ஆமோஸ் 1:6-15

ஆமோஸ் 1:6-15 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே. காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும். நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்புவித்தார்களே. தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே. தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே. ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்சிக்கும். அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 1:6-15 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா சொல்வது இதுவே: “காசா பட்டணம் திரும்பதிரும்ப செய்த அநேக பாவங்களின் நிமித்தம், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். ஏனெனில் அவர்கள் முழுச்சமுதாயத்தையும் சிறைப்பிடித்து ஏதோமியரிடம் விற்றார்களே. காசாவின் மதில்களின்மேல் நெருப்பை அனுப்புவேன்; அது அதன் அரண்களை சுட்டெரிக்கும். அஸ்தோத்தின் அரசனை நான் அழிப்பேன். அஸ்கலோனில் செங்கோல் பிடிப்பவனையும் ஒழிப்பேன். பெலிஸ்தியரில் கடைசியாய் இருப்பவன் சாகும்வரைக்கும், எக்ரோனுக்கெதிராக என் கரத்தை நீட்டுவேன்” என்று ஆண்டவராகிய யெகோவா சொல்கிறார். யெகோவா சொல்வது இதுவே: “தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். ஏனென்றால் சகோதர உடன்படிக்கையை உதாசீனம் செய்து, சிறைப்பிடிக்கப்பட்ட முழுச்சமுதாயத்தையும் ஏதோமுக்கு விற்றார்களே. தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.” யெகோவா சொல்வது இதுவே: “ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். இரக்க உணர்வின்றி தன் சகோதரனான இஸ்ரயேலை வாளுடன் துரத்திச் சென்றானே. அத்துடன் அவன் கோபம் அடங்காமல், அவனுடைய மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. தேமானின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். அது போஸ்றாவின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.” யெகோவா சொல்வது இதுவே: “அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். தன் எல்லைகளை விரிவாக்கும்படி கீலேயாத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே. ரப்பாவின் மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன். அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும். அது யுத்தநாளின் முழக்கத்தின் மத்தியிலும், புயல் நாளின் சூறாவளியின் மத்தியிலும் நடக்கும். அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான். அவனும் அவனுடைய அதிகாரிகளும் ஒன்றாக சிறைப்படுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.

ஆமோஸ் 1:6-15 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: காசாவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியர்களிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுவதும் சிறையாக்கினார்களே. காசாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரண்மனைகளை அழித்துவிடும். நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் பிடித்திருக்கிறவனை அஸ்கலோனிலும் இல்லாதபடி அழித்து, பெலிஸ்தர்களில் மீதியானவர்கள் அழியும்படி என்னுடைய கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார். மேலும்: தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அதின் தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்களுடைய சகோதர்களின் உடன்படிக்கையை நினைக்காமல், சிறைப்பட்டவர்களை முழுவதும் ஏதோமியர்கள் கையில் ஒப்புவித்தார்களே. தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரண்மனைகளை அழித்துவிடும் என்று யெகோவா சொல்லுகிறார். மேலும்: ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் தன்னுடைய சகோதரனைப் வாளோடு பின்தொடர்ந்து, தன்னுடைய மனதை இரக்கமற்றதாக்கி, தன்னுடைய கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன்னுடைய கடுங்கோபத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்களுடைய எல்லைகளை விரிவாக்க கீலேயாத் தேசத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே. ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புயலாகவும் அதின் அரண்மனைகளை அழிக்கும். அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஆமோஸ் 1:6-15 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக காத்சா ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் நாட்டு ஜனங்களையெல்லாம் சிறைபிடித்து ஏதோமுக்குக் கைதிகளாகக் கொண்டுபோனார்கள். எனவே நான் காத்சாவின் மதிலுக்குள் நெருப்பை அனுப்புவேன். இந்த நெருப்பு காத்சாவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். நான் அஸ்தோத்தின் சிங்காசனத்தில் இருப்பவனை அழிப்பேன். நான் அஸ்கலோனின் செங்கோலைத் தாங்கியிருப்பவனை அழிப்பேன். நான் எக்ரோன் ஜனங்களைத் தண்டிப்பேன் பிறகு மீதமுள்ள பெலிஸ்தியர்களும் மரிப்பார்கள்” தேவனாகிய கர்த்தர் கூறினார். கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: “நான் நிச்சயமாக தீரு ஜனங்களை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் ஒரு நாடு முழுவதையும் சிறைபிடித்து ஏதோமுக்கு அடிமைகளாக அனுப்பினார்கள். அவர்கள் தம் சகோதரர்களோடு (இஸ்ரவேல்) செய்த உடன்படிக்கையை நினைவு கொள்ளவில்லை. எனவே நான் தீருவின் சுவர்களில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு தீருவின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.” கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் ஏதோம் ஜனங்களை அவர்களின் பல குற்றங்களுக்காக நிச்சயம் தண்டிப்பேன். ஏனென்றால் ஏதோம் தன் சகோதரன் இஸ்ரவேலை வாளோடு துரத்தினான். ஏதோம் இரக்கம் காட்டவில்லை. ஏதோமின் கோபம் இடைவிடாமல் தொடர்ந்து காட்டு மிருகங்களைப்போல இஸ்ரவேலர்களைக் கிழித்துக் கொண்டிருந்தான். எனவே, நான் தேமானில் நெருப்பைப் பற்ற வைப்பேன். அந்நெருப்பு போஸ்றாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்துப்போடும்.” கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக அம்மோன் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கீலேயாத் நாட்டில் கர்ப்பிணிப் பெண்களைக் கொன்றார்கள். அம்மோனியர்கள் இதனைச் செய்து தங்கள் நாட்டு எல்லைகளை விரித்தார்கள். எனவே நான் ரப்பாவின் மதிலில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்நெருப்பு ரப்பாவின் உயர்ந்த கோபுரங்களை எரித்து அழிக்கும். அவர்களின் நாட்டிற்குள் துன்பமானது சுழல்காற்றைப்போன்று வரும். பிறகு அவர்களின் ராஜாவும் தலைவர்களும் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் அனைவரும் ஒன்றாகப் பிடிக்கப்படுவார்கள்.” என்று கர்த்தர் கூறினார்.