அப்போஸ்தலர் 27:21-44

அப்போஸ்தலர் 27:21-44 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

பல நாட்களாக அந்த மனிதர் சாப்பாடு இல்லாமல் இருந்ததால், பவுல் அவர்கள் நடுவே எழுந்து நின்று, “நண்பர்களே, நீங்கள் எனது புத்திமதியைக் கேட்டு, கிரேத்தா தீவை விட்டுப் புறப்படாதிருந்திருக்க வேண்டும். இந்த சேதத்தையும், இழப்பையும் நீங்கள் தவிர்த்திருக்கலாம். ஆனால் இப்போது நீங்கள் மன உறுதியுடன் இருக்கும்படி நான் உங்களைக் கேட்கிறேன். ஏனெனில், உங்களிடையே ஒருவருக்கும் உயிரிழப்பு ஏற்படாது. கப்பலை மட்டுமே இழக்க நேரிடும். நேற்று இரவு என்மேல் உரிமையுள்ளவரும், என்னைத் தன் ஊழியத்தில் நியமித்தவருமான இறைவனின் ஒரு தூதன் என் அருகே வந்து நின்றான். அந்த தூதன் என்னிடம், ‘பவுலே பயப்படாதே, நீ ரோமப் பேரரசன் சீசருக்கு முன்பாக விசாரணைக்கு நிற்கவேண்டும்; உன்னுடன் பயணம் செய்கிற அனைவருடைய உயிரையும் இறைவன் தயவாய் உனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்றான். ஆகையால், தைரியமாயிருங்கள். இறைத்தூதன் எனக்குச் சொன்னபடியே நடக்கும் என்று நான் இறைவனிடம் விசுவாசமாயிருக்கிறேன். ஆனால், ஏதாவது ஒரு தீவுக்கரையில் நாம் தள்ளப்பட்டுப் போவோம்” என்று சொன்னான். பதினான்காம் நாள் இரவிலே, ஆதிரியா கடலில் அலைந்து கொண்டிருந்தோம். நடு இரவானபோது, கப்பலாட்கள் தாங்கள் ஒரு கரையை நெருங்கிச் சேர்வதாக உணர்ந்தார்கள். அவர்கள் கடலின் ஆழத்தைப் பார்த்தபோது, அது நூற்றிருபது அடி ஆழமாய் இருந்தது. சிறிது நேரத்திற்குப்பின், அவர்கள் மீண்டும் அளந்து பார்த்தபோது, அது தொண்ணூறடி ஆழமாய் இருந்தது. நாங்கள் பாறைகளில் மோதி விடுவோம் என்று பயந்து, அவர்கள் கப்பலின் பின்பகுதியிலிருந்து நான்கு நங்கூரங்களை வெளியே போட்டார்கள். பின்பு, பகல் வெளிச்சத்திற்காக மன்றாடினார்கள். கப்பலாட்கள் கப்பலில் இருந்து தப்பும் முயற்சியில் ஈடுபட்டு, உயிர்காப்புப் படகைக் கடலில் இறக்கினார்கள். அவர்கள் கப்பலின்முன் பகுதியிலிருந்து, நங்கூரங்களை இறக்குவது போல பாசாங்கு செய்துகொண்டே இப்படிச் செய்தார்கள். அப்பொழுது பவுல் நூற்றுக்குத் தலைவனையும், படைவீரர்களையும் பார்த்து, “இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது” என்றான். உடனே படைவீரர்கள் உயிர்காப்புப் படகைக் கட்டியிருந்த கயிற்றைவெட்டி, அதைக் கடலில் போகவிட்டார்கள். விடியற்காலையாகும்போது, பவுல் அவர்கள் எல்லோரையும் பார்த்து, ஏதாவது உணவைச் சாப்பிடும்படி கேட்டுக்கொண்டான். அவன் அவர்களிடம், “பதினான்கு நாட்களாக நீங்கள் உணவு எதையும் சாப்பிடாமல், என்ன நடக்குமோ என்ற பயத்தோடு காத்திருக்கிறீர்கள். இப்பொழுது ஏதாவது உணவைச் சாப்பிடுங்கள் என்று, உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உயிர்த்தப்புவதற்கு அது உதவியாயிருக்கும். உங்களில் ஒருவனுடைய தலை முடிக்கேனும் இழப்பு நேரிடாது” என்றான். இதைச் சொன்னபின், அவன் அப்பத்தை எடுத்து, அவர்கள் எல்லோருக்கும் முன்பாக இறைவனுக்கு நன்றி செலுத்தினான். பின்பு, அதைப் பிட்டுச் சாப்பிடத் தொடங்கினான். அப்பொழுது அவர்கள் அனைவரும் உற்சாகமடைந்து, அவர்களும் கொஞ்சம் உணவு சாப்பிட்டார்கள். நாங்கள் எல்லோருமாக இருநூற்று எழுபத்தாறுபேர் அந்தக் கப்பலில் இருந்தோம். அவர்கள் தங்கள் பசியாறச் சாப்பிட்டபின், கப்பலில் இருந்த கோதுமையைக் கடலில் வீசி, அதன் பாரத்தைக் குறைத்தார்கள். பொழுது விடிந்ததும், அந்தக் கரையை அவர்கள் எவ்விடமென்று அறியவில்லை. ஆனால் மணல் நிறைந்த கரையுடன், ஒரு வளைகுடா இருப்பதை அவர்கள் கண்டார்கள். முடியுமானால், கப்பலைக் கரை சேர்க்கலாமென்று அவர்கள் தீர்மானித்தார்கள். அவர்கள் நங்கூரங்களை அவிழ்த்து, அவற்றைக் கடலில் விட்டார்கள். அதேவேளையில், சுக்கான்களைக் கட்டியிருந்த கயிறுகளைத் தளர்த்திவிட்டார்கள். பின்பு கப்பலின்முன் பாயை இழுத்து காற்றின் பக்கமாய் உயர்த்தி, கடற்கரையை நோக்கி கப்பலைச் செலுத்தினார்கள். கப்பல் ஒரு மணல் திண்டில் கரை தட்டி, தரையில் தங்கியது. ஆனால் கப்பலின் முன்பகுதி, மணலில் புதைந்து அசையாது நின்றது; கப்பலின் பின்பகுதியோ, அலைகளினால் மோதப்பட்டு துண்டுதுண்டாய் உடைந்தது. கைதிகளில் யாரும் நீந்தித் தப்பிப் போகாதபடி, அவர்களைக் கொன்றுவிட படைவீரர்கள் திட்டமிட்டார்கள். ஆனால் நூற்றுக்குத் தலைவன் பவுலின் உயிரைக் காப்பாற்ற விரும்பி, அவர்கள் அவ்விதம் செய்யாதபடி அவர்களைத் தடை செய்தான். நீந்தக்கூடியவர்கள் முதலில் கப்பலில் இருந்து குதித்து கரைசேரும்படி அவன் உத்தரவிட்டான். மற்றவரை பலகைகளின் மேலும், உடைந்த கப்பல் துண்டுகளின் மேலும் ஏறிக் கரைசேரச் செய்தான். இவ்விதம், ஒவ்வொருவரும் பாதுகாப்பாய் கரைசேர்ந்தார்கள்.

அப்போஸ்தலர் 27:21-44 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

அநேகநாட்கள் அவர்கள் சாப்பிடாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனிதர்களே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவைவிட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. ஆனாலும் மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் உயிர்சேதம் வராது. ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் வணங்குகிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இரவிலே என்னிடத்தில் வந்துநின்று: பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட பயணம் பண்ணுகிற அனைவரையும் தேவன் உனக்கு தயவுபண்ணினார் என்றான். ஆகவே, மனிதர்களே, மனதில் உறுதியுள்ளவர்களாக இருங்கள். எனக்குச் சொல்லப்பட்டபடியே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாக இருக்கிறேன். ஆனாலும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். பதினான்காம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைக்கழிக்கப்பட்டுப் போகும்போது, நடு இராத்திரியிலே கப்பலாட்களுக்கு ஒரு கரை நெருங்கிவருகிறதாகத் தோன்றியது. உடனே அவர்கள் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது இருபது அடி ஆழம் என்று கண்டார்கள்; சிறிதுதூரம் போனபொழுது, மறுபடியும் நங்கூரம்விட்டுப் பார்த்தபோது பதினைந்து அடி ஆழம் என்று கண்டார்கள். பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின் பகுதியிலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, எப்போது பொழுதுவிடியுமோ என்றிருந்தார்கள். அப்பொழுது கப்பலாட்கள் கப்பலைவிட்டு ஓடிப்போக வகைதேடி, முன்பகுதியிலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிறதுபோல படகை கடலில் இறக்கும்போது, பவுல் நூறுபேருக்கு தலைவனையும், போர்வீரர்களையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். அப்பொழுது, போர்வீரர்கள் படகின் கயிறுகளை அறுத்து, அதைக் கீழே விழவிட்டார்கள். பொழுதுவிடியும்போது எல்லோரும் சாப்பிடும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாட்களாக ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாக இருக்கிறீர்கள். ஆகவே, சாப்பிடும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாக இருக்கும்; உங்களுடைய தலையிலிருந்து ஒரு முடியும் விழாது என்றான். இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுச் சாப்பிடத் தொடங்கினான். அப்பொழுது எல்லோரும் தைரியப்பட்டு சாப்பிட்டார்கள். கப்பலில் இருநூற்று எழுபத்தாறுபேர் இருந்தோம். திருப்தியாக சாப்பிட்டபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே போட்டு, கப்பலின் பாரத்தைக் குறைத்தார்கள். பொழுதுவிடிந்தபின்பு, எந்த இடம் என்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகத்தை அவர்கள் பார்த்து; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாக இருந்து, நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாக விரித்து, கரைக்கு நேராகப்போய், இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலை நிறுத்தினார்கள்; முன்பகுதி ஊன்றி அசையாமலிருந்தது, பின் பாகங்கள் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோனது. அப்பொழுது காவல் பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்வீரர்கள் யோசனையாக இருந்தார்கள். நூறுபேருக்குத் தலைவன் பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பலின் உடைந்த துண்டுகள்மேல் உட்கார்ந்து கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாக எல்லோரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

அப்போஸ்தலர் 27:21-44 பரிசுத்த பைபிள் (TAERV)

நீண்ட காலமாக அம்மனிதர்கள் சாப்பிடவில்லை. பின்பு ஒருநாள் பவுல் அவர்களுக்கு முன்பாக எழுந்து நின்று, “மனிதரே, கிரேத்தாவை விட்டுப் புறப்படாதீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் நான் சொல்வதைக் கேட்டிருக்க வேண்டும். இத்தனை தொல்லைகளும் நஷ்டமும் உங்களுக்கு ஏற்பட்டிருக்காது. ஆனால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்படிக்கு உங்களுக்குக் கூறுகிறேன். உங்களில் ஒருவரும் இறக்கமாட்டீர்கள்! ஆனால் கப்பல் அழிந்து போகும். நேற்று இரவு தேவனிடமிருந்து ஒரு தூதன் என்னிடம் வந்தான். நான் வணங்குகிற தேவன் அவரே. நான் அவருடையவன். தேவதூதன், ‘பவுலே, பயப்படாதே! நீ இராயருக்குமுன் நிற்க வேண்டும். தேவன் உனக்கு இவ்வாக்குறுதியைத் தருகிறார். உன்னோடு பயணமாகிற எல்லா மனிதரின் உயிர்களும் காப்பாற்றப்படும்’ என்றான். எனவே மனிதரே மகிழ்ச்சியாயிருங்கள்! நான் தேவனிடம் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது தூதன் கூறியபடி எல்லாம் நடக்கும். ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம்” என்றான். பதினான்காம் நாள் இரவில் ஆதிரியாக் கடலைச் சுற்றிலும் நாங்கள் கப்பலில் மிதந்துகொண்டிருந்தோம். மாலுமிகள் கரையை நெருங்குகிறோம் என்று எண்ணினர். அவர்கள் ஒரு கனமான பொருளை நுனியில் கட்டி கயிற்றை நீருக்குள் வீசினர். நீர் 120 அடி ஆழமானது என்று அவர்கள் கண்டனர். இன்னும் சற்று தூரம் சென்று கயிற்றை மீண்டும் வீசினர். அங்கு நீர் 90 அடி ஆழமாயிருந்தது. நாங்கள் பாறையில் மோதுவோமென்று மாலுமிகள் பயந்தார்கள். எனவே நான்கு நங்கூரங்களை நீருக்குள் பாய்ச்சினர். மறுநாளின் பகலொளிக்காகப் பிரார்த்தனை செய்தனர். சில மாலுமிகள் கப்பலைக் கைவிட விரும்பினர். அவர்கள் உயிர் மீட்கும் படகை நீரில் இறக்கினர். கப்பலின் முன்பக்கத்திலிருந்து அதிகமான நங்கூரங்களை வீசுவதாக பிறமனிதர்கள் கருதும்படியாக நடந்துகொண்டனர். ஆனால் பவுல் படை அதிகாரியையும், பிற வீரர்களையும் நோக்கி, “இம்மனிதர்கள் கப்பலிலே இருக்காவிட்டால் உங்கள் உயிர்களைக் காக்க முடியாது” என்றான். எனவே வீரர்கள் கயிறுகளை அறுத்து உயிர் மீட்கும் படகை நீரில் விழச்செய்தனர். அதிகாலைக்குச் சற்று முன் பவுல் எல்லா மக்களையும் ஏதேனும் உண்பதற்குச் சம்மதிக்க வைத்தான். அவன் “கடந்த இரண்டு வாரங்களாக நீங்கள் காத்துக்கொண்டும், கவனித்துக்கொண்டும் இருக்கிறீர்கள். பதினான்கு நாட்களாக நீங்கள் எதையும் உண்ணவில்லை. நீங்கள் இப்போது எதையாவது சாப்பிடுமாறு உங்களை வேண்டுகிறேன். உயிரோடிருப்பதற்கு உங்களுக்கு இது தேவை. உங்களில் யாரும் ஒரு தலை முடியைக் கூட இழக்கமாட்டீர்கள்” என்றான். இதைக் கூறிய பிறகு பவுல் ரொட்டியை எடுத்து எல்லோர் முன்பாகவும் அதற்காக தேவனுக்கு நன்றி சொன்னான். அதில் ஒரு பகுதியை எடுத்து, அவன் உண்ண ஆரம்பித்தான். எல்லா மனிதர்களும் உற்சாகம் பெற்றனர். அவர்களும் சாப்பிட ஆரம்பித்தார்கள். (கப்பலில் 276 பேர் இருந்தனர்.) நாங்கள் திருப்தியாகச் சாப்பிட்டோம். பின் கப்பலிலிருந்த தானியங்களை எல்லாம் கப்பலின் பாரத்தைக் குறைக்கும்பொருட்டு கடலுக்குள் வீசினோம். பகல் ஒளி வர ஆரம்பித்ததும் மாலுமிகள் நிலத்தைக் கண்டனர். அந்நிலம் எதுவென்று அவர்களால் அறியமுடியவில்லை. அவர்கள் கடற்கரையோடு கூடிய ஒரு வளைகுடாவைக் கண்டனர். மாலுமிகள் அவர்களால் முடிந்தவரைக்கும் கடற்கரைக்கு நேராக கப்பலைச் செலுத்த முயன்றனர். ஆனால் கப்பல் மணல் மேட்டில் மோதியது. கப்பலின் முன்பகுதி அதற்குள் நுழைந்து நின்றது. கப்பலால் அசைய முடியவில்லை. பெரும் அலைகள் வந்து கப்பலின் பின்பகுதியில் மோதி, கப்பலை உடைத்துவிட்டன. எந்தக் கைதியும் நீந்தித் தப்பித்துப் போகாதவாறு வீரர்கள் அவர்களைக் கொல்வதற்கு முடிவு செய்தார்கள். ஆனால் படைத் தலைவன் பவுலை உயிரோடு காக்க எண்ணினான். எனவே வீரர்கள் கைதிகளைக் கொல்வதற்கு அவன் அனுமதிக்கவில்லை. நீந்தத் தெரிந்தவர்கள் கடலில் குதித்து நீந்திக் கரை சேரலாமென்று ஜூலியஸ் மக்களுக்குக் கூறினான். பிற மக்கள் மரப் பலகைகளையோ கப்பலின் உடைந்த பகுதிகளையோ பிடித்து நீந்தினர். இவ்வாறு எல்லா மக்களும் நிலத்தை அடைந்தனர். மக்களில் ஒருவரும் இறக்கவில்லை.

அப்போஸ்தலர் 27:21-44 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. ஆகிலும் திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற் சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்து நின்று: பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும், இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று. உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுதுவிட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள். பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில், பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழ விழவிட்டார்கள். பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள். ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான். இப்படிச் சொல்லி. அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்தரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான். அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள். கப்பலில் இருநூற்றெழுபத்தாறுபேர் இருந்தோம். திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள். பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து, நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்று முகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி, இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று. அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள். நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.