே செய்து வருகிறார்கள். ஆனால் யெகோவாவை உண்மையாக வழிபடவோ, அவர் இஸ்ரயேல் என்று பெயரிட்ட யாக்கோபின் சந்ததிகளுக்குக் கொடுத்த விதிமுறைகளையும், ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும், கட்டளைகளையும் கைக்கொள்ளவோ இல்லை. யெகோவா இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்தபோது அவர்களிடம், “நீங்கள் வேறு தெய்வங்களை வழிபடவோ, தலைவணங்கவோ, அவைகளுக்குப் பணிசெய்யவோ, பலி செலுத்தவோ வேண்டாம். எகிப்திலிருந்து பலத்த ஆற்றலினாலும், நீட்டப்பட்ட புயத்தினாலும் உங்களைக் கொண்டுவந்த யெகோவாவையே நீங்கள் வழிபடவேண்டும். அவரை வணங்கி அவருக்கு மட்டுமே பலிசெலுத்தவேண்டும். அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த விதிமுறைகளையும், ஒழுங்குவிதிகளையும், சட்டங்களையும், கட்டளைகளையும் நீங்கள் எப்பொழுதும் கைக்கொள்ளக் கவனமாயிருக்க வேண்டும். வேறு தெய்வங்களை வழிபட வேண்டாம். நான் உங்களுடன் செய்த உடன்படிக்கையை மறவாமலும், வேறு தெய்வங்களை வழிபடாமலும் இருங்கள். அதற்குப் பதிலாக உங்கள் இறைவனாகிய யெகோவாவை மட்டுமே வழிபடுங்கள். அவரே உங்களுடைய எல்லாப் பகைவர்களின் கையிலிருந்தும் உங்களை விடுதலையாக்குவார்” என்று கட்டளையிட்டிருந்தார். ஆனாலும் அவர்களோ செவிகொடுக்காமல் தொடர்ந்து தங்கள் பழைய வழக்கங்களையே செய்துவந்தார்கள். இந்த மக்கள் யெகோவாவை வழிபட்டுக் கொண்டிருக்கும்போதே தங்கள் விக்கிரகங்களுக்கும் பணிசெய்தார்கள். இன்றுவரை தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோல அவர்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

2 இராஜாக்கள் 17:6-41 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய் அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக இஸ்ரவேல் மக்கள் பாவம்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து, யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள். செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்வரையுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி, உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி, யெகோவா தங்களை விட்டுக் குடிவிலக்கின மக்களைப்போல, சகல மேடைகளிலும் தூபம்காட்டி, யெகோவாவுக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து, இப்படிச் செய்யத்தகாது என்று யெகோவா தங்களுக்குச் சொல்லியிருந்தும், அருவருப்பான விக்கிரகங்களை வழிபட்டு வந்தார்கள். நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பி, நான் உங்கள் முன்னோர்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று யெகோவா தீர்க்கதரிசிகள், தரிசனம் காண்கிறவர்கள் எல்லோரையும்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் மிக உறுதியாக எச்சரித்துக்கொண்டிருந்தும், அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய யெகோவாமேல் விசுவாசிக்காமலிருந்த கடினக் கழுத்துள்ள தங்கள் முன்னோர்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் முன்னோர்களோடுசெய்த அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்கு மிக உறுதியாகக் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த மக்களுக்குப் பின்சென்று, தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலை வணங்கினார்கள். அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள். ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா வம்சம் மாத்திரமே மீதியானது. யூதா மக்களும் தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். ஆகையால் யெகோவா இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளும்வரை ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். இஸ்ரவேலர்கள் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் யெகோவாவைவிட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும் செய்தான். அப்படியே இஸ்ரவேல் மக்கள் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து, யெகோவா தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளைவிட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர்கள் தங்கள் தேசத்திலிருந்து அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனிதர்களை வரச்செய்து, அவர்களை இஸ்ரவேல் மக்களுக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாகக் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள். அவர்கள் அங்கே குடியேறினது முதல், யெகோவாவுக்குப் பயப்படாததால், யெகோவா அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது. அப்பொழுது மக்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேறச்செய்த மக்கள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாததால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாததால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள். அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படி, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான். அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, யெகோவாவுக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான். ஆனாலும் அந்தந்த மக்கள் தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டாக்கி, அந்தந்த மக்கள் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர்கள் உண்டாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள். பாபிலோனின் மனிதர்கள் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனிதர்கள் நேர்காலையும், ஆமாத்தின் மனிதர்கள் அசிமாவையும், ஆவியர்கள் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர்கள் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் சுட்டெரித்து வந்தார்கள். அவர்கள் யெகோவாவுக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் இழிவானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள். அப்படியே யெகோவாவுக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த மக்களுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களை வணங்கியும் வந்தார்கள். இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், யெகோவா இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபின் மக்களுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தவிதமாகிலும் செய்கிறதுமில்லை. யெகோவா இவர்களோடு உடன்படிக்கைசெய்து, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், வணங்காமலும், அவர்களுக்குப் பலியிடாமலும், உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவாவுக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு, அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்கள், முறைமைகள், நியாயப்பிரமாணம், கற்பனைகள் ஆகியவற்றை நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள். நான் உங்களோடே செய்த உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்களுடைய எல்லா எதிரிகளின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார். ஆனாலும் அவர்கள் அவைகளைக் கேட்காமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள். அப்படியே அந்த மக்கள் யெகோவாவுக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் முன்னோர்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.

2 இராஜாக்கள் 17:6-41 பரிசுத்த பைபிள் (TAERV)

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் அசீரிய ராஜா சமாரியாவைப் பிடித்தான். இஸ்ரவேலர்களைச் சிறை பிடித்து அசீரியாவுக்குக் கொண்டு போனான். அவன் அவர்களை கோசான் ஆற்று ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் நகரங்களிலும் குடிவைத்தான். இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்ததால் அவர்களுக்கு இவ்வாறு நடந்தது. கர்த்தர் தாமே இஸ்ரவேலர்களை எகிப்தின் பார்வோனிடமிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தார்! ஆனால் அவர்கள் வேறு தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அவர்களுக்கு முன்பு (அந்நிலப்பகுதியில்) அங்கிருந்து கர்த்தர் துரத்தியிருந்த நாட்டினரின் பழக்கங்களை அவர்கள் பின்பற்றினார்கள். அவர்களும் தங்கள் ராஜாக்கள் செய்து கொண்டிருந்தவற்றையே (தீமை) செய்தனர். இஸ்ரவேலர்கள் இரகசியமாக தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகக் காரியங்களைச் செய்தனர். அந்தக் காரியங்கள் தவறாயின. இஸ்ரவேலர்கள் தங்களது சிறிய நகரங்கள் முதல் பெரிய கோட்டையமைந்த நகரங்கள் வரை அவர்களின் எல்லா நகரங்களிலும் மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயங்களைக் கட்டினார்கள். இவர்கள் ஞாபகக் கற்களையும் அசெரியா தூண்களையும் ஒவ்வொரு மலையின் உச்சியிலும் ஒவ்வொரு பச்சைமரத்தடிகளிலும் உருவாக்கினார்கள். இஸ்ரவேலர்கள் அங்கு நறுமணப் பொருட்களை எரித்து தொழுதுகொண்டனர். ஏற்கெனவே கர்த்தரால் அந்நாட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட நாட்டினரைப்போன்றே இவர்களும் செய்து வந்தனர். இஸ்ரவேலர்கள் தீயச் செயல்களைச் செய்துக்கொண்டிருந்தனர். அது கர்த்தரைக் கோபங்கொள்ள செய்தது. கர்த்தர், “நீங்கள் இதனைச் செய்யக்கூடாது” என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் அவர்கள் விக்கிரகங்களுக்கு சேவைச் செய்தனர். இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும் ஒவ்வொரு தீர்க்கதரிசிகள் மூலமும் ஞானதிருஷ்டிக்காரர்கள் மூலமும் கர்த்தர் எச்சரித்து வந்தார். கர்த்தர், “நீங்கள் செய்யும் கெட்ட செயல்களில் இருந்து திரும்புங்கள். எனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த சட்டங்களைப் பின்பற்றுங்கள். இச்சட்டங்களை நான் உங்களுக்கு எனது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் மூலம் கொடுத்து வந்தேன்” என்றார். ஆனால் ஜனங்கள் அதனைக் கவனிக்கவில்லை. அவர்கள் தம் முற்பிதாக்களைப் போலவே பிடிவாதமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்களின் முற்பிதாக்களும் தமது தேவனாகிய கர்த்தரை நம்பவில்லை. ஜனங்கள் கர்த்தருடைய சட்டங்களை மறுத்தனர். தமது முற்பிதாக்களோடு கர்த்தர் செய்து கொண்ட உடன்படிக்கையும் மறுத்தனர். கர்த்தருடைய எச்சரிக்கைகளையும் அவர்கள் கவனிக்க மறுத்தனர். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுக் கொண்டு பயனற்றுப்போனார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களைப் போன்று வாழ்ந்தனர். ஆனால் அது கர்த்தரால் விலக்கப்பட்ட வாழ்க்கையாய் இருந்தது. ஜனங்கள் அவர்களது தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தினார்கள். அவர்கள் இரண்டு பொற்கன்றுக்குட்டிகளையும் உருவத் தூண்களை நாட்டி வானத்தில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் தொழுதுகொண்டனர். பாகாலுக்கு சேவை செய்தனர். நெருப்பில் தங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அவர்கள் பலியாகக் கொடுத்தனர். எதிர்காலத்தை அறிந்துக் கொள்ள மந்திரங்களையும் சூனியங்களையும் பயன்படுத்தினார்கள். பாவம் என்று கர்த்தர் சொன்னவற்றுக்கு அவர்கள் தம்மைத்தாமே பலியாக்கிக்கொண்டு கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானார்கள். எனவே இஸ்ரவேலில் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு அவர்களைத் தம் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினார். யூதாவின் கோத்திரத்தைத் தவிர, வேறு எந்த இஸ்ரவேலர்களையும் கர்த்தர் அங்கு விட்டுவைக்கவில்லை. யூத ஜனங்களும் கூட தங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்களும் இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே வாழ்ந்தனர். இஸ்ரவேலின் வழிவந்தவர்கள் அனைவரையும் கர்த்தர் விலக்கினார். அவர்களுக்கு நிறைய துன்பங்களைக் கொடுத்தார். அவர்களது எதிரிகளால் அவர்களை அழியவிட்டார். இறுதியில், தமது பார்வையில் இருந்து தூர விலக்கினார். கர்த்தர் இஸ்ரவேலை தாவீதின் (வீட்டைவிட்டுப்) குடும்பத்தை விட்டுப் பிரித்தார், நேபாத்தின் குமாரனான யெரொபெயாமை இஸ்ரவேலருக்கு ராஜாவாக்கினர். அப்போது அவன் இஸ்ரவேலரைக் கர்த்தரை விட்டு விலகவும் பெரும்பாவங்கள் செய்யவும் வைத்துவிட்டான். எனவே இஸ்ரவேலர் யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றினார்கள். அப்பாவங்களைச் செய்துகொண்டிருக்காதபடி தம்மை கர்த்தர் தமது பார்வையிலிருந்து அவர்களை விலக்கும்வரை தடுத்துக்கொள்ளவில்லை. ஏற்கெனவே இவ்வாறு நடக்கும் என்று கர்த்தர் கூறியிருந்தார். இதனைத் தனது தீர்க்கதரிசிகள் மூலம் சொல்லி வந்தார். எனவே, இஸ்ரவேலர்கள் தங்கள் நாட்டிலிருந்து அசீரியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இன்றுவரை அங்கேயே இருக்கின்றனர். அசீரியாவின் ராஜா இஸ்ரவேலரை சமாரியாவிலிருந்து வெளியேற்றினான். பிறகு அவன் பாபிலோன், கூத்தா, ஆபா, ஆமாத், செப்பர்வாயிமிலும் ஆகிய நாடுகளிலிருந்து ஜனங்களை அங்கே குடியேற்றினான். அவர்கள் சமாரியாவிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் வாழ்ந்தனர். அவர்கள் சமாரியாவில் வாழத்தொடங்கியபோது, கர்த்தரை உயர்வாக மதிக்கவில்லை. எனவே, கர்த்தர் சிங்கங்களை அனுப்பி அவர்களைத் தாக்கினார். அவர்களில் சிலரை அச்சிங்கங்கள் கொன்றுபோட்டன. சிலர் அசீரியாவின் ராஜாவிடம், “நீங்கள் வெளியிடங்களில் இருந்து கொண்டுவந்து சமாரியாவில் குடியேற்றிய ஜனங்கள் அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. அதனால் அந்த தெய்வம் அவர்களைக் தாக்க சிங்கங்களை அனுப்புகிறார். அவை அந்நாட்டு தெய்வத்தின் சட்டங்களை அறியாதவர்களைக் கொன்றுபோடுகிறது” என்றார்கள். அதற்கு அசீரியாவின் ராஜா, “நீங்கள் சமாரியாவிலிருந்து சில ஆசாரியர்களை அழைத்து வந்தீர்கள் அல்லவா. சமாரியாவுக்கு நான் கைப்பற்றி வந்த ஆசாரியர்களில் ஒருவனைத் திருப்பியனுப்பி அவனை அங்கே வாழும்படி விடுங்கள், பிறகு அவன் ஜனங்களுக்கு அந்நாட்டின் தெய்வத்தின் சட்டங்களைக் கற்றுத்தருவான்” என்றான். எனவே அவ்வாறே சமாரியாவிலிருந்து அழைத்துப்போயிருந்த ஆசாரியர்களில் ஒருவனை பெத்தேல் என்னும் இடத்தில் வாழவைத்தனர். அவன் கர்த்தரை எவ்வாறு கனப்படுத்துவது என்று ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான். ஆனால் அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெய்வங்களை உருவாக்கினார்கள். அவற்றை அவர்கள் குடியேறிய நகரங்களில் சமாரியர் உருவாக்கிய மேடைகளின் கோவில்களில் வைத்தனர். பாபிலோனிய ஜனங்கள் சுக்கோத் பெனோத் என்னும் பொய்த் தெய்வத்தையும், கூத்தின் ஜனங்கள் நேர்கால் என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆமாத்தின் ஜனங்கள் அசிமா என்னும் பொய்த் தெய்வத்தையும், ஆவியர்கள் நிபேகாஸ், தர்தாக் என்னும் பொய்த் தெய்வங்களையும் உண்டாக்கினார்கள். செப்பர்வியர் செப்பர்வாயிமின் தெய்வங்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை நெருப்பில் தகன பலி கொடுத்துவந்தனர். அவர்கள் கர்த்தருக்கும் ஆராதனைச் செய்தார்கள். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்கு அவர்களுக்குள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இந்த ஆசாரியர்கள் ஜனங்களுக்காக அவ்வாலயங்களில் பலிகொடுத்து வந்தனர். அவர்கள் கர்த்தரை மதித்தார்கள். அதே சமயத்தில தமக்குச் சொந்தமான பொய்த் தெய்வங்களையும் சேவித்தார்கள். தம் சொந்த நாடுகளில் வழிபட்டு வந்த விதத்திலே தம் சொந்தத் தெய்வங்களை அங்கும் சேவித்து வந்தனர். இன்றும் அவர்கள் முன்பு போலவே வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கர்த்தரை கனப்படுத்துவதில்லை. அவர்கள் இஸ்ரவேலர்களின் விதிகளுக்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. இஸ்ரவேல் என்று பெயரிட்ட யாக்கோபுவின் ஜனங்களுக்குக் கற்பித்த சட்டத்திற்கும் கற்பனைகளுக்கும் அடிபணிவதில்லை. இஸ்ரவேல் ஜனங்களோடு கர்த்தர் ஒரு உடன்படிக்கைச் செய்து கொண்டார். அவர் அவர்களிடம், “நீங்கள் அந்நிய தெய்வங்களை மதிக்கக் கூடாது. அதோடு அவற்றைத் தொழுதுகொள்ளவோ, அவற்றுக்கு சேவைசெய்யவோ பலிகள் செலுத்தவோ கூடாது, ஆனால் நீங்கள் கர்த்தரைப் பின்பற்ற வேண்டும். தேவனாகிய கர்த்தரே உங்களை எகிப்திலிருந்து மீட்டார். உங்களைக் காப்பாற்ற கர்த்தர் தனது பெரிய வல்லமையைப் பயன்படுத்தினார். நீங்கள் கர்த்தரைத் தொழுதுகொண்டு அவருக்குப் பலிகள் தரவேண்டும். நீங்கள் அவர் உங்களுக்காக எழுதிய விதிகளுக்கும், சட்டங்களுக்கும், போதனைகளுக்கும், கட்டளைகளுக்கும் அடிபணிய வேண்டும். எப்பொழுதும் இவற்றுக்கு அடிபணியவேண்டும். வேறு தெய்வங்களை மதிக்கக் கூடாது. நான் உங்களோடு செய்த உடன்படிக்கையை மறக்கக்கூடாது. நீங்கள் பிற தெய்வங்களை மதிக்கக்கூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தரை மட்டுமே நீங்கள் மதிக்க வேண்டும்! பிறகு அவர் உங்கள் பகைவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவார்” என்றார். ஆனால் இஸ்ரவேலர்கள் இதற்கு செவிசாய்க்கவில்லை. அவர்கள் அதற்கு முன்னால் செய்தவற்றையே மீண்டும் தொடர்ந்து செய்து வந்தனர். எனவே, இப்போது வேறு நாட்டினர் கர்த்தரை மதிப்பதோடு தங்கள் தெய்வங்களையும் சேவித்து வருகின்றனர். அவர்களின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் இதனை தங்கள் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தொடர்ந்து இன்றுவரையிலும் கூட செய்து வருகின்றனர்.