2 தீமோத்தேயு 3:10-17
2 தீமோத்தேயு 3:10-17 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
ஆனால் நீயோ, எனது போதனைகள் எல்லாவற்றையும், எனது வாழ்க்கை முறையையும், எனது நோக்கத்தையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையையும் அறிந்திருக்கிறாய். அந்தியோகியாவிலும், இக்கோனியாவிலும், லீஸ்திராவிலும், எனக்கு ஏற்பட்ட பலவித துன்புறுத்தல்களையும், பாடுகளையும், நான் எப்படி சகித்தேன் என்றும் நீ அறிந்திருக்கிறாய். ஆனால் அவை எல்லாவற்றிலிருந்தும், கர்த்தர் என்னை விடுவித்தார். உண்மையாகவே, கிறிஸ்து இயேசுவில் இறை பக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிற ஒவ்வொருவனும் துன்புறுத்தப்படுவான். ஆனால் அதேவேளையில், தீயமனிதரும், வஞ்சகர்களும் செழிப்படைவார்கள். அவர்கள் மேன்மேலும் ஏமாற்றுகிறவர்களாகவும், ஏமாற்றப்படுகிறவர்களாகவும் இருப்பார்கள். நீ கற்று நிச்சயமென்றறிந்த காரியங்களை, தொடர்ந்து கைக்கொள். ஏனெனில் அவற்றை கற்றுக்கொடுத்தவர்களையும் நீ அறிவாய். உனது குழந்தைப் பருவத்திலிருந்தே, பரிசுத்த வேதவசனங்களையும் நீ அறிந்திருக்கிறாய். அவைகள் ஒருவனை எப்படி கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசத்தினாலே, இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு ஞானமுள்ளவனாக்கும் என்று உனக்குத் தெரியும். எல்லா வேதவசனமும் இறைவனின் உயிர்மூச்சினால் கொடுக்கப்பட்டன. இவை மனிதருக்கு போதிப்பதற்கும், அவர்களைக் கண்டிப்பதற்கும், அவர்களைத் திருத்துவதற்கும், நீதியாய் வாழ பயிற்றுவிப்பதற்கும், பயனுள்ளவையாய் இருக்கின்றன. இதனால், இறைவனுடைய ஊழியக்காரன் எல்லா நல்ல செயல்களையும் செய்ய, முழுமையாக தேறினவனாகிறான்.
2 தீமோத்தேயு 3:10-17 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாக அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவைகள் எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றினார். அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள். பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள். நீ கற்று உறுதிசெய்துகொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை யாரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.
2 தீமோத்தேயு 3:10-17 பரிசுத்த பைபிள் (TAERV)
ஆனால் உனக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும். நான் போதனை செய்வது பற்றியும் என் வாழ்க்கைமுறை பற்றியும் நீ அறிவாய். என் வாழ்வின் குறிக்கோள்பற்றியும் நீ அறிவாய். எனது விசுவாசம், பொறுமை, அன்பு ஆகியவற்றையும் நீ அறிவாய். நான் முயற்சியைக் கைவிடமாட்டேன் என்பதையும் அறிவாய். எனது உபத்திரவங்களையும் நான் பட்ட துன்பங்களையும் பற்றி நீ அறிந்திருக்கிறாய். அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய நகரங்களில் எனக்கு ஏற்பட்டவற்றைப் பற்றியும் நீ அறிவாய். ஆனால் நான் அனுபவித்த எல்லா உபத்திரவங்களிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றி விட்டார். தேவன் விரும்புகிறபடி இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்கிற எவருமே இத்தகைய துன்பங்களைக் கண்டிப்பாக அனுபவிக்கவேண்டி இருக்கும். தீயவர்களும், பிறரை ஏமாற்றுகிறவர்களும் மேலும், மேலும் கெட்டுப்போவார்கள். அவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவார்கள். ஆனால் அதே சமயத்தில் தம்மைத் தாமே முட்டாளாக்கிக்கொள்வார்கள். நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான்.
2 தீமோத்தேயு 3:10-17 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார். அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள். நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.