அப்போஸ்தலர் 25:1-27
அப்போஸ்தலர் 25:1-27 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
அந்த மாகாணத்திற்கு பெஸ்து வந்து மூன்று நாட்களுக்குப்பின், அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். அங்கே தலைமை ஆசாரியர்களும், யூதத்தலைவர்களும் அவனிடம் வந்து பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் பெஸ்துவிடம், தங்களுக்குத் தயவுகாட்டி பவுலை எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவசரமாகக் கேட்டுக்கொண்டார்கள். ஏனெனில், வழியிலேயே பவுலை மறைந்திருந்து கொல்ல அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். பெஸ்து அவர்களுக்குப் பதிலாக, “பவுல் செசரியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கிறான். நானும் சீக்கிரமாய் அங்கே போகிறேன். உங்கள் தலைவர்களில் சிலர் என்னுடன் வந்து, அவன் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அவனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அங்கேயே அவன்மேல் சுமத்தட்டும்” என்றான். அவன் எட்டு அல்லது பத்து நாட்கள் அவர்களுடன் தங்கிவிட்டு, செசரியாவுக்குப் போனான். மறுநாள் அவன் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுலைத் தனக்கு முன்பாகக் கொண்டுவரும்படி உத்தரவிட்டான். பவுல் அங்கே வந்தபோது, எருசலேமிலிருந்து அங்கு வந்த யூதர் அவனைச்சுற்றி நின்றார்கள், அவர்கள் அவன்மேல் மிகவும் கடுமையான, அநேக குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். ஆனாலும், அவர்களால் அவற்றை நிரூபிக்க முடியாமல் போயிற்று. அப்பொழுது பவுல் தன் சார்பாகப் பேசிச் சொன்னதாவது: “நான் யூதருடைய சட்டத்திற்கு எதிராகவோ, ஆலயத்திற்கு எதிராகவோ, ரோம பேரரசன் சீசருக்கு எதிராகவோ, எந்தக் குற்றமும் செய்யவில்லை” என்றான். பெஸ்து யூதருக்கு தயவுகாட்ட விரும்பியவனாய் பவுலிடம், “நீ எருசலேமுக்கு வந்து, அங்கே எனக்கு முன்பாக இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்து விசாரணை செய்ய உடன்படுகிறாயா?” என்று கேட்டான். அதற்குப் பவுல் அவனிடம், “நான் இப்பொழுது ரோமப் பேரரசனுடைய நீதிமன்றத்துக்கு முன்பாக நிற்கின்றேன். இங்கேயே நான் விசாரணை செய்யப்படவேண்டும். நீர் நன்றாய் அறிந்திருக்கிறபடி, நான் யூதருக்கு எதிராக எவ்வித குற்றமும் செய்யவில்லை. ஆனால், மரண தண்டனை பெறுவதற்குத் தகுதியான ஏதாவது குற்றத்தை நான் செய்திருந்தால், நான் சாவதற்கு மறுக்கவில்லை. ஆனால், எனக்கு எதிராக இந்த யூதரால் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையற்றவைகளாய் இருக்குமானால், அவர்களிடம் என்னை ஒப்படைக்க யாருக்கும் உரிமை இல்லை. நான் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்கிறேன்” என்றான். பெஸ்து தனது ஆலோசகருடன் கலந்து ஆலோசித்துவிட்டுப் பவுலிடம், “நீ ரோம பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்திருக்கிறாய், நீ ரோம பேரரசனிடமே போவாய்” என்றான். சில நாட்களுக்குபின் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும், பெஸ்துவை வாழ்த்தும்படி செசரியாவுக்கு வந்தார்கள். அவர்கள் பல நாட்கள் அங்கே தங்கியிருந்ததால், பெஸ்து பவுலின் வழக்கைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினான். அவன் அரசனிடம்: “பேலிக்ஸ் சிறைக்கைதியாய் விட்டுச்சென்ற ஒருவன் இங்கே இருக்கிறான். நான் எருசலேமுக்குப் போனபோது, தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும் அவனுக்கு விரோதமாய் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்து, அவனைக் குற்றவாளியாய் தீர்க்கும்படி என்னைக் கேட்டார்கள். “அதற்கு நான் அவர்களிடம், ‘ஒருவன் தன்மேல் குற்றம் சாட்டுகிறவர்களுக்கு முன்நின்று, அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கு எதிராக, தனது சார்பாகப் பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அதற்குமுன், அவனைக் குற்றவாளியாக ஒப்படைப்பது ரோமரின் வழக்கம் அல்ல’ என்று அவர்களுக்குச் சொன்னேன். அவர்கள் என்னுடன் இங்கே வந்தபோது, நான் வழக்கைத் தாமதப்படுத்தவில்லை. மறுநாளே நான் நீதிமன்றத்தைக் கூட்டி, பவுல் என்கிற அவனைக் கொண்டுவரும்படி உத்தரவிட்டேன். அவன்மேல் குற்றம் சாட்டியவர்கள் பேசுவதற்கு எழுந்து நின்றபோது, நான் எதிர்பார்த்த குற்றங்கள் எதையும் அவர்கள் அவன்மேல் சுமத்தவில்லை. ஆனால் அவர்கள் தங்களுடைய சொந்த பாரம்பரியத்தைக் குறித்தும், உயிரோடு இருப்பதாகப் பவுல் கூறும் இயேசு என்னும் இறந்துபோன ஒருவனைக் குறித்து தகராறு செய்தார்கள். இப்படிப்பட்ட காரியங்களை எப்படி விசாரணை செய்வது என்று தெரியாமல் நான் இருந்தேன்; அதனால் நான் அவனிடம், ‘நீ எருசலேமுக்குப் போய், இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி அங்கே விசாரணை செய்யப்பட உடன்படுகிறாயா?’ என்று கேட்டேன். ஆனால் பவுலோ, ரோமப் பேரரசனுடைய தீர்ப்புக்காக தன்னைக் காவலில் வைத்துக்கொள்ளும்படி மேல்முறையீடு செய்தான். எனவே அவன் ரோமப் பேரரசனிடம் அனுப்பப்படும் வரைக்கும், தடுப்புக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டேன்” என்றான். அப்பொழுது அகிரிப்பா அரசன் பெஸ்துவிடம், “அவன் சொல்வதை நானும் கேட்க விரும்புகிறேன்” என்றான். அதற்கு பெஸ்து, “நாளைக்கே அவன் பேசுவதை நீர் கேட்கலாம்” என்றான். மறுநாள் அகிரிப்பா அரசனும், பெர்னிக்கேயாளும் சிறப்பான வரவேற்புடன் மக்கள் அரங்கத்திற்குள் வந்தார்கள். அவர்களுடன் உயர் அதிகாரிகளும், பட்டணத்தில் உயர் மதிப்புக்குரிய மனிதரும் வந்தார்கள். பெஸ்துவின் கட்டளைப்படி, பவுல் அங்கு கொண்டுவரப்பட்டான். அப்பொழுது பெஸ்து: “அகிரிப்பா அரசனே, எங்களோடு இங்கே இருக்கிறவர்களே, இவனை நீங்கள் பார்க்கிறீர்கள்; இவனைக் குறித்து எருசலேமிலும், இங்கே செசரியாவிலும் யூத சமூகத்தவர் யாவரும் என்னிடம், அவன் இனியும் உயிர் வாழக்கூடாது என்று சத்தமிட்டு முறையிட்டார்கள். ஆனால் மரண தண்டனை பெறக்கூடிய எதையும் அவன் செய்யவில்லை என்று நான் கண்டுகொண்டேன். இவன் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்திருக்கிறபடியால், நான் இவனை ரோம் நகருக்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறேன். ஆனால் ரோமப் பேரரசன் சீசருக்கு இவனைக் குறித்து நான் எழுதுவதற்கு குறிப்பிடத்தக்கது எதுவும் என்னிடம் இல்லை. எனவேதான், நான் இப்பொழுது இவனை உங்கள் எல்லோருக்கும் முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். விசேஷமாக, அகிரிப்பா அரசனுக்கு முன்பாகக் கொண்டுவந்திருக்கிறேன். இந்த விசாரணையின் முடிவில், இவனைக் குறித்து எழுதுவதற்கு ஏதாவது எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரு கைதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டு எழுதாமல் அவனை அனுப்புவது நியாயமல்ல என்று நான் எண்ணுகிறேன்” என்றான்.
அப்போஸ்தலர் 25:1-27 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாட்களானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதர்களில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாக முறையீடுசெய்து, அவனை வழியிலே கொன்றுபோடும்படி சதித்திட்டம் கொண்டவர்களாக, தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமிற்கு அழைக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். அதற்கு பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலை செசரியாவிலே காவல் செய்யப்பட்டிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன். ஆகவே, உங்களில் முடிந்தவர்கள் கூடவந்து, அந்த மனிதனிடத்தில் குற்றம் ஏதாவது இருந்தால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சுமத்தட்டும் என்றான். அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாட்கள் தங்கியிருந்து, பின்பு செசரியாவிற்குப்போய், மறுநாளிலே நீதிமன்றத்தில் உட்கார்ந்து, பவுலை அழைத்துவரும்படி ஆணையிட்டான். அவன் வந்தபோது, எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிநின்று, தங்களால் நிரூபிக்கக்கூடாத பல கடுமையான குற்றங்களை அவன்மேல் சுமத்தினார்கள். அதற்கு அவன் பதிலாக: நான் யூதர்களுடைய வேதபிரமாணத்திற்கும், தேவாலயத்திற்கும், இராயருக்கும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னான். அப்பொழுது பெஸ்து யூதர்களுக்கு உதவிசெய்ய விரும்பி, பவுலைப் பார்த்து: நீ எருசலேமுக்குப்போய், அந்த இடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா? என்றான். அதற்குப் பவுல்: நான் இராயருடைய நீதிமன்றத்திற்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நீதி விசாரிக்கப்படவேண்டியவன்; யூதர்களுக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாக அறிந்திருக்கிறீர். நான் அநியாயஞ்செய்து, மரணத்திற்கு ஏதுவாக ஏதாவது செய்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு முறையிடமாட்டேன். இவர்கள் என்மேல் சுமத்துகிற குற்றங்கள் முற்றிலும் பொய்யானதுமல்லாமல், அவர்களுக்குத் தயவுசெய்யும்படிக்கு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்படைக்கக்கூடாது என்று இராயருக்கு மேல்முறையீடு செய்கிறேன் என்றான். அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரர்களுடனே ஆலோசித்து: நீ இராயருக்கு மேல்முறையீடு செய்தாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாய் என்று பதில் சொன்னான். சிலநாட்கள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைப் பார்க்கும்படி செசரியாவிற்கு வந்தார்கள். அவர்கள் அங்கே அநேகநாட்கள் தங்கியிருக்கும்போது, பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவிற்குத் தெரிவித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனிதன் இருக்கிறான். நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதர்களுடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் முறையீடுசெய்து, அவனுக்கு எதிராகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சுமத்தப்பட்ட மனிதன் குற்றஞ்சுமத்தினவர்களுக்கு நேராகநின்று, சுமத்தின குற்றத்திற்குத் தனக்காக எதிர்வாதம் சொல்ல அவனுக்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன்னே, குற்றஞ்சுமத்தினவர்கள் சாதகமாக அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன். ஆகவே, அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் சிறிதும் தாமதம் செய்யாமல், மறுநாள் நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அந்த மனிதனைக் கொண்டுவரும்படி ஆணையிட்டேன். அப்பொழுது குற்றஞ்சுமத்தினவர்கள் வந்துநின்று, நான் எண்ணியிருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல், தங்களுடைய மதத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில விவாதத்திற்குரிய காரியங்களை அவனுக்கு விரோதமாகச் சொன்னார்கள். இப்படிப்பட்ட விவாதத்திற்குரிய காரியங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக்குறித்து நீதி விசாரிக்கப்பட உனக்குச் சம்மதமா என்று கேட்டேன். அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நீதி விசாரிக்கப்படும்படி நிறுத்தப்படவேண்டுமென்று முறையிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்பும்வரை காவல் செய்யும்படி ஆணையிட்டேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவைப் பார்த்து: அந்த மனிதன் சொல்லுகிறதை நானும் கேட்க விருப்பமாக இருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான். மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து படைத்தலைவர்களோடும் பட்டணத்து தலைவர்களோடும் நீதிமன்றத்தில் நுழைந்தார்கள். உடனே பெஸ்துவினுடைய ஆணையின்படி பவுல் அழைத்துவரப்பட்டான். அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடுகூட இந்த இடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனிதனைக்குறித்து யூதமக்களெல்லோரும் எருசலேமிலும் இந்த இடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது சரியில்லை என்று சொல்லிச் சத்தமிட்டார்கள். இவன் மரணத்திற்கு ஏதுவானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன் தானே இராயனுக்கு மேல்முறையீடு செய்ததினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானித்தேன். இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு உறுதிசெய்யப்பட்ட காரியமொன்றும் எனக்கு புரியவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதவேண்டிய செய்தி ஏதாவது எனக்கு புரியும் என்று, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாக அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.
அப்போஸ்தலர் 25:1-27 பரிசுத்த பைபிள் (TAERV)
பெஸ்து ஆளுநரானான். மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் செசரியாவிலிருந்து எருசலேமுக்குச் சென்றான். தலைமை ஆசாரியரும் முக்கியமான யூதத் தலைவர்களும் பெஸ்துவுக்கு முன் பவுலுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர். தங்களுக்கு ஓர் உதவி செய்யும்படியாக பெஸ்துவை வேண்டினர். பவுலை எருசலேமுக்கு மீண்டும் அனுப்பும்படியாக பெஸ்துவைக் கேட்டார்கள். வழியில் பவுலைக் கொல்வதற்குத் திட்டம் வகுத்தனர். ஆனால் பெஸ்து, “இல்லை! பவுல் செசரியாவில் வைக்கப்படுவான். நானே செசரியாவுக்குச் சீக்கிரம் போவேன். உங்கள் தலைவர்கள் சிலரும் என்னோடு வரலாம். அவன் உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் செசரியாவில் அவர்கள் அம்மனிதன் மீது வழக்கு தொடரலாம்” என்றான். எட்டு அல்லது பத்து நாட்கள் பெஸ்து எருசலேமில் தங்கினான். பின் அவன் செசரியாவுக்குத் திரும்பினான். மறுநாள் பெஸ்து பவுலைத் தனக்கு முன்னால் அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கூறினான். பெஸ்து நீதிபதியின் இருக்கையில் அமர்ந்திருந்தான். பவுல் அறைக்குள் வந்தான். எருசலேமிலிருந்து வந்த யூதர்கள் அவனைச் சுற்றிலும் நின்று கொண்டனர். பவுல் பல குற்றங்களைச் செய்தான் என்று யூதர்கள் கூறினார்கள். ஆனால் இக்காரியங்கள் எதையும் நிரூபிக்க முடியவில்லை. பவுல் தன்னைக் காத்துக்கொள்வதற்குக் கூறியதாவது, “யூத சட்டத்துக்கு மாறாகவோ, தேவாலயத்துக்கு எதிராகவோ, இராயருக்கு விரோதமாகவோ, நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை” என்றான். ஆனால் பெஸ்து யூதர்களைத் திருப்திப்படுத்த நினைத்தான். எனவே அவன் பவுலை நோக்கி, “நீ எருசலேமுக்குப் போக விரும்புகிறாயா? இக்குற்றங்களுக்காக நான் அங்கு நீதி வழங்கவேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்டான். பவுல், “இராயனின் நியாயஸ்தலத்திற்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கிறேன். இங்கு நான் நியாயந்தீர்க்கப்படவேண்டும்! நான் யூதர்களுக்கு எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை. இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். நான் ஏதேனும் தவறு செய்து, சட்டமும் நான் அதற்காக இறக்க வேண்டுமெனக் கூறினால், நான் இறப்பதற்குச் சம்மதிக்கிறேன். நான் மரணத்தினின்று தப்பவேண்டுமென்று கேட்கவில்லை. ஆனால் இப்பழிகள் பொய்யெனில் யாரும் என்னை யூதரிடம் ஒப்படைக்கக் கூடாது. நான் இராயரால் நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறேன்!” என்றான். பெஸ்து தனது ஆலோசகர்களிடம் இதைக் குறித்துக் கலந்தாலோசித்தான். பின்பு அவன், “நீ இராயரைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டாய், எனவே நீ இராயரிடம் போவாய்” என்றான். சில நாட்களுக்குப் பிறகு அகிரிப்பா மன்னரும் பெர்னிசும் பெஸ்துவை சந்திக்குமாறு செசரியாவுக்கு வந்தனர். அங்குப் பல நாட்கள் தங்கியிருந்தனர். பவுலின் வழக்கைக் குறித்து பெஸ்து மன்னருக்குக் கூறினான். பெஸ்து, “பெலிக்ஸ் சிறையில் விட்டுச் சென்ற ஒரு மனிதன் இருக்கிறான். நான் எருசலேமுக்குப் போனபோது தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும் அவன் மீது வழக்குத் தொடுத்தனர். அவனுக்கு நான் மரண தண்டனை அளிக்க வேண்டுமென யூதர்கள் விரும்பினர். ஆனால் நான், ‘ஒரு மனிதன் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டால், ரோமர் அவனைப் பிறரிடம் நியாயம் வழங்குவதன் பொருட்டு ஒப்படைப்பதில்லை. முதலில் அம்மனிதன் அவனைப் பழியிடும் மக்களை எதிர்கொள்ளவேண்டும். அவர்கள் இட்ட வழக்குகளுக்கு எதிரான தனது கருத்துக்களைச் சொல்லவேண்டும்’ என்று பதில் அளித்தேன். “எனவே இந்த யூதர்கள் வழக்காடுவதற்காக செசரியாவுக்கு வந்தனர். நான் காலத்தை வீணாக்கவில்லை. மறுநாளே நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து, அம்மனிதனை அழைத்து வருமாறு கட்டளையிட்டேன். யூதர்கள் எழுந்து நின்று அவனைப் பழித்தனர். ஆனால் எந்தப் பயங்கரக் குற்றத்தையும் அவன் செய்ததாக யூதர்கள் கூறவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். அவர்கள் தங்கள் மதத்தைக் குறித்தும் இயேசு என்கிற மனிதனைப் பற்றியும் மட்டுமே கூறினார்கள். இயேசு இறந்தார், ஆனால் பவுல் அவர் இன்னும் உயிரோடிருக்கிறார். என்று கூறுகிறான். எனக்கு இவற்றைக் குறித்து விவரமாகத் தெரியவில்லை. எனவே நான் கேள்விகள் கேட்கவில்லை. நான் பவுலை நோக்கி, ‘நீ எருசலேமுக்குப் போய் அங்கு இவை குறித்து நியாயந்தீர்க்கப்பட விரும்புகிறாயா?’ என்று கேட்டேன். ஆனால் பவுல் செசரியாவிலேயே வைக்கப்பட வேண்டுமென்று கேட்டான். அவன் இராயர் முடிவெடுக்க வேண்டுமென விரும்புகிறான். ரோமில் இராயரிடம் அவனை அனுப்பும் மட்டும் அவன் இங்கேயே வைக்கப்பட நான் கட்டளையிட்டுள்ளேன்” என்று கூறினான். அகிரிப்பா பெஸ்துவை நோக்கி, “நானும் நாளை இந்த மனிதன் கூறுவதைக் கேட்க விரும்புகிறேன்” என்றான். பெஸ்து, “நீங்கள் கேட்பீர்கள்” என்றான். மறுநாள் அகிரிப்பாவும் பெர்னிசும் அங்கு வந்தார்கள். மிக முக்கியமான மனிதர்களுக்குரிய ஆடைகளை உடுத்தி, அதற்கேற்றவாறு நடந்துகொண்டனர். அகிரிப்பாவும் பெர்னிசும் படை அதிகாரிகளும், செசரியாவின் முக்கிய மனிதர்களும் நியாயத்தீர்ப்பு அறைக்குள் சென்றனர். பெஸ்து பவுலை உள்ளே அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான். பெஸ்து, “அகிரிப்பா மன்னரும் இங்குள்ள எல்லோரும் இப்போது இம்மனிதனைப் பார்க்கிறீர்கள். இங்கும், எருசலேமிலுள்ள எல்லா யூத மக்களும் இவனுக்கெதிராக என்னிடம் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்கள் குற்றங்களைக் கூறியபோது, அவனை இனிமேலும் உயிரோடு விட்டு வைக்கக்கூடாதென்று கூக்குரலிட்டனர். நான் நியாயங்கேட்டபோது அவனிடம் எந்தத் தவறையும் காணவில்லை. அவனுக்கு மரண தண்டனை விதிக்குமளவிற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை. அவன் இராயரிடம் நியாயம் பெற விரும்புகிறான். எனவே அவனை ரோமுக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளேன். இம்மனிதன் செய்த தவறாக இராயருக்கு எழுதுவதற்குத் தீர்மானமாக எதுவும் இல்லை. எனவே உங்களுக்கு முன்பாக, விசேஷமாக அகிரிப்பா மன்னரே, உங்களுக்கு முன்பாக அவனைக் கொண்டு வந்துள்ளேன். நீங்கள் அவனை வினவலாம். இராயருக்கு ஏதாவது எழுதுமாறு கூறலாம். ஒரு கைதிக்கு எதிராக எந்தக் குற்றத்தையும் குறிப்பிடாமல் அவனை இராயரிடம் அனுப்புவது மூடத்தனமானது என்று நினைக்கிறேன்” என்றான்.
அப்போஸ்தலர் 25:1-27 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்று நாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி, அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கேபோகிறேன். ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான். அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த யூதர்கள் அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங்கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார்கள். அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான். அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான். அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர். நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான். அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாயென்று உத்தரவு சொன்னான். சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள். அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான். நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன். ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல், தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன்பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள். இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன். அதற்குப் பவுல், தான் இராயருக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான். அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான். மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாதிபதிகளோடும் பட்டணத்துப் பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான். அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள். இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன். இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.