ஆமோஸ் 2:1-8

ஆமோஸ் 2:1-8 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே. மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்; மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடேகூட அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே. யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே. அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள். அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 2:1-8 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)

யெகோவா சொல்வது இதுவே: “மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். ஏனெனில் ஏதோமுடைய அரசனின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே. மோவாபின்மேல் நெருப்பை அனுப்புவேன். அது கீரியோத்தின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும். யுத்த சத்தத்தின் மத்தியிலும், எக்காள முழக்கத்தின் மத்தியிலும் மோவாப் பெரும் சத்தத்துடன் வீழ்ந்து போகும். நான் அவளுடைய ஆளுநனை அழிப்பேன். அவளுடைய அதிகாரிகளை அவனுடன் கொல்லுவேன்” என்று யெகோவா சொல்லுகிறார். யெகோவா சொல்வது இதுவே: “யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். அவர்கள் யெகோவாவின் சட்டத்தைப் புறக்கணித்து, அவரின் விதிமுறைகளைக் கைக்கொள்ளாமல் போனார்கள். ஏனெனில் அவர்களின் முன்னோர்கள் பின்பற்றிய போலித் தெய்வங்கள் அவர்களை வழிவிலகப்பண்ணின. ஆகையால் யூதாவின்மேல் நெருப்பை அனுப்புவேன். அது எருசலேமின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.” யெகோவா சொல்வது இதுவே: “இஸ்ரயேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். அவர்கள் நீதியானவர்களை வெள்ளிக்காகவும், சிறுமைப்பட்டவர்களை ஒரு ஜோடி செருப்புக்காகவும் விற்றார்களே. தரையின் புழுதியை மிதிப்பதுபோல் ஏழைகளின் தலைகளை அவர்கள் மிதிக்கிறார்களே. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதிவழங்க மறுக்கிறார்கள். தகப்பனும் மகனும் ஒரே பெண்ணிடம் உறவுகொண்டு, என் பரிசுத்த பெயரைத் தூய்மைக் கேடாக்குகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பலிபீடங்களின் அருகேயும் தாங்கள் அடைமானமாய் வாங்கிய உடைகளை விரித்துப் படுக்கிறார்கள். அபராதமாய்ப் பெற்ற திராட்சை இரசத்தைத் தங்கள் தெய்வத்தின் கோயில்களில் வைத்துக் குடிக்கிறார்கள்.

ஆமோஸ் 2:1-8 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)

யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவனுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளைச் சுட்டு சாம்பலாக்கிப் போட்டானே. மோவாப் தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரண்மனைகளை அழிக்கும்; மோவாபியர்கள் இரைச்சலோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். நியாயாதிபதியை அவர்களுடைய நடுவில் இல்லாமல் நான் அழித்து, அவனோடு அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். மேலும்: யூதாவின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் யெகோவாவுடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்களுடைய முற்பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே. யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரண்மனைகளை அழிக்கும் என்று யெகோவா சொல்லுகிறார். மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், நான் அவர்களுடைய தண்டனையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்திற்கும், எளியவனை ஒரு ஜோடி காலணிகளுக்கும் விற்றுப்போட்டார்களே. அவர்கள் தரித்திரர்களுடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என்னுடைய பரிசுத்த நாமத்தைக் கெடுக்கும்படி மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் உறவுகொள்ளுகிறார்கள். அவர்கள் எல்லா பீடங்களின் அருகிலும் அடைமானமாக வாங்கின ஆடைகளின்மேல் படுத்துக்கொண்டு, பிணையமாக பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஆமோஸ் 2:1-8 பரிசுத்த பைபிள் (TAERV)

கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக மோவாப் ஜனங்களை அவர்கள் செய்த பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் மோவாபியர், ஏதோம் ராஜாவின் எலுப்புகளைச் சுண்ணாம்பில் எரித்தார்கள். எனவே நான் மோவாப் நாட்டில் நெருப்பைப் பற்றவைப்பேன். அந்த நெருப்பு கீரியோத்தின் உயர்ந்த கோபுரங்களை அழிக்கும். அங்கே பயங்கர சத்தமும் எக்காளச் சத்தமும் கேட்க அவர்கள் மரிபார்கள். எனவே நான் மோவாபின் ராஜாக்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். நான் மோவாபின் அனைத்துத் தலைவர்களையும் கொல்வேன்” கர்த்தர் இதனைக் கூறினார். கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக யூதாவை அவர்களது பல குற்றங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்தார்கள். அவர்கள் அவரது கட்டளைகளைக் கைக்கொள்ளவில்லை. அவர்கள் முற்பிதாக்கள் பொய்களை நம்பினார்கள். அதே பொய்கள் யூதாவின் ஜனங்கள் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தக் காரணமாயிருந்தது. எனவே. நான் யூதாவில் நெருப்பை பற்றவைப்பேன். அந்த நெருப்பு எருசலேமிலுள்ள உயர்ந்த கோபுரங்களை அழிக்கும்.” கர்த்தர் இதனைக் கூறுகிறார்: “நான் நிச்சயமாக இஸ்ரவேலர்களை அவர்களது பல குற்றறங்களுக்காகத் தண்டிப்பேன். ஏனென்றால் அவர்கள் கொஞ்சம் வெள்ளிக்காக அப்பாவி ஜனங்களை விற்றார்கள். அவர்கள் ஏழை ஜனங்களை பாதரட்சைளுக்காக விற்றார்கள். அவர்கள் ஏழை ஜனங்களை முகம் குப்புற தரையில் தள்ளி அவர்கள் மேல் நடந்தார்கள். அவர்கள் துன்பப்படுகிற ஜனங்களின் சத்தத்தைக் கேட்பதை நிறுத்தினர். தந்தைகளும் குமாரர்களும் ஒரே பெண்ணிடம் பாலினஉறவு கொள்கிறார்கள். அவர்கள் எனது பரிசுத்தமான நாமத்தை பாழாக்கி விட்டார்கள். அவர்கள் ஏழைகளிடமிருந்து ஆடைகளை எடுத்து அந்த ஆடைகளின் மேல் உட்கார்ந்து அவர்கள் பலிபீடங்களில் ஆராதிக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களுக்கு கடன் தந்து அவர்கள் ஆடைகளை அடைமானமாக எடுத்தார்கள். அவர்கள் ஜனங்கள் அபராதம் செலுத்தும்படிச் செய்தார்கள். அப்பணத்தில் மது வாங்கி அவர்கள் பொய் தெய்வத்தின் கோயிலில் குடித்து மகிழ்ந்தார்கள்.