2 இராஜாக்கள் 23:1-37

2 இராஜாக்கள் 23:1-37 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பரையெல்லாம் அழைப்பித்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது, ராஜாவும், அவனோடு யூதாவின் மனுஷர் யாவரும் எருசலேமின் குடிகள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர் துவக்கிப் பெரியோர் மட்டுமுள்ள சகலரும் கர்த்தரின் ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள். பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான். யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான். தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை ஜனபுத்திரருடைய பிரேதக் குழிகளின்மேல் போடுவித்தான். கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான். அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியரையும் வரச்சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாமட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, ஒலிமுகவாசல்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான். மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தாரம்பெற்றார்கள். ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி, கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுமட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான். யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான். எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான். இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தான். யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான். அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனுஷர்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாய்க் கூறி, அறிவித்த தேவனுடைய மனுஷனின் கல்லறை என்றார்கள். அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவன் எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள். கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து, அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனுஷரின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான். பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான். இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை. ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே கர்த்தருக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே ஆசரிக்கப்பட்டது. ஆசாரியனாகிய இல்க்கியா கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா அஞ்சனக்காரரையும், குறிசொல்லுகிறவர்களையும், சுரூபங்களையும் நரகலான விக்கிரகங்களையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான். கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை. ஆகிலும், மனாசே கர்த்தருக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்: நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார். யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. அவன் நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான். மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள். யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அமுத்தாள். அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி, யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான். அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான். யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் செபுதாள். அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

2 இராஜாக்கள் 23:1-37 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

அதன்பின் அரசன் யூதாவிலும், எருசலேமிலும் இருந்த எல்லா முதியோரையும் கூடிவரும்படி செய்தான். அரசன், யூதாவின் மனிதர், எருசலேமின் மனிதர், ஆசாரியர்கள், இறைவாக்கினர், மற்றும் சிறியோரிலிருந்து பெரியோர்வரை எல்லா மக்களையும் கூட்டிக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்குப் போனான். யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புத்தகத்தில் இருந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் அவர்கள் கேட்கத்தக்கதாய் வாசித்தான். அரசன் தூணின் பக்கத்தில் நின்று, தான் யெகோவாவைப் பின்பற்றுவதாகவும், அவருடைய கட்டளைகளையும், நியமங்களையும், விதிமுறைகளையும் தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், கடைபிடிப்பதாகவும் யெகோவா முன்பாக இந்த உடன்படிக்கையைப் புதுப்பித்தான். இவ்வாறு இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கும் உடன்படிக்கையின் வார்த்தைகளை உறுதிப்படுத்தினான். அப்பொழுது எல்லா மக்களும் அந்த உடன்படிக்கையின்படி நடப்பதாக வாக்குப்பண்ணினார்கள். அதன்பின் அரசன், தலைமை ஆசாரியன் இல்க்கியா, உதவி ஆசாரியர்கள், வாசலைக் காப்பவர் ஆகியோரிடம் பாகால், அசேரா விக்கிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவற்றை வணங்குவதற்கான எல்லாப் பொருட்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்து நீக்கிவிடும்படி உத்தரவிட்டான். அவன் அவை யாவற்றையும் எருசலேமுக்கு வெளியே கீதரோன் பள்ளத்தாக்கிலுள்ள வயல்களில் எரித்து தூளாக்கி, சாம்பலை பெத்தேலுக்குக் கொண்டுவந்தான். எருசலேமின் அயல் கிராமங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் உள்ள வழிபாட்டு மேடைகளில் தூபங்காட்டுவதற்காக, யூதாவின் அரசர்களால் நியமிக்கப்பட்டிருந்த அந்நிய நாட்டின் பூசாரிகளையும் அகற்றிவிட்டான். இவர்கள் பாகால், சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் ஆகியவற்றிற்கு தூபங்காட்டினர். யெகோவாவின் ஆலயத்திலிருந்து அசேரா விக்கிரக தூணையும் எடுத்து, எருசலேமுக்கு வெளியேயுள்ள கீதரோன் பள்ளத்தாக்கிற்குக் கொண்டுபோய் எரித்தான். அதைத் தூளாக்கி அவற்றைச் சாதாரண குடிமக்களின் பிரேதக் குழிகளின்மேல் தூவினான். யெகோவாவின் ஆலயத்தில் விபசாரத்திற்குத் தங்களைக் கொடுத்த ஆண்களின் வசிப்பிடத்தை உடைத்தான். அங்கேயே பெண்கள் அசேராவுக்கு உடையை நெசவு செய்தார்கள். யோசியா யூதாவின் பட்டணங்களிலிருந்து, எல்லா ஆசாரியர்களையும் திரும்பக் கொண்டுவந்தான். அவன் கேபாவிலிருந்து பெயெர்செபாவரையிருந்த, பூசாரிகள் தூபங்காட்டிவந்த வழிபாட்டு மேடைகளை மாசுபடுத்தினான். பட்டணத்து வாசலின் இடப்பக்கத்தில் பட்டணத்து ஆளுநரான யோசுவாவின் வாசல் இருந்தது. அந்த வாசலுக்குப்போகும் நுழைவாசலில் இருந்த விக்கிரகக் கோவில்களையும் அவன் உடைத்தான். வழிபாட்டு மேடைகளின் பூசாரிகள் எருசலேமிலிருந்த யெகோவாவின் பலிபீடத்தில் பணிசெய்யாவிட்டாலும், தங்களுடனிருந்த ஆசாரியருடன் புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிட்டார்கள். அத்துடன் மோளேக் தெய்வத்தைக் கனம்பண்ணி, யாராவது தன் மகனையாவது, மகளையாவது நெருப்பில் பலி செலுத்தாதபடி, பென் இன்னோம் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத் மேடையையும் மாசுபடுத்தினான். யூதாவின் அரசர்கள் சூரியனுக்கு அர்ப்பணித்த குதிரைகளை யெகோவாவின் ஆலயத்துக்குப் போகும் நுழைவு வாசலிலிருந்து அகற்றிவிட்டான். அவை நாத்தான்மெலேக் என்னும் அதிகாரியின் அறைக்கு அருகே ஆலய முற்றத்தில் இருந்தன. அதன்பின் யோசியா சூரியனுக்கு அர்ப்பணித்த தேர்களை எரித்தான். ஆகாஸின் மேலறைக்கு அருகேயுள்ள கூரையில் யூதாவின் அரசர்கள் அமைத்திருந்த பலிபீடங்களை இடித்தான். அத்துடன் யெகோவாவின் ஆலயத்தின் இரு முற்றங்களிலும் மனாசே கட்டியிருந்த பலிபீடங்களையும் இடித்துத் தள்ளினான். அவன் அங்கிருந்து அவைகளை அகற்றி, துண்டுதுண்டாக நொறுக்கி அதன் தூளை கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்துவிட்டான். எருசலேமுக்குக் கிழக்கில் இருந்த சீர்கேட்டின் குன்றில் தெற்கிலுள்ள வழிபாட்டு மேடைகளை அரசன் மாசுபடுத்தினான். இவை இஸ்ரயேல் அரசனான சாலொமோனால் சீதோனியரின் இழிவான தேவதையாகிய அஸ்தரோத்துக்கும், மோவாபியரின் இழிவான தெய்வமாகிய கேமோசுக்கும், அம்மோன் மக்களின் அருவருக்கத்தக்க தெய்வமான மோளேக்குக்குமாகக் கட்டப்பட்டிருந்தன. யோசியா புனிதக் கற்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வெட்டி, அவை இருந்த இடங்களை மனித எலும்புகளால் மூடினான். இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமினால் பெத்தேலில் அமைக்கப்பட்ட வழிபாட்டு மேடையையும் அதன் பலிபீடத்தையுங்கூட அழித்தான். அவன் வழிபாட்டு மேடையையும் அசேரா விக்கிரக தூணையும் எரித்துச் சாம்பலாக்கினான். அதன்பின் யோசியா சுற்றிப்பார்த்து, மலையின் பக்கத்தில் இருந்த கல்லறைகளைக் கண்டான். அங்கிருந்த எலும்புகளை அவ்விடத்திலிருந்து, அகற்றி, பெத்தேலில் இருந்த மேடையை அசுத்தப்படுத்துவதற்காக அவைகளை அதன்மேல் போட்டு எரித்தான். இறைவனுடைய மனிதன் முன்னறிவித்த யெகோவாவின் வார்த்தையின்படியே இவ்வாறு நடந்தது. அதற்குப்பின் அரசன் யோசியா, “அங்கு நான் காண்கிற சவக்குழியில் நடப்பட்டிருக்கிற கல் எதைக் குறிக்கிறது?” என்று கேட்டான். அந்தப் பட்டணத்து மனிதர் அதற்குப் பதிலாக, “நீர் இப்பொழுது செய்த இதே செயல்களை பெத்தேலின் பலிபீடத்துக்கு எதிராக முன்னறிவித்த, யூதாவிலிருந்து வந்த இறைவனின் மனிதனின் கல்லறையைக் குறிப்பதே அது” என்று கூறினார்கள். அதற்கு அவன், “அதை விட்டுவிடுங்கள். அவனுடைய எலும்புகளை யாரும் குழப்புவதற்கு அனுமதிக்க வேண்டாம்” என்றான். அப்படியே அவர்கள் அவனுடைய எலும்புகளையும் சமாரியாவிலிருந்து வந்த ஒரு இறைவாக்கினனின் எலும்புகளையும் எடுக்காமல் விட்டுவிட்டார்கள். பெத்தேலில் செய்ததுபோலவே, இஸ்ரயேல் அரசர்கள் யெகோவாவுக்குக் கோபம் மூழத்தக்கதாக சமாரியாவின் பட்டணங்களில் கட்டிய எல்லா வழிபாட்டு மேடைகளையும் யோசியா அரசன் அகற்றி மாசுபடுத்தினான். யோசியா வழிபாட்டு மேடைகளையும் பூசாரிகள் யாவரையும் பலிபீடங்களின்மேல் வைத்து வெட்டிக்கொன்று மனித எலும்புகளை அவற்றின்மேல் போட்டு எரித்தான். அதன்பின் அவன் எருசலேமுக்குத் திரும்பிப்போனான். அரசன் எல்லா மக்களுக்கும் உத்தரவிட்டதாவது: “இந்த உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுங்கள்” என்றான். இஸ்ரயேலரை வழிநடத்திய நீதிபதிகளின் காலத்திற்குப் பின்போ, இஸ்ரயேல் அரசர்களுடைய, யூதா அரசர்களுடைய காலம் முழுவதுமோ அப்படி ஒரு பஸ்கா கொண்டாடப்படவில்லை. இப்போது யோசியா அரசனின் பதினெட்டாம் வருடத்தில், எருசலேமில் யெகோவாவுக்கு இந்தப் பஸ்கா கொண்டாடப்பட்டது. மேலும் குறிசொல்கிறவர்களையும், ஆவிகளுடன் தொடர்புள்ளவர்களையும் அழித்தான். அத்துடன் சிலைகள், விக்கிரகங்கள், மற்றும் யூதாவிலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருக்கத்தக்க பொருட்கள் எல்லாவற்றையும் யோசியா அரசன் இல்லாது அழித்தான். யெகோவாவின் ஆலயத்தில், ஆசாரியன் இல்க்கியாவினால் கண்டுபிடிக்கப்பட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த கட்டளைகளை நிறைவேற்றும்படியாகவே, அவன் இவற்றைச் செய்தான். மோசேயின் முழு சட்டத்திற்கும் இணங்க தன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் யோசியா யெகோவாவிடம் திரும்பியதைப்போல, இவனுக்கு முன்னாவது பின்னாவது எந்த அரசனும் யெகோவாவிடம் திரும்பியதில்லை. இருப்பினும், மனாசே யெகோவாவுக்கு விரோதமாகக் கோபம் மூளும்படி செய்த எல்லா செயல்களினாலும் யூதாவுக்கு விரோதமாய் மூண்டெழுந்த, தன் பயங்கரமான கோபத்தைவிட்டு யெகோவா திரும்பவில்லை. அதனால் யெகோவா, “நான் இஸ்ரயேலரை அகற்றியதுபோல யூதாவையும் என் சமுகத்திலிருந்து அகற்றிவிடுவேன். நான் தெரிந்துகொண்ட பட்டணமான எருசலேமையும், ‘என் பெயர் அங்கே இருக்கும்’ என்று நான் சொன்ன இந்த ஆலயத்தையும், நான் புறக்கணித்து விடுவேன்” என்று சொன்னார். யோசியாவின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும் அவன் செய்தவைகளும் யூதா அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன. யோசியா அரசனாக இருந்தபோது, எகிப்தின் அரசனான பார்வோன் நேகோ, அசீரிய அரசனுக்கு உதவி செய்வதற்காக யூப்ரட்டீஸ் நதிவரைச் சென்றான். அரசனான யோசியா யுத்தத்தில் அவனை எதிர்கொள்ள அணிவகுத்துப் போனான். அங்கே மெகிதோ என்ற இடத்தில் யோசியா கொல்லப்பட்டான். யோசியாவின் அதிகாரிகள் அவனுடைய உடலை தேரில் ஏற்றி மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அதை அவனுடைய சொந்தக் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். அந்த நாட்டு மக்கள் யோசியாவின் மகன் யோவாகாஸை அபிஷேகம்பண்ணி, அவனுடைய தகப்பனின் இடத்தில் அவனை அரசனாக்கினார்கள். யூதாவுக்கு யோவாகாஸ் அரசனாக வந்தபோது இருபத்தி மூன்று வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அமூத்தாள். இவள் லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகள். தன் தந்தையர் செய்ததுபோல இவன் யெகோவாவின் பார்வையில் தீமையையே செய்தான். பார்வோன் நேகோ அவனை எருசலேமில் ஆட்சி செய்யாதபடி, ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லா என்ற இடத்தில் சங்கிலிகளால் கட்டி வைத்திருந்தான். அவன் யூதா நாட்டின் மீது ஏறத்தாழ நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் வரியாக சுமத்தினான். பார்வோன் நேகோ, யோசியாவின் மகனும், யோவாகாசின் சகோதரனுமான எலியாக்கீமை அரசனாக்கி அவனுடைய பெயரையும் யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால் யோவாகாஸை எகிப்திற்குக் கொண்டுபோனான். அங்கே அவன் இறந்தான். யோயாக்கீம் பார்வோன் நேகோ கேட்டபடியே வெள்ளியையும், தங்கத்தையும் கொடுத்தான். அப்படிச் செய்வதற்காக நிலத்திற்கு அவன் வரி விதித்து மக்களுடைய சொத்துக்களுக்கு ஏற்ப அவர்களிடமிருந்து வெள்ளியையும், தங்கத்தையும் கட்டாயமாக வசூலித்தான். யோயாக்கீம் அரசனாக வந்தபோது இருபத்தைந்து வயதாக இருந்தான். இவன் எருசலேமில் பதினொரு வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனது தாய் ரூமா ஊரைச்சேர்ந்த பெதாயாவின் மகளான செபுதாள் என்பவள். யோயாக்கீம் தன் முற்பிதாக்களைப் போலவே யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.

2 இராஜாக்கள் 23:1-37 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பர்களையெல்லாம் வரவழைத்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது, ராஜாவும், அவனோடு யூதாவின் மனிதர்கள் யாவரும் எருசலேமின் குடிமக்கள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள அனைவரும் யெகோவாவின் ஆலயத்திற்குப் போனார்கள்; யெகோவாவுடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, யெகோவாவைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் யெகோவாவுடைய சந்நிதியில் உடன்படிக்கை செய்தான்; மக்கள் எல்லோரும் உடன்படிக்கைக்கு உடன்பட்டார்கள். பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் செய்யப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து வெளியேற்ற, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் பகுதியிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்கு வெளியே கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகச்செய்தான். யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபம்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபம்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான். தோப்பு விக்கிரகத்தை யெகோவாவின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்கு வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்றின் ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளைப் பொதுமக்களுடைய பிரேதக் குழிகளின்மேல் போடச்செய்தான். யெகோவாவின் ஆலயத்திற்கு அருகே பெண்கள் தோப்பு விக்கிரகத்திற்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள அவமானமான ஆண் விபசாரக்காரர்களின் வீடுகளை இடித்துப்போட்டான். அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியர்களையும் வரச்சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாவரை ஆசாரியர்கள் தூபம்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, பட்டணத்தின் நுழைவாயில்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான். மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரர்களுக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களை சாப்பிடுவதற்குமாத்திரம் அனுமதிபெற்றார்கள். ஒருவனும் மோளேகுக்கென்று தன் மகனையாகிலும் தன் மகளையாகிலும் நெருப்பிலே பலியிடாமலிருக்க, பென் இன்னோம் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் இடத்தையும் அவன் தீட்டாக்கி, யெகோவாவின் ஆலயத்திற்குள் போகிற இடம்துவங்கி, பட்டணத்திற்கு வெளியே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுவரை யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான். யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான். எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியர்களின் அருவருப்பாகிய பெண் விக்கிரக தெய்வமாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியர்களின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோனியர்களின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் இடத்தை மனிதர்களின் எலும்புகளால் நிரப்பினான். இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தான். யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனிதன் கூறின யெகோவாவுடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான். அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனிதர்கள்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாகக் கூறி அறிவித்த தேவனுடைய மனிதனின் கல்லறை என்றார்கள். அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவனுடைய எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள். யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து, அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனிதர்களின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான். பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையை ஆசரியுங்கள் என்று சகல மக்களுக்கும் கட்டளையிட்டான். இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் துவங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா அனுசரிக்கப்படவில்லை. ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருட ஆட்சியிலே யெகோவாவுக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே அனுசரிக்கப்பட்டது. ஆசாரியனாகிய இல்க்கியா யெகோவாவுடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா ஜோதிடர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், சிலைகளையும் அருவருப்பான சிலைகளையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான். யெகோவாவிடத்திற்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போன்ற ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை. ஆகிலும், மனாசே யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்: நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டதுபோல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொன்னார். யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அவனுடைய நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவிற்கு விரோதமாக ஐப்பிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான். மரணமடைந்த அவனை அவனுடைய வேலைக்காரர்கள் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; அப்பொழுது தேசத்தின் மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்செய்து, அவன் தகப்பனுடைய இடத்தில் அவனை ராஜாவாக்கினார்கள். யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் ஆட்சிசெய்தான்; லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் அமுத்தாள். அவன் தன் முன்னோர்கள் செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி, யோசியாவின் மகனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் இடத்தில் ராஜாவாக வைத்து, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திற்குப் போய் அங்கே மரணமடைந்தான். அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து மக்களின் கையிலே சுமத்தினான். யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; ரூமா ஊரைச்சேர்ந்த பெதாயாமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் செபுதாள். அவன் தன் முன்னோர்கள் செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

2 இராஜாக்கள் 23:1-37 பரிசுத்த பைபிள் (TAERV)

தன்னை சந்திக்கும்படி யூதர் தலைவர்களையும் எருசலேம் தலைவர்களையும் ராஜா யோசியா அழைத்தான். பிறகு ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றான். யூத ஜனங்களும் எருசலேமிலுள்ள ஜனங்களும் அவனோடு சென்றனர். ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் ஜனங்களுள் முக்கியமானவர்களும் முக்கியம் இல்லாதவர்களும் அவனோடு சென்றனர். பிறகு ராஜா உடன்படிக்கைப் புத்தகத்தை வாசித்துக்காட்டினான். இந்த சட்டப்புத்தகம் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்டது. ராஜா அதனை வாசித்தபோது ஜனங்களால் அதனைக் கேட்க முடிந்தது. ராஜா (மேடை மேல்) தூண் அருகே நின்றுக் கொண்டு கர்த்தரோடு ஒரு உடன்படிக்கைச் செய்துக்கொண்டான். கர்த்தரைப் பின்பற்றவும், அவரது கட்டளைகளுக்கும் உடன்படிக்கைக்கும் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். அவன் அதனை முழு மனதோடும் ஆத்துமாவோடும் செய்வதாக ஒப்புக்கொண்டான். இப்புத்தகத்தில் எழுதப்பட்ட உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் ஒப்புக்கொண்டான். சுற்றி நின்ற ஜனங்களும் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்வதாக உறுதி கூறினார்கள். பிறகு ராஜா தலைமை ஆசாரியனான இல்க்கியாவுக்கும் மற்ற ஆசாரியர்களுக்கும் வாயில் காவலர்களுக்கும் பாகாலுக்கும் அசெரியாவிற்கும் வானுலக நட்சத்திரங்களுக்கும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த சகல வழிபாட்டுப் பொருட்களையும் நீக்கி வெளியே போடச் சொன்னான். பிறகு யோசியா அவற்றை எருசலேமிற்கு வெளியே கீதரோன் வெளிகளில் எரித்துப்போட்டான். பின் அவற்றின் சாம்பலை பெத்தேலுக்கு கொண்டுவந்தனர். யூத ராஜா ஆசாரியர்களாகப் பணி செய்ய மிகச் சாதாரண ஆட்களைத் தேர்ந்தெடுத்திருந்தான். இவர்கள் ஆரோன் வம்சத்தில் உள்ளவர்கள் அல்ல. அப்பொய் ஆசாரியர்கள் மேடையில் எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள யூத நகரங்களிலும் நறுமணப் பொருட்களை எரித்து வந்தனர். அவர்கள் பாகால், சூரியன், சந்திரன், கிரகங்கள், வானுலக நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கு நறுமணப் பொருட்களை எரித்தனர். ஆனால் இல்க்கியா அப்போலி ஆசாரியர்களைத் தடுத்து நிறுத்திவிட்டார். யோசியா கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அசேரா என்னும் தேவதையின் விக்கிரகத்தை அகற்றினான். அதனை நகரத்திற்கு வெளியே கொண்டு போய் கீதரோன் வெளியில் எரித்துப்போட்டான். பின் அவன் எரிந்தவற்றை அடித்து சாம்பலாக்கி சாதாரண ஜனங்களின் கல்லறையில் தூவிவிட்டான். பின் ராஜாவாகிய யோசியா கர்த்தருடைய ஆலயத்திற்குள் விபசாரம் செய்து கொண்டிருந்த ஆண்களின் வீடுகளை நொறுக்கினான். பெண்களும் அவ்வீடுகளைப் பயன்படுத்தி வந்தனர். அசேராவுக்காக என்றும் (பொய்த் தேவதைக்காக) அங்கே சிறு கூடாரங்களை அமைத்திருந்தனர். அப்போது, ஆசாரியர்கள் எருசலேமிற்கு பலிகளைக் கொண்டு வந்து ஆலயத்திற்குள் பலியிடவில்லை. ஆசாரியர்கள் யூத நாடு முழுவதிலும் வாழ்ந்தனர். ஆனால் பொய்த் தெய்வங்களுக்கு நறு மணப் பொருட்களை எரித்து பலியிட்டு வழிபாடு செய்துவந்தனர். இப்பொய் தெய்வங்களுக்கான மேடைகள் கேபா முதல் பெயெர்செபா மட்டும் நிறைந்திருந்தன. ஆசாரியர்கள் சாதாரண ஜனங்களோடு புளிப்பில்லாத அப்பங்களை உண்டு வந்தனர். எருசலேமின் ஆலயத்தில் ஆசாரியர்களுக்கென இருந்த சிறப்பு இடத்தில் அவர்கள் உண்ணவில்லை. ஆனால் ராஜா (யோசியா) அப்பொய்த் தெய்வங்களின் மேடைகளை அழித்து, அந்த ஆசாரியர்களை எருசலேமிற்கு அழைத்து வந்தான். இல்க்கியாவும் பட்டணத்து வாசலுக்குப் போகும் வழியின் இடது புறமிருந்த யோசுவாவினால் கட்டப்பட்ட மேடையை அழித்தான். (யோசுவா அந்நகரை ஆட்சி செய்தவன்). தோப்பேத் இன்னோமின் மகனது பள்ளத்தாக்கிலுள்ள ஒரு இடம். அங்கே ஜனங்கள் தம் பிள்ளைகளைக் கொன்று பலிபீடத்தில் எரித்து மோளேகு என்ற பொய்த்தெய்வத்தை மகிமைப்படுத்தி வந்தனர். ராஜா இந்த இடத்தையும் ஜனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாதபடி அழித்துப்போட்டான். முன்பு, யூத ராஜா கர்த்தரின் ஆலய வாசல் அருகில் குதிரைகளையும் இரதங்களையும் வைத்திருந்தான். இது நாத்தான்மெலெக் எனும் அதிகாரியின் அறையின் அருகில் இருந்தது. இவை சூரியத் தெய்வத்தை சிறப்பிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. ராஜா குதிரைகளை அப்புறப்படுத்திவிட்டு சூரியனின் இரதங்களை எரித்துவிட்டான். முன்பு, யூத ராஜாக்கள் ஆகாப் கட்டிடத்தின் கூரைமீது பலிபீடங்களைக் கட்டியிருந்தார்கள். மனாசேயும் கர்த்தருடைய இரு ஆலய முற்றத்திலும் பலிபீடங்களைக் கட்டியிருந்தான். யோசியா இப்பலிபீடங்கள் அனைத்தையும் அழித்து அவற்றின் துண்டுகளையும் தூளையும் கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தான். முன்பு, சாலொமோன் ராஜா எருசலேம் அருகிலுள்ள நாசமலையின் அருகில் பொய்த் தெய்வங்களுக்கான மேடைகளை அமைத்தான். அவை மலையின் தென்புறத்தில் இருந்தன. சீதோனியர்களால் தொழுதுகொள்ளப்பட்ட அருவருப்புமிக்க அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவெருப்பு தெய்வமான காமோசிற்கும், அம்மோனியரின் அருவெருப்பு தெய்வமான மில்கோமுக்கும் மேடைகளை சாலொமோன் ராஜா அமைத்திருந்தான். ஆனால் யோசியா அவையனைத்தையும் அழித்துப் போட்டான். அதோடு யோசியா ராஜா ஞாபகக் கற்களையும் அசெரா என்னும் பெண் தேவதையின் விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கினான். பின் மரித்துப்போனவர்களின் எலும்புகளை அவற்றின் மீது தூவினான். இவன் பெத்தேலில் உள்ள பலிபீடத்தையும் மேடையையும் உடைத்தெறிந்தான். இப்பலிபீடத்தை நேபாத்தின் குமாரனான யெரொபெயாம் என்பவன் ஏற்படுத்தியிருந்தான். இவனே இஸ்ரவேலர்களின் பாவத்திற்கு காரணமாக இருந்தான். இவன் அமைத்த பலிபீடம், மேடை ஆகிய இரண்டையும் யோசியா அழித்தான். அவன் பலிபீடக் கல்லை துண்டுத் துண்டாக உடைத்தெறிந்தான். பின் அவற்றைத் தூளாக்கினான். அசேரா விக்கிரகத் தூணையும் எரித்தான். யோசிய திரும்பிபார்த்தபோது மலையின் மீது கல்லறைகளை கண்டான். அவன் ஆட்களை அனுப்பி அவற்றிலுள்ள எலும்புகளை எடுத்துவரச் செய்தான். இப்படி நடக்கும் என்று தீர்க்கதரிசி சொன்னபடியே அவைகளை அந்தப் பலிபீடத்தின் மேல் எரித்தான். பின் யோசியா சுற்றிப்பார்த்து தேவமனிதனின் கல்லறையைக் கண்டான். யோசியா, “நான் பார்க்கும் அந்த நினைவு சின்னம் என்ன?” என்று கேட்டான். நகர ஜனங்கள் அவனிடம், “இது யூதாவிலிருந்து வந்த ஒரு தேவமனிதரின் (தீர்க்கதரிசியின்) கல்லறை. பெத்தேல் என்னும் பலிபீடத்தில் நீ செய்தவற்றைப் பற்றி இவர் முன்னரே கூறியுள்ளார்” என்றனர். யோசியா, “அவரது கல்லறையை விட்டுவிடுங்கள். அவரது எலும்புகளை எடுக்கவேண்டாம்” என்று கூறினான். எனவே அவனது எலும்புகளை சமாரியாவிலிருந்து வெளியே வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு அவர்கள் விட்டுவிட்டனர். யோசியா சமாரியாவிலுள்ள பொய்த் தெய்வங்களின் மேடைகளையும் அழித்துப்போட்டான். இஸ்ரவேல் ராஜாக்கள் அவற்றைக் கட்டியிருந்தனர். இதனால் கர்த்தருக்குப் பெருங்கோபம் உண்டாகி இருந்தது. பெத்தேலில் உள்ளவற்றை அழித்தது போலவே, யோசியா இவற்றையும் அழித்துவிட்டான். சமாரியாவின் பொய்த் தெய்வங்களுக்குத் தொழுகைச்செய்த ஆசாரியர்கள் அனைவரையும் யோசியா கொன்றான். பலிபீடங்களைக் கவனித்த ஆசாரியர்களையும் கொன்றான். மனித எலும்புகளை பலி பீடத்தின் மேல் எரித்தான். இவ்வாறு தொழுகைக்குரிய இடங்கள் எல்லாவற்றையும் கறைப்படுத்தினான். பின் எருசலேமிற்குத் திரும்பிச் சென்றான். யோசியா ராஜா ஜனங்களுக்கு ஒரு கட்டளையிட்டான். அவன், “உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவைக் கொண்டாடுங்கள். உடன்படிக்கைப் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியே செய்யுங்கள்” என்றான். நியாயாதிபதிகள் இஸ்ரவேலை ஆளத் தொடங்கிய நாள் முதல் ஜனங்கள் பஸ்கா பண்டிகையை இந்த விதத்தில் கொண்டாடியதில்லை. இஸ்ரவேல் ராஜாக்களோ யூத ராஜாக்களோ இதுபோல் சிறப்பாகப் பஸ்காவை கொண்டாடவில்லை. யோசியாவின் 18வது ஆட்சியாண்டில் அவர்கள் எருசலேமில் கர்த்தருக்காக பஸ்கா பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். யோசியா, இஸ்ரவேலிலும் யூதாவிலும் ஜனங்களால் தொழுதுகொண்டு வந்த சிறு தெய்வங்களையும் மற்ற மந்திரவாதிகளையும் குறிச்சொல்லுகிறவர்களையும் விக்கிரகங்களையும் அழித்துவிட்டான். இவன், அதனை இல்க்கியாவால் கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட புத்தகத்தில் உள்ள சட்டத்திற்குக் கீழ்ப்படியவே இவ்வாறு நடந்துக்கொண்டான். யோசியாவைப்போன்ற ஒரு ராஜா இதற்கு முன்னால் எப்போதும் இருந்ததில்லை. இவனுக்குப் பின்னும் இருந்ததில்லை. யோசியா தன் முழு மனதோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் கர்த்தருடைய பக்கம் திரும்பினான். வேறு எந்த ராஜாவும் யோசியாவைப் போன்று மோசேயின் சட்டத்தைப் பின்பற்றவில்லை. ஆனாலும் கர்த்தர் யூத ஜனங்கள் மீது தான் கொண்டக் கோபத்தை நிறுத்திக் கொள்ளவில்லை. மனாசே செய்த அனைத்து செயல்களுக்காக கர்த்தர் அவர்கள் மீது இன்னமும் கோபங்கொண்டிருந்தார். கர்த்தர், “நான் இந்த நாட்டிலிருந்து இஸ்ரவேலர்களை அகற்றிவிட்டேன். இதையே யூதர்களுக்கும் செய்வேன். அவர்களை என் பார்வையிலிருந்து அப்புறப்படுத்துவேன். என்னால் எருசலேமை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆம் நான் எருசலேமைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் அங்குள்ள ஆலயத்தை நான் அழிப்பேன். ‘என் பெயர் அங்கு இருக்கவேண்டும்’ என்று நான் சொன்ன போது குறிபிட்டது இந்த இடத்தை தான்” என்றார். யோசியா செய்த மற்ற அனைத்து செயல்களும் யூத ராஜாக்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. யோசியாவின் காலத்தில், எகிப்திய ராஜாவாகிய பார்வோன்நேகோ ஐபிராத்து ஆற்றுக்கு அசீரியாவின் ராஜாவுக்கு எதிராக போரிடச்சென்றான். யோசியா பார்வோனுக்கு எதிராகப் போரிடப்போனான். ஆனால் மெகிதோ என்ற இடத்தில் யோசியாவை பார்வோன்நேகோ கண்டதும் கொன்றுவிட்டான். மரித்துப்போன யோசியாவின் உடலை அவனது வேலைக்காரர்கள் மெகிதோவிலிருந்து எருசலேமிற்குத் இரதத்தில் எடுத்துச் சென்றனர். அவனது சொந்தக் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர். பிறகு பொது ஜனங்கள் யோசியாவின் குமாரனான யோவாகாசை ராஜாவாக அபிஷேகம் செய்து அவனைப் புதிய ராஜாவாக்கினர். யோவாகாஸ் ராஜாவாகியபோது, அவனுக்கு 23 வயது. இவன் எருசலேமை மூன்று மாதங்கள் அரசாண்டான். இவனது தாயின் பெயர் அமுத்தாள் ஆகும். இவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் குமாரத்தி ஆவாள். தவறானவை என்று கர்த்தரால் சொல்லப்பட்டக் காரியங்களையே யோவாகாஸ் செய்துவந்தான். தன் முற்பிதாக்கள் செய்த அதேப் பாவங்களையே அவனும் செய்து வந்தான். பார்வோன் நேகோ, ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் யோவாகாசைப் பிடித்துக்கட்டினான். இதனால் அவனால் எருசலேமை ஆள முடியவில்லை. பார்வோன் நேகோ யூதாவை வற்புறுத்தி 100 தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாக பெற்றான். பார்வோன் நேகோ யோவாகாசின் குமாரனான எலியாக்கீமை புதிய ராஜாவாக்கினான். எலியாக்கீம் தன் தந்தையின் இடத்தை எடுத்துக்கொண்டான். பார்வோன் நேகோ எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். பார்வோன் யோவாகாசை எகிப்துக்கு கொண்டுபோனான். அங்கேயே அவன் மரணமடைந்தான். யோயாக்கீம் பார்வோன் நேகோவிற்கு வெள்ளியும் பொன்னும் அபராதமாக செலுத்தி வந்தான். இவன் இந்த அபராதத்தை ஜனங்கள் மீது வரியாகச் சுமத்தினான். எனவே நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் பொன்னும் வெள்ளியும் கொடுக்க வேண்டிவந்தது. இவற்றைத் தொகுத்து அதை அவன் பார்வோன் நேகோவிற்கு செலுத்தினான். யோயாக்கீம் ராஜாவாகியபோது அவனுக்கு 25 வயது. அவன் எருசலேமில் 11 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் செபுதாள் ஆகும். அவள் ரூமாவைச் சேர்ந்த பெதாயாமின் குமாரத்தி ஆவாள். தவறானவையென்று கர்த்தரால் குறிக்கப்பட்ட காரியங்களையே அவனும் செய்து வந்தான். தன் முற்பிதாக்களைப் போலவே அதே செயல்களைச் செய்தான்.