2 தீமோத்தேயு 4:1-6

2 தீமோத்தேயு 4:1-6 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது.

2 தீமோத்தேயு 4:1-6 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

இறைவனுக்கு முன்பாகவும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் இறந்தவர்களையும் நியாயந்தீர்க்கும்படி வரப்போகிற, அவருடைய அரசையும் கருத்தில்கொண்டு, நான் உனக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்: வார்த்தையைப் பிரசங்கம்பண்ணு; சாதகமான சூழ்நிலையிலும், பாதகமான சூழ்நிலையிலும் அதற்கு ஆயத்தமாய் இரு. நீடிய பொறுமையுடனும், கவனமான அறிவுறுத்தலுடனும் சீர்திருத்து. கண்டனம் செய், உற்சாகப்படுத்து. ஏனெனில், ஆரோக்கியமான போதனைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளாத காலம் வரும். தங்கள் ஆசைகளுக்கிணங்க தங்களுடைய காதுகளுக்கு இதமானவற்றைச் சொல்லும் போதகர்கள் அநேகரைத் தங்களுக்காகச் சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் சத்தியத்திற்கு தங்கள் செவிகளை விலக்கி கற்பனைக் கதைகளுக்குச் செவிசாய்ப்பார்கள். ஆனால் நீயோ, எல்லா சூழ்நிலைகளிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு. பாடுகளைத் தாங்கிக்கொள். நற்செய்தி ஊழியனின் பணியைச்செய். உனது ஊழியத்திற்குரிய கடமைகள் எல்லாவற்றையும் நிறைவேற்று. ஏனெனில் நான் இப்போதே பானபலியாக ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் தேகத்தைவிட்டுப் பிரியும் காலம் வந்துவிட்டது.

2 தீமோத்தேயு 4:1-6 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாகவும், அவருடைய வருகையையும், அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் கவனமாக திருசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் தவறென்று எடுத்துறைத்து, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவி கொடுக்காதவர்களாகி, தங்களுடைய சுயவிருப்பங்களுக்குத் தகுந்த போதகர்களைத் தங்களுக்கு மிகுதியாக சேர்த்துக்கொண்டு. சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாக இரு, தீங்கு அனுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாகத் தந்துவிட்டேன்; நான் சரீரத்தைவிட்டுப் பிரியும் நேரம் வந்தது.

2 தீமோத்தேயு 4:1-6 பரிசுத்த பைபிள் (TAERV)

தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் உனக்கு ஒரு கட்டளையை இடுகிறேன். வாழ்கிறவர்கள் மத்தியிலும், இறந்தவர்கள் மத்தியிலும் நியாயம் தீர்ப்பவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கென்று ஒரு இராஜ்யம் உண்டு. அவர் மீண்டும் வருவார். எனவே நான் இந்தக் கட்டளையை வழங்குகிறேன். மக்களிடம் நற்செய்தியைக் கூற எப்பொழுதும் தயாராக இரு. மக்களிடம் அவர்கள் செய்யவேண்டியவற்றைச் சொல். அவர்கள் தவறானவற்றைச் செய்யும்போது எடுத்துச் சொல்லி தடுத்து நிறுத்து. நல்லதைச் செய்யும்போது உற்சாகப்படுத்து. இவற்றைப் பொறுமையுடனும் கவனத்துடனும் போதி. மக்கள் உண்மையான போதனைகளைக் கவனிக்காத காலம் வரும். தம் ஒவ்வொரு விசித்திர விருப்பத்தையும் சந்தோஷப்படுத்தும் ஏராளமான போதகர்களை சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இது விருப்பமாக இருக்கும். மக்கள் கேட்க விரும்புவதையே அவர்கள் கூறுவர். மக்கள் உண்மையைக் கேட்பதை நிறுத்திவிடுவர். அவர்கள் பொய்க்கதைகளைப் போதிப்பவர்களைப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவர். ஆனால் நீ எப்பொழுதும் உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும். துன்பம் வந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்க. நற்செய்தியைச் சொல்லும் வேலையைச் செய்க. தேவனின் ஊழியனாக அனைத்து கடமைகளையும் செய்க. என் வாழ்க்கையை தேவனுக்கே காணிக்கையாகத் தந்துவிட்டேன். இங்கே என் வாழ்வு முடியும் காலம் நெருங்கி விட்டது.