அப்போஸ்தலர் 10:1-48
அப்போஸ்தலர் 10:1-48 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான். பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி, அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான். கொர்நேலியு தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து, எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான். மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்துவருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல் வீட்டில் ஏறினான். அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து, வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று: பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள். பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்துச் சிந்தனைபண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்கும் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார். அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான். அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங் களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளை பெற்றார் என்றார்கள். அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனே கூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள். மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின் முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான். அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளேபோய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர் கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே. நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார். அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 10:1-48 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
செசரியாவில் கொர்நேலியு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் இத்தாலியா இராணுவப்படைப் பிரிவில் நூற்றுக்குத் தலைவன். அவனும், அவன் குடும்பத்தினர் அனைவரும் பக்தியுள்ளவர்களும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவர்களுமாய் இருந்தார்கள். அவன் ஏழைகளுக்குத் தாராளமாய் கொடுக்கிறவனாகவும், ஒழுங்காக இறைவனிடம் மன்றாடுகிறவனாகவும் இருந்தான். ஒரு நாள் பிற்பகல் மூன்றுமணியளவில், அவன் ஒரு தரிசனம் கண்டான். அவன் அதிலே இறைத்தூதன் ஒருவனை மிகத் தெளிவாகக் கண்டான். அந்தத் தூதன், “கொர்நேலியு!” என்றான். கொர்நேலியு அவனைப் பயத்துடன் உற்றுப்பார்த்து, “ஆண்டவரே இது என்ன?” என்றான். இறைத்தூதன் பதிலாக, “உனது மன்றாட்டுகளும், ஏழைகளுக்கு நீ கொடுத்த நன்கொடைகளும், இறைவனுக்கு முன்பாக ஒரு நினைப்பூட்டும் காணிக்கையாக வந்திருக்கின்றன. ஆகவே இப்பொழுது சிலரை யோப்பாவுக்கு அனுப்பி, பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் என்னும் பெயருடைய ஒருவனைக் கூட்டிவரும்படி சொல். அவன் தோல் பதனிடும் சீமோனுடன் தங்கியிருக்கிறான், அவனுடைய வீடு கடலோரமாய் இருக்கிறது” என்றான். தன்னோடு பேசிய இறைவனுடைய தூதன் போனபின்பு, கொர்நேலியு தனது வேலையாட்களில் இருவரையும், தனது ஏவலாட்களில் ஒருவனான பக்தியுள்ள ஒரு படை வீரனையும் அழைத்தான். அவன் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லி, அவர்களை யோப்பாவுக்கு அனுப்பினான். அவர்கள் பயணம் செய்து மறுநாள் ஏறத்தாழ மத்தியான வேளையில் யோப்பா பட்டணத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பேதுரு வீட்டின் மேல்பகுதிக்கு மன்றாடும்படி போனான். அவனுக்குப் பசியாய் இருந்தது. அதனால் அவன் எதையாவது சாப்பிட விரும்பினான். ஆனால் உணவு தயாராகிக் கொண்டிருக்கையில் அவன் ஒரு பரவச நிலைக்குள்ளானான். அப்பொழுது வானம் திறந்திருப்பதையும், பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, பூமியை நோக்கி இறங்கி வருவதையும் அவன் கண்டான். அதற்குள் எல்லா விதமான நான்கு கால்களையுடைய மிருகங்களும், பூமியிலுள்ள ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருந்தன. அப்பொழுது ஒரு குரல், “பேதுருவே, எழுந்திரு. கொன்று சாப்பிடு” என்று சொன்னது. அதற்குப் பேதுரு, “இல்லை ஆண்டவரே! ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதையும் நான் சாப்பிட்டதில்லை” என்றான். இரண்டாம் முறையும் அந்தக் குரல் அவனுடன் பேசி, “இறைவன் சுத்தமாக்கியதைத் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே” என்றது. இவ்விதம் மூன்று முறைகள் நடந்தன. பின்பு உடனே அந்த விரிப்புத் துணி மீண்டும் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பேதுரு இந்தத் தரிசனத்தின் அர்த்தத்தைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது கொர்நேலியுவினால் அனுப்பப்பட்டவர்கள், சீமோனுடைய வீட்டைத் தேடிவந்து, அதன் கதவருகில் நின்றார்கள். அவர்கள், “பேதுரு என அழைக்கப்படுகிற சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரோ?” என்று கேட்டார்கள். பேதுரு இன்னும் அந்தத் தரிசனத்தைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவனிடம், “சீமோனே, இதோ மூவர் உன்னைத் தேடுகிறார்கள். எனவே நீ எழுந்து கீழே இறங்கிப்போ. நீ அவர்களுடன் போகத் தயங்காதே, ஏனெனில், நானே அவர்களை அனுப்பியிருக்கிறேன்” என்றார். எனவே பேதுரு இறங்கிப்போய் அவர்களிடம், “நீங்கள் தேடுகிற அந்த மனிதன் நான்தான். நீங்கள் ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் நூற்றுக்குத் தலைவனான கொர்நேலியுவிடமிருந்து வந்திருக்கிறோம். அவர் நீதிமானும் இறைவனுக்குப் பயந்து நடக்கிற ஒருவர். அவர் எல்லா யூத மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நீர் சொல்வதைக் கேட்கும்படி உம்மை அவர் தன்னுடைய வீட்டிற்கு அழைக்க வேண்டுமென்று ஒரு இறைவனுடைய பரிசுத்த தூதன் அவருக்குச் சொல்லியிருக்கிறார்” என்றார்கள். அப்பொழுது பேதுரு அவர்களைத் தனது விருந்தாளிகளாக வீட்டிற்கு அழைத்தான். மறுநாள் பேதுரு அவர்களுடன் யோப்பாவைச் சேர்ந்த சில சகோதரரையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போனான். அடுத்தநாள் அவன் செசரியாவைச் சென்றடைந்தான். கொர்நேலியு அவர்களை எதிர்பார்த்து, தனது உறவினர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஒன்றாய் கூட்டி வைத்திருந்தான். பேதுரு வீட்டிற்குள் போனதும், கொர்நேலியு அவனைச் சந்தித்து, பயபக்தியுடன் அவனுடைய கால்களில் விழுந்தான். ஆனால், பேதுரு அவனை எழுந்திருக்கப்பண்ணி, “எழுந்திரு, நானும் ஒரு மனிதனே” என்றான். அவனுடன் பேசிக்கொண்டே பேதுரு உள்ளே போனபோது, அங்கே மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருந்ததைக் கண்டான். பேதுரு அவர்களிடம்: “யூதனொருவன் யூதரல்லாதவருடன் கூடிப்பழகுவதோ, அல்லது அவர்களின் வீட்டிற்குப் போவதோ, எங்கள் யூத சட்டத்திற்கு முரணானது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால், யாரையும் தூய்மையற்றவன் என்றோ, அசுத்தமானவன் என்றோ நான் அழைக்கக் கூடாது என்று இறைவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். எனவேதான் நான் அழைக்கப்பட்டபோது, எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் இங்கே வந்தேன். என்னை எதற்காக அழைத்தீர்கள் என்று நான் இப்பொழுது தெரிந்துகொள்ளலாமா?” என்று கேட்டான். அப்பொழுது கொர்நேலியு: “நான்கு நாட்களுக்கு முன்பு நான் எனது வீட்டிலே, மாலை மூன்றுமணியளவில் இதே நேரத்தில் மன்றாடிக்கொண்டிருந்தேன். திடீரென்று பிரகாசிக்கின்ற உடைகள் உடுத்திய ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றான். அவன் என்னிடம், ‘கொர்நேலியுவே, இறைவன் உன் மன்றாட்டைக் கேட்டார். நீ ஏழைகளுக்குக் கொடுத்த நன்கொடைகளையும் அவர் நினைவில்கொண்டார். பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிவர, ஆட்களை யோப்பாவுக்கு அனுப்பு. பேதுரு கடலோரமாய் வாழுகிற, தோல் பதனிடும் சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்’ என்றார். எனவேதான் நான் உடனே உம்மை அழைத்துவர ஆட்களை அனுப்பினேன். நீங்களும் வந்திருப்பது நல்லதே. இங்கே கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படி உமக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கேட்கவே இப்பொழுது நாங்கள் அனைவரும் இறைவனுக்கு முன்பாகக் கூடிவந்திருக்கிறோம்” என்றான். அப்பொழுது பேதுரு பேசத் தொடங்கினான்: “இறைவன் பட்சபாதம் காண்பிக்கிறவர் அல்ல என்பது எவ்வளவு உண்மை என்பதை நான் இப்போது அறிந்திருக்கிறேன். எந்த நாட்டைச் சேர்ந்தவரானாலும், அவர்கள் இறைவனுக்குப் பயந்து, சரியானதைச் செய்யும்போது, அவர் அவர்களை ஏற்றுக்கொள்கிறார். இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பிய செய்தியை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எல்லோருக்கும் ஆண்டவராயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் மூலமாய்ச் சமாதானத்தின் நற்செய்தியை அவர் அறிவித்தார். யோவான் திருமுழுக்கைப்பற்றிப் பிரசங்கித்தபின், கலிலேயா தொடங்கி யூதேயா முழுவதிலும் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். இறைவன் எவ்விதம் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவை பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையாலும் அபிஷேகம் செய்தார் என்பதையும், அவர் எவ்விதம் எங்கும் போய் நன்மை செய்தார் என்பதையும் இறைவன் தம்முடன் இருந்ததால், பிசாசின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருந்த எல்லோரையும் அவர் குணமாக்கினார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். “யூதருடைய நாட்டிலும், எருசலேமிலும் இயேசுகிறிஸ்து செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாய் இருக்கிறோம். அவர்கள் இயேசுவை ஒரு மரத்தில் தொங்கவிட்டுக் கொலைசெய்தார்கள். ஆனால் இறைவனோ மூன்றாம் நாளிலே அவரை இறந்தோரிலிருந்து எழுப்பி, எங்களுக்கு உயிருடன் காணப்படச் செய்தார். அவர் எல்லோருக்கும் காணப்படவில்லை, ஆனால் இறைவனால் ஏற்கெனவே தெரிந்துகொள்ளப்பட்ட சாட்சிகளாகிய நாங்களே அவரைக் கண்டோம். அவர் இறந்தோரில் இருந்து எழுந்தபின்பு, அவருடனே உணவருந்திய நாங்களே அந்த சாட்சிகள். உயிரோடிருக்கிறவர்களுக்கும் இறந்தோருக்கும் நீதிபதியாகத் தம்மையே இறைவன் நியமித்தார் என்று மக்களுக்குப் பிரசங்கித்து சாட்சி கூறும்படி, இயேசுகிறிஸ்து எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் விசுவாசமாய் இருக்கும் ஒவ்வொருவனும் அவருடைய பெயரினால் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்கிறான் என்று எல்லா இறைவாக்கினரும் அவரைக் குறித்தே சாட்சி கொடுக்கிறார்கள்” என்றான். பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையில், அந்தச் செய்தியைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம் பெற்ற விசுவாசிகள், யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் நன்கொடையாக ஊற்றப்பட்டதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர்கள் வேறு மொழிகளில் பேசுவதையும், இறைவனைத் துதிக்கிறதையும் இவர்கள் கேட்டார்கள். அப்பொழுது பேதுரு அவர்களிடம், “இவர்கள் தண்ணீரில் திருமுழுக்கு பெறுவதை யாராவது தடைசெய்யலாமா? நாம் பெற்றிருப்பது போலவே, இவர்களும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கிறார்களே” என்று சொன்னான். எனவே, இயேசுகிறிஸ்துவின் பெயரிலே அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கும்படி பேதுரு உத்தரவிட்டான். அப்பொழுது அவர்கள் சிலநாட்கள் தங்களுடன் தங்கியிருக்கவேண்டும் என்று பேதுருவைக் கேட்டுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 10:1-48 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படைப்பிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தேவபக்தியுள்ளவனும் தன் குடும்பத்தாரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்து, மக்களுக்கு அதிக தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். பிற்பகலில் ஏறக்குறைய மூன்று மணியளவில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே! என்று அழைத்ததை தெளிவாய் தரிசனம் கண்டு, அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சமூகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. இப்பொழுது நீ யோப்பா பட்டணத்திற்கு மனிதர்களை அனுப்பி, பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை கூப்பிடு. அவன் தோல்பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான். கொர்நேலியு தன்னோடு பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனிதர்களில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் வேலைசெய்கிற இராணுவ வீரர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து, எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்திற்கு அனுப்பினான். மறுநாளிலே அவர்கள் பயணப்பட்டு, அந்தப் பட்டணத்திற்கு அருகில் வரும்போது, பேதுரு மதியம் பன்னிரண்டு மணியளவிலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான். அவன் அதிக பசியடைந்து சாப்பிட விரும்பினான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணும்போது, அவன் தரிசனத்தில், வானம் திறந்திருக்கிறதாகவும், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், அதிலே பூமியிலுள்ள எல்லாவிதமான நான்குகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான். அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம்முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது. மூன்றாம்முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன் மனதில் சந்தேகப்படும்போது, இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்துநின்று: பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள். பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள். நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார். அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான். அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவனுடைய பரிசுத்த தூதனாலே கட்டளை பெற்றார் என்றார்கள். அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள். மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான். அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார். ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். அதற்குக் கொர்நேலியு: நான்கு நாட்களுக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, பிற்பகல் மூன்று மணியளவில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமுகத்தில் நினைக்கப்பட்டது. யோப்பா பட்டணத்திற்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன். எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாகக் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே. யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயா தேசத்தில் துவங்கி யூதேயா தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே. நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார். யூதர்களுடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படிச்செய்தார். என்றாலும், எல்லா மக்களும் அவரைக் காணும்படிச்செய்யாமல், அவர் உயிரோடு எழுந்தபின்பு அவரோடு சாப்பிட்டு குடித்தவர்களும் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய நாங்கள் காணும்படிச்செய்தார். அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பலவிதமான மொழிகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழ்வதையும், பேதுருவுடன் வந்திருந்த விருத்தசேதனம்பண்ணப்பட்ட விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியானவரின் வரம் யூதரல்லாதவர்கள்மேலும், பொழிந்தருளப்பட்டதைக்குறித்து வியப்படைந்தார்கள். அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 10:1-48 பரிசுத்த பைபிள் (TAERV)
செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான். கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான். கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, “ஆண்டவரே, என்ன வேண்டும்?” என்றான். தேவதூதன் கொர்நேலியுவிடம், “தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான். சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான். கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன். கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான். மறுநாள் இம்மனிதர்கள் யோப்பா அருகே வந்தனர். அப்போது பேதுரு மாடிக்குப் பிரார்த்தனை செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது. பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது. திறந்த வானத்தின் வழியாக ஏதோ ஒன்று இறங்கி வருவதை அவன் கண்டான். அது பூமிக்கு வரும் பெரிய விரிப்பைப் போன்றிருந்தது. அதனுடைய நான்கு மூலைகளிலிருந்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன. பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது. ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான். ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது. இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். இதற்கிடையில் கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் சீமோனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்கள் வாசலருகே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள். பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எழுந்து கீழே போ. அம்மனிதர்களோடு கேள்விகள் எதுவும் கேட்காமல் போ. நான் அவர்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன்” என்றார். எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான். அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர். பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான். மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர். அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான். பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான். ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான். பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான். பேதுரு மக்களை நோக்கி, “யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார். அதனால்தான் அம்மனிதர் இங்கு வருமாறு என்னை அழைத்தபோது நான் மறுக்கவில்லை. எதற்காக என்னை இங்கு அழைத்தீர்கள் என்பதை இப்போது தயவு செய்து கூறுங்கள்” என்றான். கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன், என் வீட்டில் நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அது இதே வேளை பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. திடீரென ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ஒளிமிக்க பிரகாசமான ஆடைகளை அணிந்துகொண்டிருந்தான். அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். எனவே சில மனிதர்களை யோப்பா நகரத்திற்கு அனுப்பு. சீமோன் எனப்படும் பேதுருவை வரச்சொல். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயர் கொண்ட ஒருவனின் வீட்டில் பேதுரு தங்கியிருக்கிறான். அவன் வீடு கடற்கரையில் உள்ளது’ என்றான். எனவே உடனேயே உமக்கு வரச்சொல்லியனுப்பினேன். நீர் இங்கு வந்தது நல்லது. இப்போது தேவனுக்கு முன்பாக நாங்கள் அனைவரும் கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படியாக உமக்குக் கட்டளையிட்டவற்றைக் கேட்க இங்கு கூடியிருக்கிறோம்” என்றான். பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார். தேவன் யூத மக்களோடு பேசியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக சமாதானம் வந்தது என்ற நற்செய்தியை தேவன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இயேசு எல்லா மக்களின் கர்த்தராவார். “யூதேயா முழுவதும் நிகழ்ந்த செயல்களை நீங்கள் அறிவீர்கள். யோவான் மக்களுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து உபதேசிக்கத் துவங்கியதற்குப் பின் இவை யாவும் கலிலேயாவில் ஆரம்பமாயின. நீங்கள் நாசரேத்தின் இயேசுவைக் குறித்து அறிவீர்கள். பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்து தேவன் அவரைக் கிறிஸ்துவாக்கினார். இயேசு எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு நல்லவற்றைச் செய்துகொண்டிருந்தார். பிசாசினால் முடக்கப்பட்ட மக்களை இயேசு குணப்படுத்தினார். தேவன் இயேசுவோடிருந்தார் என்பதை இது காட்டிற்று. “யூதேயாவிலும் எருசலேமிலும் இயேசு செய்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள் சாட்சிகள். ஆனால் இயேசு கொல்லப்பட்டார். மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அவரை அறைந்தனர். ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார். ஆனால் எல்லா மக்களும் அவரைப் பார்க்கவில்லை. தேவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்சிகள் மட்டும் அவரைப் பார்த்தார்கள். நாங்களே அந்த சாட்சிகள்! இயேசு மரித்து பின்னர் எழுந்த பிறகு அவரோடு உண்டோம், குடித்தோம். “மக்களுக்குப் போதிக்கும்படியாக இயேசு எங்களுக்குக் கூறினார். உயிரோடிருக்கும் மக்களுக்கும் மரித்த மக்களுக்கும் நீதிபதியாக தேவன் நியமித்தவர் அவரே என்று மக்களுக்குச் சொல்லும்படி எங்களுக்குக் கூறினார். இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான். பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார். பேதுருவோடு வந்த யூத விசுவாசிகள் வியந்தனர். யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு “தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான். கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.