2 இராஜாக்கள் 20:7-21

2 இராஜாக்கள் 20:7-21 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான். எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான். அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப்பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: சாயை பாத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார். அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான். அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான். அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும். இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான். எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 20:7-21 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அப்பொழுது ஏசாயா, “அத்திப்பழ அடையொன்றைத் தயாரித்துப் பற்றுப்போடுங்கள்” என்றான். அவர்கள் அவ்வாறே செய்து அவனுடைய கட்டியின்மீது பற்றுப்போட்டார்கள். அப்பொழுது அவன் சுகமடைந்தான். எசேக்கியா ஏசாயாவிடம், “யெகோவா என்னைச் சுகப்படுத்துவார் என்பதற்கும் நான் இன்றிலிருந்து மூன்றாம் நாளில் யெகோவாவின் ஆலயத்திற்குப் போவேன் என்பதற்கு அடையாளம் என்ன?” என்று கேட்டிருந்தான். அதற்கு ஏசாயா பதிலாக, “யெகோவா உனக்கு வாக்குப்பண்ணியபடியே செய்வார் என்பதற்கு ஒரு அடையாளம் இதுவே: நீ சூரிய கடிகாரத்தின் நிழல் பத்துப் படிகள் முன்னேபோவதையா அல்லது பின்னேபோவதையா விரும்புகிறாய்?” என்று கேட்டான். அதற்கு எசேக்கியா, “நிழல் பத்துப் படிகள் முன்னோக்கி செல்வது ஒரு எளிய காரியம்.” ஆகவே, “பத்துப் படிகள் பின்னோக்கிப் போகட்டும்” என்றான். அப்பொழுது இறைவாக்கினன் ஏசாயா யெகோவாவிடம் மன்றாடினான். அப்படியே யெகோவா ஆகாஸின் சூரிய கடிகார நிழலைப் பத்துப் படிகள் பின்னாகப் போகும்படி செய்தார். அந்நாட்களில் பாபிலோனிய அரசன் பலாதானின் மகன் பெரோதாக்பலாதான், எசேக்கியா வியாதிப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் எசேக்கியாவுக்குக் கடிதங்களையும் அன்பளிப்பையும் அனுப்பினான். எசேக்கியா அந்தத் தூதுவரை வரவேற்றான். அவன் தனது களஞ்சியங்களிலுள்ள வெள்ளி, தங்கம், நறுமணப் பொருட்கள், சிறந்த எண்ணெய் ஆகியவற்றையும், ஆயுதசாலை முழுவதையும், தனது பொக்கிஷசாலையில் இருந்த எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான். தன் அரண்மனையிலும், தன்னுடைய அரசு முழுவதிலும் எசேக்கியா அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமில்லை. அப்பொழுது இறைவாக்கினன் ஏசாயா எசேக்கியா அரசனிடம், “அந்த மனிதர் எங்கிருந்து வந்தார்கள்? என்ன சொன்னார்கள்?” என்று கேட்டான். எசேக்கியா அதற்குப் பதிலாக, “அவர்கள் மிகவும் தூரத்திலுள்ள நாடான பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று பதில் சொன்னான். இறைவாக்கினன் அவனிடம், “உனது அரண்மனையில் அவர்கள் எதைப் பார்த்தார்கள்?” என்று கேட்டான். அதற்கு எசேக்கியா, “எனது அரண்மனையிலுள்ள எல்லாவற்றையும் அவர்கள் பார்த்தார்கள். எனது பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காட்டாமல் விட்டது ஒன்றுமேயில்லை” எனப் பதிலளித்தான். அதற்கு ஏசாயா எசேக்கியாவிடம், “யெகோவாவின் வார்த்தையைக் கேள். உனது அரண்மனையில் உள்ள ஒவ்வொன்றும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்து வைத்த யாவும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும் காலம் நிச்சயமாக வரும். அவைகளில் ஒன்றாகிலும் மீந்திருக்காது என்று யெகோவா கூறுகிறார். மேலும், நீ பெற்றெடுக்கும் உனது சந்ததியாகிய உனக்குப் பிறக்கும் சொந்த பிள்ளைகளில் சிலரும் கைதிகளாய் கொண்டுபோகப்பட்டு, பாபிலோன் அரசனின் அரண்மனையில் அதிகாரிகளாய் இருப்பார்கள் என்று யெகோவா சொல்கிறார்” என்றான். அதற்கு எசேக்கியா ஏசாயாவை நோக்கி, “நீர் சொன்னது யெகோவாவினுடைய வார்த்தை என்றால் அது நல்லதுதான்” என்று கூறினான். ஆனால் தனக்குள்ளே, என் வாழ்நாளிலாவது சமாதானமும் பாதுகாப்பும் இருக்காதா? என்று நினைத்தான். எசேக்கியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவனுடைய எல்லா சாதனைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. பட்டணத்துக்குள் தண்ணீரைக் கொண்டுவருவதற்கு அவன் எவ்வாறு குளமும், சுரங்கமும் அமைத்தான் என்பது அதில் அடங்கியுள்ளன. எசேக்கியா தன் முற்பிதாக்களைப்போல இறந்துபோனான். அவனுக்குப்பின் அவன் மகன் மனாசே அரசனானான்.

2 இராஜாக்கள் 20:7-21 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

பின்பு ஏசாயா: அத்திப்பழ அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, புண்ணின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான். எசேக்கியா ஏசாயாவை நோக்கி: யெகோவ என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் யெகோவவுடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான். அதற்கு ஏசாயா: யெகோவ தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வார் என்பதற்கு, யெகோவாவால் உனக்கு உண்டாகும் அடையாளமாக நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப் போகவேண்டுமோ, பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: நிழல் பத்துகோடுகள் முன்னோக்கிப்போவது எளிதான காரியம்; அப்படி வேண்டாம்; நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பவேண்டும் என்றான். அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் ஆகாசுடைய சூரிய கடிகாரத்தில் கோட்டுக்கு கோடு முன்னோக்கிச் சென்ற நிழல் பத்துகோடுகள் பின்னோக்கித் திரும்பும்படி செய்தார். அக்காலத்திலே பலாதானின் மகனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்திற்கு கடிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். எசேக்கியா அவர்களை அங்கீகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரண்மனையிலும் தன் ராஜ்ஜியத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை. அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான். அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் எவைகளைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பிக்காத பொருள் ஒன்றும் இல்லை என்றான். அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும். இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன யெகோவவுடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான். எசேக்கியாவின் மற்ற செயல்பாடுகளும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் வாய்க்காலையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரச்செய்ததும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. எசேக்கியா இறந்தபின், அவனுடைய மகனாகிய மனாசே அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 20:7-21 பரிசுத்த பைபிள் (TAERV)

பிறகு ஏசாயா ராஜாவிடம், “அத்திப் பழத்தின் அடையைப் பிசைந்து புண்களின் மேல் பற்று போடுங்கள்” என்றான். அவ்விதமாகவே அத்திப்பழத்தின் அடையைப் பிசைந்து எசேக்கியாவின் புண்ணின் மேல் பூசினார்கள். பிறகு எசேக்கியா குணமானான். எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தர் என்னைக் குணப்படுத்துவார் என்பதற்கான அடையாளம் எது? மூன்றாவது நாள் நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போவதற்கான அடையாளமும் எது?” என்று கேட்டான். ஏசாயாவோ, “நீ என்ன விரும்புகிறாய்? நிழல் பத்தடி முன்னே போகவேண்டுமா, பத்தடி பின்னே போகவேண்டுமா? இதுதான், கர்த்தர் தான் சொன்னபடியே செய்வார் என்று நிரூபிப்பதற்கான அடையாளமாகும்” என்றான். “நிழல் பத்தடி முன்னே போவது என்பது எளிதானது. அதைவிட நிழல் பத்தடிபின்னே போகவேண்டும்” என்று பதில் சொன்னான். பிறகு ஏசாயா, கர்த்தரிடம் வேண்டுதல் செய்தான். கர்த்தரும் ஆகாசுடைய (சூரிய கடியாரத்தில்) காலடிக்கு முன்போன நிழல் பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார். அப்போது, பாபிலோனின் ராஜாவாகிய பலாதானின் குமாரனான பெரோதாக் பலாதான் என்பவன் இருந்தான். அவன் எசேக்கியாவிற்காக சில அன்பளிப்புகளையும் கடிதங்களையும் கொடுத்து அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டே அவன் இவ்வாறு செய்தான். எசேக்கியா, பாபிலோனிலிருந்து வந்த ஜனங்களை வரவேற்றான். தன் வீட்டில் உள்ள விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் அவர்களுக்கு காட்டினான். அவன் பொன், வெள்ளி, வாசனைப் பொருட்கள் விலைமதிப்புள்ள தைலங்கள், ஆயுதங்கள், கருவூலத்திலுள்ள மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் காட்டினான். தனது அரண்மனையிலும் அரசாங்கத்திலும் அவன் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவுமில்லை. பிறகு ஏசாயா தீர்க்கதரிசி ராஜா எசேக்கியாவிடம் வந்து, “இவர்கள் என்ன சொன்னார்கள்? இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?” என்று கேட்டான். எசேக்கியா, “இவர்கள் வெகுதூரத்திலுள்ள நாடான பாபிலோனிலிருந்து வருகிறார்கள்” என்று பதிலுரைத்தான். “இவர்கள் உன் வீட்டில் எதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள்?” என்று ஏசாயா கேட்டான். அதற்கு எசேக்கியா, “இவர்கள் என் வீட்டிலுள்ள அனைத்தையும் பார்த்துவிட்டார்கள், நான் அவர்களுக்குக் காட்டாதது என் கருவூலத்தில் எதுவும் இல்லை” என்று சொன்னான். பிறகு ஏசாயா எசேக்கியாவிடம், “கர்த்தரிடமிருந்து வார்த்தையைக் கேள். உன்னாலும் உன் முற்பிதாக்களாலும் சேமித்து வைக்கப்பட்ட உன் வீட்டிலும் கருவூலத்திலுமுள்ள பொருட்கள் எல்லாம் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லும் காலம் வந்துக்கொண்டிருக்கிறது. எதுவும் மீதியாக வைக்கப்படாது. இதனைக் கர்த்தர் கூறுகிறார். பாபிலோனியர்கள் உனது குமாரர்களையும் எடுத்துச்செல்வார்கள். பாபிலோனிய ராஜாவின் அரண்மனையில் உனது குமாரர்கள் அலிகளாக இருப்பார்கள்” என்றான். பிறகு எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த இந்த செய்தி நல்லது தான்” என்றான். மேலும் எசேக்கியா, “என் வாழ்நாளிலேயே உண்மையான சமாதானம் இருப்பது நல்லதுதான்” என்றான். எசேக்கியா செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வல்லமையும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஒரு குளத்தை உருவாக்கி, குழாய் மூலம் நகரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்ததும் சொல்லப்பட்டுள்ளன. எசேக்கியா மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியாவின் குமாரனான மனாசே என்பவன் புதிய ராஜா ஆனான்.